உலகம் பிறந்த கதை/அசுர ஜீவன்களின் அட்டகாசம்

விக்கிமூலம் இலிருந்து

16. அசுர ஜீவன்களின் அட்டகாசம்


மத்திய ஜீவயுகம் தொடங்கிற்று. பூமியின் பெரும் பகுதியைப் பனி மூடிக் கொண்டது. பனி! பனி! எங்கும் ஒரே குளிர்! தாங்க முடியாத குளிர். சதுப்பு நிலங்கள் எல்லாம் உறைந்தன. மரங்கள் செடிகள் எல்லாம் அழிந்தன. சதுப்பு நிலத்திலே சோம்பேறி வாழ்க்கை நடத்தி வந்த உயிர் இனங்களுக்கு இப்போது சோதனை காலம்.

நீண்ட காலம் வரை பனி விலகவே இல்லை. உறைந்து கிடந்தது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் சென்றன. பூமியின் தட்ப வெப்ப நிலையில் மாறுதல் தோன்றியது. சிறிது சிறிதாகப் பனி விலகியது. மீண்டும் பூமியிலே உயிர்த் துடிப்பு ஏற்பட்டது.

பூமி தேவியானவள் புதுமை பெற்றாள்; பொலிவுடன் விளங்கினாள். பல விதமான பூச்சிகள் தோன்றின. ஆனால் பூமியின் எல்லாப் பகுதிகளிலும் காடுகள் தோன்றின; வளர்ந்தன. அந்தக் காட்டினிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக முன் கண்ட ஓணான் இனம் தோன்றியது. ஆனால், இப்போது அவை முன் போல இல்லை. பக்க வாட்டிலே இருந்த கால்கள் இப்போது அவற்றிற்கு வயிற்றின் அடிப்பாகத்திலே தோன்றின. விரைவாக நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்றபடி ஆயின. அவை தமது பின் கால்களால் நடக்கத் தொடங்கின. முன் கால்கள் இரண்டும் இரை தேடுவதற்கு உதவின.

சிறு உருவில் தோன்றிய இவை, வர வரப் பெரிதாயின. இவற்றிற்கு ‘தினோ சுரஸ்' என்று பெயர். தினோசுரன் என்று நாம் மருவி வழங்கலாம்.

இந்த தினோசுரன் இனம் நாளடைவில் பெருகிற்று. 'அனடோசுரன்' என்பதும் இந்த இனத்திலே ஒன்று. இதன் வாயிலே இரண்டாயிரம் பல்! எனினும் வாத்து போன்ற மூக்கு! இவை தம் எதிரே அகப்பட்ட பூச்சிகளை எல்லாம் தின்று வளர்ந்தன.

இந்த அசுரப் பிராணிகள் காலப் போக்கில் பேருருவம் பெற்று விட்டன. ஸ்டெகோசுரன்’ என்பது ஒன்று. இருபது அடி நீளம இருக்கும்.

இதன் முன்கால் இரண்டும் பெரியவை. பின் கால்கள் சிறியவை. முதுகிலே தலையிலிருந்து வால் வரை, கத்தி போன்ற ஓடு. கூர்மையான ஓடு. இது தற்காப்புக்காக ஏற்பட்டது போலும்!

இதே மாதிரி இன்னொரு விதம் ‘டிரனாசுரன்' என்று பெயர். தலைமுதல் வால் வரை மொத்தம் நாற்பத்து ஐந்து அடி நீளம்! முன்கால்களைத் தூக்கிக் கொண்டு பின் கால்களால் நடக்கும். நடக்கும் போது பார்த்தால் இருபது அடி உயரம் இருக்கும். இந்த யுகத்திலே அரசனாக விளங்கியது ‘டிரனாசுரன்'தான். பயங்கரமான பிராணி. மிகப் பயங்கரம்.

இந்த இனமானது அந்தக் காட்டிலே அட்டகாசம் செய்து வாழ்ந்தது. எதிரே கண்ட உயிர் இனங்களை எல்லாம் கொன்று தின்றது.

அந்தக் காட்டிலே இந்த ‘டிரனாசுர'னின் அட்டகாசம்தான் பிரமாதமாயிருந்தது. ஒன்று டன் மற்றொன்று. போரிடுவதும், ஒன்றை மற்றொன்று கொன்று தின்பதும் இவற்றின் இயல்பு.

