உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழகத்தில் குறிஞ்சி வளம்/கொல்லி மலை

விக்கிமூலம் இலிருந்து

3. கொல்லி மலை


பெயர்க் காரணம் :

‘கொல்லி மலை’ என்ற பெயர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே வழங்கி வருகின்றது. புறநானுறு, நற்றிணை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி முதலிய நூல்களில் இம் மலை பற்றிய குறிப்புகள் காணக் கிடக்கின்றன. இப் பெயரின் காரணமாகக் கொள்ளக்கூடிய செய்தி ஒன்று உளது. அதுதான் கொல்லிப் பாவை பற்றியதாகும். கொல்லிப் பாவையைத் தன்னிடத்தே கொண்டிருந்த மலை கொல்லி மலை எனக் கொள்ளின் ஏற்புடைத்தாம்.


கொல்லிப் பாவை :

இது கொல்லி மலையில் செய்து வைக்கப்பட்டிருந்த தெய்வப் படிமம். ‘அவுணர் கொடிய போர் செய்யச் சமைத்த போர்க் கோலத்துடன் மோகித்து விழும்படி, கொல்லிப் பாவை வடிவாய்ச் செய்யவளாகிய திருமகளால் ஆடப்பட்ட பாவை என்னுங் கூத்து’ (சிலப். 6 : 60-1) என வருவது கொல்லிப் பாவையின் இயல்பை விளக்கும். சீவக சிந்தாமணியில் விசயைக்குப் பாவையை உவமையாகத் திருத்தக்க தேவர் கூறியதன் நயத்தை விளக்க வந்த நச்சினார்க்கினியர், ‘வேறு கருத்துச் செல்லாமல் தன்னையே கருதுவித்தலின் கொல்லிப் பாவை என்றார்’ எனக் கூறும் விளக்கமும் இதற்கு ஆதரவாகின்றது.

இது கொல்லி மலையில் ஒரு பூதத்தால் அமைக்கப்பட்ட அழகிய பாவை என்பதனைப் ‘பயன் நிறைந்த பலா மரங்களையுடைய கொல்லி மலையின் மேற்பகுதியில் முன்பு பூதம் அமைத்த புதுமையான இயக்கமுடைய பாவை இள வெயிலின்கண் தோன்றினாலொத்த நின் அழகிய நலம்’ (நற். 192) என வருந் தொடர் விளக்கும். மற்றும் இது அழியாத இயல்பினதென்பதை, ‘செவ்விய வேர்ப் பலவின் பயன் நிறைந்த கொல்லி மலையிலே, தெய்வத்தாற் காக்கப்பெறும் குற்றம் நீங்கிய நீண்ட கொடுமுடியையும் அழகிய வெள்ளிய அருவியையும் உடைய மேல் வரையிலே, காற்று மோதி அடித்தாலும், மிக்க மழை கடுமையாகப் பெய்தாலும், பேரிடி தாக்கினாலும், வேறு பல கெடுதிகள் உண்டானாலும், பெருநிலங் கிளர்ந்தாலும் தன் அழகிய நல்ல உருவம் கெடாத பாவை’ (நற். 201) என்னுங் கருத்து விளக்குகிறது.

இக் கொல்லிப் பாவை பற்றி வழங்கும் கதையொன்றுண்டு. கொல்லி மலையின் வளமிகுந்த நிலையைக் கண்டு முனிவரும் அமரரும் இதனை இருப்பிடமாகக் கொண்டனர். அப்போது அவர்களுக்கு அசுரர்களாலும், இராக்கதராலும் இடையூறு நேர்ந்தது. அதனைத் தடுக்கத் தெய்வதச்சனைக் கொண்டு இப்பாவையை அமைத்தனர். இயங்கும் தன்மையுள்ள இப் பாவை அரக்கர் முதலியோரின் வாடை பட்டவுடன் நகைக்கும். கண்டவருடைய உள்ளத்தையும் விழியையும் கவர்ந்து, அவர்கட்குப் பெருங் காம நோயை உறுவித்து, மயக்கிக் கொல்லும் தன்மையுடைய இதனைக் கண்ட அரக்கர் முதலியோர் மயங்கி மடியலாயினர்.


அமைப்பு:

கொல்லி மலை தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்தில், நாமக்கல் ஆத்தூர் வட்டங்களில் உள்ள குன்றுத் தொடர். இம் மலையானது, தம்மம்பட்டி வரையில் நீண்டு செல்லும் துறையூர்ப் பள்ளத்தாக்கால் பச்சை மலைகளினின்றும் பிரிக்கப்படுகிறது. அயில்பட்டிக் கணவாயினால் போத மலைகளினின்றும் பிரிக்கப்படுகிறது. இவ்வழகிய தொடர், தென்வடலாகப் பதினெட்டுக் கல்லும், கிழ மேற்காகப் பன்னிரண்டு கல்லும் நீளமுடையது. இம் மலையின் தென் சரிவும், மேற்குச் சரிவும், கிழக்குச் சரிவும் சமவெளியினின்றும் 4000 அடி செங்குத்தாக உயர்ந்து செல்லுகின்றன. வடக்குச் சரிவு காட்டாறுகளால் அறுத்துச் செல்லப் பட்ட வரிசை வரிசையான படுகைகள் நிறைந்து பிளவுபட்டுக் காணப்படுகிறது. இப் படுகைகள் வடகிழக்குப் பக்கமாக ஓடுகின்றன. இவைகளில் குறிப்பிடத்தக்கவை, வரகூர் கோம்பை, மூலைக்குரிச்சி, பெரிய கோம்பை, வாலக் கோம்பை என்பன. நாமக்கல் கோட்டத்திலிருக்கும் இம் மலைப் பகுதி உயர்ந்த ஒரு பீடபூமியைத் தன்னகத்தில் கொண்டு விளங்குகிறது. அப் பீடபூமியானது ஒரு கவிகலன் (basin) போல் நடுவில் தாழ்ந்தும், பக்கங்களில் உயர்ந்தும் உள்ளது. உயர்ந்து செல்லும் இதன் பக்கங்களில் அடுக்கடுக்காக நிலங்களைப் பண்படுத்திப் பயிர்த் தொழில் செய்கிறார்கள். பயிர்கள் வளர்ந்து, பச்சைப் பசேலென்று எழில் நலம் கொழித்து விளங்கும் அக் காட்சியைப்போல் வேறு எங்கும் காண்டல் அரிது.

ஆத்தூர் வட்டத்திலிருக்கும் கொல்லி மலைப் பகுதி நாமக்கல் பகுதியினின்றும் மாறுபட்டதாகும். இம் மலையின் தென்மேற்குப் பகுதியானது பயில் நாட் (Pail Nad)டின் பருவுயர் சிகரங்களைக் கொண்டது. இச் சிகரங்களினின்றும் வட சரிவிலுள்ள பள்ளத்தாக்கின் இனிய காட்சிகளைக் காணலாம். அருவிகள் அச்சரிவில் இனிய ஒலியோடு இழிந்து செல்லும். அச்சிற்றாற்றுப் படுகைகளின் உச்சியைக் கடந்து செல்லும் மலை வழிப் பாதையிலிருந்து நோக்கினால் சமவெளிகளையும், அவற்றை வடக்கில் தடுத்து நிறுத்தும் சேர்வராயன், கல்ராயன், தேனாந்தி (Tenande) மலைகளின் இயற்கை யழகையும் கண்டு மகிழலாம். மேற்கிலுள்ள பீடபூமியின் உச்சி கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரமுள்ளது. வடமேற்குப் பீடபூமியின் உச்சி 400 அடி தாழ்ந்தது. வடக்கிலுள்ள பள்ளத்தாக்குகளைப் பிரிக்கும் மலைத்தொடர் 3000 அடி உயரமுள்ளது. ஆத்தூர் வட்டத்துக் கொல்லி மலையிலுள்ள மிக உயர்ந்த சிகரம் வேடக்கார மலையாகும். அதன் உயரம் 4,663 அடி.


ஆறுகள் :

சேர்வராயன் மலைத்தொடரில் தோன்றும் ஆறுகள் பல. ஆனால் கொல்லி மலையில் ஆறுகள் அதிகமில்லை. சுவேத நதி, வசிட்ட நதி என்ற சிற்றாறுகள் கொல்லி மலை, பச்சை மலை, கல்ராயன் மலைகளில் பெய்யும் மழை நீரினின்றும் தோன்றுகின்றன. சுவேத நதி என்ற பெயர் வட சொற்களாலானது. அதைத் தமிழாக்கும் போது ‘வெள்ளாறு’ என்று அமையும். ஆனால் சுவேத நதி, வசிட்ட நதி ஆகிய இரண்டையும் வெள்ளாறு என்றே எல்லோரும் அழைக்கின்றனர். ஆனால் புது வெள்ளக் காலங்களில், இம் மாவட்டத்திலுள்ள மற்ற ஆறுகளைவிட மிகவும் செந்நிறமான நீரை, இவைகள் கொண்டு விளங்குகின்றன. வெள்ளாறு என்ற பெயர் இவைகட்குப் பொருந்தாத ஒன்று என்று தான் கூற வேண்டும். சுவேத நதி என்ற பெயருக்குக் காரணமாக ஒரு கதை வழங்குகிறது. பஞ்ச பாண்டவரில் ஒருவனான அருச்சுனன் தென்னாட்டிற்கு யாத்திரை வந்திருந்தபோது கொல்லி மலையை அடைந்தானாம். சுவேத நதி தோன்றுமிடத்தில் ஒரு பூசை நடத்த விரும்பினான். ஆனால் பூசைக்கு வேண்டிய நீரில்லை. தன் காண்டீபத்தில் கணை தொடுத்துப் பாறைமீது எய்தான். உடனே அவ்விடத்தில் ஒரு பிளவு ஏற்பட்டு அதனின்றும் நீர் பெருகி ஆறாக ஓடத் தொடங்கியது. அருச்சுனனுக்குச் ‘சுவேத வாகனன்’ என்ற ஒரு பெயரும் உண்டு. சுவேதவாகனனால் கொணரப் பட்ட நதி சுவேத நதியாயிற்று.

