இதய உணர்ச்சி/தண்டபாணி தேசிகர் அநுபவ உரை
திரு. எம். எம். தண்டபாணி தேசிகர்.
அனுபவ உரை
உலகமென்பது உயர்ந்தோர் மாட்டே என்ற உண்மைக்கு இணங்க, அறிவு, ஒழுக்கம், அன்பு, அறம் ஆகிய பெரும் பண்புகளையுடைய சான்றோர்கள் எந்தக் காலத்திலும் இருந்து வருவதினாலேதான் மக்கள் இனமானது ஒப்பற்ற தனிப் பெருமையுடையதாகக் திகழ்ந்துவருகின்றது.
செயற்கரிய செய்வர் பெரியர்,—சிறியர்
செயற்கரிய செய்கலாதார்.
செயற்கரிய செய்வதினாலேயே இவர்கள் பெரியார் எனப்படுவர். இவர்கள் நாடு, மதம், மொழி என்னும் வேறுபாடு எதுவும் அறியார். இவர்களுள் ஒருவராகிய நாவுக்காசர் "எல்லா உலகமும் ஆனாய் நீயே" என்று இறைவனை இசைத் தமிழால் துதித்துப் போற்றுகின்றார். அது போன்று பெரியோர் அனைவரும் ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற ஒருமைப் பண்புடைய இயற்கை மன மாண்பைப் பெற்றவர்களாவர்.
அவர்கள் அன்பு அறம் என்ற அரண்களைக் கண்ணே போல் காத்து வருவார்கள். மக்களினமானது அவ்வரண்களை அழிக்கும்போது, அப்பெரியார்கள் சமுதாயத்தின் உயிர் நாடியாக, நாகரீகத்தின் சின்னமாக, நாட்டின் ஜீவ சொத்தாகத் தோன்றி நாடு நலமுறவும், ஒழுக்கம் உயர்வு பெறவும் ஆவன செய்து வருகிறார்கள்.
நமது தமிழ் நாட்டிலும், நாமும் நம் தமிழ் மொழியும் செய்த பெரும் தவத்தால் வள்ளுவர் இளங்கோ போன்ற பேரறிஞர்கள் தோன்றி. நமக்கு அறவுரைகளைப் பொழிந்து நம்மைப் பாதுகாத்து வருகிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இத்தாலி நாட்டை ஆண்ட மார்க்க ஔரேலிய மன்னர் அத்தகைய பெரியாராவர். அவர் கோல் வழுவாக் கொற்றவராக இருந்ததோடு தலை சிறந்த சான்றோராகவும் விளங்கினார். அவர் அன்பையும் அறத்தையுமே முதன்மையாகக் கொண்டு அரசியல் நடத்தி வந்தார் என்பதை அவருடைய இதய உணர்ச்சி என்னும் பெரு நூலிலிருந்து அறியலாம். அதில் அவர் தாம் தமது பொறுமையினாலும், இரக்கத்தினாலும், அறிவினாலும் கண்டறிந்த உண்மைகளை எல்லாம், உணர்ச்சியினாலெழுந்த அருள் மொழி மாணிக்கங்களாகத் திரட்டி வைத்திருக்கின்றார்.
இவ்வளவு அருமை வாய்ந்த சிறந்த நூலைப் படித்து அறிவெய்தவும் இன்ப முறவும் ஓர் நல்ல காலம் தமிழருக்கு கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்வெய்துகின்றேன். அறிஞர் திரு பொ. திருகூடசுந்தரம் பிள்ளையவர்கள் அந்த நூலைத் தமிழாக்கித் தருகின்றார்கள், பிள்ளையவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர்களானபடியினால் மூலத்திற்கு முரண்படா வண்ணம் மிகச் செம்மையாகச் செய்திருக்கிறார்கள்.
தமிழ் நாட்டிலுள்ள பெரியார்களுள் பிள்ளையவர்களும் ஒருவர். அவர்கள் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்குமே தமது வாழ் நாளைச் செலவு செய்து வருகிறார்கள். அவர்கள் தரும் இந்த அறிவுச் செல்வத்தினைத் தமிழகம் பேராதாவுடன் வரவேற்குமென்பதில் ஐயமில்லை.
நான் மார்க்க ஒளரேலியருடைய மணி மொழிகளைக்குறித்து எழுதுவதற்கேற்ற பேரறிவுடையேன் அல்லேன். ஆயினும் எனக்கு மனச்சோர்வு நிகழும் காலங்களிலெல்லாம், இம் மணி மொழிகள் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து உதவிசெய்து வருகின்ற படியினால்தான் இவ்வுரை எழுதத்துணிந்தேன்.
இவ்வுரை எழுத வாய்ப்பளித்த புத்தக வெளியீட்டாருக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கலையகம் தியாகராய நகர், சென்னை-17. 1–10–1951. |
எம். எம். தண்டபாணி தேசிகர் |