உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க கால வள்ளல்கள்/ஆய் அண்டிரன்

விக்கிமூலம் இலிருந்து


3. ஆய் அண்டிரன்
அண்டிரன் வீரமும், ஈரமும்

ஆய் என்பவனும் கடையெழுவள்ளல்களில் ஒருவன். இவன் ஆய் எனத் தனிப்பெயராலும் ஆய்-அண்டிரன் எனத் தொடர்ப் பெயராலும் அழைக்கப்படுவன். இவன் உழுதுண்ணும் வேளாளர், உழுவித்துண்ணும் வேளாளர் எனப் பாகுபடுத்திக் கூறப்படும் வேளாண் மரபில் உழுவித்துண்ணும் வேளாளர் மரபினன். வேளாளர்கட்குரிய தனியுரிமைப் பெயராக விளங்கவல்ல - வேள் என்னும் பட்டப்பெயர் அரசர்களால் அளிக்கப்பட்ட அரும் பெருமை அமையப்பெற்றவன். ஆகவே, இவன் ஆய் வேள் என்றும் வேள் ஆய் என்றும் கூறப்படுபவன்.

ஆய் அண்டிரன் பாண்டிய நாட்டில் பெருமைக்கோர் உறைவிடமானதும், அகத்தியர் வாழ்ந்த அழகிய இடமும் ஆன பொதிகை மலைக்குத் தலைவனாக இருந்து வந்தான். அப்பொதிகை மலைக்கு அண்மியதான ஆய் குடிக்குத் தலைவனும் இவனே.

ஆயின் ஈகை

ஆய் தலைசிறந்த வீரனும் ஆவான். வீரமன்னர்களான சேர சோழ பாண்டியர்கட்கு முறையே பனை, ஆத்தி, வேம்பு மாலைகள் அடையாளமாக அமைந்திருப்பனபோல, இவனுக்குச் சுரபுன்னை மாலை அடையாளப் பூவாகும். இவனைப் பகை அரசர்கள் அணுகுதல் அரிது. இவனைப் பகை வேந்தர் அணுகுதல் என்பது அருமைப் பாடுடைத்து என்பதை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அழகுபடப் பாடியுள்ளார். அவர் இக்கருத்தைக் கூறுகையில், “அவன் வீரவளையை உடையவன். அவன் பொதிகைமலை மேகம் தவழப்பட்டது. அவனை அணுகுபவர் ஆடல் மகளிரன்றி அரசர் குழுவினர் அல்லர்,” என்றனர். இவன் கொங்கு நாட்டவரோடு பொருது அவர்களைப் புறங்காட்டி ஓடச் செய்தவன் என்பதால் இவனது வீரத்தினை உணரவாம்.

