இறைவர் திருமகன்/கை கழுவிய பாவம்

விக்கிமூலம் இலிருந்து
16. கை கழுவிய பாவம்

ரோமானிய ஆட்சித்தலைவன் பாண்டியஸ் பைலேட். வெள்ளிக் கிழமை அதிகாலையில் அவன் சபைக்கு யூதர்கள் கூட்டம் ஒன்று வந்தது. கூச்சலும் ஆரவாரமும் மிகுந்த அந்தக் கூட்டம் பாண்டியஸ் பைலேட்டின் தீர்ப்புக்காக ஒரு கைதியைப் பிடித்துக் கொண்டு வந்தது. அந்தக் கூட்டத்தின் முன்னணியிலே ஜெருசலம் ஆலயத்தின் பெரிய குருமார்கள் வந்திருந்தார்கள். அவர்கள் பிடித்து வந்த குற்றவாளி இயேசுநாதர்தான்!

அமைதியும் பெருந்தன்மையான தோற்றமும் கொண்ட இயேசுநாதரைக் கண்ட பாண்டியஸ் பைலேட் மலைத்துப் போனான். இவரா குற்றவாளி இருக்கவே முடியாது. நாள்தோறும் குற்றவாளிகளையே கண்டுகண்டு . பழகிப்போன அவனுக்கு - கொடுமையும், புன்மையும் நிறைந்த குற்றவாளிகளின் முகங்களையே கண்டுகண்டு பழகிப்போன அவனுக்கு, இந்தப் புதிய குற்றவாளியைக் காண வியப்பாயிருந்தது.

குருமார்கள் இயேசுநாதர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள். பொய் கலந்த அந்தக் குற்றச் சாட்டுகளிலே பெரிய குற்றச்சாட்டு அவர் தம்மை ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகிறார் என்பதுதான். அத்தனை குற்றச் சாட்டுகளையும் கேட்டுக் கொண்டு அவர் பேசாமல் நின்றார்.

பாண்டியஸ் பைலேட், அவரை நோக்கி, "நீங்கள் யூதர்களின் அரசர் என்பது உண்மையா?" என்று கேட்டான்.

'ஆம்! நான் ஓர் அரசன்தான்! உண்மையை அறிந்தவர்கள் என் சொற்கள் உண்மை என்று காண்பார்கள்" என்றார் அவர்.

உண்மை பொய் என்பதெல்லாம் ரோமானிய ஆட்சித் தலைவனுக்குத் தெரியாது. சாட்சியங்களைக் கேட்டு அவற்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு குற்றவாளிகளுக்கு அச் சாட்சியங்களுக்கேற்ற தண்டனையை அளிப்பது தான் அவன் வழக்கம். இயேசுநாதருக்கு எதிராக இருந்த சாட்சியங்களோ பல; அவை வன்மையானவை! மக்கள் கூட்டத்தின் பெருந்தலைவர்களான குருமார்களால் சாட்டப்பட்டவை. ஆனால் அத்தனை சாட்சியங்களைக் கேட்ட பின்னும், அவரைத் தண்டிக்க அவன் மனம் இடங் கொடுக்கவில்லை.

எக் காரணத்தைக் காட்டியாவது அந்தப் பெருந்தன்மை மிக்க, அமைதி வடிவமானமனிதரை விடுவித்துவிட வேண்டும் என்ற எண்ணமே அவன் மனத்தில் மேலோங்கி நின்றது. தன் மனக் கருத்தை நிறைவேற்றிக் கொள்ள அவன் ஒருவழியையும் கண்டுபிடித்துவிட்டான்.

பாரபாஸ் என்ற கொள்ளைக்காரன் ஒருவன் பிடிப்பட்டுத் தண்டிக்கப்பட விருந்தான். அவனால் மக்கள் அடைந்த துன்பங்கள் பல. அவன் பெயரைச் சொன்னாலே பிள்ளைகள் அழுத வாய் மூடும்; பெரியவர்கள் நடுநடுங்கிச் சாவார்கள்; பெண்களோ அதிர்ந்து தன் நினைவு இழந்து போவார்கள். அப்படிப்பட்ட பயங்கரமான திருடன் அவன்.

இயேசுநாதரை விடுதலை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கொண்ட அந்த ரோமானிய ஆட்சித் தலைவன் மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறினான்; “யூதர்களின் விருந்துவிழா முடியுங்காலத்தில் யாராவது ஒரு கைதியை விடுவிப்பது நெடுநாள் வழக்கம். இப்போது நான் யாரை விடுதலை செய்ய? ஒரு குற்றமுமற்ற இவரையா? அல்லது கொள்ளைக்காரன் பாரபாசையா?"

