தஞ்சைச் சிறுகதைகள்/அவள் நெஞ்சம்

விக்கிமூலம் இலிருந்து

எழில் முதல்வன்

திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்தில் தகட்டூர் கிராமத்தில் பிறந்த மா. ராமலிங்கம் இன்று திறனாய்வாளராக தோற்றம் கண்டுள்ளார். ஆனால் அவர் இயல்பிலேயே ஒரு படைப்பாளி-சிறந்த சிறுகதையாசிரியர். பொய்யான இரவுகள், அதற்கு விலை இல்லை. நாளைக்கும் இதே கியூவில்... போன்ற தொகுப்புகள் மூலம் அவர் சிறந்த சிறுகதையாசிரியர் என்பது நிரூபணம் ஆகிறது.

‘இவருடைய கதைகளில் கற்பனையைவிட உண்மை வாழ்வே அதிகமாய் இடம் பெற்றுள்ளது. இவர் பார்த்தவற்றை உணர்ந்தவற்றை மன நெகிழ்ச்சியோடு கதைகளாக வெளிப்பட்டிருக்கின்றன.’

‘நான் காணும் இன்றைய வாழ்கை, அவ்வப்போது எனக்குப் பல கதைகளைச் சொல்லியிருக்கிறது. அவற்றில் சிலவற்றை நான் உங்களுக்குத் திருப்பிச் சொல்லியிருக்கிறேன்...’ எழில்முதல்வனே தனது சிறுகதைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் இப்படி.

அகிலன் இவரைப்பற்றி, “இவர் ஒரு தேர்ந்த சிறுகதை ஆசிரியர். கிராம நகர்ப்புறத்து வாழ்க்கையில் இவர் கண்டு கேட்டு அனுபவித்த உண்மைகள், இவரிடம் அழகான சிறுகதைகளாக மலர்ந்துள்ளன. அற்புதமான சில பாத்திரப் படைப்புகளையும் கண்டு இன்புற முடிகிறது. ஆர்ப்பாட்டமோ, ஆரவாரமோ இல்லாமல் அமைதியாகக் கதைச் சொல்லும் திறன் இயல்பாக அமைந்திருக்கிறது. உண்மை வாழ்க்கையோடு ஒட்டிய எதார்த்த வாதக் கற்பனையே கதைகளாகப் படைத்துள்ளார். எளிய இனிய உயிரோட்டமுள்ள தமிழ் நடை, படைப்பவரை கவர்ந்திழுக்கும் சக்தியைக் கொண்டுள்ளது...”

அவர் எழுதிய ‘அவள் நெஞ்சம்’ குறிப்பிடத்தக்க சிறுகதை...

‘அன்றைக்கு இரவு முத்துத்தாண்டவனின் நாயனக்கச்சேரியும், திருவாரூர் அலங்காரத்தின் சதிர்க்கச்சேரியும் நடக்கவிருக்கிறது... திருவாரூருக்கே உரிய பெருமையையும், வளமையையும் எழுதியுள்ள படியால் நாமும் பெருமைபடலாம்.

அவள் நெஞ்சம்

றையிடப்பட்டு மூலையிலே சாத்தி வைக்கப்பட்டிருந்த நாதஸ்வரத்தை எடுத்து வைத்துக்கொண்டு கூடத் தில் உட்கார்ந்தான் முத்துத் தாண்டவன். பையை அவிழ்த்து, ‘ஆச்சா’ மரத்தால் ஆகிய அந்த நாதஸ்வரத்தை எடுத்து, கெண்டை வேறு ‘அணைசு’ வேறாகப் பிரித்துப் போட்டுத் துடைக்க ஆரம்பித்தான். பதமாக வேக வைக்கப்பட்ட இரண்டங்குல நீளக் கொறுக்குத் தட்டையைக் கிட்டிப் பலகையில் கொடுத்து நன்றாக இறுக்கி அதன் அடிப்பாகத்தை நூலால் அழுத்தச் சுற்றி, அவ்வாறு செய்து முடித்த ‘சீவாளி’யை நாயனத்தின் வாயில் பொருத்தினான். சரிசெய்து முடித்த அந்தப் பாரி நாயனத்தைக் கையில் எடுத்துக் கேதார கெளளை ராகத்தை ஆலாபனம் செய்யத் தொடங்கினான். இரண்டு கட்டைச் சுருதியில் அவன் குரல் விட்டுவிட்டு இழைந்தது. பாடிக்கொண்டிருந்த அவன் சட்டென நிறுத்திவிட்டுத் தெருப்பக்கம் எட்டிப்பார்த்தான்.

