சங்க கால வள்ளல்கள்/வல்வில் ஓரி
ஓரி என்பவனும் வள்ளல் வரிசையில் வயங்கும் ஒருவன். இவன் வல்வில் ஓரி என்றும், ஆதன் ஓரி என்றும் அழைக்கப்படுபவன். இவன் கொல்லி என்னும் மலைக்கும், அதனைச் சார்ந்த இடங்கட்கும் தலைமைபூண்ட தகைமையாளன். இவன்பால் ஈகைப் பண்பு இயைந்து காணப்பட்டமையால், இவனைப் புலவர்கள் பாடிப் புகழ்வாராயினர் அப்படிப் பாடிய புலவர்கள் வன்பரணர் என்பாரும், கழைதின் யானையார் என்பாரும் ஆவர். இவ்விரு புலவர்களும் தனிப்பட்ட முறையில் இவனைக் குறித்துத் தனித்தனிப் பாடல்களை இயற்றியவர்கள். இவர்களே அன்றி, இவனையும் இவனைச் சார்ந்த ஏழு வள்ளல்களையும் புகழவந்த இடத்துப் பாடிய புலவர்கள் இருவர். அவர்கள், பெருஞ் சித்திரனாரும் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய புலவரும் ஆவர். பெருஞ் சித்திரனார் இவனைக் குறித்துப் பாடுகையில் “பிறங்குமிசைக் கொல்லியாண்ட வல்வில் ஓரி,” என்றனர். சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் "காரிக்குதிரைக் காரியொடு மலைந்த ஓரிக் குதிரை ஓரி,” என்று பாடியுள்ளனர். இங்ஙனம் ஓரி இப்புலவரால் சுட்டப்பட்டிருத்தலை நோக்கின், இவன் காரி என்பானுடன் போரிட்டவன் என்பதும், காரியென்பானிடம் இருந்த இவுளி காரிக் குதிரை என்பதும், ஓரி யிவர்ந்த குதிரை ஓரி என்பதும் இங்கு உணர்த்தப்பட்ட செய்கைகளாகும் இதனால்தான் “காரிக் குதிரைக் காரியோடு மலைந்த ஓரிக் குதிரை ஓரியும் ” என்று இருவரும் இங்ஙனம் சிறப்பிக்கப்பட்டனர்.
வல்வில் ஓரியின் ஈகையினைக் கழைதின் யானையார் கூறுகையில், ஈகையின் உயர்வையும், ஈகை புரியாமையால் எய்தும் தாழ்வையும் நன்கனம் சித்தரித்துப் பாடியுள்ளனர். இப்புலவர் இரத்தலை மிக மிக இழிவாகக் கருதியவர். அதனால், “ஈ என இரத்தல் இழிந்தது," என்றும் மொழிந்தார். வள்ளுவர்க்கும் இரத்தல் இழிவாகக் காணப்பட்டது. "ஆவிற்கு நீர் என்று இரப்பினும் இழிவு," என்கிறார் அவர். “இரந்து, உயிர்வாழவேண்டுமென ஒருவன் படைக்கப்பட்டானாயினும், அங்ஙனம் படைத்தவன் முதலில் அழிவானாக,” எனவும் வைது வசை பாடுகிறார். இரத்தலால் தனக்குரிய மானம் போய், தருமமும் துடைக்கப்பட்டுவிடும் எனக் கடிந்து பேசுகிறார் புகழேந்தியார். “ஏற்பது இகழ்ச்சி” என்பது நம் ஒளவை மூதாட்டியார் அறவுரை அல்லவா? “பல்லெல்லாம் தெரியக் காட்டிப் பருவரல் முகத்தில்கூட்டிச் சொல்வெல்லாம் சொல்லி நாட்டித் துணைக் கரம்விரித்து நீட்டி இல்லெலாம் இரத்தல், அந்தோ இழிவு இழிவு எந்த ஞான்றும்,” என்பது குசேலோபாக்கியானக் கவிஞர் கூற்று. இந்த நிலையில் ஒருவர் வந்து கேட்கையில் இல்லை என்று கூறுவது எத்துணை இழுக்கு என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! இவற்றை எல்லாம் நன்கு அறிந்த