இதய உணர்ச்சி/மார்க்க ஔரேலியன் சரித்திரம்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

மார்க்க ஔரேலியன் சரித்திரம்


ரோப்பாக் கண்டத்தில் இத்தாலி என்ற ஒரு தேசம் இருக்கிறது. அதில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து அரசு புரிந்த சக்கரவர்த்திகளுடைய சாம்ராஜ்யம், மிக விசாலமானதாயும், பெரிதும் வலிமையுடையதாயும் இருந்தது. அதன் வடஎல்லை உலாந்தா முதல் ஹுங்காரியா உக்ரானியா வரையில் இருந்தது. கீழ் எல்லை பாரஸீகத்தையும், எகிப்தையும், அராபியாவையும் தொட்டது. எகிப்தினின்று மொராக்கோ வரையில் உள்ள வட ஆப்பிரிக்காப் பிரதேசங்களெல்லாம் அச் சாம்ராஜ்யத்தின் தெற்கு எல்லையாக விளங்கின. அதன் மேற்கெல்லை அட்லாந்திக் சமுத்திரமேயாகும். அது மாத்திரமில்லை : இங்கிலாந்துகூட அந்த ஏகாதிபத்தியத்தில் ஒரு மாகாணமாகவே இருந்தது, மத்தியதரைக் கடலை ரோமர்கள் தங்கள் வீட்டு ஏரி என்றே சொல்லிக் கொள்ளுவார்கள். அத்தனை விசாலம் அவர்களுடைய ஏகாதிபத்தியம்! அத்தனை செருக்கு அவர்களுடைய இதயத்தில் ரோம ஜாதியார் வீரத்திலும் நீதியிலும் சிறந்திருந்தார்கள். அத்தகைய நாட்டாரோடு அக்காலத்தில் நம் பாண்டி நாட்டிலிருந்த மன்னர்கள் பலவிதத்தில் சிநேக பாவத்தோடு தொடர்பு கொண்டு வாழ்ந்து வந்தனர்.

அந்தச் சாம்ராஜ்யத்திற்குத் தலைநகர் ரோமாபுரி. அதில் செங்கோலோச்சிய சக்ரவர்த்திகளுள்ளே தலை சிறந்தவன் மார்க்க ஒளரேலியன். அவன் பல சமயங்களில் எழுதி வைத்திருத்த ஞாபகக் குறிப்புக்களே இப்பொழுது ‘மணிமொழிகள்’ என்னும் பெயரால் வழங்கி வருகின்றன. அந்த ஞான மலர்களில் சிலவற்றையே இந்நூலில் மொழிபெயர்த்து அமைத்திருக்கிறேன். அவைகளில் எத்தகைய உயர்ந்த ஞானமும், ஒழுக்க போதமும், ஆன்ம உறுதியும் நிறைந்திருக்கின்றன என்பதை வாசிப்போர் எளிதில் அறிந்துகொள்வர். சக்ரவர்த்தி மார்க்க ஒளரேலியன், உயர்ந்த ஞானத்தைச் சிந்தித்ததோடு நில்லாது, அதன்படியே ஒழுகியும் வந்தவன். உலகில் பெரியோரின் உயர்ந்த ஒழுக்க நடை என்றும் நமக்கு உறுதி பயக்கும். அப்பெரியோரும் அரசராய், அளவற்ற செல்வமும், அகன்ற ராஜ்யமும், அவற்றால் உண்டாகும் சுகானுபவங்களும் தங்களுக்கிருந்தும் அவைகளில் பற்றின்றித் தாமரையிலைத் தண்ணீர்போல் வாழ்ந்திருப்பின், அத்தகையவரின் சரிதையால் நாம் பெறும் நன்மையை அளவிடமுடியாது. ஆகையின் மார்க்க ஒளரேலிய சக்ரவர்த்தியின் மணிமொழிகள் நம்மால் பெரிதும் போற்றத்தக்கன.

