இராணி மங்கம்மாள்/ஒரு மாலை வேளையில்...
மராத்தியப் படைத்தலைவர்களும் ராணி மங்கம்மாளிடம் அடிக்கடி பணம் பறித்தனர். மதுரைப் பெரு நாட்டின் ஆட்சிக்கு ஊறு நேராமலிருக்கவும் எல்லைகளைப் பாதுகாக்கவும் மராத்தியர்களை அடிக்கடி தன்னைக் கட்டிக் கொண்டு போகவேண்டியிருந்தது. படை பலத்தைக் காட்டுவதிலும், நேரடிப் போரில் இறங்குவதிலும் இருந்து தன்னைத் தவிர்த்துக் கொண்டு ராஜதந்திர முறைகளாலும், சாதுரியங்கள் சாகஸங்களாலும் ஆள்வதில் கூட ராணி மங்கம்மாளுக்கு இப்படிச் சில சிக்கல்கள் ஏற்படத்தான் செய்தன. பெண் ஆளும் நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளை ஆக்கிரமித்து ஆளுவது சுலபம் என்று அக்கம்பக்கத்து அரசர்கள் துணிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டி அவர்களை மிரட்டிவைக்க வேண்டியிருந்தது.
மிகவும் தொலைதூரத்தில் இருந்தாலும், அடிக்கடி தெற்கே படைகளை அனுப்புவதிலுள்ள சிரமங்களாலும் டில்லி பாதுஷாவின் உதவிகள் கிடைப்பதிலும் சில இடையூறுகள் விளைந்தன.
திரிசிரபுரத்தின் எல்லைப் பகுதியில் சில சிற்றூர்களை உடையார்பாளையம் சிற்றரசன் கைப்பற்றி ஆண்டு வந்தான். அவனிடமிருந்து அந்த ஊர்களை மீட்பதற்காகப் பாதுஷாவின் படைத் தளபதி டாட்கானுக்கு நிறையப் பொருள் கொடுத்து முயன்றாள் அவள். அவ்வளவு பொருள் உதவி செய்தும் டாட்கானே நேரில் வரமுடியவில்லை. மங்கம்மாள் இழந்த பகுதிகளை மீட்பதற்குப் படைவீரர்களை மட்டுமே அனுப்பி வைத்தான் அவன்.
ரங்ககிருஷ்ணனின் மகன் விஜயரங்க சொக்கநாதன் குழந்தையாயிருந்தாலும் அவனுக்கே முறையாக முடிசூட்டிவிட விரும்பினாள் அவள். அந்தக் குழந்தைக்கு முடிசூட்டி ஆட்சியுரிமையை அளித்துவிட்டு, அவனுடைய பிரதிநிதியாக இருந்து தான் ஆட்சிக் காரியங்களை நடத்தலாம் என்பது அவள் எண்ணமாயிருந்தது.
"தாய் தந்தையை இழந்து பாட்டியின் ஆதரவில் வளரும் சிறுவனை எதிர்த்துப் போர் புரிவது அப்படி ஒன்றும் வீரதீரப் பிரதாபத்துக்குரிய செயல் இல்லை" என்ற எண்ணத்தில் எதிரிகள் குறைவாகவே தொல்லை கொடுப்பார்கள் என்பது அவளது கணிப்பாயிருந்தது.
தன்னையும் தன் நாட்டையும் அதன் எதிர்கால வாரிசான குழந்தை விஜயரங்க சொக்கநாதனையும் சுற்றிப் பிறருடைய இரக்கமும் அநுதாப உணர்வுமே சூழ்ந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணினாள் அவள்.
ஒரு நல்லநாள் பார்த்து நல்லவேளை பார்த்துக் குழந்தை விஜயரங்க சொக்கநாதனுக்கு முடிசூட்டச் செய்தாள். தன் தலையில் சுமத்தப்படுவது எத்தகைய பாரம் என்பது அவனுக்கு ஒரு சிறிதும் புரியாத பாலப் பருவத்திலேயே அந்தப் பாரத்தைச் சுமந்தான் குழந்தை விஜயரங்க சொக்கநாதன்.
"குருவி தலையில் பனங்காயை வைப்பதுபோல் என்பார்கள்! இந்த முடிசூட்டு விழாவும் அப்படித்தான் நடக்கிறது" என்று சிரித்துக்கொண்டே சொன்னார் இராயசம். மங்கம்மாள் அதை மறுத்தாள்.