இவனது கொடையும் புலவர் பாடும் புகழினைப் பெற்றது. புலவர்கட்கு வரையாது கொடுக்கும் வள்ளலாய் இவன் திகழ்ந்தான். இவன் தன்னையடைந்த பாணர்கட்கும், இரவலர்கட்கும் யானைகளைக் கணக்கின்றி ஈந்தவன். இவன் இரவலர்கட்கும் பாணர்கட்கும் வேழங்கள் பலவற்றை ஈந்தமையைப் புகழ்ந்த உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், “இவன் கொடுக்கும் யானையின் தொகைக்கு அளவே இல்லை. அவை வானத்தின் கண் காணப்படும் விண்மீன்களினும் பலவாகும்,” என உயர்வு நவிற்சியணி தோன்ற உயர்த்திக் கூறியுள்ளார். மேலும், அத்தொகையின் மிகுதிப்பாட்டைக் கூறுகையில், “இவன் கொங்க நாட்டவர்மீது போரினைத் தொடுத்த காலத்தில் விடப்பட்ட வேலினும் பலவாகும்,” எனவும் மொழிந்துள்ளார். இப்படிக் கூறிய இப்புலவர் பெருமானுக்கே ஓர் ஐயமும் பிறந்தது. யானை ஒரு முறைக்கு ஒரு குட்டியே ஈன வல்லது. இது குறித்தே “பன்றி பல ஈன்றிடினும் என் ? குஞ்சரம் ஒன்று ஈன்றதனால் பலனுண்டாமே, "எனவும் படிக்காசுப் புலவரும் பாடியுள்ளார். அவ்வாறு இருக்க, இவ் ஆய் அண்டிரன் ஒரு பாணர்க்குப் பல மாதங்கங்களை மகிழ்வுடன் ஈந்து உவக்கின்றனனே. ஒருவேளை இவன் மலையில் வாழும் பிடிகள் ஒரு சூலில் ஒன்றுக்கு மேற்பட்டுப் பத்துக் கன்றுகளை ஈன வல்லனவோ என்று கருதுவாராயினர். அப்படிக் கருதி இவனை நேர்முகமாக விளித்து, “நின்னாட்டு இளம்பிடி ஒரு சூலில் பத்துக்கன்றுகளை ஈனுமோ?' என்று வினவினர். இப்புலவர் கொண்ட ஐயம் ஓர் இளம்பிடி ஒரு சூலில் ஒரு கன்று ஈனுவதின்றிப் பத்துக் கன்றுகளைப் பரிவுடன் ஈனுமோ? என்பதோடு இல்லாமல், இதற்கு மேலும் செல்வதாயிற்று. ஆய் ஆண்டிரன் தன்னையணுகிக் கேட்பவர்களுக்கெல்லாம் யானைகளை ஈபவன் என்பதை இவ்வண்டிரன் காடும் அறிந்து, இவனை அண்டி, பாடல் பல பாடி இவ்வானைப் பரிசில்களைப் பெற்றதோ ? எனவும் கருதுவாரானார். இக்கருத்துப்பட அவர் பாடியதன் காரணம் யாதெனில், இவ்வாய்வேள் கானகம் கணக்கற்ற கைம்மாக்களைப் பெற்றிருந்தது என்பதாம். அத்தொகையின் பெருக்கத்திற்கு உவமை கூற வந்த புலவர், விண்ணில் சிறு இடமும் இன்றித் தாரகைக்கணங்கள் முழுமையும் காணப்பட்டால் எத்துணையளவு மிகுதியான தொகை காணப்படுமோ, அத்துணையளவான யானைகள் என உவமை காட்டினர்.

ஆய் அண்டிரனுக்கு உரிமையான பொதிகை மலையும், அதற்கு அண்மையதான ஆய் குடியும் புலவர்களால் பெரிதும் சிறப்புடன் வர்ணிக்கப்பட்டுள்ளன. அவை புனைந்துரைகளாக இன்றிப் புகழுரைகளாகவும், மெய்யுரைகளாகவும் உள்ளன.

இவன் நாட்டின் பொதிய மலையில் வாழும் குரங்குகள் பரிசிலர்கள் கட்டிவைத்த முழாக்களைப் பலவின் பழங்களோ என எண்ணி, அவற்றினைத் தொட்டமாத்திரத்தில் அவை ஓசையை எழுப்ப, அவ்வோசைக்கு மாறாக எதிர் ஓசையினை அன்னச்சேவல் ஒலிக்கும் என அவை வர்ணிக்கப்பட்டுள்ளன. இதனால், இவன் மலை இரவலர்களால் எப்பொழுதும் சூழப்பட்டுள்ளது என்பதும், அம்மலை வருக்கைப் பழங்களை வளமாகப் பெற்றது என்பதும் அப்பழங்களும் நன்கு பருத்து நீண்டு மத்தளம்போல வளர்ந்திருந்தன என்பதும், அங்கு வாழும் குரங்குகள் நன்கு தின்று கொழுத்துக் கவலைக்கிடனின்றிக் குறும்புகட் குறைவிடமாய் இருந்தன என்பதும், அன்னச் சேவல்கள் எதிர் ஒலிசெய்தன என்பதால் நீர் வளத்திற்கும் நிகரற்று அம்மலை திகழ்ந்தது என்பதும் புலனாகின்றன.

இகழ்வதுபோலப் புகழ்தல்

இவன் மலையில் வாழும் மக்கள் மூங்கிற்குழாயின்கண் வார்த்திருந்த நன்கு முதிர்ந்த மதுவினை நுகர்ந்து வேங்கை மரத்தினையுடைய முற்றத்தின் கண் குரவைக் கூத்தாடி மகிழ்வர்.

