சங்க கால வள்ளல்கள்/பாரி

விக்கிமூலம் இலிருந்து


1. பாரி
பாரியின் பொது இயல்பு

பாரி என்பவன் பறம்பு நாட்டிற்குத் தலைவன். அப்பறம்பு, மலையும் மலையைச் சார்ந்த முந்நூறு ஊர்களையு முடையது. இவன் பறம்பு மலைக்கும் பறம்பு நாட்டிற்குந் தலைவனாக இருந்தாலும், பேர் அரசர் என்னும் பெயரைப் பெறுதற்குரியன் அல்லன். இவன் குறுநில மன்னன் என்றே குறிப்பிடத்தக்கவன். இவன், குறுநில மன்னனேயானாலும் பெரு நில மன்னர்க்குரிய தகுதிகள் பலவும் அமையப்பெற்றவன். இவன் வீரமும் ஈரமும் ஒருங்கே அமைந்து விளங்கியவன். இவன் வீரத்திலும் இவன் மாட்டு அமைந்த ஈரமே இசையால் திசைபோயதாய்க் காணப்பட்டது. இவனைக் கபிலர் இகழ்வது போலப் புகழும் முறையில் ஓர் அழகிய பாட்டையும் பாடி, இவனது கொடைத் திறத்தைச் சிறப்பித்துள்ளனர். அப்பாட்டின் திரண்ட பொருள், “உலகில் பொது மக்களும், புலவர் பெருமக்களும் பாரி பாரி என்று இவனையே கொடைக்கு எடுத்துக்காட்டாகப் புகழ்ந்து பேசுகின்றனர். இவ்வுலகை வறுமையால் நலியாவண்ணம் காப்பவன் பாரி ஒருவனே அல்லன், மாரியும் உண்டு,” என்பதாம். உலகைக் காப்பதற்கு மாரியும் பாரியுமன்றி வேறல்லர் என்பதாம். இதன் நுண்பொருளைச் சிந்திக்கவும். இது வரம்புகடந்த புகழ்ச்சியேயானாலும், பாரி கொடைத்திறத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தான் என்பதில் ஐயமின்று. இவன் இங்ஙனம் கொடையில் சிறந்து காணப்பட்டமையால்தான், ஆளுடைய நம்பியாகிய சுந்தரர் தம் திருப்பாட்டில், "கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை," என்று இவன் கொடுக்கும் ஆற்றலைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

பாரி முல்லைக்குத் தேர் ஈந்தது

பாரி இன்னார்க்கு இது கொடுத்தல், இன்னார்க்கு இது கொடுத்தல் ஒண்ணாது என்று எண்ணும் இயல்பினனல்லன். இவன் கொடுக்குமுன், இஃது அஃறிணைப்பொருள், இவர்கள் உயர்திணை மக்கள் என்று கூடச் சிந்திப்பதில்லை. இருதிணைப் பொருள்களையும் ஒக்கவே எண்ணி ஈந்துவந்தான். ஒருசமயம் பாரி தன் மலைவளங்காணத் தன் ஆழியில் ஊர்ந்து வெளியே சென்றவன், இயற்கை எழிலை இனிது துய்த்துக்கொண்டு வந்தான். காணவேண்டிய காட்சிகளைக் கண்டு களித்தான். பின்னர் அரண்மனை நோக்கி ஆழிமிசை இவர்ந்து வருவானானான். வருகின்ற வழியில் ஒரு முல்லைக்கொடி படர்ந்து தென்றலங் குழவி மெல்லெனத் தவழ்தலால், அலைப்புண்டு ஆடிக்கொண்டிருந்தது. அதனைக் கண்டான் பாரி. உடனே தன் வையத்தினின்று கீழே இழிந்தனன். "ஆ! இம்முல்லைக்கொடி, தான் நன்கு செழித்துப் படர் தற்குரிய கொழுகொம்பு இன்றி இப்படி அலைகிறது போலும்! இதற்கு ஆண்டவன் வாயினை அமைத்திருப்பின் தன் இடர்ப்பாட்டை எளிதில் வெளியிட்டிருக்கும். அஃது இன்மையால் இப்படி ஆடி அசைந்து தனக்கு உதவி வேண்டும் என்பதைக் காட்டுகின்றது போலும்!" என்று எண்ணினவன், அது படர்தற்குரிய கொழுகொம்பு ஒன்றைத் தன் அரண்மனை ஆட்களின் மூலம் அனுப்புதலின்றித் தான் இவர்ந்து போந்த இரதத்தினையே அது படர்தற்கு அதன் அண்மையில் நிறுத்தி, அக்கொடியினையும் அதன் மேல ஏற்றித் தான் நடந்தே தன் திருமாளிகையை நோக்கித் திரும்பினான். இவன் தேர் இன்றித் தமியனாய் வருதலைக் கண்ட அமைச்சரும், தானைத் தலைவர் முதலான மற்றுமுள்ளோரும் இறும்பூதுற்று, இவன் அருகேவந்து உசாவ, இவன் நடந்த வண்ணம் நலின்றனன். அவர்கள் யாவரும் பாரியின் வள்ளன்மையை வாயாரப் புகழ்ந்தனர். “ஓர் அறிவு உயிரான முல்லைக்கொடிக்கு ஆழியீந்த அருமை வள்ளலே” என்று பாராட்டியும் பேசினர். இப்புகழ், நகர் எங்கும் நாடெங்கும் பரந்தது. இவனது இச்சீரிய செயலால், இவன் தலைசிறந்த கொடையாளி என்பது புலனாகவில்லையா ?

