குண்டான உடம்பை குறைப்பது எப்படி/உணவு உண்ணும் ஒழுங்கு முறை
ஒழுங்கு முறை
உணவுதான் உடலுக்கு அமைப்பையும், பலத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கிறது. உடலுக்கு உயிர் மூச்சாகக் காற்று விளங்குவதுபோல, உடலுக்கு நலவீச்சாக உணவு அமைந்திருக்கிறது.
நாம் உணவைச் சாப்பாடு என்கிறோம். சாதம் என்கிறோம். உணவு என்கிறோம். உண்ணும் பண்டம் என்கிறோம்.
சாப்பாடு என்றால் மரண அடி என்று அர்த்தம். ஒருவர் சாப்பிடுகிறார் என்றால் மரணத்துக்கு அவர் வேகமாக நடைபோடுகிறார் என்று அர்த்தம். 'சா' என்றால் சாவு என்றும் , 'பாடு' என்றால் அவஸ்தையென்றும் அர்த்தம். இந்தச் சாப்பாடு என்ற சொல்லே, சாப்பிடுவதற்கு எச்சரிக்கை விடுக்கின்ற சொல்லாக அமைந்திருக்கிறது. எதைச் சாப்பிட்டாலும், அளவோடு சாப்பிடுங்கள், அளவோடு சாப்பிடுங்கள் என்று எச்சரிக்கை ஆலையமணியடிக்கிறது.
கஷ்டப்படுவதற்குச் சாப்பிட யாராவது இஷ்டப்படுவார்களா? இனிமேல் கொஞ்சம் கூடுதலாக எடையுள்ளவர்கள் சாப்பாடு என்ற சொல்லை எச்சரிக்கையாக உச்சரிக்க வேண்டும்.
சாப்பாட்டைச் 'சாதம்' என்று சொல்லலாமா என்றால் அது கொஞ்சம் பரவாயில்லை. இந்த 'சா' என்ற சொல்லும் தர்ம சங்கடமான அர்த்தத்தைத்தான் கொடுக்கிறது. 'சா' என்றால் சாவுயென்றும் 'தம்' என்றால் கொடை, பங்கிடுதல் என்றும் பொருள் இருக்கிறது. ஆத்திரத்தோடும், அவசரத்தோடும் சாப்பிடுகிற சாதமானது, சாப்பிடுபவரை சாவுக்குக் கொடையாகக் கொடுக்கிறது. சாவுச் சஞ்சலத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் சஞ்சலத்தைக் கொடுக்கிறது.
ஆகவே சாதம் சாப்பிடலாம் என்று சொல்லுகிற போது நாம் மிகவும் ஜாக்கிறதையாக எடுத்துக் கொள்ள வேண்டும். சாப்பாடும், சாதமும், சஞ்சலத்தை கொஞ்சியழைக்கும் சாகசப் படைப்புகளாகும். ஆக, எப்படித்தான் உண்ணுகிற பண்டத்தைச் சொல்வது என்கிற ஒரு கேள்வி எழுகிறது.
உணவு என்பது, உண்+அவ்=என்று பிரிகிறது. உண் என்றால் ரசித்து, அவ் என்றால் விரும்பி, அதாவது உட்கொள்கிற உணவை முதலில் ரசிக்கவேண்டும். அடுத்து விரும்ப வேண்டும். பிறகு உட்கொள்ள வேண்டும். இப்படி செய்கிறபோது. மனதால் விரும்புவதும், உடலிலுள்ள ஐம்புலன்களால் ரசிப்பதும் ஆகியவை நடக்கிறபொழுது மனமும், உடலும் நாம் உண்பதை மனமாற ஏற்றுக் கொள்கிறது.
உட்கொள்கின்ற உணவு வயிற்றுக்குள்ளே வருகிறபோது அதை வாஞ்சையுடன் வரவேற்கவும், வந்ததை நிறைவாகச் செரிமானம் செய்வதற்கும், வயிற்றிலுள்ள ஜீரண அமிலங்கள் தயாராகிவிடுகின்றன. அதனால்தான் உணவை உட்கொள்ளுமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
உணவை எங்கிருந்து எப்படிப் பெறுவது?