ஆயின் கொடைச் சிறப்பால் வறுமையுற்றவன் என்பதை இகழ்வது போலப் புகழ்ந்து பாடப்பட்ட செய்யுளும் புறநானூற்றில் உண்டு. ஆய் அண்டிரன் இரவலர்க்கு இருங்கை வேழங்களை ஈந்து ஈந்து மேலும் அவற்றைத் தன்னை அடைந்தவர்கட்கு ஈயும் கடப்பாடு அற்றவனாயினும், இவனுடைய இல்லம் பொலிவுற்றிருத்தலில் குறையாது. இவன் மனை மாண்பொருள் படைத்து நுகரும் இனிய தாளிப்பையுடைய உணவைத் தனித்துண்ணும் மன்னர்களின் மாளிகையினும் மாண்புடையது என்பதுதான் ஆயைப்பற்றிய வஞ்சப்புகழ்ச்சியாகும். இங்ஙனம் பாடியவர் ஏணிச் சேரி முட மோசியாராவார்.

பயன்கருதாப் பண்பு

ஈகையில் முனைபவருள் பெரும்பாலோர் ஒரு பயன் கருதிச் செய்தல் உண்டு. இம்மையில் ஈகையினை மேற்கொள்ளின், அம்மையில் அதன் பயன் பெரிது என்று கருதி இருந்தனர் பலர். இப்படிப் பயன் கருதுதல் வாணிப முறையாகும். அந்த வாணிப முறை பற்றியும், பயன்கருதியும் ஆய் ஈகை புரியும் இயல்பினன் அல்லன். இவன் மேற்கொண்ட ஈகை, “நல்லாறெனினும் கொளல் தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று” என்னும் கொள்கையும், சான்றோர் சென்ற நெறி வழியே தானும் சென்று நடத்தல் வேண்டும் என்னும் குறிக்கோளுமுடையதாகும். இதனைப் புலவர் எத்துணை அழகுறப் பாராட்டியுள்ளார் பாருங்கள்.

“இம்மைச் செய்தது மறுமைக் காம்எனும்
அறவிலை வணிகன் ஆய் அலன் ”

என்பது புலவர் பாட்டு. இவ்வாறு பயன் கருதாது செய்யப்படும் ஈகையே தலையாய ஈகை. இந்த ஈகையே பாராட்டற்குரிய ஈகையும் ஆகும். மானும் மரையினமும், நரந்தையும் நறிய புல்லும் மேய்ந்து, பின்னர்க் குவளைகள் மலர்ந்த சுனை நீரையும் பருகித் தகரமரத்தின் நிழலில் தங்கி இன்புறும். வடதிசையில் வயங்குவது இமயம். தென் திசைக் கண்ணே திகழ்வது ஆய்குடி. இவ்விருபாலும் மலையும், குடியும் மாணுற அமைந்திருத்தலினால் தான், இவ்வையம் தன் நிலையில் குலையாது நிற்கின்றது, இன்றேல் திசை தடுமாறிக் கீழது மேலதாகும்; மேலது கீழதாகும் ” என்று ஏணிச்சேரி முடமோசியார் கூறியதன் உட்பொருளை உற்று நோக்கின், உலகம் நிலைத்தற்கு அத்துணை ஆதரவானதாக ஆய் அண்டிரன் ஈகை இருந்துவந்தது என்பது புலனாகிறது. “இவன் ஈகையே ஈகை. இத்தகையவனை யான் முன்பே அடையாமல் எவர் எவரிடமேர் சென்று வீண்பொழுதைப் போக்கினேன். இவன் அன்றோ என்னால் முன்னர் நினைக்கப்படுபவன். இதனை யான் அறியாதது என் குற்றமே ஆகும். ஆகவே, என் உள்ளம் அமிழ்வதாக ! இவனை விடுத்துப் பிறரைக் கூறிய என் நா கருவியால் பிளக்கப்படுவதாக. இவன் புகழையன்றிப் பிறர் புகழைக்கேட்ட என் செவி பாழ்பட்ட கிணறுபோலக் கேட்கும் நிலையற்றுச் செவிட்டு நிலை உறுவதாக,” எனத் தம்மைத்தாமே வெறுத்துப் பேசிக்கொண்டனர் என்றால், ஆய் அண்டிரனது கொடைக்குணத்தை என்னென்று கூறுவது.