"குருவி எந்த நாளும் பனங்காயைச் சுமக்க முடியாது இவன் அப்படியில்லை. வளர்ச்சியும் பொறுப்பைத் தாங்கும் பக்குவமும் இவனுக்கு வரும்."
"வரவேண்டும் என்றுதான் நானும் ஆசைப்படுகிறேன். தாயையும் இழந்து தந்தையையும் இழந்து வளரும் இவனை உருவாக்குவதற்கு மகாராணியார் அரும்பாடுபடவேண்டியிருக்கும்! மகனறிவு தந்தையறிவு என்பார்கள். தந்தை கண்காணத் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தால்தான் அது முடியும். இவனோ இந்த மண்ணில் பிறப்பதற்கு முன்பே தந்தையை இழந்துவிட்டான். பிறந்த பின் உடனே தாயையும் இழந்துவிட்டான்."
"இவன் மட்டும் பிறந்திருக்காவிட்டால் இங்கு நான் இன்னும் உயிர் வாழ்வதற்கு அவசியமே இருந்திராது."
"இவன் பிறந்திருந்தும்கூடச் சமயா சமயங்களில் இப்படி விரக்தியடைந்தது போல் பேசுகிறீர்கள். இப்படி ஒரு பேரன் பிறவாமலே இருந்திருந்தால் மகாராணியாரின் விரக்தி எவ்வளவாயிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.
"திரிசிரபுரத்தை விட்டு நீங்கி மதுரைக்கு மாறி வந்ததில் என் துயரங்கள் அதிக அளவு குறைந்துள்ளன. ஆனாலும் பழைய துயரங்களும் இழப்புகளும் நினைவுவரும்போது எங்கிருந்தாலும் மனத்தை ஆற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிறேன்."
"இந்தக் குழந்தை பெரியவனாகிப் பொறுப்புகளை ஏற்றபின் ஒருவேளை உங்கள் துயரங்கள் குறையலாம் சில வேளைகளில் சிந்தித்துப் பார்க்கும்போது எனக்கே உங்கள் மேல் இரக்கமாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது. உங்கள் ஆருயிர்க் கணவர் சொக்கநாத நாயக்கர் இறந்தபோதும், நிராதரவாக விடப்பட்டீர்கள்! ரங்க கிருஷ்ணனைப் பெற்றுக் குழந்தையாக வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வாரிசு இன்றிச்சிரமப்பட்டீர்கள். ரங்ககிருஷ்ணன் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்பாவது உங்கள் வேதனைகள் குறையுமென்று நினைத்தேன். ரங்ககிருஷ்ணன் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னும் உங்கள் நிம்மதியும் திருப்தியும் நீடிக்காமல் அற்பாயுளில் போய்விட்டன. மறுபடியும் பொறுமையாக ஒரு வாரிசை வளர்த்து உருவாக்கத் தொடங்கிவிட்டீர்கள்."
"என்ன செய்யலாம்? என் வாழ்கையே இப்படி அவலக் கதையாகிவிட்டது. என்றைக்குத்தான் இதிலிருந்தெல்லாம் விடுபட்டு ஆண்டாளையும், ஶ்ரீரங்கநாதனையும் சேவித்து அருட்பயன் பெற முடியப்போகிறதோ?"
"உங்கள் ஜாதக லட்சணம் நீங்கள் நிம்மதியாக விடுபட முயலும் போதெல்லாம் அதிகமாகப் பிணிக்கப்படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் பெரும்பகுதி அப்படிக் கழிந்துவிட்டது."
இந்தப் பேச்சிலிருந்து தன்மேல் இராயசத்திற்கு இருக்கும் கருணையும் அநுதாபமும் அவள் மனத்தை நெகிழ்த்தியது. நெகிழ்ந்த மனத்தோடும், விழிகளோடும் அவரை ஏறிட்டுப் பார்த்தாள் அவள். அந்த ஆஜாதுபாகுவான அறிவொளி வீசம் திருவுருவம் அப்போது அவளுக்கு ஆறுதளித்தது. நினைத்துப் பார்த்தபோது இவ்வளவு துயரங்களையும் தாங்கிக்கொண்டா இவ்வளவு நாள் கடத்தியிருக்கிறோம் என்று எண்ணி மலைப்பு வந்தது. கணவன் தொடங்கி அருமை மகன் ரங்ககிருஷ்ணன் வரை எல்லாருமே நாயக்க சாம்ராஜ்யப் பொறுப்புகளை நீத்து அநாதையாக அதை விட்டுவிட்டுப் போயிருப்பதுபோல் தோன்றியது. மனம் கலங்கியது.