1. வீட்டிற்குள்ளே உண்ணும் பண்டத்தைப் பெற்றாலும், அல்லது வெளிப்பகுதிகள், கடைகள், ஹோட்டல்கள் போன்றவைகளில் வாங்கினாலும், உணவை வாங்குகிறயிடம் சுத்தமான பகுதியா, சுகாதாரப் பிரதேசமா என்று கவனித்துக் கண்காணித்து உங்களுக்கு அது தூய்மையான இடந்தான் என்று துணிவுடன் முடிவு செய்த பிறகே வாங்க வேண்டும்.
2. நீங்கள் உணவை வாங்குகிற பாத்திரம் நன்றாக அலம்பிச் சுத்தமாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். நீங்கள் வாங்கிப் பயன்படுத்திவிட்டு, மீதமுள்ள உணவுப் பண்டத்தைக் குளிர்பதனப் பெட்டியில் வைக்க விரும்புகிறபோது, அதுவும் சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் வந்தால், உடனே சுத்தப்படுத்தித்தான் பயன்படுத்த வேண்டும்.
3. எப்பொழுதும் வீட்டு நபர்கள் உண்ணும் உணவை ஒரு புறம் பத்திரமாக வைக்க வேண்டும். நீங்கள் வளர்க்கின்ற செல்லப்பிராணிகளுக்குச் சமைத்திருக்கிற உணவை இதன் அருகில் வைக்கவோ, கலந்துவிடுதலோ நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செல்லப் பிராணிகளுக்குத் தனிப் பாத்திரமும், தனியிடமும் இருந்தால் சிக்கல்கள் நேராமல் தவிர்க்கலாம்.
4. நீங்கள் உணவைத் தயாரிக்க முயற்சிக்கிற சமயத்தில் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்யவேண்டும். வீட்டு அறைகளைக் கூட்டினாலும் சரி, கழிவறைகளைச் சுத்தப்படுத்தினாலும் சரி, அல்லது வேறுயெந்த வெளிவேலையைச் செய்திருந்தாலும் சரி, கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்வது மிக முக்கியம். உங்கள் குழந்தைகளும் உங்களைப் பின்பற்றிச் செய்கிறார்களா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
கைகளில் காயங்கள், சிராய்ப்புகள் இருந்தாலும், அவற்றைத் திறந்தாற் போல் வைத்துக் கொண்டு சமைக்கும் வேலைகளைச் செய்யக்கூடாது. அவைகளில் கட்டோ, பேண்டேஜோ போட்டுக் கொள்ளலாம். எப்பொழுதும் உணவை, சூடாக இருப்பதுபோல் வைத்து உண்ணுவதுதான் சிறந்த பழக்கம். ஆறிப் போனால் கூடச் சூடுபடுத்துவதற்குச் சோம்பல் படக்கூடாது. அதுபோல வெளியில் இருந்து வாங்கிவருகிற ஆறிய பண்டங்களைக் கூடக் சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லது.
உணவு உட்கொள்வதற்கு முன் இப்படியாகச் சுத்தமான முறையில் உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். இனி எவ்வாறு, சுகாதாரமாகச் சாப்பிடுவது என்பதை தொடர்ந்து காண்போம்.
சுகாதாரமாக உண்ணும் முறைகள்
கூடிய எடை மிகுதியால் உடல் குண்டாக இருப்பவர்கள், மிகவும் கவனத்தோடும், எச்சரிக்கையோடும். உணவை உட்கொள்வதற்கு விரும்ப வேண்டும். உண்ணும் உணவில் அதிகமாக கிறீம். வெண்ணை, கிறீம் பிஸ் கட், ஐஸ்கிறீம் - போன்ற கவர்ச்சிப் பண்டங்களைக் கைகளால் ஒதுக்கித் தள்ளுவதைவிடக் கண்களால் விலக்கித் தள்ளுவது உங்கள் குண்டுடலைக் குறைக்க உதவும். அதிகமான கொழுப்புச் சத்துள்ள பொருள்களை, அதாவது சுண்டக் காய்ச்சிய பால், முதலியவற்றைத் தவிர்த்து விடவேண்டும்.
அதிகக் கொழுப்புச் சத்துக் கொண்ட முட்டை ஒரு நாளைக்கு ஒன்று என்பதை நிறுத்தி விட்டு, ஒரு வாரத்திற்கு மூன்று என்று வரைமுறைப் படுத்திக் கொள்வது நல்லது.
