உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்/உடற் கல்வியும் குழந்தைகளும்

விக்கிமூலம் இலிருந்து

2. உடற்கல்வியும் குழந்தைகளும்


வயது 6 முதல் 11 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு, உடற்கல்வி என்ன செய்யும் என்ற கேள்விக்கு விடையாக, இந்தப் பகுதியில் விளக்கம் தந்திருக்கிறோம்.

2. 1. குழந்தைகள் சுயவெளிப்பாடு (Self expression) என்கிற தன்மையில் தங்கள் எண்ணங்களை, ஆசைகளை செயல்படுத்தி திருப்தி அடைந்திடவும்; அதன் மூலம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நலமான சூழ்நிலையை ஏற்படுத்தி, சிறந்திடவும் உடற்கல்வி உதவுகிறது.

2. 2. நடத்தல், ஓடுதல், தாண்டுதல், எறிதல், போன்ற அடிப்படை செயல் இயக்கங்களில் செழுமை ஏற்படுத்தி, வளர்த்திட வழிகாட்டுகிறது.

2. 3. நல்ல உடல் நலம் தரும் நல்ல பழக்க வழக்கங்களைப் பழக்கி வைக்கிறது.

2. 4. உடல் நலம் பற்றி மேற்கொள்கிற பரிசோதனைகளில் பங்கெடுத்துக் கொண்டு, உடலில் உள்ள நோய்களையும் குறைகளையும் கண்டறிந்து, ஆவன செய்யும் அறிவையும், அனுபவத்தையும் கொடுக்கிறது.

2. 5. நிமிர்ந்து நிற்க வேண்டும், நிமிர்ந்து நடக்க வேண்டும். நிமிர்ந்து உட்கார வேண்டும் என்கிற நினைப்புடன் இருக்கச்செய்து, உயர்ந்த நிலையில் உலா வரச் செய்கிறது.

அத்துடன், உடலில் ஏற்படும் குறைகளை அறிந்து, அவற்றிற்கேற்ப உடற்பயிற்சிகளைச் செய்து, குறைபோக்கும் காரியங்களைச் செய்யும் கருத்தினை வளர்த்து விடுகிறது.

2. 6. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பழக, அனுசரித்து நடந்து கொள்ள வாய்ப்புக்களை வழங்கி, அனுபவங்களை ஏற்படுத்தி, விளையாடி மகிழும்போது, சமூக உறவு பற்றி புரிந்து கொள்ளவும் துணை செய்கிறது.

2. 7. சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும்; உணவு குறைந்தால் உண்டாகும் நோய்கள் பற்றியும் புரிந்து கொண்டு சாப்பிடும் பழக்க வழக்கங்களை சரியாக அனுசரித்து நடந்து கொள்ள உதவி செய்கிறது. 2. 8. தன் கடமை, தன் செயல், தன் உழைப்பு இவற்றைப் புரிந்து கொண்டு, தன்னம்பிக்கையுடன் நடந்து கொள்ள உதவுகிறது.

2. 9. உடல் சக்தியினை வளர்த்துக் கொள்வதுடன், உடலியக்கத்தின் மூலம் தன்னிறைவும், மன திருப்தியும் பெற்றுக்கொள்ள உதவுகிறது. மன திருப்தியும் மகிழ்ச்சியுமே உடற்கல்வி அளிக்கும் பேரின்பமாகும்.

2. 10. தனது திறமைகளை மற்றவர் பாராட்டுகிற போது ஏற்படுகிற மகிழ்ச்சியை உணர்ந்து கொண்டு, மற்றவர்களைத் தானும் பாராட்ட வேண்டும் என்ற பெருந்தன்மையும் , மனப் பக்குவமும் ஏற்படுகிற சூழ்நிலைகளை ஏற்படுத்தி, பண்பாற்றலை பெருக்கி வைக்கிறது.

2. 11. நல்ல பார்வையாளர்களாக குழந்தைகளை உருவாக்குகிறது.

2. 12. சிந்தித்துக் காரியமாற்றும் சிறந்த செயல் ஊக்கம் தருவதுடன், கற்பனை நயம் மிளிரக் காரிய மாற்றும் வல்லமையையும் வளர்த்து விடுகிறது.

2. 13. ஒருவருக்குத் தன்னம்பிக்கை, வலிமை மட்டும் வளர்ந்தால் போதுமா? விபத்து நேராமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும்; மீறி ஏதாவது நடந்துவிட்டால், மனம் கலங்கிப் போகாமல், முதலுதவி செய்து கொண்டு, தன்னைத் தற்காத்துக் கொள்கிற ஆற்றலையும் நிறையவே உடற்கல்வி வளர்த்து விடுகிறது. நீடித்த சுகமான வாழ்வை வழங்குகிறது.

இப்படிப்பட்ட இனிய சூழ்நிலைகளையும் இதமான பண்புகளையும் உடற்கல்வி வளர்த்து விடுகிறது என்பது, உலகறிந்த உண்மை. இதனை உலகம் பின்பற்றி மகிழ்வதும் உண்மை தான்.

இதற்காக, உடற்கல்வி, பல விதமான முறைகளைக் கையாளுகிறது.

உடற்கல்வியை நாம் பிரித்துப் பாாக்கிற போது, அது உடற்பயிற்சி, விளையாட்டு என்று பிரிந்தே வினையாற்றுகிறது.

உடற்பயிற்சி, என்பது உடல் உறுப்புக்களை ஒருங்கிணைத்து செயல்பட வைத்து, உடல் அமைப்பில் வலிமையையும் , உடல் ஆற்றலில் சிறப்பான தன்மைகளையும் கொழிக்க வைக்கிறது.

விளையாட்டு என்பது, பங்கு பெறுகிற ஒவ்வொருவரும் தனக்குரிய திறமைகளைத் தெரிந்து கொள்ளவும், மற்றவர்களது திறமைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் திருப்திபட்டுக்கொள்ளவும் , அதையே போட்டியிட்டு விளையாடி பொழுதைப் பயனுள்ளதாகப் போக்கவும், பயன்களைச் சேர்க்கவும், மகிழ்ச்சியில் திளைக்கவும், செய்து விடுகிறது.