கழைதின் யானையார், “ஈ என இரத்தல் எத்தனை இழிவோ அதனிலும் இழிகுணமானது இரந்தவர்கட்கு ஈயேன் என்பது,” என்று கடிந்தும் பாடினார். மேலும், அனுபவ முதிர்ந்து அறிவு சான்ற கழைதின் யானையார், தம்மை வந்து யாசித்தவர்கட்குக் கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்ததாகக் கருதினார். அதனினும் உயர்ந்ததாகப் பிறர் கொடுக்கையில் கொள்ளேன் என்பதையும் உடன் கூறி நம்மை உவகைக் கடலில் திளைக்கவும் செய்கிறார். வேண்டாமை என்பது விழுச் செல்வம் தானே! இதற்கு ஒப்பாவது இம்பரும் இல்லை உம்பரும் இல்லை. இந்த நால்வகைக் கருத்துக்களையே வற்புறுத்த வேண்டிய புலவர் பெருமான் ஓரியை நோக்கி “ஈயென இரத்தல் இழிந்தன்று! அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று; கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந் தன்று” எனப் பாடி இவனைப் பரவசமுறச் செய்தனர்.
மேலும் வல்வில் ஓரி சுருங்கிய செல்வமுடையனாயினும், அச்செல்வத்தினைப் பலர்க்கும் ஈந்து, பார் அறியும் புகழ் உடையவன். ஒருசில மக்கள் பெருஞ்செல்வமுடையராயினும் எவர்க்கும் உதவாத பான்மையராய் வாழ்பவர் என்பதையும் நல்ல உவமை கூறி விளக்கி வைத்தார் புலவர் பெருந்தகையார். பெருஞ் செல்வனை எல்லையற்ற நீரையுடைய உவர்க்கடலுக்கு உவமையாக்கினர். ஆதன் ஓரியை அக்கடல் அருகு அமைந்த சிறு ஊற்று நீருக்கு உவமைப்படுத்தினர். கடல் பரப்புடையதாயினும், அதன் நீரைப் பருகுதற்கு எவரும் செல்லார். அது போலப் பெருஞ்செல்வம் உடையானொருவன், உலோபக் குணம் உடையனாயின், அவனை எவரும் அணுகார், ஊற்றுநீர் சிறு அளவினையுடையதாயும் விலங்குகளால் சேறும் நீருமாகக் கலக்கப்பட்ட கலங்கல் நீராக இருப்பினும், அந்த நீரைப் பருகுதற்குப் பலரும் சென்று அவ்வூற்று நீரை அடைதற்குரிய வழிகளைச் செய்து வைப்பர். அதுபோல வல்வில் ஓரியைப் பலரும் நச்சிப் பரிசில் பெற்றுச் சென்றதனால், இவன் வாழ் இடமும் பல அதர்களையுடையது என்பதை எத்துணை நயம்பட ஓரியின் வரையா வள்ளன்மையைப் பாடியுள்ளார்! ஓரியை விரும்பி வந்தவர் பரிசில் பெறுதல் இன்றித் திரும்பார். பரிசிலர்கள் ஓரியைக் காணப் புறப்பட்ட காலத்தில் ஏதேனும் தீய நிமித்தங்கள் தோன்றியதனாலும், அன்றித் தாம் புறப்படும் வேளை நல்லோரையாக இல்லாமல் இருப்பதாலும் ஒருவேளை ஓரியைக் காணல் இது சமயம் அன்று என நின்று போயின், பரிசில் பெறாதது அவர்கள் குற்றமே ஆகும். அந்தத் தீய முகூர்த்தத்திலும், கொடிய சகுன வேளையிலும் புறப்பட்டு ஓரியைக் கண்டால், இவன் “இதுபோது இல்லை," என இயம்பும் இயல்புடையவன் அல்லன். “அஞ்சேல்” என்ற சொல்லும் அடையா நெடுங்கதவும் உடையான் வல்வில் ஓரி. ஆகவே, இவன் கருவானம்போல வரையாது சுரக்கும் வள்ளியோன் ஆவன்” எனப் பாடிப் புகழ்ந்தார் கழைதின் யானையார்.