வெளியில் விற்கின்ற எண்ணையால் செய்த வடை, பஜ்ஜி, போண்டா போன்ற பதார்த்தங்கள், கேக், பண் வகையறாக்கள் இவைகள் எல்லாம் அதிகக் கொழுப்புச் சத்து உடையவையாகும். இவற்றில் ஏற்படுகின்ற ஆசைகளை எல்லாம் கட்டாயமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்பவர்கள், உணவுப் பண்டங்களில் உப்பைத் தாராளமாக அள்ளித் தெளித்திருப்பார்கள். உப்புச் சத்தெல்லாம் உடலுக்கு ஓரளவுதான் தேவையென்பதால், உப்புக் கைப்பதுபோல் இருக்கும் பண்டங்களை உண்ணாமல் இருப்பது உடலுக்கு நல்லது.
வாயிலுள்ள பற்கள்தான் வயிற்றை காப்பாற்றுகிறது. உடம்பு முழுவதையும், உபத்திரவமில்லாமல் காப்பாற்றுகிறது. உங்கள் பற்களை அதிகமாக நாசம் செய்வது இனிப்பு வகையறாக்கள். நீங்கள் இனிப்பின் நினைப்பையே குறைத்துக் கொள்வது மிகமிக நல்லது.
நீங்கள் மாமிச உணவுப் பிரியரென்றால், அடிக்கடி மாமிச உணவு உட்கொள்வதை நிறுத்த வேண்டும். வாரத்திற்கு ஒருநாள் அல்லது இரண்டு நாள், ஒருவேளை மட்டும் உண்பது, உங்கள் வயிற்றுக்கும், உடலுக்கும் நல்லது. அதிக சுவையாக இருக்கின்ற வறுத்த மாமிசத்தை சாப்பிடுவதைவிட அதனை வேகவைத்து உண்பது விவேகமான காரியமாகும்.
அதிகமாகக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிகப் புரோட்டீன் சத்து இல்லாத காய்கறிகளை உண்பது நல்லது.
உணவுக்குப்பின் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது உடம்பை நலமாகக் காக்கும்.
உணவும் ஒவ்வாமையும் (Alleagiess)
உணவு ஒவ்வாமை என்பது ஏதோ ஒரு வேண்டாத உணவுப் பொருளை விரும்பிச் சாப்பிட்டதால் ஏற்படுகிற ஒன்று, நீங்கள் எதைச் சாப்பிட்டாலும், உங்கள் உடம்பிலுள்ள தற்காப்புப் படை, மிகச் சௌகர்யமாக ஜீரணம் செய்து காப்பாற்றுகிறது. அந்தக் காப்பாற்றலையும் மீறி ஏற்படுகிற கஷ்டம்தான் ஒவ்வாமையாகும். நீங்கள் சாப்பிடுகிற உணவில் தேவையான புரோட்டீன் சத்து இல்லையென்றால் இப்படி ஒவ்வாமை ஏற்பட்டுவிடுகிறது.
ஒவ்வாமையில் இரண்டு வகையுண்டு.
(1) மென்மையாகத் தாக்கும் ஒவ்வாமை
(2) கடுமையாகத் தாக்கும் ஒவ்வாமை
1. மென்மையாகத்தாக்கும் ஒவ்வாமை
மென்மையாகத் தாக்கும் ஒவ்வாமையென்பது தோல் பகுதியைத் தாக்கும். சில ஒவ்வாமை சுவாசப் பகுதியைத் தாக்கும். சில ஒவ்வாமைகள் பிறப்பிலிருந்தே தொடரும். நீங்கள் குழந்தையாக இருந்த பொழுது இந்த ஒவ்வாமை வியாதியால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். அது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் பெற்றோருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும். குழந்தையாக இருக்கும் போது போதிய சத்துக்கள் இல்லாமல் ஒவ்வாமை ஏற்படுவது உண்டு.
அநேகம் பேர்கள் உண்ணும் உணவால்தான் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதை அவர்கள் அறியாமலே வாழ்கிறார்கள். ஒரு சில உணவுவகைகளை அவர்கள் வெறுத்து ஒதுக்கும்போது, அதன் காரணமாக ஒவ்வாமைநோய் ஏற்படுவதில்லையென்று அவர்கள் அறியாமலேதான் வாழ்கிறார்கள்.
