திருக்குறள் செய்திகள்/76
காசுக்கு உதவாதவர்களையும் மதிக்கும்படி செய்வது பொருள் ஆகும். இல்லாதவனைக் கட்டிய மனைவியும் விரும்பமாட்டாள்; பொதுவாக அனைவரும் எள்ளுவர்; செல்வர்களும் சிறப்புகள் செய்யார். பொருள் என்னும் ஒளிவிளக்கு வறுமை என்னும் இருளை அகற்றும். எந்த இடத்திலும் அவர்கள் எதனையும் சாதிக்கலாம். ஈட்டும் வகை அறிந்து அறவழியில் நாட்டிய பொருள் அறத்தைத் தரும்; இன்பத்தையும் நல்கும்.
மக்களை வருத்திப் பெறும் பொருள் அரசனுக்குப் பயன்படாது. மக்களிடம் அன்பு காட்டியும், அருளொடு நடந்தும் பொருளைப் பெற வேண்டும்.
மிக்க வரிப்பொருளும், சுங்கமாக வரும் பொருளும், பகைவர் பணிந்து திறையாக அளக்கும் பொருளும் அரசனுக்கு வரும் வருவாய்கள் ஆகும்.
அருள் என்பது அன்பின் வளர்ச்சி; அதுவும் பொருள் என்னும் செவிலித்தாய் இல்லாவிட்டால் தக்க வளர்ச்சியைப் பெறாது.
ஒருவர் தம் கையகத்து மிக்க பொருள் இருந்து எந்தத் தொழிலைச் செய்தாலும் கவலை இல்லை; குன்றுமீது ஏறி இருந்து கீழே நடக்கும் யானைப் போரைக் கண்டு மகிழ்வது போல் ஆகும். பிறர் கையேந்தி நிற்கக் கூடாது.
பொருளைச் செய்க, பகைவர் செருக்கினை அழிக்கும் கூரிய படை அதனைவிட வேறு இருக்க முடியாது.
அறவழியில் ஆக்கிய பொருள் மிகுதியாக இருக்குமாயின் அறச்செயல்கள் ஆற்ற முடியும்; இன்ப வாழ்க்கை எளிதில் அமையும். ஒருவன் நற்குணம் நற்செயல்களுக்குத் துணை செய்வதும் பொருளே. பொருள்தான் இன்று உலகை ஆட்டிப் படைக்கிறது.