ஓரியின் ஈகை உலகம் அறிந்த ஓர் உண்மையாக இருந்தமையால், பரணர் என்னும் புலவரும் இவன் ஈகைப் பண்பை நன்கு எடுத்து இயம்பியுள்ளார். அப்படி இயம்பிய புலவர், தாம் ஓரியின்பால் பெற்ற பொருளினைத் தாமே துய்த்துப் பிறர் துய்க்க ஒண்ணாது என்னும் எண்ணம் கொள்ளாதவராய்த் தம் உறவினர்களையும் இவன்பால் விடுத்து, ஈயும் பொருளினைப் பெற்று இன்படையச் செய்ததாகவும் அவர் பாடலால் அறிகிறோம். அவர் தம் உறவினர்களை ஓரியின்பால் உய்த்தபோது, இவனது இயல்பை நன்முறையில் எடுத்து இயம்பி அனுப்பியுள்ளார் என்று நாம் அறிகிறோம். “இவன் நல்ல வளமுடைய மலையில் வாழ்பவன், இவன் வற்றிச் செத்த கானமும் மலை அருவியும் உடையவன் அல்லன். இவன் குன்றம் மழையைப் பெற்ற மாண்புடையது” என்று இவன் நாட்டு வளத்தை நவின்றார். அந்நாடு இவனுக்கே உரியது. பிறர்க்கு உரியது அன்று என்பதை விளக்கவே “மழையணி குன்றத்துக் கிழவன்,” என்றும் குறிப்பிட்டார். அத்தகையவனை இரவலர் அடைந்தால் அவர்கட்கு யானைகளை ஈபவன் என்றும் அவ்வானைகள், பூண் பன பூண்டு பொலிவுடன் விளங்குவன எனவும் குறிப்பிட்டது உன்னற்குரிய அரிய குறிப்பாகும்.
ஈகை அளவுகடந்து சென்றால், செல்வமும் குறைந்து, பின்னர் வரும் ஏழை யெளியர்கட்குக் கொடுக்க இயலாது, தாமும் வறுமையில் வாடும் நிலையையும் எய்துவிக்கும். ஆனால், அங்ஙனம் இரப்ப வர்க்கீந்து வறுமையுற்றவன் அல்லன் வல்வில் ஓரி இவன் நல்ல பொருள் வளம் படைத்தவன்; இவன் நன்கு ஒளிவிடுகின்ற பசும்பொன்னால் ஆன அணிகளையும், வளைந்த கடகம் அமைந்த முன் கைகளையும் உடையவனாய்த் திகழ்ந்தான். இதனால் அன்றோ இவனை “வெறுக்கை நன்குடையன்,” என நவின்றார். கைம்மாறு வேண்டாக் கடப்பாடுடையவனாய் விளங்கினான் ஆதலால் இவன், “மாரிவண்கை ஓரி” என்றே உரைக்கப்படுபவனானாதலால், இத்தகைய ஈரநெஞ்சினனிடத்தில் பரணர் தம் உறவினர்களை அனுப்பினார். அவர்களும் சென்றனர்; ஓரியைக் கண்டனர். ஓரியைக் காண்டல்வரை தானே தடைகள்? கண்டால், இவன் தன்னைக் கண்டவர்களை வெறுங்கையினராய் அனுப்புதல் இல்லையே. ஆகவே, பரணரது உறவினர்கட்கு நல்ல விலையுயர்ந்த மணிகளால் ஆன குவளை மலர்களை இவன் ஈந்தனன்; அம்மலர்களை இணைத்து, மாலையாக அணிய வெள்ளியால் ஆன நாரினை ஈந்தனன்; பொன்னரி மாலைகளையும் உதவினன்; இவைகளே அன்றிப் பொன் பூண்களையும் கொடுத்தனன்; வேழம் ஈந்தும் அவர்களுக்கு வேட்கையை உண்டாக்கினன். இங்ஙனம் பரணர் சுற்றத்தார் தாம் எதிர்பாராவண்ணம் இத்துணையும் பெற்றதனால் தம்மையே மறந்தனர். அணிகலங்களை மட்டும் அணிந்து அனுப்பி இருப்பனோ? இனிமையான உணவையும் அளித்திருப்பான் அல்லனோ? ஆகவே, அவர்களை வயிறார உண்பித்தான். உணவுப் பெருக்காலும், அளவு கடந்த அணிகலன்களை அடைந்த காரணத்தாலும், முழவுகொட்டி முன்னே இருந்து ஆடுதலை மறந்தனர்; பாடுதலையும் மறந்தனர். இங்ஙனம் தம்மை அடைந்தவர்கள் தம்மை மறந்து, மயங்கும் வண்ணம் ஈந்து உவந்தவன் ஓரி.