வீதி நிறையத் திருவிழாக் கூட்டம் ‘திமுதிமு’ என்று சென்று கொண்டிருந்தது. எங்குப் பார்த்தாலும் கியாஸ் லைட் ஒளி கண்னைப் பறித்தது. சுற்றுப்பட்ட கிராமங்களிலிருந்து கையில் கட்டுச்சோறு மூட்டைகளோடு அன்றைய நிகழ்ச்சியாகிய புஷ்பப் பல்லக்கைக் காண மக்கள் வந்து திரண்டார்கள். அன்றைக்கு இரவு முத்துச் தாண்டவனின் நாயனக் கச்சேரியும், திருவாரூர் அலங்காரத்தின் சதிர்க்கச்சேரியும் நடக்கவிருக்கிறது என்றால் கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்? அலைமோதும் ஜனக்கூட்டத்தைப் பார்த்ததும், அந்த ஊரில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் சற்குணநாத ஸ்வாமியின் மகிமைக்காக மட்டும் அல்லாமல் தன்னுடைய இசைவிருந்தைக் கேட்பதற்காகவுமே அத்தனை கூட்டம் வந்திருப்பதாக எண்ணி முத்துத்தாண்டவனின் மனம் விம்மியது. அதில் ஓரளவு உண்மையும் இல்லாமல் இல்லை.

தான் வாசித்துக் கொண்டிருப்பது போலவும், எதிரே அலங்காரம் பதம் பெயர்த்து ஆடுவது போலவும் ஒரு மானசீகமான கற்பனை அவன் மனத்தில் படர்ந்தது. அந்த இனிய நினைவுகளால் ஒரு புதிய மலர்ச்சி அவன் முகத்தில் அவிழ்ந்தது. என்றோ ஒருநாள் அவளால் பாடப்பட்ட ‘பித்துப்பிடித்து’ ஏன் அலைகிறாய் பேதை நெஞ்சமே என்ற அந்த வரியை நினைக்கும் போதெல்லாம் அவன் அடிமனம் அந்தப் பாட்டைப் பாடியவளுக்காகப் பித்துப்பிடித்து அலைய ஆரம்பித்தது. நினைக்க நினைக்க இனிப்பூட்டும். அந்த நயம் பொருந்திய பாடலை நாதஸ்வரத்தில் பாட நினைத்து மீண்டும் அக்கருவியைக் கையில் எடுத்தான்.

உள்ளே இருந்து வெளிவந்த வடிவு-அவன் மனைவி-தன் கணவனை வேண்டா வெறுப்போடு ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் அடுக்களைக்குள் சென்றாள். எதற்காகவோ அவனைக் கடிந்து கொள்வதுபோல் அப்பார்வை இருந்தது. எத்தனையோ பேருடைய போற்றுதல்கட்கும், பாராட்டுதல்கட்கும் இலக்காக இருக்கும் அவனது கலையே அந்த நேரத்தில் அவளுக்கு அருவருப்பூட்டிற்று. தன் கணவனை நினைத்தபோது அலங்காரத்தையும் சேர்த்தே நினைத்தாள். உடன் நிகழ்ச்சியாக எழுந்த அந்த நினைவு அவள் உள்ளத்தில் கனிந்து கொண்டிருந்த தாபத்தை மேலும் அதிகமாக்கிற்று.

‘அலங்காரம் அலங்காரம்... அந்த ஆட்டக்காரியின் கூத்துக்கு இவர் வாசிக்கிறாராம். ஊரும் உலகமும் இவரைப் பத்தி பேசிக்கிறது இன்னமுமா இவர் காதிலே விழலே. அந்தக் கூத்தி இவருக்கு நல்லாத்தான் சொக்குப்பொடி போட்டிருக்கா... இதையெல்லாம் அனுபவிக்கணும்னா ஆண்டவன் என் தலையிலே எழுதி வச்சிருக்கான்.’

