தஞ்சைச் சிறுகதைகள்/தேவகியின் திருமணம்

விக்கிமூலம் இலிருந்து

ஆணை ஸு. குஞ்சிதபாதம்

ன்னிலத்துக்கு அருகில் உள்ள தூத்துக்குடியில் 1914 ஆம் ஆண்டு பிறந்த ஆணை குஞ்சிதபாதம் பன்மொழி இலக்கியத்திலும் தேர்ச்சி உடையவர்.

அத்தி பூத்தாற்போல அபூர்வமாகச் சிறுகதை எழுதினாலும் தனக்கென்ற முகத்தோடு எழுதிய ஒப்பற்ற சிறுகதையாசிரியர். நல்ல பிசாசு என்ற ஒரு சிறுகதை தொகுப்பு மட்டுமே அச்சில் வந்திருப்பதாக அறியமுடிகிறது.

நவீன தமிழ் இலக்கியத்தில் ஒரு நூறு சிறுகதை தொகுதி தேர்வு செய்தால் நிச்சயம் நல்ல பிசாசு விடுபடவே முடியாத தொகுப்பு என்று உறுதியாகச் செல்லலாம்.
தேவகியின் திருமணம்


பலைகள் அழகாலே அழிந்ததும், அரிகளை அம்பாலே அழித்ததும், அகதிகளை அருளாலே அளித்ததும், தக்கார்க்குத் தக்க கருவிகளையுடையாராய் விளங்கும் சக்ரவர்த்தித்திருமகன் கதாப்பிரவசனம் இன்றோடு முடிவு பெறும். நிகழ்த்தியவரோ பிரசித்தி பெற்ற உபந்தியாசகர் மதுராந்தகம் உபய வேதாந்த ஸ்ரீ சுந்தரவரதாச்சாரியார் சுவாமிகள், நிகழ்ந்த இடமோ தர்மரத்னகர ஸ்ரீ ரங்கபாஷ்யம் நாயுடு அவர்களுடைய திருமாளிகை. கேட்கவா வேண்டும்? ஒரு மாத காலமாகக் குதூகல விழாவாகவே இருந்தது. பௌராணிகர் மாதூர்யமும் காம்பீர்யமும் நிரம்பிய குரலில் பெரியவாச்சான் பிள்ளை என்ன, கோவிந்தராஜர் என்ன இப்பேர்க்கொத்த மகானுபாவர்களின் வியாக்யானங்களை அநுசரித்து வெகு நுட்பமான கருத்துக்களைப் பண்டிதர்களும் மெச்சும் வண்ணம் சொன்னார். ஆங்காங்குப் பொருத்தமான கட்டங்களில் மாமியார்-மருமகள் மனஸ்தாபம் பற்றியும், கொடுக்கல் வாங்கல், விஷயங்களில் கோர்ட்டு விஷயங்கள் பற்றியும் நகைச்சுவை ததும்புகின்ற உபகதைகள் பல சொல்லி ஜனரஞ்சகமாகவும் கதைப்போக்கைத் தெளிவு பண்ணினார். கம்பன் காவியத்தில் சடையப்ப வள்ளலுக்கு இடம் கொடுத்தது போல தர்மரத்னகர ரங்கபாஷ்யம் நாயுடுவையும் தம் வாக்கு சாதுரியத்தினால் வைக்கிற இடத்தில் வைத்துப் புகழ்ந்து விடவும் அவர் மறக்கவில்லை. செவிக்கினிய விருந்துக்குப் பிறகு நாவுக்கினிய பகவத் பிரசாதமும் தினம் தினம் கிடைத்துக் கொண்டிருந்தபோது கூட்டத்திற்குக் குறைவேது? இன்று பட்டாபிஷேக வைபவத்துடன் உபந்நியாசம் பூர்த்தியாகும் போது இந்தக் காலச் சம்பிரதாயத்தை ஓட்டி. பாகவதருக்குப் பொன்னாடை போர்த்துவதற்கு ஸ்ரீ நாயுடு ஏற்பாடு செய்திருந்தார். மந்திரி மகேச குமார சர்மா தலைமை வகிக்க இசைந்து வந்திருந்தார். நகரத்திலுள்ள பிரமுகர் அனைவரும் பிரசன்னமாகியிருந்தனர்.

ஜாஜ்வல்யமாக ஒளியலங்காரம் செய்திருந்த மேடையின் மேல் பாகவதர் துவாச நாமங்களும், அகலக்கரையுள்ள காஞ்சிபுரம் பத்தாறு முழ வேஷ்டிகளும், வழுக்கை யொதுக்கிப் பின் தள்ளிவிட்ட நரைத்த குடுமியும் சோபையளிக்க, முக மலர்ச்சியுடன் வீற்றிருந்தார். ஒரு பக்கத்தில் பெரிய அளவில் முரீராம பட்டாபிஷேகப் படம் மலர் மாலைகளால் ஜோடித்த கருங்காலி மர விமானத்தில் பொருத்தி வைக்கப் பெற்றிருந்தது. அதன் முன் ஆள் உயரமுள்ள இரண்டு வெள்ளிக் குத்து விளக்குகள் நாயுடுவின் செல்வ நிலையை நிதானமாக விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தன. மணி எட்டு அடித்ததும் மெல்லிய குரலில் பெளராணிகர் தியான லோகத்தைச் சொல்லிவிட்டுக் கணைத்துக்கொண்டார். ஒலிபெருக்கியும் ஹூங்காரம் செய்தது. கூட்டத்தின் ஆரவாரம் அடங்கியது. நிசப்தம் நிலவியது.