கபிலர், பாரியின் மகளிரை இருங்கோவேள் என்பானுக்கு அறிமுகப்படுத்திக் கூறவேண்டிய நிலையேற்பட்டது; அந்நிலையிலும் பாரியைப்பற்றி வேறு எதையும் கூறாமல், இவன் முல்லைக்குத் தேர் ஈந்த கொடைத் திறத்தினேயே எடுத்து மொழிந்தனர். இவ்வாறே விச்சிக் கோவிடமும் பாரி மகளிரை மணந்துகொள்ளவேண்டி அவர்கள் இன்னார் என எடுத்துக்காட்டுகையிலும், “பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை, நாத்தழும்பு இருப்பப் பாடாதாயினும், கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த, பரந்து ஓங்கு சிறப்பின் பாரிமகளிர் ” என இதனையே எடுத்து மொழிந்துள்ளார். ஆகவே, இவன் முல்லைக்குத் தேர் ஈந்த சிறப்பு மூவுலகு முற்றும் எட்டியது புலனாகிறது.
விறலியரும் கபிலரும்

விறலியர் என்பவர் தம் தொழில்திறனை விறல் படக்காட்டி நடித்துப் பரிசில் பெற்று உயிர் வாழ்பவர். அத்தகைய குடியினள் ஒருத்தி தன் எதிரே வரக்கண்ட கபிலர், அவள் வறுமைக்கோர் உறைவிடமாக அமைந்தவளாய், நல்ல அணிகலன்கள் இன்றி நல்லாடை இன்றி இருத்தலையுங் கண்டு இரக்கங்கொண்டு, அவட்கு இவை அனைத்தும் கிடைக்க வேண்டுமென்ற நல்லெண்ணம் வாய்க்கப் பெற்றுத் தாம் பெற்ற இன்பம் இவளும் பெற்று இன்புடன் வாழவேண்டுமென்ற கருத்துடையவராய், அவளை நோக்கி, "ஒளிபொருந்திய நெற்றியையுடைய விறலியே! நீ வேள் பாரியை அணுகினால், அவன் உனக்கு நல்ல செம்மை வாய்ந்த அணிகலன்களை அளிப்பன். அவன் மலையினின்று இழியும் நீரினும் மென்மைத்தன்மை வாய்ந்தவன் ; கொடுத்தற்கு மறான். அறிவிலரேனும், அறிவுடை யரேனும், அவனை அடைந்து கேட்டால் இல்லை என்னாது ஈயவல்லவன். அவன் வாழ் இடம் பறம்பு. இப்பறம்பு நல்ல சந்தன மரங்களைக் கொண்டது. அச்சந்தன மரங்களே அப்பறம்பு மலையில் வாழும் குறத்தியர்கள் அடுப்பெரிக்கும் கட்டைகள் ஆகும். அப்படி எரிப்பதனால் ஏற்படும் புகை அம்மலைப்பாங்கரில் வளர்ந்துள்ள வேங்கைமரங்களில் சூழ்ந்து காணப்படும். ஆகவே, அம்மலையிடத்துச் சந்தன மரமும், வேங்கைமரமும் தவிர்த்து ஏனைய மரங்கள் இருக்கமாட்டாத அப்பறம்பு நாட்டில் இவ்வட்டில் புகையே அன்றி அடுபோர்ப் புகை காணப்படல் அரிது. அத்தகைய பறம்பு மலைகளையும் கூறுபடுத்திக் கூறுபடுத்திப் பரிசிலர் பலர் பாடிப் பெற்றுச் சென்றுள்ளார். நீயும் பாடி ஆடிச் செலின் நல்லணி கலன்களைப் பெறுவை,” என ஆற்றுப்படுத்தி அனுப்பியுள்ளார். இதனால், பாரி தன்னிடம் வருகின்றவர்களுக்கெல்லாம் ஈபவன் என்பது தெற்றெனப் புலனாகிறதன்றோ!