அடுப்பை முட்டி உலை ஏற்றிய வடிவாம்பாளின் உள்ளம் அந்த அடுப்பைப் போலவே புகைந்துகொண்டிருந்தது. தனி உடமையான தாம்பத்ய வாழ்க்கையை இன்னொரு பெண்ணுக்கும் பகிர்ந்து அளிக்க எந்தப் பெண்தான் ஒருப்படுவாள்!

முத்துத் தாண்டவன் ஒத்திகையை முடித்துவிட்டு ‘வடிவு...வடிவு...” என்று அன்பாய் அழைத்தான். கணவனின் குரலைக்கேட்ட அவள் தன் ஆத்திரம் அனைத்தையும் உள்ளுர அடக்கிக்கொண்டு வெளியே வந்தாள். தெருப்பக்கத்தில் விளையாடிவிட்டுத் தன்னை நோக்கி ஓடிவந்த சிறுவன் செல்வத்தை வாரி அணைத்தவாறு கணவனைப் பார்த்தாள். ‘ஏன் அழைத்தீர்களாம்?’ என்று வினவுவதுபோல் அவள் விழிகள் பிறழ்ந்தன.

“சரியா பத்துமணிக்கு சாமி புறப்பாடு ஆயிடும். நாலு வீதியும் சுத்திவந்து வசந்தமண்டபம் போறதுக்கு மணி ரெண்டு ஆனாலும் ஆகும். நீ பத்து மணிக்கே வந்த அலங்காரத்தின் சதுரையும் பாத்திட்டு சாமி தரிசனம் பண்ணிட்டு வீட்டுக்குத் திரும்பிடு. ராத்திரியிலே ரொம்பநேரம் நிண்ணாப் பனி ஒத்துக்காது” என்றான் அவன்.

அவள் ஒன்றும் பேசவில்லை. ‘அலங்காரத்தின் ஆட்டத்தைப் பார்க்கிறது என் இஷ்டம். வந்து பாருண்ணு சொல்றதுக்கு நீங்க யாரு?’ என்று ஆத்திரம் தீர அவனிடத்தில் தன் உணர்வுகள் அத்தனையும் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவளது பொறுமை தடுத்தது. நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து புறப்பட்டு உதட்டின் விளிம்புக்கு வந்த வார்த்தைகள் உள்ளேயே அடங்கின. அவள் மெல்லத் தலையசைத்தாள். பொங்கி வழியும் கசப்புணர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் நெளிவது போல் துடிக்கும் அவளது உதடுகளைப் பார்த்தான். அலங்காரத்தைப் பற்றி பேச்சை எடுக்கும் போதெல்லாம் அவள் முகம் இனம் தெரியாத பாதிப்புகளால் நிலைமாறிப் போவதை அவன் பன்முறை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறான். அப்பாவிப் பெண்ணான அலங்காரத்தின் மீது இவளுக்கு ஏன் இத்தனை குரோதம் என்றும் நினைத்துப் பார்த்தான். பல சமயங்களில், வடிவாம்பாளின் இந்தக் குறையே பெண்மையின் நிறைவாகத் தோன்றியது. வடிவாம்பாளின் மனத் தடுமாற்றத்தைச் ‘சக்களத்திப் போராட்டம்’ என்று கொச்சைப்படுத்தி நினைக்க முத்துத்தாண்டவனால் முடியவில்லை. கடந்த நான்கு வருடங்களாகத் தனக்கு மாலையிட்ட அன்று முதல் இன்றுவரைத் தன் மனம் கோணாமல் நடந்து வரும் புண்ணியவதியை நேற்று வந்த அலங்காரத்திற்காகப் புறக்கணித்துவிடுவதா? அல்லது தேடிப் போகாமல் தானே வந்து ஐக்கியமாகிவிட்ட அலங்காரத்தின் அன்பைத் தள்ளி விடுவதா?-உண்மையில் வடிவாம்பாளைவிட முத்துத்தாண்டவனே சிக்கலான மனப்போராட்டத்தில் இருந்தான்.

“வடிவு, நீ இன்றைக்கு ரொம்ப அழகாயிருக்கே! என்ன இருந்தாலும் இந்த முத்துத்தாண்டவனின் மனைவியில்லே...” என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் கூறிப் பேச்சை மாற்றி, அதன் மூலம் அவளது மனநிலையை மாற்றிய அவன், அவளிடத்தில் விடைபெற்றுக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டான்.