வசிட்ட நதி, வசிட்ட முனிவரின் பெயரால் ஏற்பட்டது. அவர் இந் நதிக் கரையில் பேளூருக்கருகில் ஒரு வேள்வி செய்தார் எனக் கூறப்படுகிறது. அவ்வூருக்கு வடக்கில் வெண்மையான பாறையொன்று உள்ளது. வசிட்டர் செய்த வேள்வியால் விளைந்த சாம்பலே அவ் வெண்மையான பாறையாக மாறிவிட்டதென்று கூறுகின்றனர். வசிட்ட நதிக்கும் பேராறு என்ற வேறு பெயரும் உண்டு.


காடுகள் :

கொல்லி மலையின் மீதுள்ள காடுகள் வளமானவை. இம் மலையிலிருந்து இழிந்து வரும் சிற்றாறுகளின் கரைகளில் மிகவும் அடர்த்தியான, பசுமை மாறாத இள மரக் காடுகள் நிறைந்துள்ளன. சேலம் மாவட்டக் காடுகளில் கிடைக்கக் கூடிய முக்கியமான மலைபடு பொருள் மூங்கில். இம் மூங்கில்கள் வெட்டப் பட்டு ஈரோடு, கரூர், சென்னை முதலிய நகரங்களுக்கு நிறைந்த அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மூங்கிலைக் கொண்டு உறுதியான தட்டி (படல்) கள் செய்கின்றனர். மூங்கிலின் வெளிப்புறத்தில் பசுமையாகவும் உறுதியாகவும் உள்ள பாகம் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு இத் தட்டிகள் செய்யப்படுகின்றன. வீட்டு மறைப்புகளுக்கு இது பெரிதும் பயன்படுகிறது. மேலும் மூங்கிலால் பெரிய பாய்கள் செய்யப்படுகின்றன. இவைகள் விரிப்புகளாகவும், பந்தல்களாகவும் பயன்படும். காஃபி நாற்று (Seedling)களுக்காக 3 அங்குலக் குறுக்களவும், 9 அங்குல உயரமுமுள்ள சிறு கூடைகள் நிறையச் செய்யப்படுகின்றன. இவை ஆயிரம், 50 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. மாம்பழம், ஆரஞ்சுப் பழம், மீன், ரொட்டி முதலியவற்றைச் சேதமில்லாமல் அனுப்ப மூங்கிற் கூடைகள் பெரிய அளவில் நிறையத் தேவைப்படுகின்றன. வயலுக்கு நீர் இறைக்கும் இறை கூடைகள், கோழிக் கூடைகள், பறவைக் கூடுகள், விசிறிகள் முதலியனவும் மூங்கிலிலிருந்து செய்யப்படுகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் இத் தொழிலால் வாழ்கின்றனர்.

சந்தன மரங்கள் இங்கு நிறைய உண்டு. இம்மலையில் கிடைக்கும் தழைகளைச் சேகரித்து, திருச்சி மாவட்டத்திலுள்ள நஞ்சை நிலங்களுக்கு உரமாகப் பயன்படுத்துகின்றனர். கொல்லி மலைத் தேன், இலக்கியப் புகழ் பெற்றது. கொல்லித் தலைவன் ஒருவனைப் பாராட்டப் புகுந்த ஒரு புலவர், அம் மலைபடு தேனின் சிறப்புக்கு முதலிட்ம் கொடுத்து, “கொல்லி மலைத் தேன் சொரியும் கொற்றவா!” என்று விளக்கினார்.


விலங்குகள் :

தமிழ் நாட்டு மலைகளில் பொதுவாகக் காணப்படும் கரடி (Sloth bear) கொல்லி மலையிலும் நிறையக் காணப்படுகிறது. ஆனால் அங்கு வாழும் மலையாளிகள் அவற்றைக் கொல்வதில்லை. காரணம், இராமபிரானின் இலங்கைப் படையெடுப்பின்போது உற்ற நண்பனாக உடனிருந்து உதவிய ஜாம்பவானின் வழி வந்தவைகள் என்று கருதிக் கரடிகளை வணங்குகின்றனர். கொல்லி மலையின் அடிவாரங்களில் கருத்த வரையாடுகள் கூட்டங்கூட்டமாகத் திரியும். அவை அச்சம் மிக்கவை. யாராவது அச்சுறுத்திவிட்டால், நான்கைந்து கல் தொலைவு ஓடிய பிறகுதான் அவை நிற்கும். காட்டுப் பன்றிகளும் இங்கு நிறைய உண்டு. அவற்றின் இறைச்சியை மலையாளிகள் விரும்பி உண்பர். இதுவும் திருமாலின் அவதாரம்தான் ! எல்லாவற்றையும் இறைவனின் அவதாரம் என்று ஒதுக்கி விட்டால் காட்டில் வாழும் மலையாளிகள் பாவம், எதைத்தான் உண்பர்...... !

பயிர்த் தொழில்:

சேர்வராயன் மலை, நீலகிரி மலை, பழனி மலைகளோடு ஒப்பிடும்போது, கொல்லி மலை முன்னேற்றத்தில் மிகவும் பின்தங்கியது என்றுதான் சொல்ல வேண்டும். மற்ற மலைகளில் உதகமண்டலம், ஏர்க்காடு, கூனூர், கோடைக்கானல் முதலிய குறிஞ்சி நகரங்கள் தோன்றி, மிகுந்த நாகரிகம் பெற்றுவிட்டன. அழகிய மலைப் பாதைகள் சமவெளிகளையும் இம் மலைகளையும் இணைக்கின்றன. இன்றைய நாகரிக வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் இந் நகரங்கள் பெற்று, பிற நாட்டு உல்லாசிகளையும், தமிழகத்துச் செல்வர்களையும் தம்பால் ஈர்க்கின்றன. காஃபி, தேயிலை, இரப்பர், பழவகைகள் முதலியவற்றைத் தம்பால் விளைவித்து நாட்டின் வருவாயைப் பெருக்குகின்றன. பல தொழிற்சாலைகளைத் தம்மகக்தே கொண்டு தொழில்வளம் சிறக்கத் துணைபுரிகின்றன. ஆனால் இத்தகைய முன்னேற்றம் கொல்லி மலையில் இல்லை. கொல்லிமலை இன்னும் பூரணமாக ஆராயப்படவில்லை என்றே சொல்லலாம். போதிய பாதை வசதி கிடையாது. இப்பொழுதுதான் பாதை அமைத்து முடித்திருக்கின்றனர்.

ஆனால் சேர்வராயன் மலையிலுள்ள மலையாளிகளை விடக் கொல்லி மலையாளிகள் உழைப்பாளிகள். சேர்வராயன் மலையில் காஃபித் தோட்டங்கள் நிறைய இருப்பதால், மலையாளிகளெல்லாம் தங்கள் பயிர்த் தொழிலைவிட்டு விட்டுக் காஃபித்தோட்டக் கூலிகளாய்ப் பணிபுரிகின்றனர். காரணம் தாமாகப் பயிர்செய்து சம்பாதிப்பதைவிடக் கூலிகளாக வேலைசெய்வதில் அதிக வருவாய் அவர்களுக்குக் கிட்டுகிறது. கொல்லி மலையாளிகளுக்கு இத்தகைய வாய்ப்புக் கிடையாது. குறிஞ்சி நிலத்தைப் பண்படுத்தித் தம் பேருழைப்பால் பயிர்த் தொழிலைச் சிறந்த முறையில் செய்து வாழ்கின்றனர். சமவெளியில் வாழ்பவர்களைவிடச் சிறந்த முறையில் உழவு புரிகின்றனர் இம்மலையாளிகள்.

கொல்லிமலையின் மீதுள்ள புஞ்சை நிலங்களை இரண்டு விதங்களாகப் பிரிக்கலாம். ஏரினால் உழுது பண்படுத்தும் நிலத்தை ‘உழவுக்காடு’ என்றும், களைக் கொட்டால் கொத்திப் பண்டுத்தும் நிலத்தைக் ‘கொத்துக் காடு’ என்றும் கூறுகின்றனர். நஞ்சைநிலப் பயிர்த் தொழிலும் கொல்லி மலையில் உண்டு. 1000 ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை நிலங்கள் இங்குள்ளன. மிக உயர்ந்த பீடபூமிகளிலே இந்நிலங்கள் அமைந்துள்ளன. மலைமீதுள்ள ஈரத்தால் ஊறிவரும் ஒசும்பல்நீர், இந்நிலங்களில் பாய்கிறது. சில நஞ்சை நிலங்கள் பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ளன. அப் பள்ளத்தாக்குகளில் எப்பொழுதும் நீர் கசிந்து மண் ஈரமாகவே இருக்கும். அவ்விடங்களைப் பண்படுத்தி, வயல்களாக்கி விடுகின்றனர். அவ்விடத்தில் கசியும் நீர் வயல்களில் எப்பொழுதும் தேங்கிநிற்கும். தாழ்ந்த பீடபூமிகளின் மீதும் நஞ்சை நிலங்கள் உண்டு. மலையுச்சியிலிருந்து ஓடிவரும் அருவிகளைத் தடுத்து நிறுத்திச் சிறுசிறு கால்வாய்கள் மூலமாக அந் நஞ்சை நிலங்களிலுள்ள நெல் வயல்களுக்குப் பாய்ச்சுகிறார்கள்.