மூவேந்தர் முற்றுகையும் கபிலர் கட்டுரையும்

பாரிக்கும் கபிலருக்கும் நெருங்கிய நட்புத் தொடர்பு உண்டு. இவன் கொடையும் வீரமும் கண்ட கபிலர், இவனிடத்திலேயே உறைவாராயினர். தம்மைப் பாரியின் நண்பர் என்றே பலரிடமும் கூறிக்கொண்டனர்; பாரியின் மகளிரையும் தம் மக்களாகக் கருதியவர். இருங்கோவேளிடம் தம்மைப்பற்றிக் கூறிக்கொள்கையில் "இவர் யார் என்குவையாயின், இவரே பாரி மகளிர், யானே தந்தை தோழன். இவர் என் மகளிர்,” என்று இத்துணை உரிமை பாராட்டிப் பேசியுள்ளார். பாரி இறந்தபின் அம்மகளிர்க்கு மணமுடித்துவைக்கும் பொறுப்பினைத் தம்மதாகவே கொண்டனர் என்றால், வேறு கூறுவானேன் ?

ஒரு சமயம் சேர சோழ பாண்டியர்களான முடியுடை மன்னர் மூவரும் கூடிப் பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டனர். இம்முற்றுகையால் உள்ளிருப்பவர் வெளியிலும், வெளியில் இருப்பவர் உள்ளும் போதற்கின்றி வருந்தினர். அந்த நிலையில் பாரியின் நெருங்கிய நண்பரான கபிலர், அம் மன்னர் முன்னர் நின்றார். மன்னர்களை உற்று நோக்கினார். உள்ளதை உள்ளவாறு உரைக்க வேண்டுமென எண்ணங்கொண்டார். அவர்களை நோக்கி “முடியுடை மூவேந்தர்காள்! நீங்கள் எதிரிகளின் படைகளை எதிர்த்துத் தாக்கும் படைவலி படைத்தவர்கள் என்பதில் ஐயம் சிறிதும் இல்லை. இத்தகைய பெருவலிபடைத்த நீங்கள், எம் குறுநில மன்னனான பாரியை எதிர்த்துள்ளீர்; பறம்பையும் சூழ்ந்துள்ளீர்; அப்பறம்பு நாடு முந்நூறு ஊர்களையுடையது. அதனை நீங்கள் கைப்பற்றுதல் என்பது முயற்கொம்பே யாகும். நீங்கள் எத்துணை நாட்களாக முற்றுகையிட்டுக் கிடந்தாலும் நாங்கள் வருந்தமாட்டோம். உணவு இன்றென உயங்க மாட்டோம். எங்கள் பறம்பு நாடு இயற்கை வளன் இயையப்பெற்றது. இயற்கையில் கிடைக்கும் உணவினைப் பெறவேண்டும் என்னும் நிலையினில் நாங்கள் இருப்பவரல்லேம். “விச்சதின் றியே விளைவு செய்கு வாய்,” என்பதற்கு இணங்கவும், “வித்தும் இடல் வேண்டுங் கொல்லோ,” என்பதற்கு ஏற்பவும், யாங்கள் விளைத்தல் இன்றிப் பெறக்கூடிய உணவு எங்கள் பறம்பு மலையில் உண்டு. அவை இன்னவென நீங்கள் அறிய விரும்பின் அறைகின்றனன். அவற்றையும் கேளுங்கள்: சிறிய இலையினையுடைய மூங்கில் நெல் எங்கட்கு