உள்ளடக்கத்துக்குச் செல்

குண்டான உடம்பை குறைப்பது எப்படி/கூடிய உடல் எடையும் கூறுகிற காரணங்களும்

விக்கிமூலம் இலிருந்து
5. கூடிய உடல் எடையும் கூறுகிற காரணங்களும்


1. காரணம் என்ன?

உடலில் எடை கூடிப்போய் உருவத்தில் கொஞ்சம் வித்தியாசம் ஆகி, அதாவது கொஞ்சம் மோட்டாவாகத் தோற்றமளிக்கக் கூடியவர்களைப் பார்த்துப் பேசுகிற போது, அவர்கள் கூறுகிற காரணங்கள் எல்லாம், தன்னையும் கேட்பவர்களையும் சமாதானப் படுவதற்காகவே இருந்தாலும், அதனால் அவையெல்லாம் சரியான காரணங்களாக இருக்காது என்பது தான் உண்மை நிலையாகும்.

என்னுடைய சுரப்பிகளில் (Glands) ஏற்பட்டிருக்கிற கோளாறுதான் என்னை இப்படி மாற்றிவிட்டது என்று சொல்லிக் கொள்பவர்கள் சிலர். விஞ்ஞான பூர்வமான விளக்கம் என்று இப்படிப் பேசி, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் சாக்குப் போக்கு இது.

என்னுடைய உடலிலே ஏற்பட்டிருக்கிற செல்கள் சிதைவளர் மாற்றம் (Metabolism), சரியாக செயல் படாததால் தான் இப்படி தேகம் தடுமாறி விட்டது என்பார்கள் சிலர்.

இப்படி குண்டாக இருப்பது, எங்களது குடும்ப சம்பந்தம், எங்கள் பரம்பரையே இப்படித்தான். கபடு, சூது இல்லாமல் குண்டாக வளர்ந்திருக்கிறோம், வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பாதுகாப்பாக பரம்பரையை இணைத்துப் பேசுபவர்கள் சிலர்.

இப்படி கூறுகிற எல்லாக் காரணங்களுமே, இதற்கு சரியான விடைதானா என்றால், அது சிறிதளவு இருக்கலாம். ஆனால், அதுவே அனைத்து காரணங்களுக்கும் ஆதாரமாக அமைந்து விடாது.

உடலில் எடை கூடுவது ஒரு குறிப்பிட்ட நாளமில்லாச் சுரப்பியினால்தான் என்று கூறினால், அது மிகைப்படுத்தப்பட்ட ஒரு காரணம் ஆகும். அதாவது, இது ஒரு 10,000 குண்டான பேர்களில், ஒரு வருக்கு ஏற்படுகிற வாய்ப்பு என்றே வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பொதுவாகச் சொல்வார்கள். உடல் குண்டாவதற்கு ஒரே ஒரு சுரப்பிதான் வேலை செய்யாதது என்றால், அது எச்சில் சுரப்பிகளாகத்தான் இருக்க முடியும் (Salivary glands) என்று சொல்வார்கள். ஆனால், அதுவும் சரியல்ல. வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம், குண்டான மனிதர்கள், ஒல்லியான மனிதர்களை விட குறைவாகவே சாப்பிடுகிறார்கள். ஆதனால் அங்கே எச்சில் சுரப்பிகள் காரணம் என்பது அடிப்படை இல்லாமல் போகிறது.

அடுத்தபடியாக, செல்கள் வினைச் சிதை மாற்றம் ஒரு காரணம் என்பது, பொதுவாக எல்லோரும் பேசக் கூடிய விஷயம் தான். இது போல் செல்கள் பிறந்து, வளர்ந்து உடலில் ஏற்படுத்துகின்ற மாற்றம் என்பது ஒருவர் உண்கின்ற உணவு சீரணிக்கப்பட்டு அது உடலிலே சக்தியாக மாறுகிறபோதுதான் ஏற்படுகிறது.

இப்படி உணவானது சக்தியாக மாறுவதும், உடலிலே உள்ள செல்கள் பிறந்து, வளர்ந்து செயல்படுவதும், எல்லாம் மனிதர்கள் உண்ணும் உணவினால் வெளிப்படுகின்ற காரணங்களாக இருக்கின்றன. அவர்கள் எவ்வளவு சாப்பிடுகிறார்கள்?, அவை எப்படி சக்தியாக மாறுகிறது?, எப்படி ஜீரணிக்கப்படுகிறது? என்பதெல்லாம் பலவிதமாக அமைப்புகளால் அரங்கேறுகிறது.