நெல் :

எப்பொழுதும் ஈரம் கசிந்து கொண்டிருக்கும் பள்ளத்தாக்குகளில் அமைக்கப்பட்டிருக்கும் நஞ்சை நிலங்கள் ஆழமான சேற்றுக் குழிகளைக் கொண்டிருக்கும். அக் குழிகளில் சில சமயங்களில் உழவர்கள் கழுத்தளவுகூட மூழ்கிவிடுவதுண்டு. அவ்வாறு ஆழ்வதைத் தடுக்கவே நாற்று நடும்போது பலகைகளின் மேல் இருந்துகொண்டு நடுவார்கள். உயர்ந்த பீடபூமிகளில் இருக்கும் நஞ்சை நிலங்கள் எளிதில் உழக் கூடியவை யாகையால் ஆண்டுக்கு இருபோகம் விளையும். ஆனால் தாழ்ந்த பீடபூமிகளிலுள்ள சதுப்புநில நஞ்சைகள், உழவுத் தொல்லையின் காரணமாக ஆண்டுக்கு ஒரு போகமே விளையும். ஒரு போகமே விளைந்தாலும் முன்கூறிய நஞ்சை நிலங்களைவிட இது இருமடங்கு அதிகமாக விளைச்சலைக் கொடுக்கும்.


வாழை :

கொல்லி மலையில் பயில் நாட்டிற்கு மேற்கில் உள்ள சரிவுகள் அருவியின் நீர்வளத்தால் செழிப்புடன் விளங்குகின்றன. அவ்வளத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நிறைய வாழை மரங்களைப் பயிர்செய்கின்றனர். அங்கு அதிகமாக விளையக் கூடியது ‘இரஸ்தாலி’ வாழை. கொல்லி மலையில் மிகவும் உயர்ந்த ரகப் பழமான ‘கருவாழை’யும் நிறைய விளைகின்றது. இது மிகச் சுவையானது. ஆனால் விலை அதிகம். ‘பட்டு வாழை’ என்று சொல்லக் கூடிய மற்றாெரு வகை வாழையும் இங்குப் பயிர் செய்யப்படுகிறது. இது நீளமாகவும் செந்நிறமாகவும் இருக்கும்.


இராகி :

கொல்லிமலையில் விளையும் முக்கியப் பயிர்களில் இராகியும் ஒன்று. மே அல்லது ஜூன் திங்கள்களில் நிலங்கள் உழப்பட்டு, இராகி விதைக்கப்படுகிறது. நான்கு ஐந்து திங்கள்கள் கழித்து, இது அறுவடை செய்யப்படுகிறது. அறுக்கும்போது ஒரு கோழிச் சேவலையோ, ஆட்டையோ பலியிட்டு அதன் குருதியில் வெண்சோற்றைக் கலந்து வயல்களில் இறைப்பர். பிறகு கதிர்களை அறுத்துச் சில நாட்கள் வெயிலில் உலர்த்தி மாடுகளால் மிதிக்கச் செய்து, மணிகளைத் தனியே பிரித்தெடுப்பர். கதிர் அறுத்துப் பத்து நாட்கள் கழிந்ததும் அதன் தாளை அறுக்காமல் தீயிட்டு எரித்து விடுவர். 

மொச்சை :

கொல்லிமலையில் இராகி வயல்களில் வரிசை வரிசையாக மொச்சை பயிரிடப்படுகிறது. ஆமணக்கோடும், கடுகோடும்கூட இது சில சமயங்களில் பயிரிடப்படும். இதனுடைய இலைகள் நிலத்திற்கு நல்ல உரமாகும். ஜூலை ஆகஸ்டுத் திங்கள்களில் மொச்சை விதைகள் ஊன்றப்படுகின்றன. ஒரு திங்கள் கழிந்ததும், மண்ணைக் கொத்தி விடுவர். மற்றுமோர் திங்கள் கழிந்ததும் களையெடுப்பர். மொச்சை ஆறுமாதப் பயிர். இராகி அறுவடையானதும் இப்பயிர் வயலில் பரவிப்படரும். மிகுபனிக் காலங்களான டிசம்பர் சனவரித் திங்கள்களில் மலரத் தொடங்கும்; பிறகு காய்க்கும். காய்கள் எல்லாம் பசுமையாக இருக்கும்போது அறுவடை செய்ய மாட்டார்கள். அவைகள் நன்றாக உலர்ந்த பிறகு சனவரி இறுதியிலோ அல்லது ஃபெப்ருவரி முதலிலோ அறுப்பர். சில நாட்கள் மறுபடியும் நன்றாகக் காய விடுவர். அதன் பிறகு காய்களைத் தனியே பிரித்தெடுத்து மாடுகளின் காலில் மிதிக்க விட்டோ, அல்லது தடியால் அடித்தோ மொச்சையைத் தனியாகப் பிரித்தெடுப்பர்.


கனிப்பொருள்கள்

சேலம் மாவட்டத்தில் பூமியில் புதைந்து கிடக்கும் கனிப் பொருள்களில் இரும்புத்தாது குறிப்பிடத்தக்க ஒன்று என்பதை முதலிலேயே கூறினோம். கொல்லி மலையில் அளவற்ற இரும்புத்தாது மண்டிக்கிடக்கிறது. இரும்பு உருக்கும் தொழில் சேலம் மாவட்ட மக்களுக்குக் கைவந்த ஒரு கலை; தொன்மையான கலை. சேலம், ஆத்தூர், ஓமலூர், திருச்செங்கோடு ஆகிய கோட்டங்களிலுள்ள சிற்றூர்களிலும், ஓசூர், கிருட்டினகிரி எல்லையிலும் இத்தொழில் மிகவும் வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால் இரும்பை உருக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட எரிபொருளின் (கரி) விலை அளவுக்கு மீறி உயர்ந்ததாலும், வெளிநாடுகளிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்ட இரும்பு மிகவும் மலிவாகக் கிடைத்ததாலும், இத் தொழிலானது சேலம் மாவட்டத்தில் சிறுகச் சிறுக அழிந்து விட்டது.

சேலம் மாவட்டத்தில் இரும்பைத் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்பட்ட உலை களிமண்ணால் செய்யப்பட்டது. ஒரு கண்ணாடிப் புட்டியைப்போல் தோற்றமளிக்கும் அவ்வுலை, 4 அடி உயரமும், அடித்தளத்தில் 2 அடி குறுக்களவும், உச்சியில் 9 அங்குலக் குறுக்களவும் கொண்டதாகும். அவ்வுலையின் அடித்தளம் பூமியின் மட்டத்திலிருந்து 1/2 அடி தாழ்ந்திருக்கும். அத்தளத்தில் 10 அங்குல சதுரமான ஒருவழி இருக்கும். அவ்வுலையில் பாதிப்பகுதியைக் கரியால் நிரப்பி, அதற்கு மேல் இரும்புத் தாதைக் கொட்டுவர். ஆட்டுத் தோலால் செய்த துருத்தியொன்றை அவ்வுலையில் பொருத்தியிருப்பர். அத்துருத்தியை அமுக்கிக் காற்றை உலையினுள் செலுத்துவர். உலையின் மற்ற வழிகளெல்லாம் பச்சைக் களிமண்ணால் மூடப்படும். இவ்வாறு 3 1/2 மணி நேரம் உலைக்காற்றை ஊதிக் கொண்டிருந்தால் 12 ராத்தல் எடையுள்ள இரும்பு வெளிப்படும். இது தான் பண்டைய முறை.

ஜெ. எம். ஹீத் (J. M. Heath) என்ற ஓர் ஆங்கிலேயர், கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகத்துறைப் பொறுப்பாளராகச் சேலத்தில் இருந்தார். சேலம் மாவட்டத்தில் புதைந்து கிடக்கும் இரும்புத்தாதுவின் வளத்தை அறிந்த அவர் கி. பி. 1825 ஆம் ஆண்டு கம்பெனியின் அலுவலிலிருந்து விலகி, இரும்புத் தாதை எடுத்து ஆக்க வேலைக்குப் பயன்படுத்தும் துறையில் கல்விபயில இங்கிலாந்து சென்றார். 1830 இல் இந்தியாவிற்குத் திரும்பி, தென் ஆற்காடு மாவட்டத்தில் ‘போர்ட்டோ நோவா இரும்புத் தொழிற்சாலை’ (Porto Novo Iron Company) என்ற ஒன்றைத் துவக்கினார்.