2. கடுமையான ஒவ்வாமை
கடுமையான ஒவ்வாமை என்பது தோல் பகுதியில் ஏற்படுகின்ற 'எக்ஸிமா' என்கின்ற படைநோய். இதமாகக் காற்றை இழுத்துவிடும் சுவாசத்தில் தசையை உண்டாக்கித் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் ஆஸ்மா எனப்படுகிற, சுவாச இழுப்புநோய். கடுமையான ஒவ்வாமை ஏற்படுத்துகிற மூன்றாவது பாதிப்பு 'ஒற்றைத் தலைவலி.'
ஒற்றைத் தலைவலி வந்துவிட்டால் பாதிக்கப்பட்டவர் பார்வைக்கே பங்கம் வந்து, பலப்பல கோளாறுகளையும், குழறுபடிகளையும் கூட்டிக் கொண்டு வந்து விடுகின்றன. பளிச்சென்று போடுகிற விளக்கைப் பார்த்தால், படுசத்தமான ஒலியைக் கேட்டால், அவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் பல சமயங்களில் உண்ணுகிற உணவினால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒவ்வாமையும் அதன் விளைவுகளும்
ஒவ்வாமையானது உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, அதன் சில்மிஷ வேலையைக் காட்டத் தொடங்கி விடுகிறது. தொண்டையில் ஏதோ அருவுவது போல ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தி வாந்தியெடுக்க வைத்துவிடுகிறது. இதனால் வாயும் தொண்டையும் கடுமையாகப் பாதிக்கப்படு வதுடன், வயிற்றில் ஒருவித எரிச்சலும் ஏற்பட, சுவாசம் தடைப்படுவது போன்ற உணர்வும் உண்டாகிறது. கண்ணீரும், சளியும் சேர்ந்து கொள்வதால், இதயத் துடிப்பு அதிகமாகி விடுகிறது. சில ஒவ்வாமை உணவைச் சாப்பிட்டு சிலமணிநேரம் கழித்து ஏற்படுகிறது. அதனால் வாந்தியும், பேதியும் ஏற்படுகிறது. சில சமயங்களில் கடுமையான தலைவலியும் உண்டாகிறது.
என்ஸிமாவும், ஆஸ்மாவும் உணவினால் மட்டும் உண்டாகி விடுவதில்லை. புழுதி, தூசி, மென்மயிர் மற்றும் தோல்வாசனை அல்லது சுவரைச் சுற்றியுள்ள விரும்பத்தகாத சூழ்நிலைகள் இவற்றாலும் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. எதனால் இது ஏற்படுகிறது என்பதை நன்றாக அறிந்து கொண்டபின்புதான் மருந்து தர வேண்டும்.முட்டை, பால், சோயாபீன்ஸ், காபி, டீ, சாக்லட், வாழைப்பழம், ஆரஞ்சு, போன்ற பொருள்கள் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியவைகளாகும். உங்கள் மருத்துவரை அணுகித் தேவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
உணவும் - வகைகளும்
உங்களுக்கு களைப்பில்லாமல் வேலை செய்ய, கட்டுடலோடு வளர, உழைத்துப் பழுதுபட்ட செல்களைச் சரிசெய்து வலிமைப்படுத்த உணவு அவசியம்.
உங்களுக்கு ஒருநாள் தேவை 2100 - லிருந்து 2800 கலோரிகள் வரை.
60.75 கிராம் புரோட்டின்
65.85 கிராம் கொழுப்புச்சத்து
310.385 வரை மாவுச்சத்து
1. புரோட்டீன்
உணவுவகையில் உடம்புக்கு ஆதாரமாக விளங்குகிற முக்கியமான சக்தி தருவது. உடலின் அடிப்படை ஆதாரமாக விளங்குகிற செல்கள், திசுக்கள். இவைகள் வளர்வதற்கு உதவுகின்றன. உழைப்பினால் பழுதுபட்ட உறுப்புக்களைச் செப்பனிட்டுச் செம்மையாக்குகின்றன. உழைப்பால் நைந்துபோன திசுக்கள், தசைகள் இவைகளை மாற்றி புதியனவற்றைப் பிறப்பிக்கவும் இது உதவுகிறது.
1. புரோட்டின் அதிகமுள்ள உணவுப் பொருள்கள்
மாமிசம், மீன், பருப்பு வகைகள், முட்டைகள் பாலாடைக் கட்டிகள், பால், பட்டானிவகைகள், பீன்ஸ் வகைகள். மற்றும் ரொட்டி, அரிசிபோன்ற தானிய வகைகள்.