சில மனிதர்கள் தேவைக்கு அதிகமாக உண்பதில் ஆர்வம் காட்டுவது உண்டு. ஒரு சிலர், சிறிதளவே உண்டாலும் அது அவர்களுக்கு அதிகமாகிப் போவதும் உண்டு. ஆக, அதிகமாக உண்பவர்கள், ஒல்லியாக இருப்பதும், குறைவாக உண்பவர்கள் குண்டாக இருப்பதும் என்ன காரணம் என்று ஆராயும்போது, அந்த உண்மை இன்னும் விளங்காத புதிராகவே இருக்கிறது.

உடல் எடையானது தொடர்ந்து பரம்பரைப் பண்பால் வருகிறது என்பது ஒரு காரணம். இப்படி இயற்கை பரம்பரையையும், செயற்கையில் உண்ணுகிற உணவு முறையையும் இணைத்துப் பேசிவிடுவதால் எந்தப் பலனும் ஏற்பட்டு விடப் போவதில்லை.

ஒரு தாய்க்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் இந்த இயற்கை முறையும், செயற்கை உணவு முறையும், உரிய இடம் பெறுகிறது. அவர்கள் சாப்பிடும் உணவும், வாழ்க்கையில் செயல்படும் முறையும், அவர்களை இவ்வாறு மாற்றம் உடையவர்களாக விளங்கச் செய்கிறது. இதற்கு அவர்களது பிறப்புதான் முக்கியமாக பங்குவகிக்கிறது, என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக சிலருக்கு பிறப்பிலேயே ஏற்பட்டிருக்கிற பருத்த உடலுக்குக் காரணம் எதுவாக அமைகிறது என்றால் அவர்கள் உடலிலே உணவு செயல்படுத்தும் மாற்றமும் காரணம் என்றும், அவர்கள் உடலிலேயே ஏற்பட்டிருக்கிற உடல் எடையைப் பார்த்து எவ்வளவு அதிகரித்துள்ளது என்று பேசும் போது, அவற்றை நாம் சரி செய்ய முயல்வது சாத்தியம் ஆகும்.

2. குண்டாகி விடும் குழந்தைகள்

உடலில் ஏன் எடை கூடி, உருவம் மாறிப்போகிறது என்பதை அறிவதில், வல்லுநர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நாகரீக காலத்தில், இது ஒரு பிரச்சினை போலவே இடம் பிடித்து இருப்பதால், அறிவியலார், அதிகமாக அக்கறை கொண்டு, ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆகவே, ஆண், பெண் என்ற பேதங்களை ஆய்வு செய்கிறபோது, வயது வேறுபாடுகளையும் வகுத்துப் பார்க்கின்றனர். அதை குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என்று பிரித்துப் பார்க்கின்றபோது, சில உண்மைகளையும் அறிய முடிகின்றது என்கிறார்கள்.

குழந்தைகள் ஏன் குண்டாக இருக்கின்றார்கள்? அவர்கள் உடலிலே அதிகமான கொழுப்பு செல்கள் இருக்கின்றன. அந்த அதிகசெல் அளவான, வயதானவர்களுக்கும் வாலிபர்களுக்கும் இருப்பதை விட அதிகம் என்று கணக்கெடுத்திருக்கின்றனர்.

இப்படி குழந்தைகளுக்கு இருக்கும் அதிக அளவு கொழுப்பு செல்களைக் குறைப்பது கடினம் என்றும்; அதுவும் வயதானவர்களுக்கு இருக்கும் செல்களைக் குறைப்பதைக் காட்டிலும், கஷ்டம் என்றும் கண்டறிந்து கூறுகின்றார்கள். அவ்வாறு, குழந்தைகளின் கொழுப்பு செல்களை வேகமாகக் குறைக்க முயல்வதும் விவேகம் ஆகாது. பொறுமையாகத்தான் போக்க முயற்சிக்க வேண்டும். அது பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தவும் கூடும் என்றும் பேசுகின்றனர்.

இதனால், குண்டாகியிருக்கும் வயதானவர்களும், வாலிபர்களும் எங்களால் எடையைக் குறைக்க முடியாது என்று இந்தக் காரணத்தைக் கூறி, தப்பித்துக் கொள்கின்றனர். இதைச் சாக்காக வைத்துக் கொண்டு, நாம் முன்னர் கூறுயிருக்கும் இரண்டு குறிப்புகளும் அதாவது, குழந்தைகளுக்கு அதிகக் கொழுப்பைக் குறைக்க முயல்வது தொந்தரவுகளைத் தரும் என்பதும் பொய்யானது என்றே, பலரும் வாதிக்கத் தொடங்கி விட்டார்கள் என்றாலும், முயற்சித்தால் முடியாதது உலகில் உண்டோ?