உறையூர் ஏணிச் சேரி முடமோசியார் தாம் அறியாமல் பிறரை முன்னர் எண்ணி இடர்ப்பட்டுப் போனமையால் பிறரும் அவ்வாறு செய்யாது, முன்பே ஆய் அண்டிரனை அண்மி, அரும்பொருள் பெற்றுத் திரும்புவாராக என்பதன் பொருட்டு, விறலி ஒருத்தியைப் பார்த்து, “மென்மையான சாயலைப் பெற்ற விறலி! உனக்கு ஆய் அண்டிரனைத் தெரியுமோ? அவனைத் தெரியாமல் எவரும் இருக்க இயலாது. அவனைத் தம் கண் முன் கண்டிலராயினும், செவியால் அவனது இசையினைக் கேட்டிருப்பர். நீயும் அவர்களைப்போலக் கண்ணால் காணாது, செவியால் அவன் புகழ் கேட்டவள் என எண்ணுகிறேன். நீ அவனைக் காணவேண்டுமானால், நேரே அவனைச் சென்று காண். அவன் மாரிபோல வரையா வண்மையுடையவன். உனக்கு வேண்டுவன தருவன்,” என வழிகூட்டி அனுப்பினர்.

முடமோசியார் அண்டிரனைக் காணல்

இங்ஙனம் ஆய் அண்டிரனைப் பாராட்டிய உறையூர் ஏணிச் சேரி முடமோசியார் தாமே நேரில் சென்று வள்ளலைக் கண்டார். கொடை வள்ளலைக் கண்டதும் என்ன கூறுவது என்பதும் உணராதவராய், இவனை நோக்கி முதலில் இவனது ஈரத்தினும் வீரத்தினையே புகழ விருப்பங்கொண்டவராய், “பகைவரது மாறுபாட்டை வென்ற உரம் படைத்த உத்தமனே,” என்றார். மேலும், இவனை நோக்கி, “யாவரும் ஒருசேரப் புகழும் நாட்டையுடை யோனே,” என்றும் புகழ்ந்தார். “இதற்கு மேல், அண்டிர! யானும் என் விறலியுமாகப் புறப்பட்டு வந்தனம். என்னுடன் வந்த விறலியோ நல்ல உடல் உரம் படைத்தவள் அல்லள். உடல்வளைவைப் பெற்றவள். அடியிட்டு நடக்கும் மெல்லிய நடையினள். இத்தகையவளோடு நான் வந்த வழியும் நேரிய வழியன்று; புலி இயங்கும் நெறி. சிகரம் உயர்ந்த நெடிய மலையில் ஏறுதற்கரிய பிளவுபட்ட சிறியவழி. இத்துணைத் துன்பந்தரும் வழியில் நின்னைக் காண இங்கு வந்தோம். உன்னை நினைத்து இங்கு வரச்செய்தது இரவலர்க்கும் பரிசில் மாக்களுக்கும் நீ ஈந்து அடைந்த புகழே ஆகும்.”

“நீ உன் மன்றத்தில் அமர்ந்திருக்கையில் உன் கண்முன்னே பரிசிலர்களைக் காணின், கன்றும் பிடியும் கலந்து கொடுக்கும் கடப்பாடுடையவன் என்பது யான் அறிந்ததே. என்றாலும், யான் இது போது இங்கு உன்னை நாடி வந்துற்றது, உன்னிடம் மாதங்கம் பெற்று மகிழ்ந்து போதற்கன்று. குதிரைகளைப் பெற்றுக் குதூகலத்துடன் செல்ல அன்று. ஆனால், யான் வந்தது நின்னைக் கண்டு, நின்னை வாழ்த்திச் செல்லவே யாகும். வாழ்க நின் கொற்றம் ஓங்குக நின் வாழ்நாள்!” என்று வாழ்த்தினரே அன்றி, எதையும் வாங்க வந்திலர். என்றாலும், அண்டிரன் அவரை யாதொன்றும் ஈயாது வாளா அனுப்பி இருப்பனோ? பொன்னும் மணியும் சிறக்கவே ஈந்திருப்பன். கற்பகத்தைக் கண்டவர் வறிதே மீள்வரோ? மீளார்.