ஒளரேலியன் ரோமாபுரியில் கிறிஸ்து பிறந்தபின் 121-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தான். அவன் தந்தை அன்னிய வேரன் என்பவன் அந்நகரின் தலைமை நீதிபதியாய் இருந்தான். மார்க்கன் பிறந்து மூன்று மாதத்திற்குள் அவன் தந்தை இறந்துவிட்டான். தந்தையின் சகோதரியின் கணவனான அந்தோனீன பியன் என்பவன் அப்பொழுது ரோம ராஜ்யத்திற்குச் சக்ரவர்த்தியாயிருந்தான். ‘உலகத்தில் தோன்றிய சான்றோர்களில் இவனே பரிபூரணமானவன்' என்று மாரிஸ் மாட்டர்லிங்க் என்னும் பேரறிஞர் புகழ்கிறார். இத்தகைய சக்ரவர்த்திக்கு இரண்டு அபிமான புத்திரர் இருந்தனர். அவர்களில் நம் மார்க்க ஒளரேலியன் ஒருவன். ஆகையால் மார்க்கன் சிறந்த கல்வியும் அரசர்க்குரிய வித்தைகளும் கற்பிக்கப் பட்டான். மார்க்கன், தனக்குக் கடவுள் அருளால் வாய்த்த தந்தை, தாய், அபிமான பிதா, ஆசிரியர் அனைவரும் வெகு நல்லவர் என்றும், தான் அவர்களால் அடைந்த பயன் அளவற்றது என்றும், அதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறியுள்ளான். அவனுக்குக் கல்வி போதித்த ஆசிரியர்களெல்லோரும் அக்காலத்திய அறிஞர்களில் மிகச் சிறந்தவர்கள். அவர்களில் அவனால் பெரிதும் போற்றப்பட்டவன் ருஸ்திகன் என்பவன். அவன் மார்க்கன் சக்ரவர்த்தியான பின்னும் மார்க்கனுக்கு மதிமந்திரியாயிருந்தான். இவ்வளவு சிறந்த ஆசிரியர்களையும் இவ்வளவு சிறந்த மாணவனையும் காண்பது அரிது என மேனாட்டு அறிவாளிகள் கூறுகின்றனர்.

மார்க்கன் முதலில் கவி பாடவும், பிரசங்கம் செய்யவும் கற்றான். ஆனால், வயது பதினொன்று வந்தவுடன், அவைகளில் வெறுப்புற்றுத் தத்துவ சாஸ்திரம் கற்பதில் நாட்டங் கொண்டான். தத்துவ சாஸ்திரிகளைப்போல சாதாரண உடை உடுத்தி, ஊண் மிகச் சுருக்கி, படிப்பில் அதிகச் சிரமம் மேற்கொண்டான். அதனால் அவனுடைய தேக சுகமும் சிறிது குறைந்திருந்தது. பின்னர் அரசர்க்கு அவசியந் தெரியவேண்டிய சட்டக் கல்வியையும் ஆயுதப் பயிற்சியையும் மேற்கொண்டான்.

இருபத்தைந்தாவது வயதில் மார்க்கன் தன் மாமனும் அபிமான பிதாவுமான சக்ரவர்த்தி அந்தோனீன பியனின் புத்திரியாகிய பெளஸ்தீனா என்னும் அரசிளங் குமரியை மணந்தான். சக்ரவர்த்தி அவனுக்கு ரோம் ராஜ்யத்தில் யுவராஜாவுக்கு வழக்கமாக வழங்கும் ஸீஸர் என்னும் நாமம் சூட்டி, ராஜ்ய நிர்வாகக் காரியங்களிற் பலவற்றை அவனிடம் ஒப்புவித்தான். சக்ரவர்த்தியின் மரணகால பரியந்தம் இருவரும் மன ஒற்றுமை மாறமல் நட்புடன் வாழ்ந்து வந்தனர்.

161-ஆம் வருஷத்தில் சக்ரவர்த்தி பியன் இறந்து விடவே மந்திராலோசனை சபையார் மார்க்கனைச் சக்கரவர்த்தி பதவியை ஏற்று ராஜ்யபாரத்தை நிர்வகிக்கும்படி கேட்டனர். ஆனால், முன்சொன்னபடி பியனுக்கு வேரன் என்று மற்றோர் அபிமான புத்திரன் இருந்தபடியால் அவனும் தன்னோடு கூடவே சிங்காதனம் ஏறவேண்டுமென்று மார்க்கன் வற்புறுத்தினான். கடைசியாக மந்திராலோசனை சபையாரைத் தனக்கு இணங்கும்படியும் செய்துவிட்டான். ஆகவே இருவரும் சம உரிமையுடன் சக்ரவர்த்திகளாக இருந்துகொண்டு ராஜ்யத்தை ஆள ஆரம்பித்தனர். வேரன் போகாதுரனாகவும் பெரு நோக்கற்றவனாகவும் இருந்தும், மார்க்கன் அவனுடைய குற்றங்களைப் பாராட்டாமல் அவனுடைய தவறுகளால் வரும் திமைகளைப் பொறுமையோடும் சாமர்த்தியத் தோடும் விலக்கிக்கொண்டு, அவனோடுகூடச் சுமுகமாகவே இருந்துவந்தான். சுமார் எட்டு வருஷங்கள் இவ்வாறு நடந்துவந்ததது. ஒன்பதாவது வருஷத்தில் வேரன் இறந்தான். அதன் பிறகு மார்க்கன் ஏகச் சக்கரவர்த்தியாக ஆட்சியை நடத்திவந்தான்.

