நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/20. தாளாண்மை
ஏரியில் நீர்வளம் இருப்பதால் அடுத்துக் கழனிகளில் பயிர்கள் செழித்து வளர்கின்றன. பயிர்கள் பச்சைப் பசேல் என்று இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் ஏரியில் நீர் நிறைந்திருக்கிறது என்பதாகும். அவை செழித்து வளர்வதற்கு நீர் கொழித்துப் பாய்கிறது. சுற்றமும், உறவினரும், மக்களும் மனைவியும் சுகமாக இருக்கின்றனர் என்றால் அக்குடும்பத் தலைவன் உழைப்பதால்தான். தளராத உழைப்பு மற்றவர்கள் பிழைப்புக்குக் காரணம் ஆகிறது. நாட்டியப் பெண் பாட்டியலுக்கு ஏற்ப ஆடுகிறாள். அவள் கண்கள் வாள்போல் சுழன்று சுறுசுறுப்பைக் காட்டுகிறது. அவள் கண்களின் சுழற்சிபோல உழற்சி காட்டும் உழைப்பாளியின் சுறுசுறுப்பும், பரபரப்பும், பொருள் ஈட்டும் நல்முயற்சிகளும் அந்தக் குடும்பத்தை வாழ்விக்கின்றன. முயற்சி திருவினை ஆக்குகிறது; அயர்ச்சி தாழ்வினைத் தருகிறது.
நேற்று மெலிந்து கிடந்தான்; இவன் வலிந்து செயல் செய்ய முற்பட்டான்; சிறு தொழிலாகத் தொடங்கினான்; இன்று பெருந்தொழில் முதலாளி ஆகிவிட்டான். எப்படி? விடாமுயற்சிதான்; ஆடிக்கொண்டிருந்த அவன் ஆரம்ப வாழ்வு காழ்ப்பு ஏறிக் கடுமைகளைத் தாங்கிச் செழுமை பெற்றுவிடுகிறது. காற்றுக்கு அசைந்து துவண்ட மெல்லிய தளிர்களைக் கொண்ட செடி கூட நாளடைவில் காழ்த்து வலிவு பெற்றுக் கட்டுத் தறியாகிறது. அது காற்றுக்குத் துவண்டு வெறும் கீற்றாகச் சாய்ந்து விட்டிருந்தால் போற்றத்தக்க இந்தப் பெருமையை அடைந்திருக்க முடியாது. காற்றுக்கும் மழைக்கும் ஈடுகொடுத்து நிமிர்ந்து நின்று திமிர்ந்து மரமாகி அது வைரம் பாய்ந்து அசைக்க முடியாத நிலை பெற்றுவிடுகிறது, இஃது உழைப்பாளிக்கு ஒரு ஆசான். அதைப் பார்த்து இவன் விடாப்பிடியாகத் தொடர்ந்து உழைத்தால் முன்னுக்கு வருவான்; கட்டுத்தறியில் யானையைக் கட்டி வைக்க முடியும்; இவன் பல பேர் சுற்றத்தினர் நாடி இடம் அளிக்கும் செல்வனாகத் திகழ்வான்.
வலிமைமிக்க புலி பசித்தால் அது பட்டினி கிடக்காது; சிறு தவளை கிடைத்தால் அதைப் பிடித்து அந்நேரத்திற்கு உயிர்வாழ முற்படும். அதுபோலக் கால் தொழிலாக இருந்தாலும் அது மேலான தொழில் என்று அதைத் தொடங்குக. பிறகு மெல்ல மெல்ல முன்னேறலாம். தொடங்கும்போதே பெரிய அளவில் தான் தொடங்குவேன் என்று அடம் பிடித்தால் தடம் புரள்வது ஆகும். அரிய செயல் என்று அசதி காட்டினால் அஃது ஆண்மைக்கு இழுக்கு; பூ முடித்துப் புனைவுகள் செய்கிறேன் என்று கூறிக் கொண்டிருந்தால் அதனைப் பெண் ஒருத்தியே செய்துவிடுவாள். செயற்கரிய செயலைச் செய்வதுதான் பெருமைக்கு அழகு, “இது நம்மால் முடியுமா?” என்று திகைப்புக் காட்டத் தேவை இல்லை; முடியும்; முயல்க; வெற்றி காண்க.