பிஞ்சுக் கைகளை உதைத்துக் கொண்டு தொட்டிலில் கிடந்த நினைவு தெரியாப் பருவத்துக் குழந்தை விஜயரங்க சொக்க நாதனுக்கு முடிசூட்டிய தினத்தன்று இரவில் ராணி மங்கம்மாள் ஒரு சொப்பனம் கண்டாள். அந்தச் சொப்பனம் அவளைச் சிறிது குழப்பமுறச் செய்தது என்றாலும் மனம் தளர்ந்துவிடாமல் உறுதியாக இருந்தாள் அவள்.
அரண்மனையில் எப்போதும் அவளுக்குத் துணையாக இருக்கும் 'அலர்மேலம்மா' என்ற வயது மூத்த தாதிப்பெண் வந்து எழுப்பிய பின்புதான் சொப்பனம் கண்டு அலறியபடி தான் கட்டிலிலிருந்து கீழே விழ இருந்ததே அவளுக்குத் தெரிந்திருந்தது. சொப்பனத்தில் ராணி மங்கம்மாள் போட்ட கூப்பாடு பயங்கரமாயிருந்ததால் துணைக்காக அதே அறையில் படுத்திருந்த 'அலர்மேலம்மா' விழித்தெழுந்து ராணியை எழுப்பி,
"என்னம்மா இது? எதற்காக இப்படிப் பயங்கரமாக அலறுகிறீர்கள்? கெட்ட சொப்பனம் ஏதாவது கண்டீர்களா? முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவிவிட்டு ஒரு குவளை தண்ணீர் பருகிய பிறகு தூங்குங்கள் மறுபடி துர்ச் சொப்பனம் எதுவும் வராது" என்று கூறினாள்.
எழுந்து முகம் கழுவிக் கொண்டு நீர் பருகிவிட்டு வந்தாலும் கண்ட கனவை எண்ணியபோது மறுபடி உறக்கமே வரவில்லை. நேரம் நள்ளிரவு கடந்துபோய் விடிவதற்கு இன்னும் சில நாழிகைகளே இருந்ததாலும் தூக்கம் அறவே கலைந்து போய்விட்டதாலும் அவள் மேற்கொண்டு உறங்க முயலவும் இல்லை.
விடிவதற்குச் சில நாழிகைகளுக்கு முன் கானும் கனவு பலிக்காமல் போகாது என்ற நெடுநாளைய நம்பிக்கை வேறு ராணிமங்கமாளின் மனத்தை மருட்டியது.
கனவை நினைத்தாள் அங்கே அதே பள்ளியறையில் அலர்மேலம்மாளுக்கு அருகே தொட்டிலில் நிம்மதியாக உறங்கும் குழந்தை விஜயரங்கனைப் பார்த்தாள். கனவை நம்புவதா, குழந்தையின் கள்ளங்கபடமில்லாத முகத்தை நம்புவதா என்று அவளுக்குப் புரியவில்லை. மனம் பலவாறாக எண்ணியது. கலங்கும் மனத்தோடு அந்தக் கனவை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்தாள் ராணி மங்கம்மாள்.
மாரிக் காலத்திற்குப் பின் ஒரு நல்ல மாலை வேளை. வண்டியூர்த் தெப்பக்குளம் கரைகள் வழிய நிரம்பியிருக்கிறது. அலைகளைக் காற்றுத் தழுவி அசைத்துப் படிக்கட்டுகளில் மோதவிட்டு விளையாடுகிறது. தரையில் கிடத்திய பெரும் கண்ணாடிப் பாளம்போலக் குளம் மின்னுகிறது.
வண்டியூர்த் தெப்பக் குளத்தின் மைய மண்டபமும் தோட்டமும் பச்சைப் பசேலென்று மழைக் காலத்தின் முடிவிற் காட்டும் செழிப்பைக் காண்பிக்கின்றன. பறவைகள் கூட்டையும் நேரமாகையினால் மைய மண்டபத்தில் ஒரே குரல்கள் மயமாகப் பறவை வகைளின் சப்தங்கள் கிறீச்சிட்டுக் கொண்டிருந்தன.
கரையிலிருந்து ஓர் அலங்காரப் படகில் ராணி மங்கம்மாள், இளைஞனான விஜயரங்க சொக்கநாதன், அலர்மேலம்மா, வேறு சில பணிப்பெண்கள் ஆகியோர் ஓர் உல்லாசப்பயணமாக மைய மண்டபத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். போது மிகவும் மனோரம்மியமாயிருந்தது.