ராவண வதம் ஆன அனந்தராம் கிரகணம் விட்டுப் பிரகாசியா நின்ற சந்திரனைப் போன்ற பிராட்டியாரின் வதனத்தைப் பக்தியோடு ஆஞ்சநேயர் தரிசிக்கிறார். சிதை சிறைப்பட்டிருந்த காலத்தில் தேவியாரைக் குரூரமாக ஹிம்சித்த அரக்கியரைப் பார்த்து அவர்களை ஹதம் செய்வதாகத் துடிக்கிறார். சிதை ஹனுமானைப் பார்த்து, “அப்பனே, தவறு இழைக்காதவரும் உலகில் உண்டோ? பணிப் பெண்களான இவர்கள், உத்தரவுக்குக் கீழ்ப் படிந்தன்றோ இங்ஙனம் நடந்திருக்கிறார்கள்? ஆகையால் இவர்களை ஹிம்சிப்பது தகாது” என்று திருவாய் மலர்ந்தருளியதும், “ தேவியின் கருணையுள்ளத்துக்கு இணை எது?” என்று வியப்படைகிறாராம் ஆஞ்சநேயர் பக்தர்கள் அமிருதமாக பாவிக்கும் தகஸ்சித்த அபராத்யதி (குற்றமிழைக்காதவன் எவனுமில்லை) என்ற பிராட்டியின் வார்த்தைகளுக்குப் பல்வேறு அர்த்தங்களை எடுத்துரைத்து, ‘எந்தப் பாவியும் பிராட்டியின் பொன்னடியை அடைந்து உய்வு பெறலாம்’ என்பதாகத்தானே தமக்கே உரிய பாணியில் பெளராணிகர் விளக்கம் கூறினார். சபையில் இருந்த ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் இந்தக் கூட்டத்திலே தத்தம் மனநிலையைப் பரிசீலனை செய்து கொள்ள அவகாசம் கொடுத்துவிட்டு, உத்தரீயத்தினால் எதிரில் மறைத்துக் கொண்டு. கொஞ்சம் பால் சாப்பிட்டார் பாகவதர். சிறிதுநேரம் மெளனமாகப் பாவ புண்ணியங்களுக்குக் கணக்குப் போட்டு, ஐந்தொகை எடுத்துக்கொண்டிருந்த ஜனக்கூட்டம் பாகவதர் சொன்ன ஓர் உபகதையினால் குபிரென்று மெய்மறந்து சிரித்தது.

இந்தப் பிரகாரம் ஜனங்களின் சிந்தனையையும் உணர்ச்சியையும் பொம்மலாட்டத்தில் பாவைகளை சூத்திரக் கயிற்றால் ஆட்டி வைப்பதுபோலத் தமது அருமையான பேச்சுத் திறமையால் அழைத்துக்கொண்டே பட்டாபிஷேக அவசரத்தைக் கிட்டி நிறுத்தினார் பாகவதர்.

ஶ்ரீரங்கபாஷ்யம் நாயுடு அவர்கள் எழுந்து இவ்வளவு காலமாகத் தொடர்ந்து கதா காலட்சேபத்துக்கு வந்திருந்த மகா ஜனங்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மகாஜனங்களின் சார்பாகப் பொன்னாடையைப் போர்த்திப் பாகவதருக்குச் சம்மானம் அளிக்கும்படி வினயமாகக் கேட்டுக்கொண்டார் மந்திரியை.

மந்திரிகளிடையே அழகு மிக்கரான மகேச குமார சர்மா புன்னகையுடன் எழுந்து பாகவதரையும், நாயுடுவையும், சபையோரையும் முறையே கை கூப்பியபடி பார்த்து வணங்கினார். நாயுடு எடுத்துப் பிரித்துக் கொடுக்கப் பொன்னாடையை வாங்கி மகேச குமார சர்மா பாகவதருக்குப் போர்த்தினார். பெரியதொரு மலர் மாலையை அணிவித்தார். பளிச்சுப் பளிச்சென்று புகைப்படக் கருவிகள் மின்னல் வெளிச்சத்தை வர்ஷித்தன. பழங்களும், புஷ்பங்களும் நிரம்பிய பெரிய வெள்ளித் தாம்பாளத்துடன் ஆயிரம் வராகன் அடங்கிய பொற்கிழியைப் பாகவதருக்குச் சம்மானம் அளித்து மந்திரி பேசினார்; “தாய்மார்களே, ரசிகமணிகளே, இன்று இதில் பெரியவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்வதை மகத்தான பாக்கியமாகக் கருதுகிறேன். பத்திரிகைகளும், மலிவு நாவல்களும், அதிகமாகிவிட்ட இக்காலத்தில் ராமாயணத்தைப் படிக்கிறவர்கள் குறைவு. பாகவதர் அவர்களைப் போன்ற மகான்கள் உபந்நியாசம் செய்வதனால்தான் ராமாயணம் மறைந்து போய்விடாமல் இருக்கிறது என்று நம்புகிறேன். ராமாயணத்தைக் கேட்கிறவர்களே அதிகம். படிக்கிறவர்கள் அதிகமில்லை. உங்களிலே, வீட்டுக்குப்போய் ராமாயணத்தை எடுத்துவைத்துக் கொண்டு படிக்கிறவர்களைக் கை துர்க்கச் சொன்னால் சிறுபான்மையாரே கைதூக்குவீர்கள் என்பது எனக்குத் தெரியும். இந்தக்காலத்து மனிதர்களுக்கு எதையும் சுவாரஸ்யமான முறையில் வழங்கவேண்டும். ருசியில்லாத விஷயங்களில் ஜனங்களுக்கு ஈடுபாடு கிடையாது. அதனால் பாகவதர் அவர்கள் ரசமான உபகதைகள்சொல்லி மக்களின் கவனத்தைக் கவர்ந்து இடையிடையே ஸத்விஷயங்களைப் போதனை செய்கிறார்கள். அழகான பெட்டிகளில் மிட்டாய்களை வியாபாரம் செய்கிறார்கள். மிட்டாய் தேவையிராவிட்டாலும், வர்ணப்படம் தீட்டிய பெட்டிகளுக்காக வாங்குகிறோம் அல்லவா? பெட்டியை வாங்கி அவைகளைக் காலி செய்வதற்காக மிட்டாயைச் சாப்பிடுகிறோம். (கரகோஷம்) அப்படிப்போல, பாகவதர் அவர்களுடைய உபகதைகளுக்காக வந்து ராமாயணம் கேட்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். (சிரிப்பு) சிரிக்கிறதிலே பயனில்லை. வெறும் ராமாயணத்தைச் சொல்லுங்கள். எத்தனை பேர் வந்து கேட்பார்கள்? உபகதைகள் சொல்வதைப் பற்றியும் நான் தவறாகச் சொல்லவில்லை. அவைகளுள் எவ்வளவோ அடிப்படை உண்மைகள் பொதிந்திருக்கின்றன. தர்மரத்னாகர ஸ்ரீரங்கபாஷ்யம் நாயுடு அவர்கள் பல அரிய பெரிய தரும கைங்கரியங்கள் செய்திருக்கிறார்கள். தர்மரத்னாகரம் என்ற பட்டம் தக்க இடத்தைத் தான் நாடி அடைந்திருக்கிறது. பொது ஜனங்கள் சார்பாகப் பாகவதருக்குச் சம்மானம் செய்வதாக அவர்கள் வினயமாகச் சொல்லிக் கொண்டார்கள். ஆயிரம் வராகன்களை அவர்களே கொடுத்திருக்கிறார்கள். வெளியில் யாரிடமும் வசூல் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். இப்படி நல்ல காரியங்களுக்குத் தம்முடைய தனத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிற ஸ்ரீ நாயுடுவுக்கு, ‘தர்மரத்னாகர’ என்ற பட்டத்தைச் சூட்டினவர்களும் நம் முடைய பாராட்டுக்குரியவர்கள்.”

