நாடக மேடை நினைவுகள்/30ஆவது அத்தியாயம்

விக்கிமூலம் இலிருந்து

30ஆவது அத்தியாயம்

று வருஷமாகிய 1929ஆம் ஆண்டில் நான் எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கத்தக்க விஷயங்கள் அதிகமில்லை . இவ் வருடம், சுமார் இருபத்தைந்து வருடங்களாக எங்கள் சபையின் குமாஸ்தாவாக இருந்த கிருஷ்ணசாமி ஐயர் நடுவயதிலேயே காலவியோகமானான். இவன் எங்கள் சபைக்கு மனமார உழைத்தவர்களுள் ஒரு முக்கியமானவன்; சபையின் பணம் முதலியவற்றை மிகவும் பொறுப்பாகப் பாதுகாத்தவன்; சபைக்காக இரவும் பகலும் பாடுபட்டவன்; இதற்கு நன்றியறிதலாக எங்கள் சபையார், இவனது மனைவிக்கு நாளது வரையில் மாசம் ஒன்றுக்கு 7 ரூபாய் பென்ஷனாகக் கொடுத்து வருகிறார்கள். இதற்கு முன்பாக இவனது குமாரத்தியின் கலியாண செலவுக்காக, ஒரு தமிழ் நாடகமாடி சுமார் 700 ரூபாய் வரையில் உதவினோம். எங்கள் சபை இதுவரையில் செய்த தர்மத்தில் இது ஒரு முக்கியமானதாம்.

அன்றியும் இவ்வருஷம், பல ஆண்டுகளாக எங்கள் சபையில் மிருதங்கம் அல்லது தபேலா வாசித்துக் கொண்டிருந்த வெங்கடேஸ்வரலு என்பவனும் காலமானான். இவனிடமிருந்த மெச்சத்தக்க குணம் என்னவென்றால், ஒரு நாடகத்தில் ஒரு ஆக்டர் ஒரு பாட்டைப் பாடினால் பிறகு எத்தனை வருடங் கழித்தாலும், இன்ன ஆட்டத்தில் நீங்கள் இன்ன மெட்டில் இந்தத் தாளத்தில் இந்தப் பாட்டைப் பாடினீர்கள் என்று மறவாது சொல்வான்! இது ஆக்டர்களுக்கும் கண்டக்டர்களுக்கும் மிகவும் சௌகர்யமாயிருந்தது. இவ்வருஷம் நான் புதிதாய் எழுதி முடித்த “சுபத்தி ரார்ஜுனா” என்னும் நாடகமானது எங்கள் சபையோரால் ஆடப்பட்டது. எனது அத்யந்த நண்பர், நான் முன்பே குறித்தபடி மதுரைக்கு மாற்றப்பட்டபடியால், அவரும் நானும் இதில் வேடம் தரிக்க ஏலாமற் போய்விட்டது. இந் நாடகத்தை சென்னையில் எனது மற்ற நண்பர்கள் ஆடினபொழுது, நான் மதுரைக்கு சைத்ரோற்சவம் பார்க்கப் போயிருந்தேன்.