அன்று அரச குடும்பத்தினர் காற்று வாங்கவும் பொழுதைச் சுகமாகக் கழிக்கவும், வந்திருப்பதையறிந்து படகோட்டியும் படகை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தான்.
நீரில் துள்ளும் வெள்ளிநிற மீன்களைக் கண்டு திடீரென்று இருந்தாற்போலிருந்து,
"பாட்டீ! இந்த மீன்களைத் தண்ணீரிலிருந்து கரையிலெடுத்து எறிந்தால், சிறிது நேரத்தில் துள்ளித் துடித்துச் செத்துப் போய்விடும் இல்லையா?"
என்று குரூரமாகச் சிரித்துக் கொண்டே கேட்டான் விஜயரங்கன்.
அவன் கேள்வி அசட்டுத்தனமாகவும்,அபத்தமாகவும் தோன்றியது அவளுக்கு.
"இந்தச் சுகமான மாலை வேளையில் யாரையாவது வாழ வைப்பதைப் பற்றிப் பேசு விஜயரங்கா! கொல்வதையும் துடித்துச் செத்துப் போவதையும் பற்றி ஏன் பேசுகிறாய்? இதெல்லாம் உனக்கு எப்போது தெரியப்போகிறது? நீ பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் அப்பா இப்படியெல்லாம் பேசக்கூடாது."
"அப்படியில்லை பாட்டி நாம் வாழவேண்டுமானால் நமக்கு இடையூறாக இருக்கும் எல்லாவற்றையும் கொன்று தொலைத்தாக வேண்டும்."
"தங்களுக்குச் சொந்தமான தண்ணீரில் சுதந்திரமாகத் துள்ளித் திரியும் இந்த மீன்கள் உனக்கு என்னப்பா இடையூறு செய்கின்றன?"
"இவை துள்ளிக் குதிப்பதால் என் மேல் தண்ணீர் தெறித்து என் பட்டுப் பீதாம்பரங்கள் நனைகின்றன. எனக்குக் கோப மூட்டுகின்றன..."
"போதும் பைத்தியக்காரனைப் போலப் பேசாதே இந்த மீன்கள் உனக்கு இடையூறாயிருக்கின்றன என்றால் கேட்பவர்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள்!"
"அப்படிச் சிரிப்பவர்களை உடனே சிரசாக்கினை செய்து கொள்வேன்..."
"கொல்லுவதையும் அழிப்பதையும் தவிர வேறு எதையாவது பேசு."
படகு மைய மண்டபக் கரையில் போய் நிற்கிறது. கிளி கொஞ்சும் மைய மண்டபத் தோட்டத்திற்குள்ளே படியேறிப் போகிறார்கள் அவர்கள், வானில் பிறைச்சந்திரன் பவனி வருகிறான். பொழுது சாய்கிறது.
"பாட்டி இந்த மைய மண்டபக் கோபுரத்தில் உச்சி வரை எறிப் பார்க்கவேண்டும். ஆசையாயிருக்கிறது"
"இந்த இருட்டுகிற நேரத்தில் கோபுரத்தில் ஏறித்தான் ஆகவேண்டுமா?"
"நான் சொன்னால் சொன்னதுதான். கட்டாயம் ஏறிப்பார்த்தே ஆகவேண்டும்."
"வாதத்துக்கு மருந்துண்டு! பிடிவாதத்துக்கு மருந்து இல்லை. உன் இஷ்டப்படி செய் பத்திரமாக ஏறிப் போய்ப் பார்த்து விட்டு விரைவில் இறங்கி வந்துவிடு."
"என்னோடு நீயும் வரவேண்டும் பாட்டி நாம் இரண்டு பேரும் சேர்ந்தே போகலாம்."
"நானா? என்னால் எப்படி முடியும்? இந்த வயதான காலத்தில் இத்தனை பெரிய கோபுரத்தில் நான் எப்படியப்பா ஏற முடியும்?"
"வந்துதானாக வேண்டும். பேரன் மேல் பிரியமிருந்தால் வா. வராவிட்டால் பிரியமில்லை என்று அர்த்தம். அருமைப் பேரன் என்று நீ சொல்வதெல்லாம் பொய்யா பாட்டி?"
ராணி மங்கம்மாள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பேரனின் விருப்பத்தைத் தட்டிக்கழிக்க முடியாமல் கோபுரத்தில் ஏற இசைந்தாள் அவள்.