2. காரர்போஹைட்ரேட் என்று அழைக்கப்படுகிற மாவுசத்து
நன்றாக உழைக்க, மனம் போல் வாழ, ஊழியத்திற்காக உழைக்க, அதிகமான சக்திகளைக் கொடுக்கும் சத்து நிறைந்த உணவு வகையிது.
ரொட்டிவகைகள் உருளைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகள், அரிசி போன்ற தானிய வகைகள், தானியங்களிலே செய்கிற பணியாரங்கள், சர்க்கரை போன்ற இனிப்பு வகைகள், இனிப்பு நிறைந்த பழவகைகள் இவற்றிலெல்லாம் மாவுச்சத்து அதிகமாக இருக்கிறது.
3. கொழுப்புச் சத்து
புரோட்டினும், கார்போஹைட்ரேட்டிலும் கொண்டிருக்கிற சக்தியைப்போன்றே கொழுப்புச் சத்தும் கொண்டிருக்கிறது.
உடம்பை பலமாக உருவாக்க இந்தக் கொழுப்பு சத்து உதவுகிறது.
சமையல் எண்ணெய் வகையறாக்கள், வெண்ணெய், நெய், செயற்கை வெண்ணெய், பருப்பு வகைகள், பிஸ்கட்டுகள், பாலாடைக் கட்டிகள் எல்லாம் மிகுதியான கொழுப்புச்சத்தைக் கொண்ட உணவு வகைகள் ஆகும்.
உணவு எப்படிச் சாப்பிட வேண்டுமென்று, மனித இனத்தின்பால் பேரன்பு கொண்ட விஞ்ஞானிகள் உணவு எப்படி அமைய வேண்டுமென்று கண்டுபிடித்து நமக்காகக் கூறியிருக்கிறார்கள்.
நாம் உண்ணுகிற உணவிலே,
12 % புரோட்டீன்
58 % மாவுச்சத்து
30% கொழுப்புச்சத்து
இதை நீங்கள் எப்படிக் கடைப்பிடிக்கப் போகிறீர்கள்?
நாம் அன்றாடம் உண்ணும் உணவிலே உள்ள உணவுப் பொருள்களில், புரோட்டின், மாவுச்சத்து, புளிப்புச்சத்து எந்த அளவிற்கு இருக்கிறதென்று ஒரு பட்டியலைக் கீழே தந்திருக்கிறோம்.
உணவுப் பொருட்கள் | புரோட்டீன் கிராம் |
மாவுச்சத்து கிராம் |
கொழுப்புச்சத்து கிராம் | |
1. | ஆப்பிள் | - | 12 | - |
2. | பீன்ஸ் | 6 | 17 | 1 |
3. | மாட்டுக்கறி வருவல் | 18 | 6 | 16 |
4. | இனிப்பு | 5 | 66 | 30 |
5. | ரொட்டி | 8 | 53 | 82 |
6. | வெண்ணெய் | - | - | - |
7. | காரட் அவியல் | 1 | 4 | - |
8. | பாலாடைக் கட்டி | 25 | 10 | 35 |
9. | சிப்ஸ் | 4 | 38 | 9 |
10. | சாக்லட் | 9 | 54 | 37 |
11. | அவித்த மாட்டுக்கறி | 27 | - | 12 |
12. | அவித்த முட்டை | 12 | - | 11 |
13. | ஆட்டுக்கறி | 29 | - | 13 |
14. | பால் | 3 | 4 | 3 |
15. | ஆரஞ்சு | 1 | 8 | - |
16. | வேர்க்கடலை | 28 | 8 | 49 |
17. | பட்டானி | 5 | 7 | - |
18. | உருளைக் கிழங்கு | 2 | 19 | - |
19. | அரிசி உணவு | 2 | 30 | - |
கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருள்:
தேங்காய் எண்ணெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி, ஆட்டுக்கறி மற்றும் கொழுப்பு, மாட்டுக்கறி மற்றும் கொழுப்பு, கோழிக்கறி அதன் தோல்பகுதி, முட்டைகள், வேர்க்கடலை, ஆலிவ் எண்ணெய், சோயா எண்ணெய் போன்றவைகள் கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருள்களாகும்.