குலம் பேசி உயர்வு காண முயல்வர் நலம் பேசி நன்னிலை அடைய முடியாதவர்; உயர்வு தாழ்வு என்பது பிறப்பால் அமைவது அன்று. அவரவர் செய்யும் தொழில் சிறப்பால் அடைவது ஆகும். மிக்க பொருள் ஈட்டுக; அஃது உன்னை உயர்த்திக் காட்டும். தவம் கல்வி இவற்றோடு ஆள்வினை கூடினால் எதுதான் சாதிக்க முடியாது; தவம் என்பது விடாமுயற்சி, கல்வி என்பது செய்யும் தொழிலைப் பற்றிய நுட்ப அறிவு. ஆள்வினை என்பது செயலாற்றும் திறன்; அடுத்தது சோர்வு இன்மை; இந்த நால்வகைப் பொருளால்தான் மனிதருக்குச் சிறப்பு உண்டாகும். பிறப்பு அனைவர்க்கும் பொது; அதை வைத்துச் சிறப்புக் கொண்டாடுவதில் பயன் இல்லை; அவரவர் செய்யும் தொழிலால் தான் மதிக்கப்படுவர்.
ஒரு காரியத்தை மேற்கொண்டு அதை முடிக்கும் வரையும் அதைப் பற்றி அளவளாவுதல் வெற்றிக்குத் தடையாகும். செய்யும் தொழில் செம்மையுற நடைபெற வேண்டும் என்றால் வீண் பெருமைக்காக அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது; அதை மற்றவர்கள் அறிந்தால் அவர்கள் முந்திக் கொள்வார்கள். அது எப்படிச் செய்வது? அதனால் உண்டாகும் நன்மைகள் யாவை? இவை எல்லாம் ரகசியமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தபின் அறியட்டுமே! அதுவரை அடங்கி இருப்பது தக்கது ஆகும். மற்றும் பிறர் என்ன செய்கிறார்கள்? அவர்கள் நமக்கு எப்படிப் போட்டியாக வரக்கூடும் என்பது எல்லாம் கூர்ந்து கவனித்து வரவேண்டும். அவர்கள் செய்வது எப்படி என்பதை அறிந்து தம் தொழிலுக்கு அவ் அறிவினைப் பயன்படுத்த வேண்டும். பிறர் தொடர்பைத் தக்க வழியில் பயன்படுத்துவது அறிவுடைமையாகும். எனவே தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மற்றவர்களைக் கவனித்துக் கொண்டும் செயலாற்றுவது வெற்றி தரும்.
சிதல் அரிக்கப்பட்ட ஆலமரம் அஃது அழிந்துவிடாமல் காப்பது அவைவிடும் விழுதுகள்; அவை அம் மரத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன. மக்களும் தந்தை தொடங்கிவிட்ட தொழிலைத் தொடர்ந்து காப்பது அவர்தம் கடமையாகும்.
மதங்கொண்ட யானையை அதன் கதம் அடக்கும் வலிமை உடைய வள்ளுகிர் உடைய சிங்கம் போன்ற ஆற்றல் உடையவர்கள் வீழ்நிலை உற்றபோதும் தாழ்வுறும் செயல்களில் முயலார்; சிறுதொழில் செய்து ஜீவிக்கலாம் என்று மனம் சோர்வு பெறமாட்டார்.
கரும்பின் பூக்கள் குதிரையின் பிடரிபோல் காண்பதற்குக் கவர்ச்சியாக இருக்கும். மணம் என்பது அதன் குணம் அன்று; நறுமணம் தராது. அதே போலக் குடிப்பிறப்பு மட்டும் ஒருவனை உயர்த்திவிடும் என்று கூற முடியாது. படிப்பும், பண்பும், விடாத உழைப்பும், செயலும் மட்டுமே அவனை உயர்த்திக் காட்டும்.
சோற்றுப் பிண்டங்களாய்த் தண்டசோறு தின்று கொண்டு தரித்திரராய் வீட்டில் எடுபிடிகளாகச் செயல்பட்டு ஏற்றமின்றி வாழ்வார்; அவர்கள் சோம்பேறிகள், கூழைக் குடித்தாலும் தன்மானத்தோடு வாழ்ந்து விடாத உழைப்பால் உயர்வு பெற்று ஒளிபெற்றுத் திகழ்வார்; அவர்கள் உழைப்பாளிகள். உழைப்பே உயர்வு தரும்; அண்டிப் பிழைப்பது அடிமைத்தனம் ஆகும்.