அண்டிரனும் ஓடைகிழாரும்

ஆய் அண்டிரன் ஈகையைப் புகழ்ந்து துறையூர் ஓடைகிழார் என்பாரும் பாடியுள்ளார். இவரே அன்றிக் குட்டுவன் கீரனார் என்பாரும் பாடியுள்ளார். துறையூர் ஓடைகிழார் தம்மை மிகவும் வறுமை நோய் பன்னாள் வருத்த, அதனால் சொல்லொணாத் துன்பத்தினை நுகர்ந்தவர். அவர் தாங்கொணா வறுமை வந்தால் ஓங்கிய அறிவு குன்றும் என்பதற்கு இணங்க வறுமையால் பன்னான் வாடினும் ஆய் அண்டிரனை அடைந்து அல்லலை அகற்ற வேண்டுமென எண்ணிலர்போலும்! அத்தகையவர் திடுமென ஆயினைக் காணப் புறப்பட்டனர். அவர் புறப்பட்டு வந்த நெறிகள் ஆறலை கள்வர் அமைந்த வழிகள். வெம்மைக்கோர் உறைவிடமான கொடும் பாலை வழிகள். அவர் வந்த காலத்தில் அவ்வாறலை கள்வர்கள் அவரிடமிருந்த சிறு பொருள்களையும் குரங்கு போலப் பறித்துக் கொண்டனர். அக்கள்வர்கள் அப்புலவருடைய நிலையினைக் குறித்துச் சிறிதும் இரக்கம் கொண்டிலர். இந்த நிலைகள் ஒரு புறமிருக்க அவர் உண்ணாது உயங்கிய வருத்தத்திற்கு அளவே இல்லை. அவரே அன்றி அவருடன் இருந்த சுற்றத்தினரும் உண்ணாமையால் உடல் மெலிந்து நடைதளர்ந்து, வருத்தமிகுதியால் கண்களில் நீர்கலங்கக் காணப்பட்டனர். இன்னமும் அவரைப்பற்றி இரக்கங் கொள்ள வேண்டிய நிலை யாதெனில், அவர் வறுமை காரணமாகத் தலைமயிர் எண்ணெய் தடவப்பெறாது ஈரும் பேனுமாய் நிரம்பி இருந்ததுவே. ஆகவே, அப்புலவர்க்கு, ஈரும் பேனும், ஆறலைகள் வரும், சுர நெறியும் பெரும் பகையாகக் காணப்பட்டன. ஆனால், அப்பகைகள் யாவும், ஆய் அண்டிரனை அணைவோம் என்னும் எண்ணத்தின் எதிரில் நிற்க இயலாமல், பரிதியைக் கண்ட பனிபோல நீங்கிப் போயின. ஆய் அண்டிரனை வந்து அணுகிப் புரவலனைப் புலவர் கண்டார். தம் பகை அன்றோடு பறந்துபோயது என உறுதிகொண்டார். தாயைக் கண்ட சேய்போல உவகை கொண்டார். தமக்குக் கேட்க உரிமை, உளதாதல்போல அண்டிரனுக்கும் கொடுக்க உரிமை யுண்டாதலால் அவனை நோக்கி “நுண்ணிய மணவினும் பல நாள் நீ வாழ்க பெரும! நின்னை எம் வாயால் வாழ்த்தி வந்தனம். நின் புகழை நச்சி வந்தனம். ஆகவே நீ இப்பொழுது உதவுதல் வேண்டும். நீ எனக்கும் என் சுற்றத்திற்கும் ஈவதால் நினக்கே ஈந்துகொண்டவனும் ஆகின்றாய். நீ தரும் வளம், நாங்கள் நெடுநாள் உண்டு உவத்தற்குரியதாகும். நாளும் நின்னை வாழ்த்தற்கும் உரியதாகும்” என்று கேட்டனர். இவ்வளவு வற்புறுத்தி ஆய் அண்டிரனைக் கேட்கவும் வேண்டுமோ? இவன் குறிப்பறிந்து அளிக்கும் கொடையாளி. “வறியார்க்கு ஒன்று ஈவதே கொடை; மற்றையவர்க்குக் கொடுக்கப்படும் கொடைகள் யாவும் ஒரு குறிக்கோளை எதிர்நோக்கிக் கொடுக்கப்படுவனவாகும்,” என்னும் சீரிய கருத்தைக் கொண்டவன். மேலும் துறையூர் ஓடை கிழார் தோற்றத்தைப் பார்த்த அளவில் ஈயும் மனம் இல்லாத எத்தகைய கொடியோனும், பொருளினை ஈந்து விடுப்பான் எனில், கொடுப்பதே தன் பிறவிப் பயன் எனக் கொண்டு வாழும் ஆய் அண்டிரன் கொடாதிருப்பானோ? துறையூர் ஓடைகிழார் உளம் கொளும் வகையில் செல்வந் தந்து சீரிய முறையில் அனுப்பி வைத்தான்.