கி.பி. 1858 இல் ‘கிழக்கிந்திய இரும்புத் தொழிற்சாலையும் ஏற்படுத்தப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள இரும்புத்தாது தோண்டி எடுக்கப்பட்டது. காவிரிக் கரையிலுள்ள பூலாம் பட்டியில் இரும்புருக்கும் உலைகள் ஏற்படுத்தப் பட்டன. கஞ்ச மலையினின்றும் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புத்தாது 23 கல் தொலைவிலுள்ள பூலாம்பட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவ்வுலைகளில் பிரித்தெடுக்கப்பட்ட இரும்பு மிகவும் உயர்ந்த ரகமானது. துளைப் பாலங் (Tubular bridge) களும், வளைந்து கொடுக்கும் பாலங்களும் (Suspension bridge) அமைக்க அவ்விரும்பு மிகவும் ஏற்றதாக இருந்தது. பூலாம்பட்டி உலைக்கு வேண்டிய கரி (Charcoal) காவிரிக்கப்பால் 18 கல் தொலைவிலுள்ள சோழப்பாடியிலிருந்து பெறப்பட்டது. அவ்விடத்தில் கரியானது நிறைந்த அளவில் அவிக்கப்பட்டுக் காவிரியாற்றின் மூலம் படகுகளில் பூலாம் பட்டிக்கு அனுப்பப்பட்டது. ஒருடன்கரி ரூ 6 க்குப் பெறப்பட்டது. ஆனால் ஒழுங்கான முறையில் கிடைக்கவில்லை. சோழப்பாடியில் கரி அவிக்கும் தொழிலாளர்களுக்குக் காட்டின் தட்ப வெப்ப நிலை ஒத்து வராத காரணத்தால், அடிக்கடி அவர்கள் நோய்வாய்ப்பட்டனர். அதனால் உலைவேலையும் தடைப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சேலம் மாவட்டத்திலுள்ள இரும்புத்தாதுப் படிவங்கள் விரிவான முறையில் வாணிப நோக்கோடு ஆராயப்பட்டன. புதுவிதமான பேருலை (blast furnaces) களை நிறுவி இத்தொழிலை வருவாயுடையதாக ஆக்குவதற்குரிய வழிவகைகளையும் புள்ளிவிவரங்களையும் ஆய்ந்தனர். ஒருடன் இரும்பு உருவாவதற்கு 3 1/2 டன் கரி தேவைப்படும் என்று கணக்கிட்டனர். இவர்களுடைய கணக்குப்படி 1 டன் தூய்மையற்ற இரும்பை உற்பத்தி செய்ய 8 1/2 ஏகர் காடு அழிக்கப்படவேண்டும். 1 டன் தூய்மையாக்கப்பட்ட இரும்பு (wrought iron or steel) உற்பத்தி செய்ய 35 ஏகர் காடு அழிக்கப்பட வேண்டும். எனவே எரிபொருள் தட்டுப்பாட்டால் இரும்புருக்கும் தொழில் சேலம் மாவட்டத்தில் கைவிடப் பட்டது.

கொல்லிமலையிலும் சேலம் மாவட்டத்தின் மற்றப் பகுதிகளிலும் படிந்திருக்கும் இரும்புத்தாது மிகவும் தூய்மையானது. கந்தகக் கலப்பும், பாஸ்பரஸ் கலப்பும் (Sulphur and phospherous) அற்றது. எனவே இதிலிருந்து மிகவும் உயர்ந்தரகமான எஃகு உற்பத்தி செய்ய இயலும். அலெக்சாந்தர் காலத்திலிருந்து மார்க்கோபோலோ காலம் வரையில் நம் நாடு எஃகு உற்பத்தியில் பெயர் பெற்றிருந்தது. சேலம் மாவட்டத்தில் கூட எஃகுத் தொழில் மிகவும் சிறப்புற்றிருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சேலத்தில் வாழ்ந்த [1] அருணாசல ஆசாரியினால் தூய எஃகு கொண்டு செய்யப்பட்ட வேட்டைக் கத்தி (hunting knives) களுக்கும், குத்துக் கோல்களுக்கும் (pig-sticking lances) இந்திய நாடு முழுவதும் நல்ல வரவேற்பிருந்தது. வெள்ளி அல்லது தங்க முலாம் பூசப்பட்ட ‘சிறுத்தைப்பல்’ (Cheetah tooth) என்ற மடக்குக் கத்தி (Pen knives) கள் செய்யும் தொழில் சென்ற சில ஆண்டுகள் வரை சேலத்தில் சிறப்பாக இருந்தது.

இத்தகைய நுண் கலையாற்றல் நிறைந்த சேலம் மாவட்டக் கலைஞர்களின் கைகள் சோர்ந்து கிடக்கின்றன. இரும்புத்தாது பூமிக்கடியில் உறங்குகிறது. ஆனால் இவ்வுறக்கம் இனி அதிக நாள் நீடிக்காது. நெய்வேலி நிலக்கரி, கஞ்சமலை இரும்புக்குத் தஞ்சமளிக்கும். கொல்லி மலை தன் கனிவளத்தைத் தமிழரின் தொழில் வளத்திற்குக் காணிக்கையாக்கும். சேரன் ஆண்ட சே(ர)லத்தில் ஜெம் ஷெட்பூர் உருவாகும்.


வரலாறு:

கொல்லி மலையைப் பற்றிய தொன்மையான வரலாறு கி. பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். அந் நூற்றாண்டில் தமிழகத்தில் வெற்றிக் கொடி கட்டியாண்ட மாவீரன், சேரன் செங்குட்டுவன் என்பதைச் சங்க மருவிய நூல்கள் பறை சாற்றும். கங்கைப் பேரியாறும் இமயப் பெருமலையும் அவன் வெற்றிச் சிறப்பை இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. பேரியாறு மேலைக் கடலில் விழும் இடத்தில் சேரநாட்டின் தலைநகரம் அமைந்திருந்தது. அவ்வஞ்சி நகரில் வீற்றிருந்து எஞ்சியிருந்த நாவலந் தீவை ஆட்சி புரிந்தனர் சேரர். கொங்குநாடும் அதன் வளமிக்க குறிஞ்சியான கொல்லியும் அவர்கள் ஆணைக்குட்பட்டிருந்தன. சேர மன்னர்கள் இளமையிலேயே தங்கள் இளங்கோக்களை அரசியலில் பயிற்றும் வழக்க முடையவர்கள். இளவரசன் மாந்தரஞ் சேரலிரும்பொறை, கொங்கு நாட்டின் கோமானாக அனுப்பப்பட்டான். இவன் செங்கோலையுடையவன், யானையினது பார்வை போலும் நோக்குடையவன். ‘விளங்கில்’ என்னும் ஊரார்க்குப் பகைவரான் வந்த துன்பத்தைத் தீர்த்தோன்; கபிலருடைய நண்பன்; ஒரு காலத்துப் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் கட்டப்பட்டுப் பின்பு அதனை நீக்கிக் கொண்டு புகழ் பெற்றாேன்; சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு போர் செய்தோன்; இவன் பெயர் ‘யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை’ எனவும், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை’ எனவும் வழங்கும். எட்டுத்தொகையுள் ஒன்றாகிய ஐங்குறு நூற்றைத் தொகுப்பித்தோன் இவனே. குறுங்கோழியூர் கிழார், பொருந்தில் இளங்கீரனார், கூடலூர் கிழார் ஆகிய முப்பெரும் புலவரும் இவனைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

சேரநாடு குறிஞ்சிநாடு. குறிஞ்சி நாட்டில் வாழ்ந்த இளங்கோ ஆதலின், கொங்கு நாட்டை ஆளத் தனக்கு ஏற்ற இடமாகக் கொல்லி மலையைத் தேர்ந்தெடுத்து அங்குத் தன் ஆட்சிப் பீடத்தை அமைத்தான். ஆனது பற்றிக் கொல்லித் தலைவன் என்று சங்க நூல்களில் இவன் அழைக்கப்படுகிறான். பின்னாட்களில் சேர அரசிற்கு உரிமை பூண்டு ஒழுகியபோது, கடற்கரை நகரான தொண்டியைத் தன் தலைநகராகக் கொண்டான். ‘கொல்லிப் பொருந’ (பதிற். 73), ‘சேரலற்கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி’ (அகநா. 209), ‘கொல்லியாண்ட குடவர் கோவே’ (சிலப். 24) என்ற அடிகள் கொல்லிமலை சேரர்களுக்கு உரிமையுடையதாக இருந்தது என்பதை விளக்கும்.


ஓரி :

கொல்லிமலைக்குப் பெருங்கிழமை கொண்டவன் ஓரி. இவன் கடைஏழு வள்ளல்களில் ஒருவன். வில்லாற்றலில் சிறந்தவனான இவனை, அச்சிறப்பு நோக்கி ‘வல்வில் ஓரி’ என்று சங்க இலக்கியம் கூறும். இவன் வில்லாற்றலைச் சிறப்பிக்கப் புகுந்த வன்பரணர், ‘யானையைக் கொன்று வீழ்த்தி, பெரிய வாயையுடைய புலியின் உயிர்குடித்து, துளைபொருந்திய கோட்டினைத் தலையிலே உடைய புள்ளிமான் கலையினை உருட்டி, உரல் போலும் தலையுடைய கேழலாகிய பன்றியை வீழச் செய்து, அதற்கருகிலிருந்த ஆழ்தலையுடைய புற்றின் கட்கிடக்கின்ற உடும்பின்கட் சென்று செறியும் வல்வில்’ என்று கூறுகிறார்.