மந்திரி அமர்ந்ததும் ஸ்ரீ நாயுடுவின் நண்பர் என்ற முறையில் அழைப்பின் பேரில் வந்திருந்த திரு இளந்திங்கள் எழுந்து, “நான் இங்கு வந்து பேசுவதிலே உங்களுக்கு வியப்பே விளையும். இராமாயணத்துக்கும், எனக்கும் முரண்பாடு இருந்தாலும் ராமாயணம் ஒரு சிறந்த இலக்கியம் என்பதை நான் ஒப்புக்கொள்ளத் தயங்கவில்லை. உயர் திருவாளர் ஆச்சாரியார் அவர்கள் அற்புதமான பேச்சாளர். கடல் மடை திறந்ததன்ன, தங்கு தடையின்றிப் பொங்கிப் பெருகும் அவருடைய சொற்பொழிவு கேட்போரை மயங்க வைக்கிறது. வேறு எந்த நோக்குடன் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தபோதிலும் இலக்கிய வளர்ச்சிக்காக அள்ளி வழங்கியிருக்கும் திருவாளர் நாயுடுவின் ஈகைப் பண்பைப் பெரிதும் போற்றுகிறேன். தமிழ் மூதாட்டி சொன்னதுபோல் சித்திரம் எழுதுவது, மேடைமேலே பேசுவது எல்லாம் கைப்பழக்கம், நாப்பழக்கம். ஆனால் பிறவிக் குணந்தான் ஈகை. கை எதற்காக ஏற்பட்டிருக்கிறது என்றால் ஈவதற்கேதான்” என்று சொல்லும்போது ப்ஸ் ப்ஸ்ச என்று எங்கிருந்தோ வந்து காதில் விழுந்த அருவருப்புத் தொனியைக் கேட்டுவிட்டு, கெளரவமாக உட்கார்ந்துவிட்டார்.

அப்புறம் பல பிரமுகர்கள் ஒருவர் பின் ஒருவராக எழுந்து மேடைக்கு வந்து பேசினார்களோ, பேசினார்களோ அப்படி ஆசை தீர தர்மரத்னாகர ஸ்ரீ ரங்கபாஷ்யம் நாயுடுவுக்குப் புகழ்மாலைகளாகச் சூட்டிக்கொண்டே இருந்தார்கள். மந்திரி இடையிலே எழுந்து அவசர ஜோலி இருப்பதாகச் சொல்லிப் போய்விட்டார்.

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்ற மூன்றோடு நாலாவதாகப் புகழாசை என்பதைப் பெரியவர்கள் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். காரணம் உண்டு. முதல் மூன்றும் ஓர் எல்லையிலே தெவிட்டிப் போகும். ஆனால் புகழாசையோ வளர்ந்து கொண்டே இருப்பது. முற்றும் துறந்த முனிவருக்கும் பிரமை ஊட்டக்கூடியதுதான் புகழாசை இன்றைப் பிரசங்கிகள் பலரும் நாயுடுவைப் புகழ்ந்தும் அவருக்குச் சலிப்பு ஏற்படவில்லை.

உட்கார்ந்திருப்பதா எழுந்து போவதா என்று தீர்மானம் செய்து கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த நீதிப்தி ஜனார்த்தனராவைப் பார்த்துக் பாகவதர், “அவ்விடத்திலிருந்தும் இரண்டு வார்த்தைகள் வரட்டுமே” என்றார்.