161-ஆம் வருஷத்தில் ராஜ்யபாரம் வகிக்க ஆரம்பித்த நாள்முதல் அவனுடைய ஆயுள் இறுதிவரை, மார்க்கன் தன் விருப்பத்துக்கு மாறாக, தனது காலத்தை யுத்தங்களிலேயே கழிக்கும்படி நேர்ந்தது. 175-ஆம் வருஷத்தில் ஆவீதிய காள்ஸியன் என்னும் ரோமதளபதி ஒருவன் ஆசியாவில் சக்ரவர்த்திக்கு எதிராகக் கலகம் செய்தான். ஆனால் அவனைச் சக்ரவர்த்தியின் அதிகாரிகளில் சிலர் கொன்றுவிட்டனர். அதைக் கேட்டவுடன் மார்க்கன் மிகவும் துக்கித்தான். “அவனை மன்னிப்பதால் வரக்கூடிய ஆனந்தம் கைநழுவிப் போனமைபற்றி வருந்துகிறேன் !” என்று சொன்னான். இத்தகைய நல்லெண்ணத்தோடு மாத்திரம் நில்லாமல், மார்க்கன், அக்காஸ்ஸியனின் குடும்பத்தாரையும் நண்பரையும் மிகப் பட்சமாகவே நடத்தி, தன் அருளுடைமையை விளக்கிச்சிறந்தான்.

175-ஆம் வருஷத்தில் போர் நிமித்தமாக வெளியூருக்குச் சென்றிருந்த காலத்தில் மார்க்கன் தன் அருமை மனைவியை இழந்துவிட்டான். அவன் அவளிடம் அதிகமான அன்பு வைத்திருந்தான். "பணிவுடையாள், ஆடம்பரமற்றவள், அன்புடையாள் " என்று அவளைப் புகழ்ந்துரைக்கிறான். ஆகவே, அவள் பிரிவை ஆற்றமல் மிகுந்த கிலேசமுற்றான்.

தன் தந்தை பியன் தன்னே அரச நிர்வாகத்தில் சேர்த்துக்கொண்டது போல் தானும் மறு வருஷத்தில் தன் மகன் கொம்மோதன் என்பவனைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். மிகுந்த ஒழுக்க சீலனான மார்க்கனுக்குப் பிறந்தும், அவனோடு சேர்ந்து வாழ்ந்தும், கொம்மோதன் தந்தை இறந்தபின் துன்மார்க்கனாய்விட்டான். ஆனால் சிறுவயதில், அதாவது 19-ஆவது வயதில், தந்தையின் மரணத்தால் தனியே விடப்பட்டதனால் அவன் அவ்விதம் துன்மார்க்கனாயிருக்கக்கூடும். மேலும் சன்மார்க்கருக்குத் துன்மார்க்கர் பிறப்பதை அநுபவத்தில் பார்த்திருக்கிறோமல்லவா?

மார்க்க ஒளரேலியன் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன் அல்லன். அக்காலத்தில் ரோம் ராஜ்யத்தில் பெரும்பான்மையோருடைய மதம் வேறு. அப்பொழுதுதான் கிறிஸ்தவ மதம் சிறிது சிறிதாய்ப் பரவிக்கொண்டிருந்தது. ஆனால் பொதுஜனங்கள் அதை வெறுத்துக் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வந்தனர். அரசரும் பிறரும் அவர்களால் உண்மை ஞானத்துக்கும், பொது வாழ்வுக்கும், ராஜ்யத்துக்கும் பெருங் கேடே விளையுமென்று உண்மையாய் நம்பியிருந்தனர். இந்நிலைமையில் மார்க்கனும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும்படி கட்டளையிட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், ஆசிரியர்களில் சிலர் அவன் அவ்விதம் செய்தனன் என்றும், சிலர் அவ்விதம் செய்யவில்லை என்றும் கூறுகின்றனர். இச்சிறு நூலில் அதைப்பற்றி விவரித்து நிர்ணயித் தெழுதவேண்டியதில்லை. ஒன்றுமட்டும் சொல்லலாம்: கிறிஸ்து நாதரின் ஹிதோபதேசம் முழுவதும் அவனுக்குத் தெரிந்திருந்தால், அவன் கிறிஸ்தவருக்கு யாதொரு கேடும் செய்ய ஒருப்பட்டிரான் என்பது நிச்சயம். ஏனெனில் பகைவரை மன்னித்தலையே தலைசிறந்த தர்மமெனக் கிறிஸ்து நாதர் கூறியதுபோல் இவனும் கூறி, அவ்விதமே நடந்தும் வந்தவன்.