3. வாலிப வயதில் குண்டாவது ஏன்?

13 வயதிலிருந்து 19 வயது வரையிலும் உள்ள வயதை, Teenage என்பார்கள். இந்த வயதுப் பருவம், வளர்ச்சிமிக்கப் பருவம். இந்த வயதிற்குள்தான் உடலின் உயர வளர்ச்சியும், உடலின் எடை வளர்ச்சியும் எடுப்பாக இருக்கும்.

இந்த விடலைப் பருவத்தில் தான், பால் உணர்வு இயங்கு நீர் சுரப்பு (Sex Harmones) அதிகமாக இருக்கும். இதில் ஏற்படுகிற மாற்றங்களே, பெண்களுக்கு உடலில் அதிக எடையை உண்டாக்கி குண்டாக்கி விடும்.

அதேசமயத்தில், உடலுக்கும் உணவின் தேவை அதிகமாகும். அப்பொழுது, அதிக அளவு உண்ணுகிற உணவுகளால் , உடலில் எடை கூடி குண்டாகும். ஆசைப்பட்டு சாப்பிட்டு விட்டு, அதை இந்த சுரப்பிகள் மேல் பழியை போடக் கூடாது. உணவை அதிகரித்தாலே, உடல் எடையும் அதிகரிக்கும். அதுதானே இயல்பான நிலைமை என்பதை மறக்கக் கூடாது.

4. பெண்களும் மாத்திரையும்:

சில பெண்மணிகள், தாங்கள் குண்டாகிப் போனதற்குக் காரணம், தினம் தாங்கள் உட்கொள்ளும் மாத்திரை மருந்துகளால் தான் என்று குறை கூறுகின்றார்கள். ஆனால், இது போன்ற குற்றச்சாட்டை, ஆய்வுகள் சரியென்று ஏற்க வில்லை.

மருந்து மாத்திரைகள், உட்கொள்கிறபோது, சாதாரணமாக, சிறிதளவு எடை கூடுவது என்பது சகஜந்தான். அது மிகவும் சிறிய அளவின் தான் எடை கூடும். ஆனால், மருந்து சாப்பிடுகிற சில பெண்களுக்கு, உடல் எடை குறைந்து போகிறதே, அது ஏனென்று யாரும் பேசுவதில்லை.

மருந்துகள் சாப்பிடுகிறபோது, உடலில் உள்ள நீர்மம் (Fluid) அதாவது நீர்த்தன்மை, சற்று தேகத்தில் தேங்கி விடுவதால், ஒரு 3 கிலோ அளவுக்கு (7 பவுண்டு) எடை கூடி விடுகிறது. என்று கணக்கெடுத்திருக்கின்றனர்.

ஆனால், நீர்மம் வெளியேறாமல் தங்கச் செய்கின்ற வேலையைச் செய்கிற மருந்து மாத்திரைகளை, சாப்பிடாமல் நிறுத்தி விடுகிறபோது, உடல் எடையும் குறைந்து போகிறது என்றும் மருத்துவ வல்லுநர்கள் கண்டறிந்திருக்கின்றார்கள்.

ஏதாவது ஒரு மருந்தினால் எடை கூடுவது போலத் தோன்றினாலும், அந்த மாத்திரையை நிறுத்தி விடுகிறபோது, தானாகவே, எடை குறைந்து விடுகிறது என்பதால், மருந்து மாத்திரைகளால் தான், உடல் எடை கூடி குண்டாகி விடுகிறது என்பதும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.

கர்ப்பமடைந்த பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள், கர்ப்பத்தால் தான் குண்டாகி விடுகிறோம் என்று கூறுகின்றார்களே அவர்கள் சொல்வது சரிதானா?

5. கர்ப்ப காலத்தில் உடல் எடை குண்டாவது ஏன்?

குழந்தை பெற்ற பெண்களில் பலர் தங்களின் தேக எடை கூடுவதற்கு தாங்கள் கர்ப்பமானதும், குழந்தை பெற்றதும் தான் முக்கிய காரணம் என்று அடித்துச் சொல்வார்கள். ஆரவாரத்துடன் பேசுவார்கள். அதில் ஒரளவு உண்மை இருக்கத்தான் இருக்கிறது.

