நூலக ஆட்சி/நூல் வாங்குதல்

விக்கிமூலம் இலிருந்து

3. நூல் வாங்குதல்


பெரும்பான்மையான நூலகங்கள் நூல்களையும் பருவ வெளியீடுகளையும் வாங்குங்கால் தங்களுக்கென ஒரு வழியினை வகுத்துக் கொள்கின்றன. ஆனால் நூல் வாங்கும் முறை (Book Order) எவ்வளவு தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றதோ அதைப் பொறுத்துத் தான் கணக்குகளைச் சிக்கல் ஏதுமின்றி எழுத முடியும். அதனைச் சரிபார்க்க வருகின்றவர்களும் சலிப்புத் தட்டாமல் பார்க்க இயலும். மேலும் அவர்களால் குறையொன்றும் சொல்லவும் இயலாது.

சிறு நூலகங்களுக்கும் பள்ளி நூலகங்களுக்கும் நூல் வாங்க வேண்டியது ஏற்பட்டால் அந்நூலக அலுவலர் முதலில் வாங்கவேண்டிய நூல்களுக்குப் பட்டியலொன்று தயாரிக்க வேண்டும். அப்பட்டியலில் ஆசிரியரின் முழுப் பெயர், நூலின் பெயர், விலை, பதிப்பு, பதிப்பகத்தார் இவைகளைப் பற்றிய முழு விவரங்களும் காணப்பட வேண்டும். நூலகப் பட்டியலைத் தயாரிக்குங்கால் இரண்டு படிகள் எழுதுதல் வேண்டும். ஒன்றினை நூல் விற்பனையாளருக்கு அனுப்புதல் வேண்டும். மற்றொன்றினை அலுவலகத்தில் வைத்துக்கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் விற்பனையாளரிடமிருந்து நூல்கள் வந்து சேர்ந்த பின்னர் அவைகளைச் சரிபார்த்தற்கு இது மிகவும் பயன்படும்.

பெரிய நூலகங்களுக்கு நூல்கள் வாங்குங்கால் நூலகத்தார் பின்வரும் முறையினைக் கடைப் பிடித்தல் நலம் பயப்பதாகும்.

1. ஒரு நூலினை வாங்குவது என்று முடிவு செய்த பின்னர் முன்னர்க் கூறியது போன்று அட்டையில் அந்நூட் பற்றிய பின்வரும் விவரங்களைக் குறித்து வைக்க வேண்டும்.

  1. நாலின் தலைப்பு.
  2. நூலாசிரியரின் பெயர்.
  3. விலை.
  4. பதிப்பு.
  5. பதிப்பகத்தார்.
  6. பக்கங்களின் எண்ணிக்கை.

2. மேற்கூறிய விவரங்களைக் குறித்த பின்னர் அவ்வட்டையினை இது போன்ற பிற அட்டைகள் அடங்கிய மரப்பெட்டியில் ஆசிரியரது பெயரின் அகர வரிசைப்படி அடுக்கி வைத்தல் வேண்டும்.

3. இறுதியில் விற்பனையாளர்களுக்கு நூல்களை அனுப்புமாறு ஆணை ( (Order) அனுப்புதல் வேண்டும். அவ்வாறு அனுப்பும் பொழுது ஒவ்வொரு நூலிற்கும் உள்ள அட்டையில், அந்த நூலை எந்த விற்பனையாளரை அனுப்பச் சொல்லியிருக்கின்றோமோ, அவரின் பெயரைக் குறித்தல் வேண்டும். பெயரினை மிகவும் சுருக்கியோ அல்லது குறியீடு வழங்கியோ எழுதலாம். உதாரணமாக “திண்டுக்கல் பப்ளிசிங் அவுசு” (Dindigul Publishing House) என்பதை தி. ப. அ. அல்லது டி. பி. எச். எனச் சுருக்கி வரையலாம். மேலும் ஆணை அனுப்பிய நாளினையும் இவ்வட்டையில் எழுதுவதால் தவறொன்றும் இல்லை

பின்னர் இவ்வட்டைகளை விற்பனையாளர் பெயரின் அகர வரிசைப்படி அடுக்கி வைக்கலாம்.