மேலும் கொல்லியின் வளத்தையும் ஓரியின் ஈகையையும் பற்றி அவர் கூறும்போது, 

“… … … வெறுக்கைநன் குடையன்
ஆரங் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்
சார லருவிப் பயமலைக் கிழவன்”
(புறநா. 152)

என்றும்,

“ … … … வேட்டத்தில்
தானுயிர் செகுத்த மானினப் புழுக்கொடு
ஆனுருக் கன்ன வேரியை நல்கித்
தன்மலைப் பிறந்த தாவி னன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச்
சுரத்திடை நல்கியோனே விடர்ச்சிமை
ஓங்கிருங் கொல்லிப் பெருநன்”
(புறநா. 152)

என்றும்,

“மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்
இழையணி யானை இரப்போர்க் கீயும்
… … … …
அடுபோர் ஆனா ஆதன் ஓரி ”
(புறநா. 153)

என்றும்,

“பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வானார்த் தொடுத்த கண்ணியும் கலனும்
யானை இனத்தொடு பெற்றனர்.
(புறநா. 153)

என்றும் பாடி மகிழ்கிறார்.


மற்றாெரு செந்நாப் புலவரான கழைதின் யானை யார்,

“கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ....”

(புறநா. 204)

என்று புகழ்ந்து பாடுகிறார்.


“அடுபோர்ஆனா ஆதன் ஓரி” என்ற புறநானூற்றடியிலிருந்து, இவன் இயற்பெயர் ‘ஆதன்’ என்பதூஉம், குடிப் பெயர் ‘ஓரி’ என்பதூஉம் புலனாம். கொல்லி மலை ஓரிக்குரியதென்பது, “கொல்லியாண்ட வல்வில் ஓரி” (புறநா. 158), “ஓரி, பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகநா. 208) என்ற தொடர்களால் விளங்கும். கொல்லிவாழ் மக்கள், ஓரி வாழ்ந்த இடமாக ஒரு மண்மேட்டைச் சுட்டிக் காட்டி இன்றும் பெருமைப்படுகின்றனர்.

மலையமான் திருமுடிக்காரியும், ஓரியும் சமகாலத்தவர். திருமுடிக்காரி பெண்ணையாற்றங்கரையின் கண் உள்ள ‘மலாடு’ என்று வழங்கும் மலையமானாட்டின் அரசன். கோவலூர் இவனது தலைநகர். கடையேழு வள்ளல்களில் இவனும் ஒருவன். முள்ளூர் மலையையுடையான். இவன் குதிரைக்குக் காரி என்று பெயர். காரிக் குதிரையூர்ந்து திரிந்ததால் இவனும் காரி எனப்பட்டான் போலும். இவன் குறுநில மன்னனாக இருந்தாலும் ஆற்றலும், பயிற்சியும் மிக்க சிறந்த படைக்கு உரிமையுடையவனாக இருந்தான். போர் ஏற்படும் போது பேரரசர்களெல்லாம் இவன் துணையை நாடினர். காரியும் ஓரியும் பகைவர்களாக இருந்து போரிட்டனர் என்ற செய்தி, “காரிக்குதிரைக் காரியொடு மலைந்த, வோரிக் குதிரை ஓரியும்” (சிறுபாண் 110-111) என்ற அடிகளால் புலப்படும். மேலும் சேரனும் ஓரியும் மாறுகொண்ட பொழுது, காரி சேரர் பக்கம் நின்று போரிட்டு ஓரியைக் கொன்று கொல்லி மலையைச் சேரனுக்கு அகப்படுத்தினான் என்பதை, “முள்ளூர் மன்னன் கழல் தொடிக் காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக் கொன்று சேரலற் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகநா. 209) என்ற அடிகளால் அறியலாம்.


மலையாளிகள் :

மலையாளிகள் என்று சொல்லக் கூடிய இவ்வினத்தார், சேர்வராயன் மலை, கொல்லி மலை, கல்ராயன் மலை, பச்சை மலை, சித்தேரி மலை ஆகியவற்றில் வாழும் பழங்குடி மக்கள். சமவெளியில் வாழும் மக்களோடு அதிகத் தொடர்பு கொண்டிராத காரணத்தால் இவர்களுடைய பழக்கவழக்கங்களும் பண்பாடுகளும் சிறிது வேறுபட்டே இருக்கின்றன. பேசும் மொழி தமிழே என்றாலும் சிதைத்துப் பேசுகின்றனர். அவர்கள் எண்ணிக்கை பின் வருமாறு.

ஆத்தூர் வட்டம் 14,000
சேலம் வட்டம் 10,000
ஊத்தங்கரை வட்டம் 10,000
நாமக்கல் வட்டம் 12,000

இம்மலை வாழ் மக்களில் ஒரு சிலர் மலைகளினின்றும் நீங்கி ஓமலூர், ஊத்தங்கரை முதலிய சமவெளி ஊர்களிலும் வாழ்கின்றனர். இம்மலையாளிகளும், மலைக்காய்ச்சலுக்குப் பேர்போன இவர்கள் வாழ்விடங்களும், பழமையில் ஊறிப்போன இவர்கள் பழக்கவழக்கங்களும் நம்மை வியப்பிலாழ்த்துவதோடு மக்களின நூல் ஆராய்ச்சி (Ethnology)க்குரிய பாடங்களாக விளங்குகின்றன. இம்மலையாளிகள், காஞ்சிபுரமே தங்கள் ஆதி ஊர் என்று கூறுகின்றனர். இவர்கள் இம் மலைகளில் குடியேறியது பற்றிக் கர்ண பரம்பரைக் கதையொன்று கூறப்படுகிறது.

பெரியண்ணன், நடுவண்ணன், சின்னண்ணன் என்று பெயரிய மூன்று உடன் பிறந்தார்கள் ஒரு நாள் மூன்று வேட்டை நாய்களோடு வேட்டைக்குச் சென்றனராம். மூவரும் காட்டின் மூன்று பகுதிகளுக்குப் பிரிந்து சென்று வேட்டையாடினர். அப்பொழுது பெருமழை பிடித்து இரண்டு நாள் ஓயவில்லை. அவர்களாலும் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை. ஆனால் அவர்களுடைய நாய்கள் மட்டும் எப்படியோ வீடு சேர்ந்தன. கணவன்மார் இன்றித் தனியே வீடு திரும்பிய நாய்களைக் கண்ட மனைவியர், தங்கள் கணவன்மார் காட்டில் கொடு விலங்குகளால் இறந்துபட்டதாகக் கருதி, அக்காலக்கைம் பெண்களைப் போல் வீடுகளுக்குத் தீயிட்டு அந்நெருப்பில் தாங்களும் வீழ்ந்து மடிந்தனர். மூன்றாம் நாள் மழை விட்டு வீடு திரும்பிய மூன்று சோதரரும், இல்லமும் இல்லக் கிழத்தியரும் வெந்து நீறானதைக் கண்டனர்; வருந்தினர்; ஏங்கி அழுதனர். அவ்வாற்றாமை தணிந்ததும் மூவரும் வேறு மகளிரை மணமுடித்துக் கொண்டனர். பெரியண்ணன் ஒரு கைக்கோள மாதைக் கடிமணம் புரிந்து கொண்டு, கல்ராயன் மலையில் குடி புகுந்தான். நடுவண்ணன் ஒரு வேடர்குல மகளை மணந்து கொண்டு பச்சை மலையில் வாழச் சென்றான். சின்னண்ணன் தேவேந்திரப் பள்ளர் குலத்தில் பெண்ணெடுத்துக் கொண்டதோடு, கொல்லிமலையை வாழ்விடமாகக் கொண்டான். இம்மூவரின் வழிவந்தோரே பெரிய மலையாளிகள் என்றும், பச்சை மலையாளிகள் என்றும், கொல்லி மலையாளிகள் என்றும் மூன்று பிரிவினராக வாழ்கின்றனர்.


பிரிவுகள் :

மணமுறையின் அடிப்படையில் பல பிரிவு (exogamous clans) களாகப் பிரிந்து இவர்கள் வாழ்கிறார்கள். அப்பிரிவுகளுக்கு ‘வகுப்புகள்’ என்று பெயர். இவ்வகுப்புகளில் சிலவற்றை ஒன்று சேர்த்துத் ‘தாயாதி வகுப்பு’ என்று வழங்குகின்றனர். இத்தாயாதி வகுப்பினர் தங்களை, ‘அண்ணன் தம்பியர்’ என்று அழைத்துக் கொள்கின்றனர். ஒரு தாயாதி வகுப்பினர் தங்களுக்குள் பெண்ணெடுத்துக் கொள்ளும் வழக்கமில்லை. வேறு தாயாதி வகுப்பிலேயே பெண் கொள்வர். எடுத்துக்காட்டாகச் சித்தூர் நாட்டிலுள்ள மலையாளிகள் ஏழு வகுப்புகளாகப் பிரிந்து வாழ்கின்றனர். அவர்களில் ஐந்து வகுப்பினர் (பீலன், மூக்காண்டி, பூசன், மாணிக்கன், திருவிச்சி) ஒரு தாயாதி வகுப்பினராகவும், எஞ்சியுள்ள இரண்டு வகுப்பினர் (கண்ணன், தில்லான்) வேற்றுத் தாயாதி வகுப்பினராகவும் கருதப்படுகின்றனர். இவ்விரண்டு தாயாதி வகுப்பினரில் முன்னவர் பின்னவரிடத்தும், பின்னவர் முன்னவரிடத்துமே பெண் கொள்ளலாம். புலி நாட்டைச் சேர்ந்த மாட்டாயன், இமையாண்டி, கண்ணாதன், அலாத்தி, புன்னன் என்ற ஐந்து கூட்டத்தாரும் ஒரு தாயாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள். மூனூர் மலையாளிகளில் கோனான் வகுப்பார், மேற்கூறிய திருப்புலி நாட்டு முதல் மூன்று வகுப்பாரிடமும் பெண் கொள்ளமாட்டார்கள். பின்னிரு வகுப்பாரிடம் பெண் கொள்ளுவார்கள். பச்சைமலையாளிடையே ஐம்பது வகுப்புக்கள் உண்டு. அவ்வைம்பது வகுப்பாரும் எட்டுத் தாயாதிக் கூட்டங்களாகப் பிரிந்து வாழ்கின்றனர். இவ்வகுப்புக்களெல்லாம் பழமையானதும் வேடிக்கையானதுமான பெயர்களைத் தாங்கி , மொழியாராய்ச்சியாளரின் எண்ணத்தை ஈர்க்கின்றன.