நீதிபதி ஜனார்த்தனராவ் எழுந்து கன்னட ஒசையுடன், பாகவதரு என்னையும் இரண்டு வார்த்தைகள் பிரஸ்தாபிக்க ஆக்ஞாபித்தாரு பரமசந்தோஷமாகுவது, பாகவதரு ரொம்ப ரொம்ப போதனை கொடுத்தாரு. அவருக்கே நம்ம வந்தன சொத்து, படிப்பு, கெளரவ எல்லாம் பூரணமான மனிஷ்யரு தர்மரத்னாகர ரங்கபாஷ்யநாயுடு அவரு. புருஷார்த்தம் எல்லாம் சித்தியாகி இருக்கிற அவருக்கே அரோக திடகாத்திரமுள்ள நீண்ட ஆயுளைக் கொடுக்கும்படி ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் பிரார்த்திக்கிறேன்” என்று ரத் தினச் சுருக்கமாகப் பேசி உட்கார்ந்தார். குறுக்கு விசாரணை செய்வதில் வல்லவர் என்று பிரசித்தி பெற்ற வக்கீல் கனகலிங்கேசுவரய்யா எழுந்ததும் பாகவதர், “நீதிபதி தீர்ப்புக் கூறிய பிறகு வக்கீல்கள் பேசுவது வழக்கமில்லை” என்று சிரித்துக் கொண்டே சொன்னதும் சபையில் கொல்லென்று சிரிப்பொலி உண்டாயிற்று. கனகலிங்கேசுவரய்யாவும் சிரித்துக் கொண்டே அமர்ந்துவிட்டார். பட்டாபிஷேக வைபவம் மங்களமாக முடிந்து தின்பண்டங்களும், சந்தன தாம்பூலமும் வழங்கியதும் கூட்டம் கலைந்தது.

2

மறுநாள் காலை ஸ்ரீ ரங்கபாஷ்யம் நாயுடுவால் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியவில்லை. தலை பாரமாக இருந்தது. உளியை வைத்து நெற்றியில் அடிப்பது போலத் தலை வலித்துக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் பூட்டுக்குப் பூட்டு ஸ்குரு திருப்பியைக் கொண்டு முடுக்குவது போல வேதனை ஏற்பட்டது. மெல்லத் தட்டுத் தடுமாறி எழுந்து டெலிபோன் அருகில் சென்று டாக்டரை வருமாறு அழைத்தார். எல்லாவிதமான சாதனங்களும் அமைந்திருந்த தம்முடைய விசாலமான அறையை ஒட்டியிருந்த ஸ்னான அறைக்குச் சென்று பல் விளக்கினார். அவரால் நிற்க முடியவில்லை. தள்ளாடிக் கொண்டே மறுபடியும் படுக்கைக்கு வந்து படுத்துக்கொண்டார்.

டாக்டர் வந்த பிறகு தான் ஸ்ரீ ரங்கபாஷ்யம் நாயுடுவுக்கு உடல்நிலை சரியில்லை என்பது வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரிய வந்தது. டாக்டர் பரிசோதனை செய்தபோது நாயுடுவுக்கு ஜூரம் இருப்பது தெரிந்தது. இருபுறத்து ஈரல்களிலும் கபம் கட்டியிருந்தது. “லேசான ஜூரம் தான்; நாளை சரியாகிவிடும்” என்று டாக்டர் சொல்லி நாயுடுவுக்கு இன்செக்ஷன் செய்தார். “நான் போய் ஒரு நர்சை அனுப்புகிறேன். மார்பின் மேல் ஆண்டிபிளாஜஸ்டைன் போடவேண்டும். சாயங்காலம் வருகிறேன்” என்று சொல்லி எழுந்திருந்தார்.

“அவசியமா என்ன?” என்று நாயுடு கேட்டார்.

“இல்லாவிட்டால் கபம் அதிகமாகும். அவசியம்தான்” என்றார் டாக்டர்.

“அது உங்களுக்கல்லவா தெரிந்த விஷயம்? உங்களிடம் ஒப்படைத்தாகிவிட்டது உடலை. என்ன செய்தாலும் ஒப்புக்கொண்டு தானே தீரவேண்டும்?” என்று நாயுடு சிரித்துக்கொண்டே கூறினார்.

டாக்டரும் கலகல என்று சிரித்துக்கொண்டு, “நான் வரட்டுமா?” என்று கைக் கெடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே வெளிக் கிளம்பினார். கட்டியிலின் ரப்பர் நுரை மெத்தையும் நாயுடுவுக்கு உறுத்தியது. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்.

தர்மரத்னாகர ஶ்ரீ ரங்கபாஷ்யம் நாயுடு, “வாயில் வெள்ளிக்கரண்டியைக் கெளவிக் கொண்டு பிறக்கவில்லை.” கீழே இருந்து மேலே ஏறியவர். இருபத்துஏழு ரூபாய்ச் சம்பளத்தில் லைடன்ஹாம்ரோட்டில் ஒரு மரவாடியில் குமாஸ்தாவாக வாழ்க்கை தொடங்கிய அவர் சையது இப்ராஹிம் மரக்காயர் என்ற தம்முடைய கடை முதலாளியிடம் படித்துக் கொண்ட பாடத்தை இன்றளவும் மறக்கவில்லை.

“பாஷ்யம் வியாபாரமும் ஒரு விதத்திலே நல்ல தேச சேவை தான். நல்ல சாமான்கள் எங்கு எங்குக் கிடைக்கும் என்று தேடிக்கொண்டு வந்து தேவைப்படுகிறவர்களுக்குக் குறைந்த விலைக்குக் கொடுப்பது உபகாரம் அல்லவா? ஒருவரை ஏமாற்ற வேண்டாம். போட்டியிட்டு மோசம் செய்யத் துணியவேண்டாம். ஜனங்களுக்கு நம்பிக்கை வேண்டும். அந்த ‘குட்வில்’ தான் நமக்கு எல்லாவற்றையும்விட சிறந்த மூலதனம்” என்று சையது இப்ராஹிம் மரக்காயர் சொன்ன வார்த்தைகள் பசுமரத்தாணி போலே நாயுடுவின் மனத்திலே பதிந்திருந்தன.