அலங்காரம் என்ற சொல்லே ஒரு நுட்பமான அழகைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது என்றால் அந்த அழகான சொல்லையே தன் பெயராக வைத்திருக்கும் அவள் எப்படி இருப்பாள் என்பதைச் சொல்ல வேண்டுமா? புனைந்து கொள்ளுதல் இல்லாமலேயே பொலிவு பெற்று விளங்கும் அவள் முகத்தைப் பார்ப்பவர்கள் இப்படியும் ஓர் அழகு உலகில் உண்டா? என்று வியந்து போவார்கள். சமுதாயத்திலே இருக்கிற பெரும்பான்மையோரின் செல்வம், சில சமயங்களில் ஓரிருவரிடத்திலேயே முடங்கிவிடுவது போல உலகத்தின் அழகெல்லாம் அவளிடத்திலேயே குவிந்துவிட்டன. இரண்டு ஆண்டுகட்கு முன் திருவாரூர் தியாகராசர் கோயில் தெப்ப உற்சவத்திற்குக் கச்சேரியின் பொருட்டு வாசிக்கச் சென்றிருந்த போது முத்துத்தாண்டவன் அலங்காரத்தை முதன் முதல் சந்தித்தான். ஆயிரங்கால் மண்டபத்தில்-ஆயிரம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுத் தேஜோமயமாய்த் திகழ்ந்த அரங்கத்தில்- கந்தர்வலோகத்து தெய்வப் பெண்போல அவள் சுழன்று சுழன்று ஆடிய காட்சி முத்துத்தாண்டவனின் மனத்தைக் கிறங்கச் செய்தது.

“பித்துப்பிடித்து ஏன் அலைகிறாய் பேதை நெஞ்சமே.”

அவளது அழகிய உதடுகளைப் பிளந்துகொண்டு ஒலி வடிவாக வெளிப்பட்ட அந்த நளினமான வார்த்தைகளும் அந்த வார்த்தைகளின் ஜீவனைப் பிடித்து இழுத்துவந்து இதுதான் என்று காட்டுவதுபோல் அவள் பிடித்த அபிநயங்களும் ஆடற்கலைக்கே அவளை ஆதர்சமாக எடுத்துக்காட்டிற்று.

திருவாரூருக்குப் போய்விட்டுத் திரும்பிய முத்துத்தாண்டவன் புகழை மட்டும் அல்லாமல் அலங்காரத்தைப் பற்றிய நினைவுகளையும் சுமந்து கொண்டு வந்தான். எல்லாம் அதற்குப் பின் விளைந்த வினைதான். அலங்காரம் இப்பொழுது இவன் ஊருக்கே வந்துவிட்டாள். முத்துத்தாண்டவன் பக்கத்துத் தெருவில் ஒரு மனைக்கட்டை விலைக்கு வாங்கி, ஓர் அழகான வீட்டைக் கட்டி, அதில் அலங்காரத்தைக் குடியேற்றி வைத்தான். அவள் வந்து மூன்று மாதங்கட்குமேல் ஆகிறது. ஊரார் கட்டிவிட்ட கதைகள் முத்துத்தாண்டவனையோ அலங்காரத்தையோ பாதிக்கவில்லை. பாதிக்க முடியாத உயர்ந்த புகழ் உச்சிக்கு அவர்கள் ஏறிவிட்டார்கள். குத்தவேண்டும் என்று நினைத்து மாற்றான் மேல் வீசி எறியப்பட்ட வேல் அவனுக்கு ஊறு விளைவிக்காமல் முனை மழுங்கி விழும்போது, வேலை வீசியவன் சலிப்படைந்து விடுவதுபோல் ஊராரும் சோர்ந்துபோய்த் தங்கள் புனை சுருட்டுக் கதைகளை விட்டுவிட்டார்கள். ஆனால் இதையெல்லாம் மெளனமாகக் கண்டு வடிவு குமுறிக் கொண்டிருந்தாள்.

கோயிலுக்குப் போக மனமில்லாமல் திண்ணைக் குறட்டிலேயே முந்தானையை விரித்துப் போட்டு, பக்கத்தில் மகனைக் கிடத்திக்கொண்டு படுத்துவிட்டாள் வடிவு. விடிய விடிய அதிர்வேட்டுச் சத்தங்களும், சொற்களில் பிடிபடாத ஆரவாரமும் ஊரில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. எதிர்வீட்டுக் கிழவி தில்லைக்கண்ணு தூக்கம் பிடிக்காமல் கையில் வெற்றிலைப் பெட்டியை எடுத்துக்கொண்டு வடிவாம்பாளின் வீட்டுப் பக்கம் வந்தபோது வடிவுதிண்ணைக் குறட்டில் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டாள்.