ஆய் அண்டிரன் நடமாடும் கோயிலாகிய ஏழை எளியவர்கட்கு ஈந்துவந்து வந்ததுபோலப் படமாடும் கோயில் பரமனுக்கும் ஈந்து உள்ளம் உவகைகொள்வோனாய் விளங்கினான். நீல நாகம் தந்த ஆடையினை ஆலமர் செல்வனாம் முக்கண் மூர்த்திக்கு ஈந்து முகமலர்ச்சி கொண்டனன். இவனைச் சிறுபாணாற்றுப்படை ஆசிரியர்,

"நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல்அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆய்”

எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.

அண்டிரனது பிரிவாற்றாமை

இத்தகைய பெருமைபெற்ற ஆய் இறந்தனன். அதுகாலை இவன் மாட்டு அன்புகொண்ட புலவர்கள் வருந்திப் பாடிய பாடல்கள் உள்ளத்தை உருக்கும் தன்மையன.

தம் இல்லத்திற்கு வந்த நல்விருந்தினரை உபசரித்து, இனி வருகின்ற விருந்தினரை எதிர்நோக்கி அவர்களையும் நன்முறையில் உபசரிக்கக் காத்து நிற்பவர் இறந்தபோது, இவர்களை நன்முறையில் உபசரித்து வரவேற்கத் தேவர் காத்து நிற்பர் என்பது நம் தமிழ் மறையின் துணிபாதலின், இம்முறையில் வாழ்க்கை நடத்திய ஆய் அண்டிரன் இறந்து மேலுலகம் சென்றபோது, இந்திரன் தன் திருமாளிகையின் முன் முரசம் ஒலிக்கச்செய்து “அண்டிரன் வருகின்றான்” எனக் கூறி வரவேற்கக் காத்து நின்றான் எனக் கையறு நிலை பாடிக் கவலை கொண்டனர் உறையூர் ஏணிச் சேரி முடமோசியார்.

குட்டுவன் கீரனார் பாடுகையில், 'அந்தோ ! அசையும் நடையுடைய பரியும் கரியும் பரிந்து அளிக்கும் பண்புடைய ஆயின் உடலம் சுட்டெரிக்கப் பட்டதே! தேரும் ஊரும் தெரிந்து கொடுக்கும் தெளிவுடை மனத்தனான அண்டிரனைக் கண்ணோட்டமில்லாத காலன் கவர்ந்தனனே', எனக் கதறி அழுதனர். ஆந்தைகள் அலறுதலைக் கண்ட புலவர், “இயமனையும் இயமபடரையும் சுட்டுக் குவியுங்கள்; இவர்கள் நல்ல ஈகைப் பண்புவாய்ந்த ஆய் அண்டிரன் உயிரைக் கொண்டு போயினர்,” என்று செத்தாரை எழுந்து அவ்வெம்படருடன் போராட அலறுகின்றனபோலும், என்று தற்குறிப்பேற்ற அணியாகவும் பாடிப் பரதவித்தனர். "இனி எனக்கும் எம்போல்வாராகிய பரிசில்மாக்களுக்கும் ஆய் குடி வாழ் இடம் இன்றி, வேற்றுக் குடியில் போவது நேர்ந்ததே," என்று எண்ணி ஏங்கினர். எவ்வளவு வருந்தி யென்? ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ? வாரார். அண்டிரன் பருவுடல் மறைந்தது. மறைந்ததேனும், இவன் நுண்ணுடலான புகழுடல் இன்றும் என்றும் நிலைத் திருப்பதாகும்.