இப்ராஹிமின் பிள்ளைகள் உதவாக்கரைகள். அவர் ஹஜ் யாத்திரை முடித்துவிட்டு வந்த பிறகு வியாபாரத்தில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொண்டார். கொள்முதல் செய்வது முதல் விற்பனை செய்வது வரை எல்லாப் பொறுப்புக்களையும் நாயுடுவிடமே ஒப்படைத்துவிட்டு, சர்வாந்தர்யாமியாய், சர்வசக்தியனாய் விளங்கும் கடவுளைத் தொழுது கொண்டே காலம் போக்கினார். நாயுடுவையும் ஒரு பங்காளியாகச் சேர்த்துக் கொண்டு இரண்டு வருஷங்களில் கடையையும் நாயுடுவிடம் பல தவணைகளில் விற்பனைப் பணம் கொடுக்கும்படி விற்றுவிட்டார். ஏகதேசம் நாயுடுவுக்குக் கடை சொந்தமான பிறகும் மரக்காயரை தினம் ஒரு தடவை பார்த்து அவர் அளவளாவிவிட்டு வந்தார்.

ஒருநாள் நாயுடு இப்ராஹிம் மரக்காயரின் பங்களாவுக்குப் போயிருந்தபோது அவர் சோபாவில் உட்கார்ந்து இஸ்லாமிய வேதப்புத்தகத்தின் வியாக்யானம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். நாயுடுவைக் கண்டதும் மரக்காயர் எழுந்துவந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு, “இங்கே வா, பாஷ்யம்- என் அருகில் உட்கார். நிறையச் சம்பாதித்துவிட்டேன். பிள்ளைகளுக்குச் சாமர்த்தியம் இருந்தால் சொத்தை வைத்துக் கொண்டிருக்கட்டும். உருப்படாதவர்களைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்? என் பிள்ளைகளைவிட உன்னிடம்தான் அப்பா எனக்குப் பிரியம். இனிமேல் எனக்கு ஒன்றும் நீ தரவேண்டியதில்லை. எப்போதும் கடவுளை நினை. ஆண்டவன் நல்ல லாபம் கொடுப்பான். உன் லாபத்தில் ஆறில் ஒரு பங்கு தர்மத்துக்காகக் கொடுத்துவிடு. நீ நல்ல பிள்ளை. இவ்வளவு உனக்குச் சொன்னால் போதும்” என்று நாத்தழுதழுக்க முதியவரான சையது இப்ராஹிம் மரக்காயர் சொன்னதும் நாயுடுவுக்கு நன்றியறிதலால் கண்களில் நீர் தளும்பியது. இந்தச் சம்பவத்தை இப்போது நினைக்கும்போதும் நாயுடுவுக்கு மயிர்கூச்சு ஏற்பட்டது. சையது இப்ராஹிம் காலமான பிறகு சிலகாலம் நாயுடு திக்கற்றவர் போல் இருந்தார்.

நாயுடுவுக்கு வாய்த்த மங்கைநல்லாளும் இல்லறத்தை நல்லறமாக நடத்த உறுதுணையாக இருந்தாள். மரக்காயருக்குக் கொடுத்த வாக்குப்படி நாயுடு தான தர்மங்கள் செய்து கொண்டிருந்தார். எந்த நல்ல காரியங்களுக்கு நிதி திரட்டினாலும் நாயுடுவின் பெயர் முதல் வரிசையில் இருக்கும். எந்த ஆஸ்பத்திரிக்குப் போனாலும் நாயுடுவின் பெயரில் வார்டு இருக்கும். கோயில்களில் தேசாந்திரிக் கட்டளைச் சீட்டுகள் அவர் பெயரால் வழங்கப்பட்டன. ஷேத்திரங்களில் சத்திரங்கள் கட்டினார். திவ்யப் பிரபந்தத்தை அச்சிட்டுப் பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு இனாமாக வழங்கினார். வியாபாரம் நன்றாக வளர்ந்தோங்கியது. இரண்டு கிளைகள் ஏற்படுத்தினார். தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. தம்முடைய இரண்டு புதல்வர்களையும் வியாபாரத்திலேயே கலந்துகொள்ளச் செய்ய வேண்டுமென்பது அவருடைய விருப்பம். என்ன சொல்லியும் உத்தியோகத்திலேயே நாட்டமுடையவர்களாகப் பையன்கள் இருந்தார்கள். அவரவர் விருப்பம் என்று அதிகம் வற்புறுத்தாமல் விட்டுவிட்டார் நாயுடு. தம்முடைய மருமகனிடம் வியாபாரத்தை ஒப்படைத்துவிட்டு நாயுடு ஒய்வெடுத்துக் கொண்டார். ஐம்பது லட்சம் இருக்கும் என்று நாயுடுவின் சொத்துக்கு அவருடைய நண்பர்கள் சிலர் மதிப்புப் போட்டார்கள்.

3

டாக்டர் வந்து போன பிறகு அரைமணி நேரம் கழித்து ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தாள் நாயுடு அவர்களின் மனைவி நாச்சியாரம்மாள்.

“ஜூரம் வந்துவிட்டதாமே! எனக்கு இப்போதுதான் தெரியும். இந்தப் பெண் நர்ஸாம். டாக்டர் அனுப்பியிருக்கிறார்” என்றாள் நாச்சியாரம்மாள். நாயுடுவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.

“நல்ல காய்ச்சல். மருந்து கொடுத்தாரா டாக்டர்?” என்றாள்.

“என்னவோ இஞ்செக்ஷன் செய்தார். மார்பிலே பிளாஸ்திரி போட வேண்டுமென்றார்” என்று நாயுடு சொன்னார்.