கர்ப்பம் அடைவதற்கும் உடலில் ஏற்படுகின்ற சில மாற்றங்களுக்கும் உண்மையாகவே ஒற்றுமை இருக்கிறது. கர்ப்பத்தில் வளர்கின்ற குழந்தைக்காக அதன் மீது ஏற்படுகிற தனிக் கவனமும், ஆசையுடன் அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற அடக்க முடியாத ஆர்வமும் மேலெழுந்து அந்தத் தாயின் வாழ்க்கை முறையையே மாற்றி விடுகிறது என்பதும் உண்மைதான்.

சாதாரணமாக ஒரு பெண் கர்ப்பம் அடைந்தவுடன் அந்தப் பெண்ணின் எடை 22 பவுண்டு முதல் 28 பவுண்டு வரை அதாவது (9.5 கிலோ முதல் 12.5 கிலோ வரை) உயர்ந்து கூடி விடுகிறது என்பது ஆய்வாளர்களின் ஆய்வில் கிடைத்த அனுபவபூர்வமான கருத்தாகும்.

இவ்வாறு அதிக அளவு எடை கூடுவது என்பது அந்தத் தாயின் உடலிலே உள்ள கொழுப்புச் சத்தானது, மேலும் அதிகமாக சேர்ந்து கொண்டு, அவர்களை குண்டாக்கி விடுகிறது. இதற்கும் சாதாரணமாக, உடல் எடை கூடுவதற்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.

அந்தப் பெண்ணின் உணவு முறையும், உணவு உட்கொள்ளும் முறையும், உணவு ஜீரணிக்கப்படுகின்ற விதத்தால் உடலிலுள்ள செல்களின் பரிணாம வளர்ச்சி முறை ஓரளவு மாறிவிடுகின்றன. அந்தச் சூழ்நிலையால் தான் உடலுக்கு அப்படி ஓர் அமைப்பு ஏற்பட்டுவிடுகிறது.

ஒருசில பெண்கள் கர்ப்ப காலத்தில் கூடுகின்ற உடல் எடையானது. குழந்தை பெற்றெடுத்த பிறகும் கூட, குறையாமல் அப்படியே இருந்து விடுகிறது.

குறிப்பாக முதல் குழந்தை பெற்ற சில பெண்களுக்கும் இரண்டாவது குழந்தைக்கான கர்ப்பம் உடனே ஏற்பட்டு விடுகிறது. அந்த நேரத்தில் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், ஒரளவு அந்தப் பெண்ணின் உடல் எடையை குறைக்கவே முடியாது.

அவர்கள் சாதாரணமாக உண்பதை விட மிக அதிகமாக உட்கொள்வதும், அதனால் இரத்த நாளங்கள் விரிந்து இரத்த ஓட்டம் பெருகுவதும் போன்ற செயல்கள் எல்லாமே, அந்தப் பெண்ணுக்கு அப்படி ஒரு உடல் அமைப்பை உருவாக்கி விடுகிறது.

அவர்கள் என்ன அப்படி அதிகமாக உண்கிறார்கள்? பொதுவாக, கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல உணவு உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தை திடமாகவும், தேக ஆரோக்கியத்துடனும் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறுவதை, அவர்கள் வேதவாக்காக எடுத்துக் கொண்டு உண்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள்.

சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமலும், சத்துள்ள உணவு சாப்பிடாமலும், கர்ப்பம் தரித்திருக்கிற பெண்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள், எடை குறைவாகவும், போதிய மூளை வளர்ச்சி இல்லாமலும், மூளை ஆற்றல் குறைந்தவர்களாகவும் பிறக்கின்றன என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் வயிற்றிலே வளருகின்ற குழந்தையானது ஒரு அட்டையைப் போல் தாயின் உடலிலிருந்து எல்லா சக்திகளையும் உறிஞ்சிக் கொண்டு வாழ்கிறது. வளர்கிறது எனவும் கூறுகின்றார்கள். அதனால் எல்லா மருத்துவர்களும் சமவிகித உணவுதான் கர்ப்ப காலத்திற்கு ஏற்ற உணவு என்று சாப்பிட வைக்கின்றார்கள். ஆகவே எடை கூடுகிறது என்பது இயற்கையான தானே!

6. புகைப்பதை விட்டு விட்டால் எடை கூடுமா?

