இதய உணர்ச்சி/வ. வெ. சு. அய்யர் முகவுரை
ஸ்ரீமான் பொ. திருகூடசுந்தரம் பிள்ளை அவர்களின் நூல்களுக்கு அன்னியரின் முகவுரை அனாவசியம் என்று தமிழுலகம் சொல்லும் என்பதில் சந்தேகமில்லை. மகாத்மா காந்தியின் சத்யாகரக வியாசங்களில் பலவற்றைத்தொகுத்துத் தமிழ்செய்து ஸ்ரீமான் பிள்ளையவர்கள் தமிழருக்குப் பேருதவி செய்திருக்கிறார்கள்.
மகாத்மாவின் நூல்களை மொழிபெயர்ப்பதற் கிடையிலேயே பிள்ளையவர்கள் தமிழ் மொழியின் மீதுள்ள ஆர்வ மிகுதியால் உலகப் பிரசித்தமான இன்னொரு நூலைச் சம்க்ஷேபமாக மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். இந்நூல்தான் மார்க்க ஒளரேலியன் என்னும் ரோம சக்ரவர்த்தியின் ஆத்ம விசார ரூபமான மணிமொழித் தொகுதி. இந்நூலிற்கு உலகத்தின் அற நூல்களில் சிலவற்றைத்தான் இணையாகக் கூற முடியும். எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தால் திருவள்ளுவ தேவரின் திருக்குறளின் யோக்கியதை இந்நூலுக்கும் உள்ளது என்று சொல்லலாகும். ஆனால் இதனுள் இன்னொரு விசேஷமிருக்கிறது. திருக்குறள் எழுதியவர் இல்வாழ்க்கையினராக இருந்த போதிலும் உலக விவகாரங்களில் கொஞ்ச மேலும் சிக்கிக்கொள்ளாமல், அவற்றிற்குப் புறம்பாகவே நின்று அவற்றை ஒரு சாக்ஷியைப்போல் பார்த்தறிந்து எழுதினவராவார். மார்க்க ஒளரேலியனோ ஒரு சக்ரவர்த்தி, சுமார் பதினேந்து லக்ஷம் சதுர மைல் விஸ்தீரணமுள்ள ஓர் ஏகாதிபத்தியத்தை ’வறிஞன் ஓம்பும் ஓர் செய் எனக் காத்து’ ரக்ஷித்துவந்த அரசர்க்கரசன். அவனுடைய ஆத்மவிசாரணை போர்க்களத்தினிடையிலும், மந்திர சபை கூட்டங்களின் மத்தியிலும், நீதி செலுத்தும் மன்றங்களிலும், சூழ்ச்சிக்காரர்களுடைய சூழ்ச்சியைக் குலைக்கச் செய்யும் முயற்சிகளுக்கிடையிலும் நிகழ்ந்ததாகும்.
சரீரம் மிகவும் பலஹீனமாயிருந்தும், அடிக்கடி நோய் வாய்ப்பட்டு வீழ்ந்தும், பிள்ளையவர்கள் இத்தகைய நூல்களை எழுதிவந்து தாம் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் என்பதை உலகத்துக்குப் பிரசித்தப்படுத்திக் காட்டி வருகிறார்கள். அவரைப் பார்த்துத் தமிழர் மற்றோரும் மேனாட்டு வடநாட்டு நூல்களைத் தமிழ்ப்படுத்தித் தமிழிலக்கியத்தை வளர்த்து வருவார்களானால் இன்னும் சில வருஷங்களுக்குள் நமது தாய்மொழியானது வங்காளி, குஜராத்தி, மராட்டி, தெலுங்கு முதலிய தனது சகோதரிகளின் முன் தலைநிமிர்ந்து நிற்கலாகும்.
பிள்ளையவர்களின் நூல்களுக்கு அன்னியரின் நான்முகம் அனாவசியம் என்று முதலில் சொன்னேன். ஆனால் நான் அவருக்கு அன்னியன் ஆகமாட்டேன். அவரை எனது அருமை நண்பர்களில் ஒருவராகவே கருதியுள்ளேன். ஆனதுபற்றியே அவருடைய வேண்டுகோளை மறுக்கத் துணியாது. அனாவசியமாயினும் இம்முன்னுரையை எழுத நான் முன்வந்தனன். படிப்போர் இந்நூலைச் சிரத்தையோடு படித்து, ஆயிரத்து எழுநூறு வருஷங்களுக்குமுன் எழுதப்பட்டிருந்தாலும் சத்தியத்தின் சக்கியினால் நித்தியக் தன்மை பெற்றுவிட்ட மார்க்க ஒளரேலியனுடைய மணிமொழிகளின்படி தங்கள் வாழ்நாளை ஒழுங்குபெற நடாத்திவர முயலவேண்டும் என்று வற்புறுத்தி இவ்வுரையை நிறுத்திக்கொள்வேன்.
பாரத்துவாஜ ஆசிரமம், சேரமாதேவி, திருநெல்வேலி ஜில்லா. பங்குனி ௨௯, துந்துபி. |
வ. வெ. ஸுப்ரஹ்மண்ய ஐயர் |