“காப்பி, ஹார்லிக்ஸ், ஓவல் டின் ஏதாவது சாப்பிடுகிறீர்களா?”

“ஒன்றும் இறங்காது போலிருக்கிறது. சாப்பிட்டால் வாந்தி எடுக்கும் என்று தோன்றுகிறது.”

நாச்சியாரம்மாள், “ஏன் நின்று கொண்டிருக்கிறாய்? நீ செய்ய வேண்டியதைச் செய்யேன். ஏதாவது வேணுமா?” என்று நர்ஸைக் கேட்டாள்.

“இங்கே தான் ஹீட்டர், பம்பு, பாத்திரம் எல்லாம் இருக்றதனால் வேறு எதுவும் வேண்டாம்” என்று நர்ஸ் சொன்னாள்;

சற்று நேரம் நின்றுவிட்டு நாச்சியாரம்மாள் போனாள். நர்ஸ் மருந்தைக் கொதிக்க வைத்துத் துணியில் தடவி நாயுடுவின் மார்பின் மேல் போட்டாள்.

“உடம்பு முழுவதும் வலிக்கிறதே. அதற்கு என்ன செய்யலாம்?” என்று அவளைக் கேட்டார் அவர்.

“இன்ப்ரா ரெட் வெளிச்சம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார் டாக்டர். காரிலே இருக்கிறது. கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அவள் வெளியே போனாள்.

ஓர் ஆள் ஒரு மின்சார விளக்கைக் கொண்டுவந்து உள்ளே வைத்தான்; நர்ஸ் அதன் ஒரு முனையைப் ‘பிளக்’கில் செருகி நாயுடுவின் முன் வைத்தாள்.

“இதெல்லாம் வேண்டாம், அம்மா! சொன்ன கேசவலு, கைகால் எல்லாம் பிடித்துவிடு!” என்றார் நாயுடு.

“ஆள் பிடிக்க வேண்டாம். இந்த வெளிச்சம் நல்லது, வலி குறைந்துவிட நல்ல சிகிச்சை” என்றாள் நர்ஸ். வேலைக்காரனைப் பார்த்து, “கொஞ்சம் காப்பி கொண்டா” என்று சொன்னாள்.

அவளுடைய குரல் இன்பம் அளித்தது. அவளுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்று நாயுடுவுக்குத் தோன்றியது.

“உன் பேர் என்னம்மா?” என்று கேட்டார் அவர்.

“தேவகி” என்றாள்.

“நல்ல பெயராகத் தான் இருக்கிறது. உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதோ?”

பதில் இல்லை.

“நான் இப்படிக் கேட்டது தவறா?”

“இல்லை, இல்லை. தவறு என்ன? இன்னும் எனக்கு ஆகவில்லை.”

“ஏன் இன்னும் செய்துகொள்ளவில்லை? இந்தக் கேள்வியும் தப்பு இல்லையே?”

“நீங்கள் பெரியவர். கேட்டால் என்ன தப்பு? போன வருஷம் என் தகப்பனார் செத்துப் போனார். வெகு காலமாய் உடம்பு சுகமில்லாமல் இருந்தார். சம்பாத்தியம் இல்லை. வீட்டின் பேரில் கடன் இருக்கிறது. தம்பி ஒரு பையன் படிக்கிறான். அம்மாவால் என்ன செய்யமுடியும்? தங்கை ஒரு பெண் இருக்கிறாள். நான்தான் இவர்களைக் கவனிக்க வேண்டும்.”

நாயுடு தேவகியின் முகபாவத்தை ஆராய்பவர் போல் நோக்கினார். அவர் எதுவுமே புரிந்து கொள்ள முடியவில்லை. பெண்களை ஏறிட்டுப் பார்த்ததே இல்லை அவர். இதுவரையில் இவ்வளவு நெருங்கி அவருடன் எந்தப் பெண்ணும் உரையாடச் சந்தர்ப்பமே வாய்த்ததில்லை. அறுபது வயது தாண்டி நோய்வாய்ப்பட்ட தருணத்தில் ஒரு பெண்ணுடன் தனிமையில் பேசுகிறபோது சந்தோசம் அவருடைய மனத்தில் உண்டாயிற்று. ஆள் காப்பியைக் கொண்டு வந்தான். ஆற்றி டபராவிலிருந்து தம்ளரில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, தேவகி நாயுடுவிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள். நாயுடு அமுதமாக எண்ணிப் பருகினார்.

“நீ என்ன படித்திருக்கிறாய்?”

“பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது பாரம் வரையில் படித்தேன். அதன் பிறகு ஒரு தமிழ்ப் பண்டிதரிடம் பாடம் கேட்டுத் தமிழ்ப் பிரவேசப் பரீஷை எழுதித் தேறினேன். தமிழ்ப் புலவர் பரீஷை எழுத வேண்டுமென்று எனக்கு ஆவல்தான். ஆனால் என்னவோ, ஆஸ்பத்திரியில் ஒருவருஷம் பயிற்சியடைந்து நர்ஸ் ஆனேன். இன்னும் தமிழ் படிக்கவேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். அவகாசம் இல்லை.”

“அப்படியா? படிக்கிறதென்றால் படியேன். நான் உனக்கு ஒத்தாசை பண்ணுகிறேன்.”

“இப்படி யாரும் என்னை அன்புடன் விசாரித்ததில்லை. அபிமானத்துடன் உதவியதில்லை.”

“என்னை உனக்கு முன்னால் தெரியுமா?”

“பார்த்திருக்கிறேன். உங்களைத் தெரிந்து கொள்ளாதவர் சென்னப்பட்டினத்தில் யாரும் இருக்க முடியுமா?”