எல்லாருக்கும் தீமையே புரிபவனான பாரபாசை விடுதலை செய்யும்படி யாரும் கேட்க மாட்டார்கள்; அதனால் பெருந்தன்மை மிக்க இயேசுநாதரை விடுவிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தான் பாண்டியஸ் பைலேட். ஆனால், குருமார்கள் பாரபாசை விடுதலை செய்யும்படி கேட்குமாறு மக்களைத் தூண்டி விட்டார்கள்.

கண்ணை மூடிக் கொண்டு குருமார்கள் கூறியதைப்பின்பற்றிய அக்கூட்டத்தினர், "இந்த மனிதன் வேண்டாம்! பாரபாசையே விடுதலை செய்யுங்கள்; பாரபாசையே விடுதலை செய்யுங்கள்" என்று கூவினார்கள்.

மக்கள் கூட்டத்தின் கண் மூடித்தனமான இந்த வேண்டுகோளைக் கேட்டு பாண்டியஸ் பைலேட்டு மலைத்துப் போனான். அவன் எதிர்பார்த்தது ஏமாற்றமாகி விட்டது.

“தாம் ஓர் அரசர் என்று சொல்லிக் கொள்ளும் இந்த மனிதரை என்ன செய்வது?" என்று கேட்டான்.

“சிலுவையில் அறையுங்கள்" என்று கூறியது மக்கள் கூட்டம்.

“இந்தத் தண்டனை தேவைதானா? தம்மை ஓர் அரசர் என்று சொல்லிக் கொண்டதைத் தவிர அவர் உங்களுக்கு என்ன தீமை செய்தார்?" என்று கேட்டான் ஆட்சித் தலைவன்.

இந்தக் கேள்வி அவர்கள் மனத்தை மாற்ற வில்லை. இரக்கவுணர்வோ, நீதி நெறி என்ற எண்ணமோ சற்றுமற்ற அந்தக் கும்பல், “சிலுவையில் அறையுங்கள்!" என்றே மீண்டும் மீண்டும் கூவியது.

"உங்கள் அரசரையா நான் சிலுவையில் அறைய வேண்டும்?" என்று மீண்டும் ஒரு முறை கேட்டான் பாண்டியஸ் பைலேட்..

“சீசரைத் தவிர எங்களுக்கு யாரும் அரசரல்லர். இந்த மனிதனை நீர் விடுதலை செய்தால் நீர் சீசரின் நண்பர். அல்லர்!" என்று வன்னெஞ்ச மிக்க குருமார்கள் அவனை அச்சுறுத்தினார்கள்.

சீசர் என்ற சொல் காதில் விழுந்தவுடன் பாண்டியஸ் பைலேட் மனம் துணுக்குற்றது. அவன் சீசரின் கீழ் வேலை செய்பவன். அவருக்காக ஜெருசலத்தை ஆள்பவன். அவரிடம் தன்னைப் பற்றி இந்தக் குருமார்கள் ஏதேனும் தவறாகச் சொல்லி வைத்தால் தன் கதி என்ன ஆகும் என்று நினைத்த போது அவன் உள்ளம் நடுங்கியது. ஒருவரைக் காப்பாற்றுவதற்காகத் தான் ஆபத்தில் சிக்கிக் கொள்வதை அவன் விரும்பவில்லை.

பாண்டியஸ் பைலேட் தன் ஆட்களைத் தண்ணீர் கொண்டு வரச் செய்தான். கூட்டத்தின் முன் அத்தண்ணீரால் தன் கைகளைக் கழுவிக் கொண்டான். “தண்டனைக் குரிய குற்றம் எதுவும் புரியாத இந்த மனிதரைத் தண்டிக்கும் பாவம் என்னைச் சேர்ந்ததல்ல. இவருடைய இரத்தத்தைச் சிந்தும் செயலுக்கு நான் பொறுப்பாளியல்ல! கண்டீர்களா?" என்று கேட்டான்.

"அந்தப் பாவம் எங்களைச் சேரட்டும், அவருடைய இரத்தம் எங்களைச் சேரட்டும்; எங்கள் குழந்தைகளைச் சேரட்டும்!" என்று கூட்டத்தில் இருந்த எல்லாரும் ஒருமித்துக் கூறினார்கள்.

இதைக் கேட்டபின், அவன், கொள்ளைக்காரன் பாரபாசை விடுதலை செய்தான். இயேசு நாதரைச் சிலுவையில் அறையுமாறு தன் வீரர்களிடம் ஒப்படைத்தான்.