ஓரியின் கொடைத் திறத்தை இம்முறையில் புகழ்ந்த பரணர் அவன் படைத் திறத்தையும் பாங்குறப் பகர்ந்துள்ளார். இவன் அம்பு எய்தலில் ஆற்றல் மிக்கவன். இவன் எய்யும் ஓர் அம்பினால் பல விலங்குகளையும் அலக்கழிக்கும் ஆண்மை பெற்றவன். இவன் ஒருமுறை எய்த அம்பு, “பெரிய வாயுடைய புலியை இறக்கச்செய்து, துளை பொருந்திய மருப்பினையுடைய புள்ளிமான் கலையினைக் கீழே உருட்டி, உரல்போலும் தலையுடைய பன்றி ஒன்றினை விழச்செய்து, அதன்பின் அவ்வேனத்தின் அயலதாக இருந்த உடும்பினையும் தைத்தது” எனப் பரணர் பாராட்டியுள்ளார்.
இப்படி எய்ய வல்லவன் ஓரி என்பதை உணர்ந்த பரணர் முற்றும் மகிழ்ந்து தம்முடன் இருந்தவர்களை நோக்கி, “சுற்றங்காள்! இப்படி வேட்ட மேல் நாட்டங் கொண்டவன் நம் வல்வில் ஓரியோ எவனோ? என்றாலும், யான் ஒருவண்ணம் பாடுகிறேன். நீங்கள் மத்தளத்தில் மார்ச்சனையிட்டு முழக்குங்கள்; யாழிலே பண்ணமைத்து வாசியுங்கள்; யானையின் துதிக்கை போலும் நீண்டுவளைந்த பெருவங்கியத்தை இசையுங்கள்; சல்லியை வாசியுங்கள்; சிறு பறையை முழக்குங்கள்; பதலையினைக் கொட்டுங்கள்,” எனக் கூறிப் பாடவும் பல்லியங்களை இசைக்கவும் கூற, அங்ஙனமே பரணர் சுற்றம் செய்தது. அப்பாடலையும் ஆடலையும், இசைக்கருவி முழக்கத்தினையும் கேட்ட ஓரி, அவர்கட்குத் தான் வேட்டையில் எய்த மானினைத்தானே பக்குவப்படுத்தி, உணவையும் சமைத்து, மலைத் தேனையும் பருக ஈந்ததோடு நில்லாது, பொன்னால் ஆகிய மணி ஆரங்களையும் தந்தனன்.இப்படி ஈந்தபோதும் தான் இன்னான் எனத் தன்னை இயம்பிக்கொள்ளாமையாலேயே இவனது மனப்பண்பின் மாண்பு புலனாகிறது. வலக்கையால் ஈவது இடக்கைக்கும் தெரிதல் கூடாதென இக்காலத்தில் கூறப்படும் உணர்ச்சி, இற்றைக்கு ஏறக்குறைய இரண்டாயிர ஆண்டுகட்கு முன்பே நம் நாட்டில் நிலவியது என்பதை நாம் அறிந்தபோது பெருமகிழ்வு கொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.
இங்ஙனம் ஓரி ஈயத் தாம் பசி தணிந்தனர். அதற்கு மேல் ஆடலை மறந்தனர். ஆடலை அகற்றும் இந்நிலைக்கு அவர்களைச் செய்தவன் ஓரியே யாவான். இவன் ஈகை வாழ்க.