முட்டின்றி விளையும். அவற்றைக் கொண்டு உணவு சமைத்து உண்டு வருவோம். எங்கள் பறம்பு மலைப்பாங்கர், எங்கும் தீஞ்சுனைப் பலா முழவென முதிர்ந்து காணப்படும். அவற்றை உண்டு ஆனந்தம் உறுவோம். வள்ளிக்கிழங்கு எங்கட்கு வளமுறக் கிடைக்கும். அவற்றை அருந்தி ஆர்வம் அடைவோம். எங்கள் நாடு குறிஞ்சி நாடு. ஆதலின், தேன் இறால்கட்குத் தியக்கம் கிடையாது. குன்றுதோறும் தேன் அடைகள் தூங்கிக்கொண்டிருக்கும். ஆக, இந்நான்கு உணவுப் பொருள்களால் நாங்கள் உடற்சோர்வும் உள்ளச் சோர்வுமின்றி உண்டு வாழவல்லோம். 'உண்ண உணவு உண்டேல், பருக நீருண்டோ?' என நீங்கள் பகரவும்கூடும். ஆம்! ஆம்! நீங்கள் நினைக்கவும்கூடும். பாரியின் மலை ஆகாயத்தைப்போன்றது. அவ்விண்ணில் விளங்கும் மீன்களைப் போன்றவை, இப்பறம்பில் காணப்படும் சுனைகள் என்றால், நீர்ச்சுனைகளின் மிகுதிப்பாட்டை இதற்கு மேலுமா இயம்ப வேண்டும்! நீங்கள் கொணர்ந்த வேழத்திரளையும், தேர்க் கூட்டத்தையும் நான் காண்கின்றேன். அவ்யானைகளைக் கொணர்ந்து இப்பறம்பு மலையின் மரங்கள் தோறும் கட்டியுள்ளதையும் காண்கின்றேன். தேர்த்திரளினைத் திசைகள் தோறும் நிறுவியுள்ளதையும் காண்கின்றேன். இத்தப் படைப்பெருக்கைக் கொண்டு எங்கள் பாரியை நீங்கள் வெல்ல இயலாது. பறம்பையும் கொள்ள முடியாது. உங்கள் முயற்சியும் பயன் தராது. நான் ஒன்று கூறுகிறேன். அதன்படி நடவுங்கள். அப்படி நடந்தால் உங்கட்குப் பறம்பு கிடைக்கும். அப்பொழுதும் பறம்பு நாடு கிடைக்கமாட்டாது. அந்நாடு முந்நூறு ஊர்களையுடையதுதான். என்றாலும், அம் முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பாடி வந்து பெற்றுப் போயினர். இப்பொழுது இருப்பவர்கள் பாரியும் யானும் இக்குன்றுமே ஆகும். உங்கட்கு இக்குன்று வேண்டுமாயின், நரம்பினைக்கொண்டு யாழினைப் பண்ணுங்கள். நீங்கள் பரிசிலர் வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள். விறலியரும் உம் பின் வரப் பார்த்துக்கொள்ளுங்கள். இம்முறையில் "பரிசில் தா," என எங்கள் பாரியை வேண்டுங்கள்: இவன் இக்குன்றை யீவன்," எனக் கூறினார் என்றால், பாரி ஈகைக்கு எத்தனை எளியவனாய் இருந்தனன் என்பது வெளிப்படுகின்றதன்றோ !