உண்மைதான் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள். புகைப்பதை விட்டு விட்டால், உடல் எடை கூடி விடுகிறது. புகை பிடிக்கின்ற ஒருவர் தொடர்ந்து புகைத்துக் கொண்டிருக்கும் போது, அவர் உடல் எடை கூடாமல் ஒரே சீராக இருப்பதும், அவர் புகை பிடிப்பதை விட்டு விடுகிறபோது எடை கூடிவிடுகிறது என்பதும் உண்மையென்று ஆராய்ச்சி அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டு கூறியுள்ளார்கள்.

புகைக்கின்ற பழக்கம், உடலிலுள்ள செல்களைப் பிரித்து வளர்க்கும் பரிணாம வளர்ச்சியை பாதிப்பதில்லை அல்லது பாதிக்கின்றது என்பதற்குத் தேவையான சான்றுகள் எதுவும் இல்லை.

ஆனால் புகைப்பதை நிறுத்திய பிறகு, அவர்களின் எடை எப்படி கூடுகிறது? அவர்கள் புகைப்பதை நிறுத்தி விடுகிறபோது அதிகமான உணவு உட்கொள்கிறார்கள் என்ற ஒரே ஒரு காரணம். புகை பிடிப்பதை விடுவதனாலேயே சாத்தியமாகிறது என பெருமிதமாகக் கூறுகிறார்கள் அனுபவப்பட்டவர்கள்.

காரணம் என்னவென்றால், புகைக்கும் போது சுருட்டு, பீடி அல்லது சிகரெட் என்பதாக அனைத்தும் வாயில் நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆக, வாயால் ஏதாவது சுவைத்துக் கொண்டோ அல்லது ஏதாவது ஒன்றை வைத்து புகைத்துக் கொண்டிருக்கும் பழக்கமானது நிறுத்தப்படுகிறபோது, ஏதாவது ஒன்றுக்குப் பதிலாக உணவானது அங்கே இடம் பிடித்துக் கொள்கிறது.

ஒருசிலர்உணவுக்குப் பதிலாக 'அசை போடும் பசை' மிட்டாய் என்று அழைக்கப்படும் "Sweing Gum" ஒன்றை போட்டுக் கொண்டு அசைபோட்டு மென்று கொண்டிருப்பார்கள். உடல் குண்டாய் இருப்பதை விட புகைப்பது என்பது உடலுக்கு மோசமான எதிரி என்பதை எல்லோருமே ஒத்துக் கொள்கிறார்கள்.

7. நடுத்தர வயதும், உடல் எடையும்

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், நடுத்தர வயது உள்ளவர்களாக இருக்கும்போது உடல் எடை கூடிப் போகிறது என்பது உண்மையாக இருந்தாலும், அதற்கான சரியான காரணங்கள் இன்னமும் யாராலும் அறியப்படவில்லை. அது உடல் சார்ந்த காரணமா? அல்லது உள்ளம் சார்ந்த காரணமா? அல்லது இளமையானது சோர்ந்து போகும் காரணமா என்பது பற்றி உடற்கூறு வல்லுனர்களால் இன்னமும் உணரப்பட முடியவில்லை.

காரணம் எதுவாக இந்தாலும், உடலுக்குத் தேவையான அளவுக்கு அதிகமாக சாப்பிடும் உணவானது அந்த நடுத்தர வயதிலேயே ஒரு இடத்தில் சேர்ந்து வந்து குவிந்து விடுகிறது. காரணம், அவருடைய உடல் உழைப்பானது இயல்பாகவே குறைந்து போய்விடுகிறது. அதே சமயத்தில் அவர்கள் உட்கொள்கிற உணவும், மதுபானம் குடிக்கும் அளவும் கூடிப் போய் விடுவதும் ஒரு காரணம். அதேசமயத்தில் அவருடைய வாழ்க்கையின் பழக்க வழக்க முறையும் மாறிப் போகிறது.

நடப்பதற்குச் சோம்பேறித்தனம். கீழே குனிந்து ஒரு பொருளை எடுக்க கௌரவம் காட்டுகிற அவரது மனோலயம். உடல் உழைப்பைப் பற்றி நமக்கு ஏன் இந்த உடல் உழைப்பு? நம் வசதிக்கேற்ப வேலையாளை வைத்து வேலை வாங்கிக் கொள்வோம் என்கிற ஒரு பணக்காரத்தனம். சோம்பேறிக் குணம் எல்லாம் அவர்கள் உடலிலே போய் ஊறிக் கொள்வதுதான் முக்கிய காரணம்.

8. உடல் எடை

உடல் எடையைக் குறைப்பதற்கு இரண்டே இரண்டு வழிகள் தான் உண்டு. ஒன்று உடலுக்குப் பயிற்சி செய்வது. இரண்டாவது உணவு உட்கொள்ளும் அளவைக் குறைக்க முயற்சிப்பது.