மார்க்கன், கி. பி. 179-ஆம் வருஷத்தில், அதாவது தன் ஐம்பத்தொன்பதாவது வயதில், பாசறையிலே இறந்தான். அவன் இறக்கும் சமயத்தில் அவனைச் சூழ்ந்து நின்ற மந்திரிகளும் சேனாதிபதிகளும் அவன் பிரிவை எண்ணி அளவில்லாத துக்க மேலீட்டால் கண்களில் நீர் பெருக நின்றனர். அதைக் கண்ணுற்ற மார்க்கன், “ஏன் அழுகின்றீர்கள்? சேனையைப் பற்றியே சிந்தியுங்கள். எனக்காக வருந்தாதீர். நீங்கள் பின்னால் வருவீர்கள், நான் முன்னால் போகிறேன். அவ்வளவு தானே, விடை தாருங்கள், போய்வருகிறேன்” என்று கூறினன். அவனுடைய தேகம் ரோமாபுரிக்குக் கொண்டு வரப்பட்டு, வெகுவிமரிசையாக அடக்கஞ் செய்யப்பட்டது. கொம்மோதன் அவனுடைய ஞாபகார்த்தமாக ரோமாபுரியில் ஒரு கோபுரம் கட்டி அதன் மீது அவன் சிலையை நிறுத்திவைத்தான். பிரஜைகள் அனைவரும் அவனைத் தங்கள் கிரகதேவதைகளில் ஒன்றாக மதித்து வீடுகளில் அவனுடைய விக்கிரக மொன்றை வைத்துப் பூசித்த வரலாயினர்.

மார்க்க ஒளரேலியனுடைய புகழைப் பாடாதார் இல்லை. ஒருவனை அவனோடு கூடவே இருந்தவர் புகழ்வதும், அவனுடைய பகைவர் புகழ்வதும் துர்லபம. ஆனால் இவனை உடன் வாழ்ந்தவர் பகைவர் உள்படச் சகலரும் புகழ்ந்தனர் என்றால் இவனுடைய மேன்மையை என்னென்று சொல்வது ! மேலும், உலகம் யாரையும் பரிபூரண புருஷன் என்று ஒப்புக்கொள்வதில்லை; ஒவ்வொருவன் மீதும் ஏதாவது ஒரு குற்றத்தை ஏற்றியே வைக்கிறது. அரசர்கள் ஜீவந்தர்களாக இருக்கும் வரையில் பிரஜைகள் அவர்களிடம் தேவபக்தி செலுத்துகிறார்கள். ஆனால், அவர்கள் இறந்தவுடன் அவர்களுடைய குற்றங்களைப் பற்றிக் கூசாமல் வாதிக்கிறார்கள். ஆயினும், உலகம் அன்று முதல் இன்று வரையில் மார்க்கனைக் கோதிலாப் பெருங் குணத்தானகவே மதித்து வருகிறது. மார்க்கனுடைய விக்கிரகம் இங்கிலாந்து முதலான தூர தேசங்களிலும் வணங்கப்பட்டு வந்தது என்றால் மார்க்கனுடைய சிறப்பை எவ்வாறு அளவிடக்கூடும்?

அந்தப் பெருந்தகையின் உடல் வாழ்வு இத்தன்மையதாக, அவனுடைய ஆன்ம வாழ்வின் செளந்தரியத்தைச் சிறிது கவனிப்போம். அவனுடைய ஆன்ம வாழ்வை அறிவதற்கு நமக்கு ஆதாரமாக உள்ளவை அவனுடைய மணிமொழிகளே. இம்மணிமொழிகள், தினந்தோறும் தனக்குத் தோன்றிய பொழுதும், ஆறுதல் வேண்டிய காலத்தும், அநேகமாகப் போருக்குச் சென்றிருந்த காலத்தில் பாசறையில் வைத்தும் எழுதப்பட்டவை. எல்லாம் அவன் சொந்தப் பார்வைக்கென்றே எழுதப் பட்டவை. அவைகளில் அவனுடைய அருளறம் பூண்ட நெஞ்சம் தெளிந்த நீர் போல் பிரகாசிக்கின்றது. அவனுடைய கொள்கையையும், அதன்படி நடக்க அவன் பட்ட கஷ்டங்களையும், அக்கஷ்டங்களை நீக்க அவன் கொண்ட வழிகளையும், பிறவற்றையும் அவைகளில் நாம் பார்க்கக் காணலாம்.

அவனுடைய மொழிகள் எவ்விதத்தில் நமக்கு நன்மை பயக்கும்? உலகில் எத்தனையோ பெரியோர்கள் நீதிநெறியைப் பல வழிகளில் விளக்கியிருக்கின்றனர். ஆனால் வெகு சிலருடைய மொழிகளே, கேட்பாரைப் பிணித்து, கேட்டவையின்படி செய்யத் தூண்டக் கூடியவைகளாயிருக்கின்றன. அத்தகைய குணமுடையன மார்க்க ஒளரேலியனுடைய மணிமொழிகள். ஆகையால், அனைவரும் அவற்றை வாசித்து, மனம் திருந்தி, நல்வாழ்வு பெறவேண்டு மென்பதே என் அவா.