நாயுடுவுக்கு நோயின் வேதனை இல்லை. இன்பக் கனவு காண்பது போல இருந்தார். தேவகியின் முகத்தைப் பார்த்தார். அவள் பிச்சோடாவைப் பிணைத்திருந்த வலை அவருடைய மனத்தையும் பிணைத்தது.

‘வயசுக்கும் சமூகநிலைமைக்கும் சம்பந்தம் இல்லாதது காதல் என்று எங்கோ படித்திருந்தார். அதை எண்ணி இப்போது திடுக்கிட்டுப் போனார் நாயுடு, தம்மிடமே அச்சம் அடைந்தார் அவர். அசட்டுப் பிசட்டென்று எதையாவது பேசிவிடுவோமோ என்று மிரண்டார். கண்களை மூடிய வண்ணம் அசைவற்றுப் படுத்துக் கொண்டிருந்தார் அவர்.

“வலி இப்போது குறைந்திருக்குமே! இந்த விளக்கை அணைத்து விடட்டுமா?” என்று கேட்டாள் தேவகி.

‘உம்’ என்று முனகிக்கொண்டே நாயுடு கண்ணைத் திறந்தார். பரிசுத்தமான எழிலுடன் மிளிர்ந்த அந்தப் பூங்கொடியை இமைகள் மூடாமல் நோக்கினார்.

“ஏன் நிற்கிறாய் தேவகி? நாற்காலியில் உட்காரேன். முழங்கையில் வலி இருக்கிறது. அந்த பீரோவில் அமிர்தாஞ்சனம் இருக்கிறது அதை எடுத்துக்கொடு. தடவிக் கொண்டால் வலிக்கு நல்லது.”

தேவகி எடுத்துக் கொஞ்சம் மெழுகை அவருடைய முழங்கையில் தடவினாள்.

“நான் தடவிக் கொள்கிறேன். இங்கே பாட்டிலைக் கொடு” என்று சொல்லிக்கொண்டே கை நீட்டினார் நாயுடு.

“பரவாயில்லை. நானே போடுகிறேன்” என்று தேவகி சொல்லிக்கொண்டே இன்னும் கொஞ்சம் மெழுகை அவருடைய முழங்கையில் வைத்துத் தேய்த்தாள்.

நாயுடுவுக்கு இதமாக இருந்தது.

“நீ திரும்பிப் போக நேரமாகவில்லையா?” என்று கேட்டார் அவர். அவள் அங்கேயே இருந்தால் தமக்குப் புத்தி கெட்டுப்போகும் என்று திகில் அடைந்தார்.

“சாயங்காலம் டாக்டர் வருகிற வரையில் என்னை இங்கே இருக்கச் சொன்னார். மத்தியானம் டெம்ப்ரேச்சர் பார்த்து போன் செய்யச் சொன்னார்.”

நாயுடுவின் மனத்தில் உணர்ச்சிக்கும், சிந்தனைக்கும் பெரிய போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. ‘ஹே ராமச்சந்திரா! இது என்ன சோதனை? தவறு இழைத்துவிட்டுப் பச்சாத்தாபமடைந்த அகலிகைக்கும் நற்கதி அளித்த பதிதபாவன கருணாமூர்த் தியே! இப்பளவு காலம் புனிதமான வாழ்க்கையிலேயே கழித்த எனக்கு இப்போது தான் இந்த சித்தவிகாரம் உண்டாகிறது?’ என்று எண்ணித் துடித்துப் போனார்.

“என்னம்மா தேவகி. நீ தமிழ் படித்திருக்கிறாயே, இந்தப் பாட்டு யார் பாடினது, சொல்லு, ‘மோகத்தைக் கொன்றுவிடு, அல்லாலென்றன் மூச்சை நிறுத்திவிடு’ என்று தொடங்கும் பாட்டு.”

“இதில் என்ன சந்தேகம் வந்தது? மகாகவி பாரதியார் பாடிய பாட்டு.”

“அசடே, அசடே! வேதநாயகம் பிள்ளை பாட்டல்லவா இது?”

“ஞாபகப் பிசகாகச் சொல்கிறீர்கள் பாரதியார் பாடினது.” நாயுடு கலகலவெனச் சிரித்துக்கொண்டே, “இல்லவே இல்லை, பாரதியார் இதைப் பாடியதில்லை. வேதநாயகம் பிள்ளை பாடியதாகக் கூறப்பட்டது. இதுகூடத் தெரியாமலா தமிழ் இலக்கியம் படிக்கிறேன் என்கிறாய்!” என்றார்.

“பாரதியார் பாடியது என்று நிச்சயமாகச் சொல்வேன்” என்று உறுதியாகச் சொன்னாள் தேவகி.

“பந்தயம் ஆயிரம் ரூபாய். வேதநாயகம்பிள்ளை பாடியதுதான்.”

“பந்தயம் போட நான் தயாராக இல்லை. என்னிடம் ஆயிரம் ரூபாய் இல்லை. சந்தேகமே இல்லாமல் பாரதிதான் பாடினார் என்று சொல்கிறேன்.”

“அந்தக் கண்ணாடி பீரோவில் புத்தகங்கள் இருக்கின்றன. பாரதியார் கவிதைத் திரட்டை எடுத்துக் காண்பி. அதிலே இந்தப் பாட்டு இருந்தால் நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன். இல்லாவிட்டால் நீ எனக்கு ஒன்றும் தரவேண்டாம்.”

தேவகி புத்தகத்தை எடுத்துப் பிரித்து அதிலே அந்தப் பாடலைக் காண்பித்தாள்.

“நான் தோற்றுப் போனதாக ஒப்புக்கொள்கிறேன். உனக்கு நான் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடுகிறேன்.”

“ஆயிரம் ரூபாயா? எதற்காக? நான் அவ்வளவு ரூபாய் வாங்கிக் கொள்ளும்படி என்ன செய்துவிட்டேன்?” என்று வியப்புடன் கேட்டாள் தேவகி.