வாழ்க்கை முறை :

சின்னண்ணன் வழிவந்த கொல்லி மலையாளிகள் பழமை விரும்பிகள்; ஒழுங்கு படுத்தப்பட்ட அமைப்புக்குட்பட்டவர்கள். இவர்கள் நாமக்கல், ஆத்தூர் வட்டங்களிலுள்ள கொல்லி மலையிலும், போத மலையிலும், போத மலைக்கும் ஜெருகுமலைக்கும் இடைப்பட்ட பள்ளத்தாக்கிலும், பால மலையிலும், பருகூர் மலையிலும், காளி மலையிலும் வாழ்கின்றனர். கொல்லி மலையில் இவர்கள் நான்கு பிரிவினராகப் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களில் முதல் இரண்டு பிரிவினரான முந்நாட்டு மலையாளிகளும், நானாட்டு மலையாளிகளும் முறையே நாமக்கல் வட்டத்தில் உள்ள சேலூர், வேலப்பூர் என்ற இடங்களில் பெரும்பாலும் வாழ்கின்றனர். மற்ற இரண்டு பிரிவினரான அஞ்சூர் (ஐந்து ஊர்) மலையாளிகளும், மூனூர் (மூன்று ஊர்) மலையாளிகளும் ஆத்தூர் வட்டத்திலே வாழ்கின்றனர். அஞ்சூர் மலையாளிகள் பயில், திருப்புலி, எடப்புலி, பிறகரை, சித்தூர் நாடுகளில் 7000 பேர் வாழ்கின்றனர். மூனூர் மலையாளிகள் குண்டுனி, அலத்தூர், பலாப்பாடி நாடுகளில் 1500 பேர் வாழ்கின்றனர். அஞ்சூர் மலையாளிகள் பயில் நாட்டைச் சேர்ந்த ‘பெரிய பட்டக்காரனின்’ ஆணைக்கு அடங்கியவர்கள். இப் பட்டக்காரன் பதவி ஒரே குடியில் தலைமுறையாக (Heriditory) வருவது. ஆனால் அரசன் என்று அவன் அழைக்கப்படுவதில்லை. அரசனுக்குரிய அங்கங்களும் அவனுக்குக் கிடையாது.

பல சிற்றூர்கள் சேர்ந்து ஒரு நாடு ஆகும். ஒவ்வொரு ஐந்து ஊர்களும் சேர்ந்து ‘ஊர்க் கவுண்டன்’ என்ற ஒருவனைத் தேர்ந்தெடுக்கும். ஒவ்வொரு ஊரிலும் வாழும்படியான ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு காரியக்காரன் உண்டு. இவனும் தேர்ந்தெடுக்கப்படுபவனே. ஏதாவது ஒரு ஊரில் சாதிச் சண்டை ஏற்பட்டால், ஊர்க் கவுண்டன் சண்டை ஏற்பட்ட ஊரிலுள்ள எல்லாக் காரியக்காரரையும் அழைத்துப் பேசித் தீர்த்து வைப்பது வழக்கம். அவ்வழக்கில் சம்பந்தப்பட்டோர் மேல் வழக் (Appeal) காட விரும்பினுல், பயில் நாட்டுப் பட்டக்காரனிடம் செல்ல வேண்டும். அப்பட்டக்காரன் அவ் வழக்குச் சம்பந்தப்பட்ட ஊரைச் சேர்ந்த ஊர்க் கவுண்டனையும், பயில் நாட்டு ஊர்க் கவுண்டனையும் கூட்டிவைத்துப் பேசித் தீர்ப்பது வழக்கம். எல்லாக் காரியக்காரர்களும், இவ்வழக்கு மன்றத்துக்கு வர வேண்டுமென்பதில்லை. ஆனால் குறைந்தது மூன்று பேராவது இருந்தால்தான் வழக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மூனூர் மலையாளிகளிடையே வழக்கு ஏற்பட்டால், அவ்விடத்தைச் சேர்ந்த ஊர்க் கவுண்டன் வழக்கின் தன்மையை வேலப்பூரிலிருக்கும் நானாட்டு அரசருக்குத் தெரிவிப்பது வழக்கம். அவ்வரசர் வழங்கும் தீர்ப்பே முடிவானதாகும். போதமலையிலும் அதற்கடுத்தாற்போலுள்ள பள்ளத்தாக்கிலும் வாழும்படியான கொல்லி மலையாளிகள் கீழூரிலிருக்கும் ‘நாட்டான்’ என்ற தலைவனின் ஆணைக்குட்பட்டவர்கள். பவானி வட்டத்திலிருக்கும் கொல்லி மலையாளிகளும் இவன் ஆணைக்குட்பட்டவர்களே. ஆனால் இவனுடைய தீர்ப்பில் திருப்தியடையாதவர்கள் பயில் நாட்டுப் பெரிய பட்டக்காரனிடம் நீதி கேட்டுச் செல்வதுண்டு. வேலப்பூர் அரசன் இளைஞனாக இருந்தால், அவன் தாயாகிய இராணி மந்திரியின் துணைகொண்டு ஆட்சி செலுத்துவதுண்டு.

பச்சை மலையாளிகள் மூன்று நாட்டினராகப் பிரிந்து வாழ்கின்றனர். முதல் இரு நாடுகளான வெண்ணாடும், தென்புற நாடும் திருச்சி மாவட்ட எல்லையில் உள்ளன. மூன்றாவது நாடான அத்தி நாடு, ஆத்தூர் வட்டத்திலுள்ள பச்சை மலையில் உள்ளது. பச்சை மலையாளிகள் இன்னும் ஆத்தூர் வட்டத்திற்கப்பால், தும்பல் பள்ளத்தாக்கிலும், வசிட்ட நதிப் பள்ளத்தாக்கின் உச்சியிலும், அரனூத்து மலையிலும், மஞ்சவாடிக் கணவாயிலும், சேர்வராயன் மலையின் மேற்கு அடிவாரத்திலுள்ள கஞ்சேரி, பாலமேடு என்னும் சிற்றூர்களிலும், தொப்பூர் ஆற்றுக்கரையிலுள்ள வேப்பாடியிலும் வாழ்கின்றனர்.

சாதி நிர்வாகத்திற்காக இவர்கள் பலதுணை நாடுகளாகவும் கரை அல்லது தமுக்குகளாகவும் பிரிந்து வாழ்கின்றனர். எடுத்துக்காட்டாகப் பச்சை மலையிலுள்ள நல்லியக் கவுண்டன் நாடு, காளத்திக் கவுண்டன் நாடு, பச்சை மலைக்கு மேற்கிலுள்ள மண்மலை நாடு, பைத்தூர் நாடு என்பன குறிப்பிடத்தக்கவை. தும்பல் பள்ளத்தாக்கில் உள்ள மாமஞ்சியிலும், அரனூத்து மலையிலுள்ள ஆலடிப்பட்டியிலும், பேளூருக்கு வடக்கில் வசிட்ட நதிப் பள்ளத்தாக்கில் உள்ள கீரிப்பட்டியிலும், கரமண்டையிலும், சேர்வராயன் மலைச் சரிவுகளிலுள்ள ஊர்களிலும், மஞ்சவாடிக் கணவாய்க்கு வடக்கிலுள்ள தொம்பக்கள்ளனூர், பட்டுக்குணம் பட்டி என்ற ஊர்களிலும் நாட்டான் என்பவனைத் தங்கள் தலைவனாய்ப் பச்சை மலையாளிகள் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு துணை நாடும் பல பட்டிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பட்டியும், அவ்வூர்க் கவுண்டனின் ஆணைக்குட்பட்டிருக்கும். அவ்வூர்க் கவுண்டனுக்கு மூப்பன் என்று பெயர். அவனுக்குத் துணையாகக் கங்காணி என்ற தலைவனும் உண்டு. ஒவ்வொரு துணை நாட்டிற்கும் ஒரு தலைவனுண்டு. அவனை நாட்டான் என்று அழைப்பர். அவனுக்கு நாட்டுக் கவுண்டன், குட்டிக் கவுண்டன் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஒவ்வொரு நாட்டானுக்கும் துணையாகப் பல காரியக் காரர்களுண்டு. அவர்களைப் பணியில் அமர்த்தும் அதிகாரம் நாட்டானுடையது. இந் நாட்டான் ஏழு சின்னதுரைகளடங்கிய அவையின் அதிகாரத்துக்கு உட்பட்டவன். இந்த அவையின் தலைவனுக வீற்றிருப் பவன் பெரியதுரை. இவனை ராஜா என்றும் சில சமயங்களில் குறிப்பிடுவதுண்டு. இவன் வாழ்விடம் பச்சை மலையிலுள்ள சேதகம். இத் துரைமார்களுக்குப் பல பேரமைச்சர்களுண்டு. ஆனல் அவ்வமைச்சர்களின் அதிகாரம் மிகவும் குறைவுதான். இவ்வமைச்சர்கள் பச்சை மலையிலுள்ள பக்கலத்திலும், பைத்தூரிலும், கீரிப்பட்டியிலும் வாழ்கிறார்கள். பைத்தூர் அமைச்சன் பன்னிரண்டு கரை மக்களாலும், கீரிப்பட்டி அமைச்சன் ஆறு கரை மக்களாலும் ஏற்றுப் போற்றப்படுவான். பைத்தூர் அமைச்சன் பக்கலம் அமைச்சனைத் தன் ஆணைக்கடங்கியவகைக் கருதுவதுண்டு.