மூர்க்கம் நிறைந்த இப் பிராணிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான உடல் அமைப்பும் சிலவற்றிற்கு ஏற்பட்டது. அவற்றுள் ஒன்றுதான் 'திரிசரோடோப்ஸ்” என்பது.

காண்டா மிருகம் மாதிரி! தலையில் கொம்புகள் மூன்று உண்டு.

போர்! போர்! அந்தக் காடுகளிலே பெரும் போர். இந்த அசுர ஜீவன்களிடையே போர். ஒன்றை ஒன்று கொன்று குவித்தன.

இவற்றிற்குப் பயந்து ஓடின சில. உயிருக்குத் தப்பி ஓடின. உண்பதற்கு வழி தேடி ஓடின. மீண்டும் அவை கடலுக்கே திரும்பின. கடலிலே ஆபத்து இல்லை அல்லவா! உணவுக்கும் பஞ்சம் இல்லை.

இப்படிக் கடலுக்கு ஓடி வந்த அசுரப் பிராணிகளில் ஒன்று 'இக்தியாசுரன்' என்பது.. சுமார் இருபத்தைந்து அடி நீளம்!

‘பிலியாசுரன்' என்பது மற்றோர் இனம். அசுரப் பிராணி. சுமார் ஐம்பது அடி நீளம் இருக்கும். நீண்ட கழுத்து. வாத்து போன்ற அலகு! அதிலே நிறைய பல்!

இந்த இரண்டு அசுர இனங்களும் கடலிலே புகுந்து அட்டகாசம் செய்யத் தொடங்கின. கடலிலே சிறு உயிர்களுக்குப் பஞ்சம் இல்லை அல்லவா! வயிறு புடைக்கத் தின்னலாம்.

இன்னும் சில அசுர இனங்கள் பிழைக்க முடியாமல் தத்தளித்தன. ஓடவும் முடியவில்லை. வாழவும் முடியவில்லை உயிருக்கு மன்றாடித் தவித்தன.

அவற்றிற்குப் பறக்கும் சக்தி உண்டாயிற்று. அவற்றின் முன் கால்கள் இறகு போலாயின. பறவை இனத்தின் மூதாதைகள் இவை.

விலங்கினத்தினின்றும் மெதுவாகப் பறவை இனம் தோன்றிய காலம் இதுவே. இந்தப் பறவைகளின் உடல் அமைப்பு அசுரப் பிராணியின் உடல் போன்றதே.

இவற்றிற்குப் பல் உண்டு. ஆனால் பறக்கும். சுமார் இருபத்தைந்து அடி நீளம் இருக்கும். ராமாயணத்திலே வருகிற ஐடாயு மாதிரி! 'ஆர்க்கியோப்டரிக்ஸ்' என்று இவற்றிற்குப் பெயர்.

பறப்பதற்குச் சிறகு இருப்பது தவிர மற்ற எல்லா அம்சங்களிலும் இவை அந்த அசுரப் பிராணிகளைப் போன்றவையே.

சிறகுகள் தோன்றியதால் இவை, குளிர் தாங்கும் சக்தி பெற்றன. 'டிரனாசுரன்' போன்ற அசுரப் பிராணிகளுக்கு இரையாகாமல் குளிர்ப் பிரதேசங்களுக்குப் பறந்து சென்று தப்பிப் பிழைத்தன! இந்த 'ஆர்க்கி யோப்டரிக்ஸ்'!

இந்த விதமாகச் சுமார் பதினொரு கோடி ஆண்டுகள் சென்றன. அசுரப் பிராணி களான இவை, நீர், நிலம், வானம் ஆகிய மூன்றிலும் அரசு செலுத்தின.

மத்திய ஜீவ யுகத்தின் முடிவு காலம். பூமியை மீண்டும் பனி மூடியது. குளிர்! குளிர்! தாங்க முடியாத குளிர்.

இந்த அசுரப் பிராணிகளும் குளிர் தாங்க முடியாமல் இறந்தன; அழிந்தன. இவற்றின் வம்சமே பூண்டோடு ஒழிந்தது. குளிர் கொன்றது.

வரப்போகும் சமீப ஜீவ யுகத்திலே தோன்ற இருக்கும் உயிர் இனங்களுக்கு இடம் ஒழித்துக் கொடுத்தவைபோல அவை ஒழிந்தன! ஒழிந்தன. ஒழிந்தே போயின.