4. விற்பனையாளர்கள் தாங்கள் அனுப்ப வேண்டிய நூல்களின் பட்டியலை அடையப் பெறுவர். நூலகத்தார் ஒவ்வொரு பட்டியலுக்கும் தனித் தனியே எண் கொடுத்தல் வேண்டும். இது போன்றே விற்பனையாளர்களும் அந்த எண்ணை விலைச் சீட்டில் (Invoice) குறித்து அனுப்புதல் வேண்டும். இந்த எண்கள் நூலகத்திற்கு வரும் நூல்களைச் சரிபார்ப்பதற்கும் அந்நூலுக்குரிய அட்டையினை அதனது தொகுதியினின்று அகற்றுவதற்கும் பெரிதும் உதவுகின்றன.

5. நூல்கள் விற்பனையாளரிடமிருந்து வந்ததும், வந்த நாளினை நூலட்டையில் குறித்தல் வேண்டும். ஏனெனில் அதே நூலினைப் பெறுவதற்குத் திரும்பவும் ஆணை அனுப்புவதற்குரிய நிலை ஏற்படாது.

நூலகத்திற்குத் தேவையான நூல்களை வாங்க முற்படும்பொழுது யாரிடமிருந்து அவற்றைப் பெறுதல் நலம் என ஆராய்வது நலம். நூலை வெளியிடுவோரிடமிருந்து நேர்முகமாகவோ அன்றி பெருமளவில் நூல் விற்பனை செய்யும் நிலையான நூல் விற்பனையாளரிடமிருந்தோ நூல்களை வாங்கலாம். இந்தியாவில் மேனாடுகளைப்போல நூல் விற்பனையினை ஒரு பயனுள்ள வாணிபத் துறையாகக் கருதி இதுவரை எவரும் பெருமளவில் நூல் விற்பனை செய்யவில்லை. எனவே நம் நாட்டினர் இத்துறையில் தகுந்த அளவு முன்னேறும் வரை நூல் வெளியிடுவோரிடமிருந்தோ நூலாசிரியரிடமிருந்தோ நேரடியாக நூல்களைப் பெறுவது சாலச் சிறந்ததாகும். ஆயினும் நிலையான நூல் வியாளரிடமிருந்து நூல்களைப் பெறுவதிலும் நல்ல பயனுண்டு. இதைக் கருதியே ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பெருவாரியான நூல் நிலையங்கள் நிலையான நூல் விற்பனையாளரிடமிருந்தே நூல்களைப் பெறுகின்றன.

நிலையான விற்பனையாளர்களை ஏற்படுத்தும் பொழுது சில கட்டு திட்டங்களை ஏற்படுத்துவது இன்றியமையாத தாகும். கீழ்க்காணும் பொறுப்புக்கள் அவ்விற்பனையாளர்களைச் சார்ந்ததாயிருக்க வேண்டும். ஒவ்வொரு நூலையும் அனுப்புவதற்கு முன்பு அந்நூல் செம்மையான நிலையில் இருக்கின்றதா எனச் சரிபார்த்தல் வேண்டும். பழுதுண்ட நாம் அனுப்பப்பட்டிருப்பின் அதனை அவர்கள் திருப்பிப் பெற்றுக் கொண்டு அதற்குப் பதிலாக ஓர் நூலை அவர்கள் செலவிலேயே அனுப்புதல் வேண்டும். தவிர்க்க முடியாத நிலையைத் தவிர மற்றெல்லாக் காலங்களிலும் அண்மையில் பதிப்பிக்கப்பட்ட நூலினையே அனுப்புதல் வேண்டும். குறிப்பிட்ட ஒரு நூலின் புதிய பதிப்பு முன்பே நூலகத்தில் இருக்கிறது என்று ஏதாவது ஒரு குறிப்பு காணப்படுமாயின் விற்பனைப் பண்ணையில் இருக்கும் அப்புதிய பதிப்பு நூலகத்தில் இருக்கும் பதிப்பினின்றும் வேறுபட்டதா என்று தெரிந்து கொள்ளுதல் வேண்டும். ஒரே நூல் வேறொருதலைப்பில் மறுதடவையாக வெளியிடப்பட்டால் உடனே நூலகத்திற்கு அறிவித்து ஆணையைப் பெற்ற பின்னரே நூலினை அனுப்புதல் வேண்டும்.