“ஏண்டியம்மா, திருநாளும் அதுவுமா. ஊர் ‘ஜே’ ‘ஜே’ண்ணு இருக்குது. நீ என்னண்ணா என்னத்தையோ பறிக்கொடுத்தவ மாதிரி அலங்கோலமா படுத்திருக்கே! உன் புருஷன் கச்சேரியைக் கேட்க ஊரே திரண்டு வாரப்ப நீ மட்டும் ஏன் இங்கேயே அடஞ்சி கிடக்குறே?...” என்று பரிவோடு கேட்டுவிட்டுப் பக்கத்தில் அமர்ந்தாள். தில்லைக்கண்ணுவின் கீச்சுக் குரலைக் கேட்டு குழந்தை செல்வம் தூக்கம் கலைந்து புரண்டு முனகினான். செல்வத்தைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்த வடிவு நெற்றியில் படிந்த கூந்தலை ஒதுக்கிக்கொண்டு “வாங்க மாமி...” என்றாள்.

“ஒண்ணும் கவலைப்படாதேடி அம்மா!...ஆம்பளைங்க எப்டியும் இருப்பாங்க. நாம்தான் பொறுமையா இருந்து ‘புருஷாளை வழிக்குக் கொண்டு வரணும்...” என்று அவளுக்கு ஆறுதல் கூறுவதாக நினைத்துக்கொண்டு கனிந்து கொண்டிருந்த துயரத் தீயை மேலும் ஊதிவிட்டாள் கிழவி. பின் அவளே சென்னாள்! “வடிவு, நாமும் சும்மா சொல்லப்படாது. அந்த அலங்காரத்தைப் பாத்தா நாம் எதுவும் தப்பாச் சொல்லத் தோணலே. முகத்திலே சின்னக் குழந்தை மாதிரி அப்படியே பால் வடியுது. அந்தப் பெண்ணோட அடக்கமும், சொகுசும் ஒரு மாதிரிதான். அதைக் கொறை சொல்ல முடியாது முத்துத் தாண்டவன் கெட்டலையுறதுக்கு அவ காரணம் இல்லே. எல்லாம் இவன்தான்.”

கிழவி தன் கணவனைக் குறைத்துப் பேசுவது வடிவுக்குப் பிடிக்கவில்லை. என்றாலும் அவன் சொல்வதற்கு ஏதேனும் பதில் சொல்லவேண்டுமே என்பதற்காக “ஆமாம் மாமி! முந்தா நாளு நான் கோயிலுக்குப் போயிருந்தப்ப அவளைத் தூரத்திலே இருந்து பார்த்தேன். நம்ம தலைவிதிக்கு அவளை நொந்துக்கறது தப்புதான்” என்றாள்.

“அந்த அலங்காரம் ஆட்டக்காரியாக இருந்தாலும் நல்ல மனசு உள்ளவளா இருக்கிறதுனாலே அண்ணைக்கி உன் புள்ளே சிக்கா கிடக்கிறாண்ணு கேள்விப்பட்டதும் துடியாத் துடிச்சா! ஆள்மேலே ஆள்விட்டு விசாரிச்சா...”

கிழவியின் பேச்சில் உண்மை இருப்பது வடிவுக்குத் தெரிந்தது. சிறுவன் செல்வம் கணையும், வெட்டும் வந்து படுக்கையில் கிடந்தபோது அலங்காரத்து வீட்டு வேலைக்காரன் அடிக்கொருதரம் வந்து பார்த்துச் சென்றது நினைவுக்கு வந்தது. அலங்காரமே வடிவாம்பாளின் வீட்டுக்கு வந்து பார்க்க நினைத்தாள் என்றும், ஒருவேளை வந்தால் ‘ஊர் என்ன சொல்லுமோ’ என்று அஞ்சி வராமல் இருந்துவிட்டாள் என்றும் வேலைக்காரன் வடிவாம்பாளிடம் சொல்லியிருந்தான்! என்ன இருந்தாலும் வடிவாம்பாளின் பெண்மனம் அலங்காரத்தை அங்கீகரித்துக் கொள்ள மறுத்தது.