“பந்தயத்தில் தோற்றுப்போனால் நிபந்தனைப்படி நான் கொடுத்துதானே ஆகவேண்டும்?” என்று சொல்லிக்கொண்டே தலையணையடியிலிருந்து சாவியை எடுத்து, தேவகியிடம் கொடுத்து, “அந்த இரும்புப் பெட்டியைத் திற, அதிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்” என்றார். தேவகிக்கும் பயமாக இருந்தது. “வேண்டாம், வேண்டாம்; எனக்குப் பணம் வேண்டாம்” என்று சொன்னாள்.

நாயுடு சாவிக்கொத்தை மறுபடியும் தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு,“தேவகி, நீ எவ்வளவு கெட்டிக்காரியாக இருக்கிறாயோ அவ்வளவு அழகியாகவும் இருக்கிறாய்” என்றார் தேவகிக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவளுடைய கண்கள் மருட்சியடைந்தன. நாணத்தினால் முகம் சிவந்தது. தலைகுனிந்து குதிகாலை மையமாக வைத்துக் கால் கட்டைவிரல் பூமியில் வட்டம் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டோமோ?” என்று தவித்தார் அவரும்,

தேவகி ஜன்னலோரம் போய்க் கீழே உட்கார்ந்துகொண்டு பாரதியார் கவிதைப் புத்தகத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தாள். நாயுடுவின் மனத்தில் எண்ணங்கள் அலையலையாக மோதிக் கொண்டிருந்தன.

மனிதனும் ஒரு மிருகம்தானா? சர்க்கஸில் பயத்தினால் கொடிய விலங்குகளும் கட்டுக்கு அடங்கியிருப்பது மாதிரியே மனிதனும் பயத்தினால் கட்டுப்பாட்டோடு இருக்கிறானா? தெய்வத்தினிடம் பயப்படுகிறான் மனிதன். தீய காரியங்களுக்குத் தண்டனை விதிகளும், அரசாங்கத்தினிடம் பயப்படுகிறான் மனிதன். இந்த மாதிரி பயங்கள் தோன்றாமலே இருந்தால் உலகம் வசிக்கத் தகுதியில்லாததாகவே ஆகியிருக்கும் அல்லவா? மனிதர்கள் தாமாக ஏற்படுத் திக்கொண்ட எல்லாக் கட்டுப்பாடுகளையும் நிலைகுலைக்கும் சண்டமாருதமாக அல்லவா இருக்கிறது இயற்கை வேகம்?

தேவியைப் பார்தார் நாயுடு, ‘சே! கள்ளம் கபடம் இல்லாத பெண்ணல்லவா இவள்? பரம சாத்வீகமாக, நிர்மலமாக, வர்ணசாலைக் கதவைத் திறந்துகொண்டு நிற்கும் சீதாபிராட்டியின் முன் நின்ற ராவணனுக்கு எப்படித்தான் காமவிகாரம் ஏற்பட்டிருக்க முடியும்? என்னைப் போல் அழகின் அழைப்பிற்கும், மனசாட்சியின் அங்குசத் தாக்குதலுக்கும் இடையே அவன் மனம் ஊசலாடிகிறதா? சந்திர, சூரியர்களின்றித் தனியே சந்திப்பொழுதை நள்ளிருள் கிட்டுவதைப் போல, பிராட்டியாரை ராவணன் கிட்டியதாகப் பாகவதர் சொன்ன உபமானம் தான் எவ்வளவு அழகு! என் மனத்தில் எவ்வளவு இருள் மண்டியிருக்கிறது!

“தேவகி”

“ஏன்?”

அவரைப் பற்றி அவள் எதுவும் தவறாக நினைத்துக் கொண்டதாக அவள் குரல் தொனிக்கவில்லை.

“போய்ச் சாப்பிட்டு வாயேன்.”

“பசி இல்லை. காலை வருமுன் ஆகாரம் சாப்பிட்டு வந்தேன்.”

“இல்லை அம்மா! அழைத்துப் போகச் சொல்லட்டுமா?”

“அம்மாவே சாப்பிடக் கூப்பிடச் சொல்லுவார்கள்.”

“மறந்து போய்விடப் போகிறார்கள்.”

“அவர்கள் மறந்தாலும் நீங்கள் மறக்கமாட்டீர்களே!”

நாயுடுவுக்குக் குழப்பம் அதிகமாக இருந்தது. என் மனநிலையை இவள் புரிந்துகொண்டு விட்டாளோ? புரிந்துகொண்டுதான் எனக்குத் திருப்தியாகவும் பேசுகிறாளோ? அப்படியானால் நான் இவளுக்குப் பணம் கொடுப்பதற்காகத்தான் கவிதைப் பந்தயம் போட்டேன் என்று இவள் தெரிந்த கொண்டிருப்பாளோ? என் தோல்வியால் நான் பணம் கொடுக்கும் முயற்சியில் வெற்றி பெறவில்லையே! என்று செக்குமாடுகள் போல அவர் யோசனைகள் எல்லாம் தேவகியையே சுழன்று சுழன்று வந்தன.

“போம்மா! போ! சமையற்காரனைப் சாப்பாடு போடச் சொல்லு. எனக்கும் அவர்களுக்கும் ஒத்துவராது.”

“நீங்கள் என்னிடம் பிரியமாக இருக்கிறீர்கள்.”

பிரியம்! பெருமூச்சுவிட்டார் நாயுடு. இந்தப் பிரியம் அவர் வாழ்க்கையில் கணம் கனமாகத் திரட்டி உருவாக்கியிருக்கும் நொடியில் அழித்துவிடக் கூடிய கனலாக இருக்குமோ?