பருவ வெளியீடுகளிலிருந்தோ ஒரு நூலிலிருந்தோ அரைகுறையாய் அச்சடிக்கப்பட்டு வந்தால், இதுகுறித்து நூலகத்தாருக்கு எழுதி அவர்கள் விரும்பினால் அதனை அனுப்பலாம். நூலின் தலைப்பிலாவது, நூலாசிரியர் பெயரிலாவது மாற்றம் இருந்தால் இதுபற்றி நூலகத்தாருக்கு உடனே அறிவித்தல் வேண்டும். இது போன்றே அன்னிய வெளியீடு பற்றியும் நூலகத்தாரிடம் கலந்து, பின்னர் இது குறித்து ஆணை வருமாயின் நூலினை அனுப்புதல் வேண்டும். ஏதாவதொரு நூலின் பெயர் ஒரு தடவைக்கு மேற் காணப்படுமானால் முதலில் ஒரு படியினை அனுப்பிவிட்டு அதன் பின்னர் இச்செய்தியினை நூலகத்தாருக்கு அறிவித்தல் பொருத்தமுடைத்தாம். அவர்கள் ஒப்பினால் உடன் மற்றப் படிகளையும் அனுப்பலாம்.

சில நூல்கள் மேலும் பதிப்பிக்கப்படாமையினால் கிடைப்பதற்கு அரிதாக இருக்கலாம். எனினும் இத்தகைய நூல்களைப் பழைய நூல் விற்பனையாளரிடமிருந்து பெறலாம். அவ்வாறு ஏற்படுமாயின் முதலில் பழைய நூல் விற்பனையாளர் பலரிடமிருந்து விலைப்பட்டியல் பெற்றுப் பின்னர் நல்லநிலையிலுள்ள நூல்களைப் பெறுதல் வேண்டும்.

பருவ வெளியீடுகள், தொடர்கள் :-

பருவ வெளியீடுகள் என்றால் என்ன? தொடர்கள் (Serials) என்றால் என்ன? இரண்டும் ஒன்றே. குறிப்பிட்ட சிலகாலங் கழித்துக் கழித்து வரும் பகுதிகளும், தொகுதிகளும் பருவ வெளியீடுகள் (Periodicals), தொடர்கள் எனப்படும். இவைகள், தற்காலம் சற்று முந்திய காலம் என்பவை பற்றிய கருத்துக்களை அறிய மிகவும் உதவியாக இருக்கும். அறிவுலகத்திலுள்ள எந்தத் துறையிலும் இம்மாதிரியான வெளியீடுகள் இல்லாமல் இல்லை. தற்கால உலகினைப்பற்றிய அறிவு, தற்கால உலக முன்னேற்றம், கண்டுபிடித்த பேருண்மைகள் என்பனவைகளைப் படிப்போர் பருகுமாறு செய்வதில் நூலகத் தலைவர்கள், வெளியீடுகளைப் பொறுக்குவதிலும், அவற்றைத் தொகுத்துக் காத்து அளிப்பதிலும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். உலகில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை அன்றாடம் தாங்கி வருவன நாளிதழ்களாகும்.

பருவ வெளியீடுகள் யாவும் ஒழுங்காக வரப்பெற்று நல்ல முறையிலே தொகுக்கப்பட வேண்டுமானால் என் செயல் வேண்டும்? ஒவ்வொரு வெளியீட்டுக்கும் ஒவ்வொரு குறிப்பு (record) இருத்தல் வேண்டும். அதிலே கீழ்வரும் விவரங்கள் காணப்படல் வேண்டும்.

1. பணம் செலுத்தியதற்கும் சந்தாவைப் புதிப்பித்தலுக்கும் கணக்கு வைத்தல்.

2. பருவ வெளியீட்டின் பகுதிகள் (issues) வரும் பொது அவ்வப்பொழுது வரவு வைத்தல்.

3. தலைப்புப் பக்கமும் (Title Page), முதற்குறிப்பும் (Index) வெளியிடப்பட்ட தேதி.

4. கிடைத்த விதம் (Source)

5. வெளிவரும் காலம்.