உங்களுக்குக் கொழுப்புச்சத்து ஒரு நாளைக்கு 65 முதல் 85 கிராம் வரைதான் இருக்கவேண்டும். கீழே கொடுத்திருக்கும் பட்டியலில், நீங்கள் உண்ணுகிற உணவில் எத்தனைகிராம் கொழுப்பு இருக்கிறது என்று குறித்து இருக்கிறோம். நீங்கள் தேர்ந்து எடுக்கிற உணவில் கொழுப்புச் சத்து 85 கிறாமிற்கு மேல் போகாமல், பொறுப்போடும், கவனத்தோடும், எச்சரிக்கையோடும் உண்ண வேண்டும்.
உணவுப் பொருள்கள் | கொழுப்பு கிராம் | |
1. | உருளைக்கிழங்கு அவித்ததும் வறுத்ததும் | 0.1 |
2. | கோழியிறைச்சி | 4 |
3. | மீன் வகைகள் | 6 |
4. | வெண்ணெய் அல்லது செயற்கை எண்ணெய் | 8 |
5. | சப்பாத்தி | 10 |
6. | பாதாம்பால் | 10 |
7. | ஐஸ்கிறீம் | 13 |
8. | சாக்லட் சிறிய அளவு | 15 |
9. | வறுவல் வகைகள் | 17 |
10. | பன்றியிறைச்சி | 20 |
11. | கருவாடு, உப்புக்கண்டம் | 20 |
12. | வறுத்த பன்றிக்கறி | 25 |
13. | சமோசா | 26 |
உடம்பை நன்றாக வைத்துக் கொள்ள உயிர்ச்சத்தான வைட்டமின்கள் தேவை. விட்டமின்கள் பலவகைப்படும். விட்டமின் பற்றிய விளக்கத்தையும், அது எப்படி உடலைக் காக்க உதவுகிறது என்பதையும், எந்தெந்த உணவு வகையில் அது கிடைக்குமென்பதையும் கீழே கொடுத்திருக்கிறோம்.
1. A. விட்டமின்:
உடலுக்கு அழகையும், மெருகையும், கவர்ச்சியையும் தந்து காப்புறையாக விளங்குகின்ற தோலின் வளர்ச்சிக்கும், கண்களின் தெளிவான தேர்ச்சிமிகு பார்வைக்கும் உதவுகிறது.
ஈரல், வெண்ணெய், பால், முட்டையின் மஞ்சள்கரு, மீன், எண்ணெய் வகைகள், செயற்கை வெண்ணெய் இவற்றில் A - வைட்டமின் மிகுதியாகக் கிடைக்கிறது.
B1 விட்டமின்:
நீங்கள் உண்ணுகிற உணவை உடலுக்குள் சக்தியாக மாற்றுகிற சாமர்த்தியம் நிறைந்தது. உடலின் அடிப்படை ஆதாரமான செல்கள் உயிர்காற்றை அதிகமாக உறிஞ்சி ஜீவிக்கும் சக்தியைத் தருகிறது. காடிச்சத்து, தானிய வகைகள், சிற்றுண்டி பணியாரம், ஈரல், பன்றிக்கறி, பால், பாலாடைக்கட்டி, பச்சைக் காய்கறிகள் இவற்றில் இந்த B1 விட்டமின் நிறையக்கிடைக்கிறது.
ஒ6 விட்டமின்:
சுகாதாரமான பற்களுக்கும் , நல்லவளமான ஈறுக்கும், உடம்பிலுள்ள சிவப்பு இரத்த அணுக்களுக்கும் இந்த விட்டமின் தேவைப்படுகிறது. அதிகமான பச்சைக் காய்கறிகள், காடிச்சத்து, மீன்கள் மற்றும் மாமிசங்களில் இது கிடைக்கிறது.
В12 விட்டமின்:
சிவப்பு இரத்த அணுக்கள் நன்கு வளர்ச்சி பெற்று நிறை உழைப்பதற்கு இந்த விட்டமின் முக்கிய காரணமாக அமைகிறது. மிருகங்களில் இருந்து கிடைக்கின்ற எல்லா உணவுப் பொருள்களிலும் இந்த விட்டமின் அதிகமாகக் கிடைக்கிறது.
