உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் செய்திகள்/3

விக்கிமூலம் இலிருந்து

3. நீத்தார் பெருமை

துறவிகள் உலகத்து உறவினை நீத்தவர்கள்; அவர்கள் பெருமையை அற நூல்கள் ஓதிக்கொண்டே இருக்கின்றன.

செத்தவர் இதுவரை எத்தனை பேர்? எண்ணிச் சொல்ல முடியாது; துறவிகளின் உயர்வை யாவராலும் அளந்து கூற முடியாது.

துறவிகளின் தூய ஒழுக்கம் அவர்களுக்குப் பெருமை சேர்க்கிறது; இத் துறவிகள் சிலராவது இருப்பதனால்தான் உலகம் உயர்வு பெறுகிறது. பெருமை கொள்கிறது.

இத்துறவிகள் ஐம்பொறிகளை அடக்கியவர்கள்: ஆசைகளை விட்டவர்கள்; வானவராலும் மதிக்கப் படுகின்றனர்.

இந்திரன் உயர்பதவி பெற்றவன். அவன் தவம் செய்தவன் என்பதால் உயர் வரங்களைப் பெற்று உயர்ந்தான்; ஆசைகளை நீத்தும், புலன் அடக்கம் கொண்டும் நீண்ட தவம் செய்தால் மற்றவர்களும் அவனைப்போல் உயர் பதவிகள் பெற முடியும்.

இத் துறவிகள் பெருமைக்கு உரியவர்கள்; செயற்கரிய செய்பவர்கள். சிறியவர் அரிய செயல்களை ஆற்றுவது இல்லை. பெருமைக்கும் சிறுமைக்கும் இதுவே வேறுபாடு ஆகும்.

உலகம் அறிவாளியின் கைகளில்தான் இருக்கிறது; அவன் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் ஐந்து உணர்வுகளை நன்கு அறிந்தவன்; அறிவு தெளிந்தவன்; அவன் துறவிகளைப் போலவே மதிக்கப்படுகின்றான்.

சான்றோர்களும் துறவிகளுக்கு நிகரானவர்கள்: அவர்கள் பண்புமிக்க செயலையும், அன்புமிக்க உள்ளத்தையும், அறிவு மிக்க சிந்தனையையும் உலகம் வேதமாக மதிக்கிறது.

இவர்கள் குணம் என்னும் சிகரத்தை எட்டிப் பிடித்தவர்கள்; இவர்கள் சினம் கொண்டால் யாரும் தடுத்து நிறுத்த இயலாது.

அந்தணர்களும் துறவிகளைப் போல மதிக்கத்தக்கவர்கள். அந்தணர் என்போர் அறவோராகத் திகழ்வர்; ஈவு இரக்கம் கொண்டு உயிர்களை நேசித்து அருள் அறம் பூண்டவர்கள்; இவர்களும் நீத்தார் என்றே மதிக்கப் படுகின்றனர்.

பற்றுகளை விட்டு அறவாழ்க்கையும், ஒழுக்க உயர்வும் கொண்டவர்கள்; இவர்கள் துறவிகள், சான்றோர், பெரியோர், அறிஞர், அந்தணர் என்று அவரவர் தவ ஒழுக்கத்துக்கு ஏற்ப அழைக்கப்படுகின்றனர். கடவுள், மழை இவற்றிற்கு அடுத்து மதிக்கத் தக்கவர்கள் இவ்வொழுக்கத்தில் உயர்ந்த பெரியோர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/3&oldid=1106229" இலிருந்து மீள்விக்கப்பட்டது