பருவ வெளியீடுகள் நூலகத்திற்கு வருங்கால் அவற்றைச் சரிபார்த்தல் வேண்டும். அதற்கு என்செயல் வேண்டும்? ஒவ்வொரு வெளியீட்டிற்கும் தனித்தனியாய் அட்டைகள் வைத்திருப்பது நலம். ஏனெனில் வெளியீடுகள் வரும்பொழுது அவைகளைச் சரிபார்ப்பதற்கு மிகவசதியாக இருக்கும். இவைகள், மாத, வார, வெளியீடுகளைத் தனித்தனியாகச் சரி பார்க்கின்ற முறையிலே பொருத்தப்படல் வேண்டும். அட்டையினைப் பற்றிய விளக்கமாவது :- அட்டையின் மேலே கொஞ்சம் இடம் விடல் வேண்டும். அங்கு முதலில் வெளியீட்டின் பெயர், வரவேண்டிய நாள் (உத்தேசமாக) என்ற இரண்டினையும் எழுதுதல் வேண்டும். அதற்குக் கீழே இடப்புறத்திலிருந்து ஆண்டு, தொகுதி, சனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன், சூலை, முதலிய பன்னிரு மாதங்கள், அலுவலர் குறிப்புக்கள் (Remarks) என்ற பதினைந்து பிரிவுகள் அமைக்கவேண்டும். அட்டையின் பின்புறத்தில் மேலிருந்து கீழே, வெளியீடு கிடைத்த விதம், தலைப்புப் பக்கம், முதற்குறிப்பு, புதிப்பித்த நாள், வெளிவரும் காலம் என்பன குறிக்கப்படல் வேண்டும்.

வெளியீடு கிடைத்த விதம் என்ற தலைப்பின் கீழ் பின்வருவன குறிக்கப் பெறுதல் வேண்டும். விலை கொடுத்து வாங்கினால், எவரிடமிருந்து விலை கொடுத்து வாங்குகின்றோமோ அவரது பெயர் (வெளியிடுவோர் அல்லது வெளியீட்டகம்) எழுதப்பெறுதல் வேண்டும். அன்பளிப்பாகவோ அன்றி நூல்பறிமாற்றத்தின் மூலமாகவோ பருவ வெளியீடுகள் கிடைக்கப்பெற்றால், அன்பளிப்பாகவோ அன்றி மாற்றிதழாகவோ அனுப்பியவரின் பெயரினை எழுதுதல் வேண்டும்.

தலைப்புப் பக்கம், முதற்குறிப்பு :

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வெளியீடுகள் தொகுதியாக ஆக்கப்படும்பொழுது அவற்றின் தலைப்புப் பக்கமும், முதற்குறிப்பும் மிகவும் தேவை. சில வெளியீட்டாளர்கள், ஆண்டிறுதியிலே, ஒரு தொகுதி முடிந்தவுடன், அத்தொகுதி பற்றிய தலைப்புப் பக்கம், முதற் குறிப்பு (பொருளடக்கம்) இவற்றினை அனுப்புவர். ஒரு சிலர் முதல் பகுதி வரும்பொழுதே அனுப்பிவிடுவர். சிலர் வேண்டினாலொழிய அனுப்பார்.

புதுப்பித்தல் :

நூலகத்தலைவர் ஒழுங்காகப் புதுப்பித்தலில் அக்கறை மிகக்கொளல் வேண்டும். உரிய காலத்தில் ஒரு பருவ வெளியீட்டினைப் புதுப்பிக்காவிடில், ஒரு சில பகுதிகள் (issues) நமக்குக் கிடையாமல் போய்விடும்.

வெளிவரும் காலம் :

இதன்கீழ் மாதவெளியீடா, காலாண்டா (Quarterly), அரையாண்டா என்ற விவரம் கொடுக்கப்படல் வேண்டும்.

சான்றுக்காக ஒரு பருவவெளியீட்டு அட்டை கீழே வரையப்பட்டுள்ளது.

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)

வாரவெளியீட்டு அட்டை கீழ்வருமாறு அமைக்கப்படல் வேண்டும். அட்டையின் மேலே இடப்புறத்திலே வெளியீட்டின் பெயர். வலப்புறத்திலே வெளியீடு வர வேண்டிய நாள். அதற்குக் கீழே இடப்புறத்தில் ஆண்டு. அருகில் தொகுதி குறித்தல் வேண்டும். கீழே மாதம், வாரம், வாரம் என்ற மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். மாதப்பிரிவிலே ஒன்றின் கீழ் ஒன்றாகப் பன்னிரு மாதங்கள்; இரு வாரப் பகுதிகளில் வலப்புறமாகப் பத்துப் பகுதிகள் இருத்தல் வேண்டும். வார வெளியீட்டு அட்டையின் மாதிரி கீழே தரப்பட்டுள்ளது.

(Upload an image to replace this placeholder.)