ஒவ்வொரு குண்டான மனிதர் (ஆண்/பெண்) இருபாலருக்கும் ஒரே ஒரு பேராசையின் மீது குறையாத நம்பிக்கை என்றும் உண்டு. அதாவது சாப்பிடுகிற சாப்பாட்டின் அளவைக் குறைக்காமல் உடலின் எடையைக் குறைத்து விட யாராவது ஒருவர் இந்த உலகத்திலே ஒரு சிறப்பான வழியைக் கண்டு பிடிக்க மாட்டார்களா என்பதுதான் அந்த ஏக்கம். துரதிஷ்டவசமாக இந்த குறுக்கு வழி முறையை இன்னும் யாரும் கண்டு பிடிக்கவில்லை. ஏனென்றால் உடம்பு என்பது உழைக்கப் பிறந்தது. உறங்க மட்டும் பிறந்ததல்ல.

உண்மையாக, எடையைக் குறைப்பது என்றால், உடலில் நிறைந்துள்ள, ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து குவிந்துள்ள கொழுப்புப் பகுதியை உடைப்பது. குறைப்பது என்பதுதான்.

அதற்கு உடல் இயக்கத்தில் ஒரு மாற்றம் செய்ய வேண்டும். தன் உள்ளேயே நிரம்பி இருக்கின்ற உணவின் அளவையும், உருமாற்றம் செய்கின்ற உழைப்பையும் இந்த இரண்டையும் ஒன்றிணைத்தால்தான் அங்கே எண்ணியது கைகூடும்.

ஆளை வைத்துக் கொண்டு உடலில் மசாஜ் செய்வது போல் பிடித்து விடுவதும், அதனை முறையில்லாத வகையில் முயற்சி செய்வது போன்ற எல்லா செயல்களுமே தவறானவை.

அவைகள் எல்லாம் எந்தவிதமான பயனையும் கொடுக்க இயலாத காரியங்களாகி விடுகின்றன.

உடலிலே நீர் அளவு அதிகமாகி இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு, தண்ணீரையே குடிக்காமல் இருப்பது! இப்படி குறைந்த நீர் அளவால் வியர்வையை ஏற்படுத்தி எடையை குறைத்து விட்டாலே போதும் என்று சிலர் முயற்சி செய்வதும் உண்டு. இதை சோனாபாத் என்பார்கள். வியர்வையை வெளியேற்றி உடல் எடையைக் குறைக்கும் முயற்சி.

9. துருக்கிய குளியல் முறை
(Turkish Bath)

அதாவது துருக்கியர்கள் வியர்வை வருவதற்கு என்று ஒரு விநோதமான குளியல் முறையை ஏற்படுத்தினார்கள். வியர்வையை உண்டாக்குகின்ற முறையில் நீரை வெளியேற்றுகிற போது அது பயன் அளிப்பதாக இருந்தாலும் அதனால் ஏற்படுகின்ற நீர் இழப்பு என்பது தற்காலிகமானதுதான்.

ஆகவே, ஏற்படுவதாகத் தோன்றிய உடல் எடை குறைவானது, அவர்கள் உண்ணும்போதும், கிடக்கும் போதும் முன் இருந்த உடலின் எடையை மீண்டும் கொண்டு வந்து விடுகிறது. ஒருசிலர் உடல் குண்டாகத் தோன்றிய போதும் சற்று சீராகத் தோற்றம் அளிப்பது போல் தெரிய சில முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

தங்கள் எடை குறையாமலேயே தொங்கிக் கொண்டிருக்கின்ற சதையைக் கொஞ்சம் இறுக்கமாக்கி விடுவது. அதற்காக அதிக விலையுள்ள தசைகளை கிளர்ச்சி ஊட்டி முறுக்கு ஏற்றுகிற மின்சார சாதனங்களைக் கவலைப் படாமல் வாங்கிப் பயன்படுத்துகின்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அது போன்ற பயிற்சி முறையை அதிக நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால்தான் எதிர்பார்க்கின்ற பயன்களைப் பெற முடியும்.

தேவையான இடத்தில் தேவையற்ற சதையைக் குறைக்க வேண்டுமென்றால் உடற்பயிற்சி செய்வதன் மூலமே நன்மை பெற முடியும் என்ற உண்மையை நாம் மறக்கவே கூடாது. அதுதான் உண்மையான வழி.