பெரிய மலையாளிகள் கல்வராயன் மலையிலும், சேர்வராயன் மலையிலும், சித்தேரியிலும் வாழ்கின்றனர். இவர்களைக் கல்ராயர் என்றும் கூறுவர். இவர்கள். தங்களைக் காராளர் என்ற வேறு பெயராலும் குறிப்பிடுகின்றனர். 'காராளர்' என்ற பெயர் மலையாளத்தின் மற்றொரு பெயரான 'கேரளம்' என்பதனோடு தொடர்புடையது என்று சிலர் கருதுகின்றனர். மலையாளிகளின் ஒருசில பழக்க வழக்கங்கள் கேரள மக்களின் பழக்க வழக்கங்களை ஒத்திருப்பதால் அவ்வாறு கருதுகின்றனர் போலும். காராளர் என்ற சொல்லின் ஆட்சி 'உழவர்' என்ற பொருளில் பண்டைத் தமிழ் நூல்களில் மலிந்து காணப்படுகின்றது. கம்பர் கூட, "கார் நடக்கும்படி நடக்கும் காராளர் தம்முடைய ஏர் நடக்கும் எனின் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்'- என்று கூறுகிறார். இப் பெரிய மலையாளிகள் கள்ளக்குரிச்சி வட்டத்தில் 22,000 பேரும், ஆத்தூர் வட்டத்தில் 12,000 பேரும் வாழ்கின்றனர். இம்மலையாளிகள் ஐந்து தலைவர்களால் பண்டை நாளில் இங்குக் குடியேற்றப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இப் பகுதிகள் ஐந்து ஜாகீர்களாகப் பிரிக்கப்பட்டு, இன்றும் அவர்கள் வழி வந்தோரால் ஆளப்படுகின்றன. இத் தலைவர்களின் உரிமை பரம்பரையானது. இந்த ஜாகீர் ஒவ்வொன்றும் பல சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இக் கல்ராயர்கள் சேர்வராயன் மலையிலுள்ள மலையாளிகளோடு மணத்தொடர்பு கொள்வதில்லை. தொலைவும், வகுப்புப் பிரிவும் காரணங்களாக இருக்கலாம். சேர்வராயன் மலையிலுள்ள பெரிய மலையாளிகள் மூன்று பிரிவினர்களாக வாழ்கின்றனர். சேல நாடு, மொக நாடு, முத்து நாடு என்பவையே அப் பிரிவுகள். ஒவ்வொரு பிரிவும் ஒரு பட்டக்காரனின் ஆணைக்கு உட்பட்டது. ஒவ்வொரு பிரிவும் ஒன்பது பட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பட்டியும் மூப்பன் என்ற தலைவனின் ஆணைக்கு அடங்கியது. ஒவ்வொரு மூப்பனும் அப்பட்டியிலுள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறான், ஒவ்வொரு பட்டக்காரனுக்கும் துணையாக மணியக்காரர்களும், மூப்பர்களுக்குத் துணையாகக் கங்காணிகளும் உள்ளனர். சித்தேரியிலுள்ள 'குரு' சேர்வராயன் மலையிலுள்ள மூன்று நாட்டுப் பெரிய மலையாளிகளாலும் போற்றி மதிக்கப்படுகிறார்.

பார்ப்பனப் புரோகிதர்கள் மலையாளிகளுக்குக் கிடையாது. மேற்கூறிய சாதித் தலைவர்களே மற்ற பொறுப்புக்களோடு, திருமணம் முதலிய சடங்குகளையும் முன்னின்று நடத்துகின்றனர். ஆனால் பவானி வட்டத்திலுள்ள கொல்லி மலையாளிகள் மட்டும் ஓர் அய்யங்காரைக் குருவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். பட்டக்காரர்களும், துரைகளும் மலையாளிகளால் பெரிதும் மதிக்கப்படுகின்றனர். இவர்களைக் காண்போர் எதிரே குப்புற விழுந்து வணங்குவர்.

மலையாளிகளும் கேரளத்தாரும் :

இம் மலையாளிகளைப் பற்றிய கதை காஞ்சீபுரத்தோடு தொடர்பு கொண்டிருந்தாலும், இவர்களுடைய பழக்க வழக்கங்கள் மலையாள நாட்டு மக்களோடு தொடர்புடையனவாக இருக்கின்றன. ஆகையினால் இவர்கள் மலையாளத்திலிருந்து இம் மலைகளில் வந்து குடியேறியவர்களாகக் கருதப்படுகின்றனர். ஆனால் இவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள 'கல்ராயன் கல்வெட்டு'களில் இக் குடியேற்றத்தைப் பற்றி எச் செய்தியும் காணப்படவில்லை. இவர்களுடைய பழக்க வழக்கங்களில் ஒருசில, கேரளத்தாரின் பழக்க வழக்கங்களோடு ஒத்திருப்பதால் இவர்கள் கேரளத்தாரே என்று நாம் கூறிவிட முடியாது. அப்பழக்கங்கள் பின் வருமாறு:

(1) கொல்லி மலையிலுள்ள சிறுவர்களும் சிறுமிகளும் முன் குடுமி வைத்திருப்பர். தலையின் மற்ற பாகங்களை மொட்டையடித்து விடுவர். மலையாளக் கடற்கரையில் வாழும் இந்துக்கள் இப் பழக்கத்தைப் பெரும் அளவு கடைப்பிடித்து வருகின்றனர். கொல்லி மலைச் சிறுவர்கள் பன்னிரண்டாம் வயது முடிந்த பின், முன் குடுமியை எடுத்துவிட்டுத் தமிழகத்தின் கீழ்க்கரையில் வாழும் மக்களைப்போல் குடுமி வைத்துக் கொள்கின்றனர். பருவம் எய்தியதும் கொல்லிச் சிறுமியரும் முன் குடுமியை நீக்கிவிட்டுத் தலை முழுதும் நீண்ட கூந்தல் வளர்க்கின்றனர். பச்சை மலையாளிகளிடமும் இப் பழக்கம் உண்டு . ஆனால் சிறுமியர் பருவம் எய்தும் வரையிலும் முன் குடுமியை நீக்க அவர்கள் காத்திருப்பதில்லை.

(2) கொல்லி மலையிலுள்ள பெண்கள் வெண்மையான பருத்தி ஆடையை, மார்பை மூடி அக்குளில் படியுமாறு சுற்றிக் கட்டுகின்றனர். அவ்வாடை முழு உடலையும் மறைத்துக்கொண்டிரா விட்டாலும் முழந்தாளுக்கும் சற்றுக் கீழே தொங்கிக் கொண்டிருக்கும். இப் பழக்கத்தைக் கேரளத்தில் காணலாம். பச்சை மலையாளப் பெண்களும், பெரிய மலையாளப் பெண்களும் சமவெளியில் வாழ்பவர்களைப் போலவே வண்ணப் புடவை யணிகின்றனர்.

(3) கொல்லி மலைப் பெண்கள் தங்கள் ஆடையினுள்ளே 3 முழ நீளமும் 1 அடி அகலமுமுள்ள வெண்மையான துணி (Loin - cloth) ஒன்றையும் அணிகின்றனர். அதை எந்தப் பயன் கருதியும் அணிவதில்லை. அழகுக்காகவே அணிகின்றனர். கேரள நாட்டில் வாழும் பெண்களுக்கு இத்துணி மிகவும் எடுப்பான தோற்றத்தை அளிக்கிறது. கொல்லிமலைப் பெண்களைப்போலவே இத்துணியை மற்ற இருசாதி மலையாளப் பெண்களும் தங்கள் புடவைகளுக்குள் அணிகின்றனர், திருவாளர் கிருஷ்ணசாமி ஐயங்கார், கேரளத்திலுள்ள. இப்பழக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, "இரண்டு துண்டுத் துணிகள் எல்லாப் பெண்களாலும் பண்டை நாளில் பயன்படுத்தப்பட்டு வந்தன, ஆனால் இப் பழக்கம் எப்பொழுது மாறியது என்று தெளிவாகத் தெரியவில்லை. சமஸ்கிருத இலக்கியங்களில் இப் பழக்கத்தைப் பற்றி நான் பல தடவை படித்திருப்பதால் இது ஆரியப் பண்பாடு என்று கருதுகிறேன். ஆனால் இப் பழக்கம் பரவலாகக் கேரளக் கடற்கரையில் காணப் படுகிறது“ என்று கூறுகிறார்.