நான் இப் பிரயாணத்திலிருந்து சென்னைக்குத் திரும்பி வருங்கால் ஸ்ரீரங்கத்தில் எனக்கு நேரிட்ட, எனது நாடக மேடை சம்பந்தமான நினைவொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. மதுரை உற்சவத்திற்கு என் குமாரத்திகள் இருவர்களையும் அழைத்துச் சென்றேன். பட்டணம் திரும்பி வரும் பொழுது அவர்கள் தாங்கள் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதனைத் தரிசிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். அதற்கிசைந்து, வரும் மார்க்கத்தில் திருச்சிராப்பள்ளியில் ஒரு நாள் தங்கி, அவர்களை அன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். கோயிலுக்குப் போய் கர்ப்பக் கிரஹத்தைத் அண்டினபொழுது, அன்று உற்சவம் ஆரம்பமாய் விட்டது. உற்சவ விக்கிரஹம் வெளியில் புறப்பட்டிருக்கும்பொழுது, மூல விக்ரஹத்திற்கு ஆராதனம் கிடையாது என்று மூலஸ்தான கோயில் தாளிடப்பட்டிருந்தது! “ஐயோ! இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தும், ஸ்ரீரங்கநாதர் தெரிசனம் நமக்குக் கிடைக்கவில்லையே” என்று எனது இரண்டு குமாரத்திகளும் துக்கப்பட்டனர். நான் ரங்கநாதரை இதற்குமுன் பலதரம் தரிசித்திருந்தபோதிலும், அவர்களுக்கு அப் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று வாடின முகமுடையவனாய், அவர்களை அழைத்துக்கொண்டு திரும்பி, முதல் கோபுரம் வரையில் வந்தேன். நாங்கள் கர்ப்பக்கிரஹத்தருகில் போனதையும், ஸ்வாமி தரிசனம் கிடைக்காமல் திரும் பினதையும் கவனித்த யாரோ ஒரு பிராமணர் (அவரது பெயரையும் பிறகுதான் அறிந்தேன்), எங்களைப் பின்தொடர்ந்து வந்து, என்னைப் பார்த்து “தாங்கள்தானா, சம்பந்த முதலியார்?” என்று கேட்டார். நாம் ஆம் என்று ஒப்புக் கொண்டு, ஏன் கேட்கிறீர்கள் என்று வினவ, “கொஞ்சம் பொறுங்கள், நீங்கள் இவ்வளவு தூரம் வந்து ஸ்வாமி தரிசனம் செய்யாமற் போவது சரியல்ல; நான் திரும்பி வருகிறவரையில் இங்கு இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லி, எங்களை அங்கேயே இருக்கச் சொல்லி, தான் விரைந்து சென்று, யாரோ டிரஸ்டிகளுடைய உத்தரவைப் பெற்று, சாவி வாங்கிக்கொண்டு வந்து, எங்களையெல்லாம் மறுபடியும் கர்ப்பக் கிரஹத்திற்கு அழைத்துக் கொண்டுபோய், கதவைத் திறக்கச் சொல்லி அருகிலிருந்து, நன்றாய்த் தரிசனம் செய்விக்கச் செய்தார். இதுவும் ரங்கநாதன் அருள் என்று கருதினவனாய், நாங்கள் எல்லாம் தரிசனம் செய்துகொண்டு திரும்பும் பொழுது, ஏதோ ஏழைப் பிராமணர் நமக்காக இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டரே என்று எண்ணினவனாய், அவர் கையில் ஒரு ரூபாயைக் கொடுக்க முயல, அவர் அதை வேண்டாம் என்று மறுத்தார்! அதன்மீது ஆச்சரியப்பட்டவனாய், “நான் கொடுப்பது குறைவாயிருக்கிறதெனத் தோன்றினால், சொல்லுங்கள் இன்னும் அதிகமாய்த் தருகிறேன்” என்று கூறி, என் பையை எடுக்க, “அப்படி அல்ல, உங்களிடம் பணத்தை ஆஸ்ரயித்து இதை நான் செய்தவனல்ல; உங்கள் நாடகங்களில் அநேகம் நான் படித்து சந்தோஷப்பட்டிருக்கிறேன். அதற்காக இதைச் செய்தேனேயொழிய வேறொன்றில்லை “ என்றார்! அதன்பேரில் நான், அப்படியிருந்த போதிலும், நீங்கள் மேற்கொண்ட சிரமத்திற்காக ஏதாவது நான் கைம்மாறு செய்ய வேண்டும் என்று வற்புறுத்த, “அப்படியாயின் எனக்குப் பணம் ஒன்றும் வேண்டாம், உங்கள் ஞாபகார்த்தமாக, உங்கள் புஸ்தகங்களிலொன்றை அனுப்புங்கள்” என்று சொன்னார். அதன்மீது அவர் வாசித்திருக்கும் நாடகங்கள் என்னென்னவென்று கேட்டறிந்து, அவர் வாசியாத, ஒன்றிற்கு இரண்டாக நாடகங்களை அவர் பெயரும் விலாசமும் கேட்டறிந்து குறிப்பிட்டுக்கொண்டு, பிறகு சென்னைக்கு வந்தவுடன் அனுப்பினேன். நான் தமிழ் நாடகத்திற்காக உழைத்தது பயன்படாமற் போகவில்லை. ஏதோ எம்பெருமான் அருளால் அதன் பலன் இந்த ஜன்மத்திலேயே எனக்குக் கொஞ்சம் கிடைத்ததே என்று, ரங்கத்திற்கு உழைத்ததற் காக, அரங்கநாதராகிய சபாபதி (மஹாவிஷ்ணுவுக்கும் பரமசிவத்திற்கும் ஒரு பொருள்படும்படியான இப்பெயர்கள் இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது), எனக்கு இன்னருள் பாலித்தார் என்று என் மனத்திடை வழுத்தினேன். இம் மாதிரியாக ஏதோ என் சிற்றறிவைக் கொண்டு தமிழில் சில நாடகங்கள் எழுதினதால், நான் பல இடங்களில், என்னை முன்பின் அறியாதவர்களால் பன்முறை கௌரவப்படுத்தப் பட்டிருக்கிறேன். தமிழில் நாடகங்கள் எழுதினால், நமக்கு ஒரு லாபமும் கிடைக்கவில்லையே என்று எப்பொழுதாவது ஏங்கும் ஸ்திதியிலிருக்கும் எனது இளைய நண்பர்கள், மேற்குறித்த நிகழ்ச்சியைக் கவனித்து, எவ்வளவு கஷ்டம் நேர்ந்தபோதிலும், தங்கள் ஊக்கம் குன்றாது உழைத்து வருவார்களென நம்பி இதை இங்கு எழுதலானேன்.

இவ்வருடம் கிறிஸ்ட்மஸ் (Christmas) விடுமுறையில் எங்கள் சபை நாடகங்களை நடத்தினபொழுது, எனது அத்யந்த நண்பர் கே. நாகரத்தினம் ஐயர் சென்னைக்கு வந்திருந்தபடியால், நாங்கள் இருவருமாக “தாசிபெண்”, “வள்ளி மணம்” என்னும் இரண்டு நாடகங்களிலும் ஆடினோம்.


ஐந்தாம் பாகம் முற்றிற்று