C- விட்டமின்:
உடம்பிலுள்ள எலும்புகள், பற்கள், தசைகள், அதை மூடியுள்ள தோல் பகுதிகள் எல்லாவற்றையும் தரமாகவும், திறமாகவும் வைத்துக்காக்க உதவுகிறது. உடலுக்குள் நுழைகிற நுண்கிருமிகளை எதிர்த்துப் போராடி தடுத்து நிறுத்துகிற பாதுகாப்புப் பணியையும் இந்த C விட்டமின் செய்து வருகிறது. ஆரஞ்சுபோன்ற எல்லாப் பழ வகைகளிலும், பச்சை மிளகு பயறுகள், தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு வகைகளில் மிகுதியாகக் கிடைக்கிறது.
D-விட்டமின்:
நல்ல மென்மையான நலமும், வளமுள்ள பற்களை வளர்த்துக் கொள்ள இந்த விட்டமின் உதவுகிறது. உடம்பிலே இருக்கிற கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சக்திகளை உடலானது பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.வெண்ணெய், பால், முட்டைகள், மீன் வகைகள் வளமான செயற்கை வெண்ணெய் இவற்றில் D - விட்டமின் நிறையக் கிடைக்கிறது. சூரிய வெளிச்சமானது. மனித தேகத்தில் படும்போது, அந்த தோல்பகுதியே D-விட்டமின் சக்தியை உற்பத்தி செய்து கொள்கிறதென்பது விசேஷமான செய்தியாகும்.
E-விட்டமின்:
உடலிலுள்ள இரத்தம் தூய்மையாகவும், உடலிலுள்ள செல்கள் பலமுள்ளதாகவும் வளர்க்கிற பொறுப்பை E விட்டமின் ஏற்றிருக்கிறது.
தாவர எண்ணெய்கள், பருப்பு வகைகள், தானிய வகைகள், பலகாரங்கள் மற்றும் கீரை வகைகளில் விட்டமின் E மிகுதியாகக் கிடைக்கிறது.
K-விட்டமின்:
நல்ல தரமும், திறமும், நலமும், வளமுமிக்க இரத்தம் நமது உடலில் உலாவருவதற்கு இந்த K-விட்டமின் உதவி உற்சாகப் படுத்துகிறது.
பச்சைக் காய்கறிகள், சோயா பீன்ஸ், தக்காளி, தேன், இறால், முட்டையின் மஞ்சள்கரு, கோதுமை வகைகள் ஆகியவற்றில் மிகுதியாகக் கிடைக்கிறது.
மேலே கூறிய விட்டமின்களைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் தேவையைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். வேண்டிய அளவிற்கு உணவுப் பண்டங்களை உண்டு, உங்கள் உடம்பின் உதவாத சதைகளை ஒடுக்கிவிட்டு, மிடுக்காக வாழ்ந்து மேன்மை பெருங்கள்.தாகமும் தண்ணீரும்:
தேகத்திற்கு தண்ணீர் அளவு குறையும்போது அதனை சரிக்கட்டிக் கொள்ள நாம் தண்ணீர் குடிக்கிறோம். ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மீதி இரண்டு லிட்டர் தண்ணீருக்கு என்ன செய்வது? எங்கே போவது?
இறைவன் கொடுத்த இயற்கை உணவுகளிலேயே நீர்ச்சத்து நிறைய இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களோ இல்லையோ, இங்கே நாம் தந்திருக்கிற பட்டியலைப் பார்த்தால் உண்மைநிலை புரியும்.
உணவு | உள்ள நீர்ச்சத்து | |
1. | வெள்ளிரிக்காய் | 99% |
2. | காரட் | 90% |
3. | ஆரஞ்சு | 84% |
4. | முட்டைகள் | 75% |
5. | பாலாடைக்கட்டி | 75% |
6. | ரொட்டி | 39% |
உணவு வகைகளைப் பற்றி நாம் ஓரளவு தெரிந்து கொண்டு இருக்கிறோம். உணவைக் குறைப்பதால் மட்டும் உடல் எடையைக் குறைத்து விடமுடியாது. பட்டினி கிடப்பதைவிட பயன் தரும் பயிற்சிகளைச் செய்வதால். உடலுக்கு இரட்டிப்புச் சந்தோசம் கிடைப்பதோடு மனதிற்கும் இரட்டிப்புச் சந்தோசம் கிடைக்கிறது.