பாரியின் இறப்பும் பாரி மகளிரும்

அந்தோ ! இவன் இத்துணைக் கொடைவள்ளலாய் இருந்தமையாலும், புறமுதுகு காட்டி ஓடா வீரனாய்த் திகழ்ந்த காரணத்தாலும், இவன் இருப்பதால் நம் இசைக்கு வசை ஏற்படும் என்று எண்ணியதாலும் மூவேந்தரும் வஞ்சனையால் பாரியை மாய்த்துவிட்டனர். அந்தக்காலத்துக் கபிலரும் பாரி மகளிரும் மற்றும் உள்ளோரும் வருந்திய வருத்தத்திற்கு அளவே இல்லை. பாரிமகளிர் நல்ல தமிழ்ப் புலமை வாய்ந்தவர்கள். பாடல் இயற்றும் பான்மையும் பெற்றவர்கள். அவர்கள் பிற்கால இரட்டைப் புலவர்களைப்போன்று முற்கால இரட்டைப் புலவர்களாக இருந்து, இருவரும் ஒன்று சேர்ந்து பாடும் பீடும் பெற்றவர்கள். அவர்கள் பாடிய பாடல்கள் பலவாக இருக்கலாம். ஆனால், நமக்கு இப்பொழுது கிடைத்த பாடல் ஒன்றேயாகும். அப்பாடல் கற்பார் நெஞ்சைக் கரையச் செய்யவல்லது, அது தம் தந்தையார் இன்மையால் வருந்திப் பாடப்பட்டது. தந்தையார் இறந்து ஒரு திங்கள் ஆயிற்று. மறு திங்களும் வந்துற்றது. அப்பொழுது அவர்கள் தம் தந்தையாரை எண்ணி, “சென்ற மாதம் முழுமதி நிலவில் யாமும் எம் தந்தையாரும் ஒருங்கிருந்து அளவளாவினோம். ஆனால், இந்தத் திங்களில் இம் முழு நிலவில் எங்கள் தந்தையாரை இழந்து வாடுகின்றோம். சென்ற மாதம் எங்கள் தந்தையார் பறம்புநாடு எங்கட்கே உரியதாய் இருந்தது; குன்றையும் எவரும் கொண்டிலர். இந்தத் திங்களில் முரசினையுடைய மூவேந்தரும் வஞ்சித்து எம் தந்தையாரைக் கொன்றனர்; குன்றையும் கொண்டனர்,” என வருந்திப் பாடினர்.

புலமைப் பேறு இருந்ததுபோலத் தம் தந்தையார்போல ஈகைப் பண்பும் அமையப் பெற்றிருந்தனர் இம்மகளிர். இதற்குச் சான்றாக இவர்கள் செய்த அறச்செயல் ஒன்றே போதுமானதாகும். ஒருமுறை மழைபெய்தல் இன்றிப் பஞ்சம் நேர்ந்த போது, ஒரு பாணன் தம் வறுமை காரணமாக இவர்களிடம் இரந்துண்ண வந்தான். அன்னவனுக்குப் பொன்னீந்து சோறும் நல்கி உபசரித்தனர் எனப் பழமொழி நானூறு கூறுவதினின்றும் அறியலாம்.


கபிலர் பறம்பினை விட்டுப் பிரிதல்

கபிலரும் இனித் தமக்குப் பறம்பினிடத்து இருக்க இடம் இல்லையென உணர்ந்து, பிரிந்து செல்கையில் அப்பறம்பு மலையைப் பார்த்துக் கூறிய பாடல் உள்ளத்தை உருகச் செய்வதாகும். அவர் பறம்பை நோக்கி, "ஏ பறம்பே! நீ பாரி இருந்த காலத்தில் எம்மொடு நட்புச் செய்தாய். இப்பொழுது பாரி இறந்தமையால் நாங்கள் கலங்கிச் செயல் அற்று நீர்வார் கண்களையுடையவராய் நின்னைத் தொழுது வாழ்த்திச் செல்கிறோம். ஏ பறம்பே உன் தோற்றப் பொலிவை நாங்கள் என் என்பது? நீ உன்னை நெருங்கி நின்று காண்போர்க்கும் காட்சி அளிப்பை. சிறிது தொலைவு சென்று நின்று காண்போருக்கும் காட்சி அளிப்பை,” என்று கூறி வருந்தினார். இது பறம்பைப் புகழ்ந்ததாக மட்டும் அமையாமல், பாரியையும் உடன் புகழ்ந்ததாக அமைந்துள்ளது. மேலும், அவர் அப் பறம்பைக் கண்டு அதன் இயற்கை வளத்தை எண்ணி அதனையும் எடுத்து இயம்பி வருந்திப் பாடினார் அஃதாவது, பாரியின் மலையில் ஒரு பக்கம் அருவி ஆரவாரஞ்செய்து ஒழுகிக்கொண்டிருக்கும் எனவும், பாணர்கட்கு வார்க்க வேண்டி மலையில் உள்ள தேன் கூடு உடைந்து தேனைச் சொரிந்து கற்களை உருட்டிக் கொண்டுவரும் என்றும் கூறினார்.

