உள்ளடக்கத்துக்குச் செல்

வேண்டும் விடுதலை/தமிழினமே ஒன்றுபட்டியங்குக!

விக்கிமூலம் இலிருந்து

தமிழினமே ஒன்றுபட்டு இயங்குக!


மிழின விடிவிப்புக்கான காலம் கனிந்துள்ளது. ஆனால் வீணே கழிந்துகொண்டுள்ளது. நம் தேசிய விடுதலைக்குரல் வலிவாக இன்னும் தில்லிக்குப் படவில்லை. தமிழீழ விடுதலைக்கே தில்லி செவிசாய்க்கவில்லை. செவிசாய்க்கும் என்னும் நம்பிக்கை இல்லை. இந்த நிலையில் தமிழக விடுதலைக் குரலை அவர்கள் மதிக்கப் போவதே இல்லை இந்தியாவில், அன்றைய நிலையில் அசாம், பஞ்சாப், மிசோரம், நாகாலாந்து, ஒரிசா முதலிய பல மாநிலங்களில் தேசிய இன விடுதலைக்கான முயற்சிகளும் முத்தாய்ப்புகளும் தொடங்கிவிட்டன. இந்தியாவிலிருந்து தேசிய இன விடுதலை பெறுவதற்குரிய தகுதி தேவையும் பெற்ற முதல் மாநிலம் தமிழகமே!

ஆனால் இது கண்மூடி அடிமைப்பட்டுக் கிடப்பது பெரிதும் வருந்தத்தக்கது. அனைத்துலகும் ஒன்று எனும் எண்ணம் வேறு; அனைத்துரிமைகளும் பெறவேண்டும் என்னும் கோரிக்கை வேறு. முன்னது பொதுவானது பின்னது சிறப்பானது! மேலும் இந்திய அரசு நமக்குள்ள உரிமைகளை என்றுமே முழுமையாக வழங்கப் போவதில்லை. மாறாக, நம்மினத்தின் தனிச்சிறப்புக் கூறுகளையும் நலன்களையும் ஒன்றுமற்ற பிற காட்டு விலங்காண்டி இனங்களுடன் பங்கு போட்டுக் கொள்ளவே திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. நூறை இழந்து ஒன்றைப் பெறுவதே நமக்குப் போதும் என்று கருதிவிடக் கூடாது. இந்திக்கு நூறு கோடி! தமிழுக்கு ஓர கோடி! இந்தியை விட தமிழ் நூறு மடங்கு தாழ்ந்ததா? மூடர்களையும் அடிமைகளையும் தவிர, அறிவுள்ளவர்களும், உணர்வுள்ளவர்களும் இதை எப்படி ஏற்க முடியும்? எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து ஓங்கிக் குரல் கொடுத்தால் தவிர, நமக்குள்ள எல்லாமே இன்னும் சில ஆண்டுகளில் பறிபோய்விடும். இந்தத் தலைமுறையில் நாம் நடுவணரசிடமிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வில்லையானால், வேறு எப்பொழுதுமே எந்தச் சூழ்நிலையிலுமே நம்மை விடுவித்துக் கொள்ள முடியாமற் போய்விடும். பின்னர் என்றென்றுமே நாம் அடிமைகளாகத்தான் கிடக்க வேண்டும்!

இன்றைய நிலையில் இந்தியத் தேசியம் என்னும் பெயராலும், ஒருமைப்பாடு என்னும் பெயராலும் நம் மொழி, பண்பாடு, கலைகள் ஆகிய அனைத்துக் கூறுகளுமே ஆரியப்படுத்தப்படுகின்றன. நம் இலக்கியங்கள், வரலாறுகள் அனைத்தும் மூடிமறைக்கப்படுகின்றன. மற்ற இனங்களுக்கு அஃது ஊதியம்; நமக்கு இழப்பு! இந்த நிலைகள் தொடருமானால், பிற முன்னேறாத இனங்களுடன் நாமும் முன்னேறாத இனமாகவே கிடக்கவேண்டும். இது கொடுமை! மிக மிகக் கொடுமை! இஃது ஓர் இன அழிப்பு முயற்சியே!

இந்தியாவிலேயே மிகவும் பண்பட்ட, அறிவு வளர்ச்சியுற்ற, மிகச்சிறந்த மூத்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினம், வேறு காட்டு விலங்காண்டி இனங்களுடன் ஒன்றிணைந்து தன் தனிச்சிறப்பியல், கூறுகளை இழந்து கொண்டு, பின்தங்கிக் கிடக்க வேண்டும் என்னும் அறியாமைக்கும் அடிமைப்படுத்தத்திற்கும் நாம் இசைந்துவிடக் கூடாது. நமக்கென்று நம் நாட்டை நாம் பெற்றுத் தீரவேண்டும் என்பதைக் கட்டாயக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

தில்லிக்கு நேர் எதிர் முயற்சிகளைத் தமிழகமும் தமிழர்களுந்தாம் செய்ய முடியும். ஏனெனில் ஆரியத்துக்கு நேர் எதிரான கூறுகளைக் கொண்டது தமிழினமே! எனவேதான் தமிழினத்தை ஒருமைப்பாடு என்னும் பெயரால் தில்லி, ஒடுக்கப் பார்க்கிறது. ஒழிக்கப் பார்க்கிறது. இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு தமிழீழச் சிக்கலில் அது கையாளுகின்ற முறையே. தமிழினத்தை மறைமுகமாக அழிக்கின்ற சூழ்ச்சியையே, தமிழீழச் சிக்கவில் தில்லி அரசு கையாள்கிறது. இங்குத் தில்லிக்கு அடிமையாகிக் கிடக்கும் பேராயக் கட்சிகள் இந்த உண்மையை உணர்ந்து, தமிழின உணர்ச்சி பெற வேண்டும்.

இங்குள்ள முன்னணித் தலைவர்கள் பிற சிறிய இயக்க முயற்சியாளர்களை முன்வைக்கக் கூடாதென்னும் சூழ்ச்சியைக் கையாண்டு வருகின்றனர். அவர்கள் வேண்டுவதெல்லாம் பொருளும் புகழும் பதவிகளுமே! இவற்றோடு தமிழின முன்னேற்ற முயற்சியை ஒன்றாகக் கருதிவிடக் கூடாது. எனவே அவர்களின் தன்முனைப்புச் சூழ்ச்சிகளைத் தவிர்த்துக்கொண்டு, தமிழ்த்தேசிய இன விடுவிப்புக்கான முயற்சிகள் அனைத்தையும் ஒன்று கூட்டி வலிவுபடுத்த வேண்டும். இதனைச் செய்வதற்கு அவர்கள் தவறுவார்களானால், அவர்களின் வரலாறு வெறும் குப்பை மேடுகளாகிவிடும் என்று எச்சரிக்கின்றோம்.

இப்பொழுதுதான், தமிழின விடுதலை முயற்சிகளை முன்வைப்பதற்கான காலம் கனிந்துள்ளது. எனவே காலங் கருதாத வேறு எந்த முயற்சியும் இப்பொழுது தேவையில்லை. இந்தியெதிர்ப்புகூட, தனி நிலையில், நமக்கு வெற்றியைத் தேடித் தராது. தமிழகம் தனி நாடாவதே இக்கால் நம் எடுத்துச் செல்லும் முழு முயற்சியாகவும் முதல் முனைப்பாகவும் இருத்தல் வேண்டும். அதற்குத் தமிழினம் ஒன்றுபட்டாகல் வேண்டும். தமிழினமே ஒன்றுபட்டு இயங்குக!

-தமிழ்நிலம், இதழ் எண். 55 ஏப்பிரல், 1985