தில்லைக் கிழவி நீண்ட நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள். கடைசியில் “நான் வரவேண்டியம்மா தூக்கம் ஆளை அசத்தியறது...” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். வடிவாம்பாளும் எப்படியோ கண்ணயர்ந்தாள்.

பொழுது விடிந்தது. கோயிலிலிருந்து பண்டாரம் வந்தான். முத்துத்தாண்டவன் ஏதோ அவசர வேலையாக வெளியூர் போயிருப்பதாவும், வருவதற்கு இரண்டு நாள் ஆகுமென்றும் வடிவாம்பாளிடம் சொல்லிவிட்டுப் போனான். எங்கேயாவது கோயிலில் இருந்தோ அல்லது தனிப்பட்ட சபாக்களிலிருந்தோ கச்சேரிக்கு அழைப்பு வந்திருக்கும் என்று அனுமானித்துக் கொண்டாள் அவள்.

முத்துத்தாண்டவன் வெளியூருக்குச் சென்றிருக்கும் செய்தி அலங்காரத்திற்கும் தெரியாது. கோயில் பண்டாரம்தான் காலையில் அவளுக்கும் செய்தியைத் தெரிவித்துவிட்டுப் போனான். ‘திடீரென்று புறப்பட்டுப் போனதற்குக் காரணம் என்னவாக இருக்குமோ’ என்று கவலையுற்றாள் அலங்காரம். முதல் நாள் இரவு சதிர்க்கச்சேரி முடிந்தவுடன் அவள் நேரே வீட்டுக்கு வந்துவிட்டாள். முத்துத்தாண்டவனோடு தனித்துப் பேச சந்தர்ப்பம் இல்லை.

இரண்டு நாட்கள் கழிந்தன. முத்துத்தாண்டவன் வரவில்லை. வீட்டுக்குத் திரும்பியிருந்தால் அவர் இங்கு வராமல் இருக்கமாட்டாரே. ஒரு வேளை வீட்டுக்குத் திரும்பி வந்து உடல்நலம் இல்லாமல் தங்கிவிட்டாரோ’ என்றெல்லாம் நினைத்து நினைத்து குழம்பினாள் அலங்காரம். தன் நினைவையும், நெஞ்சத்தையும் அவனுக்கே அர்ப்பணித்து விட்டு, அந்த அர்ப்பணத்தையே தன் வாழ்வின் வெற்றியாகக் கொண்டாடி வரும் அவளுக்கு எதிர்பாரா அந்தச் சிறு பிரிவு பெருவேதனை அளித்தது.

மனத்தை மாற்றுவதற்காக வீணையை எடுத்துத் தனக்குப் பிடித்தமான ஒரு பாட்டைப் பாடத் துவங்கினாள். ‘பித்துப் பிடித்து ஏன் அலைகிறாய், பேதை நெஞ்சமே’ என்ற அந்த பாடல் வரி அவளது இதயத் துடிப்பின் எதிரொலி போலவே நளினமான ஒலித்தது. நேரே வடிவாம்பாளின் வீட்டிற்கே சென்று விசாரித்து வரவேண்டும் என்ற ஆவுல் தலை நீட்டிற்று. ‘ஊர் என்ன சொல்லுமோ’ என்ற அச்சம் இம்முறையும் எழுந்து கொழுந்துவிட்ட ஆவலை ஒடுக்கிற்று. கடைசியில், சிரமப்பட்டு அடக்கியும் அடங்காமல் மேலெழும்பும் அந்த ஆர்வத்தைத் தடுக்க இயலாதவளாக வீட்டை விட்டுக் கிளம்பினாள். தலையைக்கூட வாரிக்கொள்ளாமல், கட்டியிருந்த புடவையோடு, முந்தானையை இழுத்துப் போர்த்திக்கொண்டு வடிவாம்பாளின் வீட்டை நோக்கி நடந்தாள். ‘வடிவாம்பாளிடமிருந்து தனக்கு எத்தகைய வரவேற்புக் கிடைக்குமோ?’ என்று நினைத்தபோதெல்லாம் அவள் மனமும் நடையும் தளர்ந்து தொய்ந்தன. ஆவலும், தயக்கமும் முன்னும் பின்னுமாக மாறி மாறி இழுக்க அவள் நடந்து வந்தாள்.