பாரி தான் உயிருடன் இருந்த காலத்துத் தன்னாட்டைச் செங்கோல் தவறாது ஆண்டுவந்திருக்கிறான். அதனால்தான், இவன் நாட்டில் உற்பாதங்கள் நிகழ்வது இல்லை. சனி என்னும் நட்சத்திரம் எரிந்து புகைதலும், தன் பகைராசிகளான இடபம், சிங்கம், மீனம் இவற்றோடு சேர்தலும், எல்லாத் திசையினும் புகைதோன்றுதலும், வெள்ளி தென் திசையில் சென்று முளைத்தலும், உற்பாத நிகழ்ச்சிகள். இத்தகைய உற்பாதங்கள் ஒருவேளை பாரியின் பறம்பு நாட்டில் தோன்றினாலும், இவன் நாட்டில் விளைவு குறைதல் கிடையாது. மலர் மரங்கள் பூத்தலில் குறைவு படுதல் இல்லை. இதனால், பாரி அறத்தாற்றில் அரசு புரிந்தான் என்பது தெரிகிறது.

இத்தகைய பறம்பு, பாரி இறந்தபின் பயன் அற்றுப் பொலிவற்றுப்போயது என்பது கபிலர் கருத்து, சிறிய குளம் பாதுகாப்பார் இன்றி, உடைவதுபோலப் பாரியின் பறம்புநாடும் பாதுகாப்பார் இன்றிப் போயது என்று கூறி வருந்தினர். பறம்பு நாட்டு வாழ்வுடை மக்கள் உணவின்றி வருந்தாதவர் என்பது முன்பு உரைக்கப்பட்டதன்றோ ஆகவே, அப்பறம்பு நல்ல தினை விளைவு உடையதாய் இருந்தது. நிழல் இல்லா ஒரு கனி மரம் நின்று, வழிப்போக்கர்க்கு உதவுவதுபோல, இவன் நாடும் பறம்பு மலையும் இரவலர்க்குப் பேருதவியாய் இருந்தன.

கபிலர் பறம்பு நாட்டைவிட்டுப் பிரிந்து சென்றாலும், தாம் பாரியின் நண்பராக இருந்த காரணத்தால், அப் பாரியின் மகளிரைத் தக்கோர்க்கு ஈயப் பெரும் பாடுபட்டுப் பல சிற்றரசர்கள்பால் எல்லாம் அழைத்துச் சென்றார். அச்சிற்றரசர்கள் இருங்கோவேள், விச்சிக்கோன் என்பவர்கள். அவர்கள் யாவரும் அம்மகளிரை மணக்க மறுத்தனர். அவர்கள் மறுத்தமைக்குப் பல காரணங்கள் இருப்பினும், ஒரு காரணமாகச் சொல்லக்கூடியது அம்மகளிர் மூவேந்தர்களின் பகைவனான பாரியின் மகளிர் என்பதே யாகும். அவர்கள் அம்முடியுடை மூவேந்தர்களுக்குத் தாம் பகைவர் ஆதல் கூடாது என்பதாம். என்றாலும், இறுதியில் கபிலர் அந்தணர் ஒருவர்க்கு இம்மகளிரை மணம் முடித்து, தம் கடமையை முடித்து மகிழ்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சங்க_கால_வள்ளல்கள்/பாரி&oldid=1108632" இலிருந்து மீள்விக்கப்பட்டது