சன்னதித் தெருவைத் தாண்டி தேர்முட்டியை அடைந்தாள். பின், திருக்குளத்துப் படித்துறையிலிருந்து நேர் கிழக்காகச் செல்லும் ராக்கப் பிள்ளைத்தெருவில் புகுந்தாள். தெற்கு வடக்காகச் செல்லும் அந்த நீண்ட தெருவின் தென் கோடியிலேயே முத்துத்தாண்டவனின் வீடு இருந்தது. வீடு நெருங்க அவள் துடிப்பும் அதிகமாகியது. வீட்டு வாசலுக்கு முன், தெரு மணலில் வேப்பமரத்து நிழலில் முத்துத்தாண்டவனின் குழந்தை நடைவண்டி உருட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. குழந்தை செல்வனை அவன் இதுவரை பார்த்ததில்லை என்றாலும் ஒருவாறு ஊகித்துக் கொண்டாள்.

குழந்தை நடைவண்டியை உருட்டிவாறு தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அலங்காரத்தைப் பார்த்து தன் பிஞ்சுக்கைகளை நீட்டி “அம்மா’ “அம்மா” என்று அழைத்தது. அக்குழந்தையின் கண்ணும், மூக்கும், சாயலும் முத்துத்தாண்டவனையே உரித்து வைத்ததுபோல் இருந்தது.

ஆறடி உயரம், பொன்னிறமான மேனியும், கருகருவென்று கழுத்து வரை வளர்ந்து கிடக்கும் சுருண்ட கிராப்புமாய் இன்றைக்குக் காட்சிதரும் முத்துத்தாண்டவன் சிறுபிள்ளையாக இருந்தபோது இப்படித்தான் இருந்திருப்பானோ என்று நினைக்கிற மாதிரி அக்குழந்தையின் சாயல் அவனைப் போவே இருந்தது. குழந்தை செல்வனின் குறுகுறுத்த விழிகளில் இலட்சியத்தைத் தேடி அலையும் முத்துத் தாண்டவனின் கம்பீரமான உருவமே அவளுக்குத் தெரிந்தது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அக்குழந்தையைத் தூக்கிக் கொஞ்சவேண்டும் என்ற ஆர்வத்தோடு அலங்காரம் நெருங்கினாள்.

அப்பொழுதுதான் ஜன்னல் ஓரமாக நின்று தெருவைப் பார்த்துக் கொண்டிருந்த வடிவு எதிர்பாரத நிலையில் அலங்காரத்தைக் கண்டாள். வடிவு ஜன்னல் வழியாகத் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்று அறியாத அலங்காரம் நடைவண்டி உருட்டும் சிறுவனை வாரி எடுத்து, உச்சி மோந்து முத்தம் கொடுத்தாள். அந்தக் காட்சியைக் கண்ட அந்தக் கணத்தில் வடிவின் மனம் நெகிழ்ந்தது. அலங்காரத்தின் தோள் மீது சாய்ந்த குழந்தை அவள் கழுத்தைக் கெட்டியாக இறுக்கிக்கொண்டு தன் மழலை மொழியில் “அம்மா” “அம்மா” என்று அழைத்தது. அதுவரை தன் உள்ளத்தில் குடிகொண்டிருந்த அழுக்காறு, வன்மம், தப்பபிப்பிராயம் எல்லாம் ஒரே நொடியில் கரைய வடிவு புதிய பிறவி பெற்றவள்போல் மனம் சிலிர்த்தாள். ஏதோ ஓர் உணர்வின் விழிப்பில் உந்தப்பட்டவள்போல் அவள் வாசலுக்கு விரைந்து வந்தாள்.

“அலங்காரம்!... வாம்மா வா... ஏன் தயங்கிறே...நீயும் இவனுக்கு ஒரு அம்மாதான்..” என்று கூறி அவளைத் தழுவிக் கொண்டு கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

சலங்கை ஒலியோடு வாசலில் வில்வண்டி வந்து நின்றது. முத்துத்தாண்டவன் வண்டியைவிட்டு இறங்கினான். தன்னை வரவேற்க வடிவும், அலங்காரமும் சேர்ந்து நிற்பதைக கண்டான்.

அவன் மனம் தளிர்த்தது.