(4) பெரிய மலையாளிகளும் பச்சை மலையாளிகளும் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கத்தை அனுமதிக் கின்றனர். ஆனால் கொல்லி மலையாளிகள் இதை அறவே வெறுக்கின்றனர். பச்சை குத்திக் கொண்ட யாரையும் தங்கள் வீட்டிற்குள் இவர்கள் நுழைய விடுவதில்லை. இதனுடைய உண்மையான காரணம் என்னவென்று புரியவில்லை. கொல்லி மலையாளிகளைப் போலவே கேரளக் கடற்கரையில் வாழ்வோரும் பச்சை குத்திக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்வதில்லை. பச்சை மலையாளிகளின் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம், நடுவணணன் திருமணம் செய்து கொண்ட வேடச்சியினிடமிருந்து வழி வழியாக வந்ததாகக் கூறுகின்றனர்.

(5) பூப்பெய்திய மலையாளப் பெண், ஒரு திங்கள் அளவும் தனியிடத்தில் ஒதுக்கி வைக்கப்படுகிருள். கேரள நாட்டிலும் இவ்வாறே. சமவெளியில் வாழும் மக்கள் இவ்வாறு நீண்ட நாள் ஒதுக்கி வைப்பதில்லை. இப்பொழுது இந் நாட்களின் அளவு மலையாளிகளிடையே குறைந்து வருகிறது.

(6) கொல்லிமலைப் பெண்கள் தங்கத்தால் செய்த வட்ட வடிவமான ஒரு நகையைக் காதில் அணிகின்ற னர். வேறு உலோகத்தால் செய்து, தங்க முலாம் பூசியும் அணிந்து கொள்கின்றனர். இதன் விட்டம் 1 அங்குலமோ அல்லது 1; அங்குலமோ இருக்கும். இதை அணிந்து கொள்வதற்காகக் காதில் பெரிய துளை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந் நகை கேரளத்தில் வாழும் நாயர் மகளிர் அணியும் தோடாக்களை உருவத்தில் ஒத்திருக்கிறது.

சமவெளியிலுள்ள மக்களிலிருந்து மலையாளிகளைத் தனியாகப் பிரிக்கும் இப் பழக்க வழக்கங்கள், அவர்களுடைய முன்னோர்களான கேரளத்தாரிடமிருந்து பெறப்பட்டவையே என்று எல்லாரும் கருதுகின்றனர். மற்ற மலையாளிகளைவிடக் கொல்லி மலையாளிகள் தங்களுடைய பரம்பரைப் பண்பாடுகளினின்றும் மாறு படாதவர்களாகவே காணப்படுகின்றனர். மேற்கூறிய பழக்க வழக்கங்களைவிட, இவர்கள் கடைப்பிடித்து வரும் மண முறைகளும், பல ஆடவர்களை ஒரு பெண் கணவராக ஏற்றுக்கொள்ளும் முறை (Polyandry) யும், கேரள மக்களோடு இவர்களை நெருங்கிய தொடர்புடையவர்களாக ஆக்குகின்றன. ஏனென்றால் பல கணவர் கொள்ளும் இம்முறை நாயர்களிடமும், அவர்களைச் சார்ந்த இனத்தாரிடமும் இன்றும் அருகிக் காணப்படுகின்றது.

மேனரீகம் :

மேனரீகம் என்பது தமிழ் நாட்டிலும், ஆந்திர நாட்டிலும் பரவலாகக் காணப்படும் ஒரு வகை மண முறை. ஓர் இளைஞனுக்கு, அவனுடைய தாய் மாமன் மகளே ஏற்ற மணப் பெண்ணாகக் கருதப்படுகிறாள். தாய் மாமன் வீட்டில் பெண்ணில்லையென்றால் அத்தை மகள் மணத்திற்கு உரியவளாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். சில சாதியாரிடையே உடன்பிறந்த தமக்கையின் மகளை மணக்கும் உரிமை போற்றப்படுகிறது. இம் முறைகளின்படி மணக்கும் பெண்ணை 'உரிமைப் பெண்' என்பர். அதுவும் நிறைந்த செல்வத்தோடும் நிலபுலன்களோடும்வந்து கணவன் பொருளாதாரத்தை உயர்த்துபவளாக இருந்தால் அவளைப் 'பெருமைப் பெண்' என்றும் கூறுவர். இம் முறைகளை மீறிப், பெண் கொடுக்கவோ அல்லது பெண் எடுக்கவோ யார் மறுத்தாலும் அச் செயல் பெருங் குற்றமாகக் கருதப்படும். இக் குற்றத்திற்காகச் சாதியை விட்டுக்கூட விலக்கி விடுவதுண்டு.

மலையாளிகள் இம் மேனரீக முறையை மிகவும் தீவிரமாகக் கடைப் பிடிக்கின்றனர். சில சமயங்களில் இம் முறை விபரீதமாகக்கூடத் தோன்றும். உரிமைப் பெண்ணானவள் குல வழக்கப்படி அவளுக்கென்று குறிப்பிடப்பட்ட மணமகனைவிட மிகவும் வயதில் முதிர்ந்தவளாக இருப்பதும் உண்டு. நான்கைந்து வயதுடைய இளைஞர்களுக்குப் பருவ மெய்திய மங்கையரைத் திருமணம் செய்து வைப்பார்கள். அப்போது மணமகனுடைய தந்தை, தானே பொறுப்பேற்றுக் கொண்டு வம்சவிருத்தி செய்வதுண்டு. தன் மகன் வயதுக்கு வந்ததும் அப் பொறுப்பை அவனிடம் விட்டு விடுவது தந்தையின் கடமை. பொறுப்பேற்றுக் கொண்ட மகன், தன் தந்தையின் வழியைத் தானும் கடைப் பிடிப்பான். ஓர் இளம் மணமகனுக்குத் தந்தை இல்லை என்றாலோ, அல்லது தந்தை இருந்தும் அவன் மருமகளின்பால் அக்கறை கொள்ளாதவனாக இருந்தாலோ, தந்தையின் உடன்பிறந்தவனோ அல்லது நெருங்கிய உறவினன் ஒருவனோ இப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள அழைக்கப்படுவது வழக்கம். இவ் வழக்கத்தைப்பற்றி மலையாளிகள் இப்பொழுது குறைவு பட எண்ணுகின்றனர். இதை ஓரளவு எதிர்த்தும் வருகின்றனர். முன் நாட்களில் இது பெரு வழக்காக இவர்களிடம் பரவியிருந்தது.

திருமணம் :

மலையாளிகளின் திருமணம் சமவெளியிலுள்ளோரின் திருமணத்தினின்றும் சிறிதே மாறுபடுகிறது. திருமணத்திற்குமுன் 'வெற்றிலை பாக்குப் பிடித்தல்' என்ற ஒரு பழக்கமுண்டு. இதை வடமொழியில் 'நிச்சயதார்த்தம்' என்பர். திருமண ஒப்பந்தமே இச் சடங்கு. ஊர்க் கவுண்டன் முன்னிலையில் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும்கூடி இவ் வொப்பந்தத்தை முடிப்பர். இரு வீட்டாரும் வெவ்வேறு ஊர்களைச் சார்ந்தவராக இருப்பின் அவ்விரண்டு ஊர்களின் ஊர்க் கவுண்டர்களும் அவ்விடத்தில்கூடி இதை நடத்தி வைப்பர். பட்டக்காரனின் அனுமதி பெற்றே இதைச் செய்ய வேண்டும்.

மணப் பெண்ணுக்கு விலையாகப் பரிசம் வாங்கும் வழக்கம் இவர்களிடம் உண்டு. அது அவரவர்களின் தகுதிக்கேற்பக் குறைத்தோ கூட்டியோ பெறப்படும், பிள்ளை வீட்டார் பணமாகவும், பொருள்களாகவும் இதை அளிப்பர். ஊத்தங்கரை வட்டத்திலுள்ள பச்சை மலையாளிகளின் பெண்ணுக்குப் பரிசமாக நான்கு கண்டகம் தானியமும், நான்கு பகோடா ( ரூ. 14)க்களும், கன்றோடு ஒரு பசுவும் கொடுக்க வேண்டும். மற்ற இடங்களிலுள்ள மலையாளிகள் ரூ. 10-லிருந்து ரூ. 50 வரை பரிசம் கொடுக்கின்றனர். மணச் சடங்குகளை நடத்தி வைக்கும் ஊர்க்கவுண்டர் முதலியவர்களுக்குக் கட்டணமாக ரூ. 10-8-0 அளிக்க வேண்டும். ஆனால் சில ஏழைகளால் இப் பூராத் தொகையையும் கொடுக்க முடியாது. அப்போது இத் தொகையின் ஒரு பகுதியை மட்டும் கொடுப்பர். மீதியைப் பட்டக்காரன் கொடுத்து விடுவான். ஆனால் பல தவணைகளில் பட்டக்காரனுக்கு அப் பணத்தைக் கொடுத்துவிட வேண்டும். இக்கடன் ஆண்டுக் கணக்காக நீண்டு செல்வதுமுண்டு. பெற்றோர் தம் திருமணத்தின்போது பட்ட இக் கடனை, மக்கள் தோன்றிப் பட்டக்காரனுக்குத் தீர்ப்பதுண்டாம். ஒரு கிழவன் குமரியைத் திருமணம் செய்து கொள்ள நேரிட்டால், நிறையப் பரிசம் கொடுக்க வேண்டும்.

பச்சை மலையில் வாழ்வோர் மணமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை யன்று நலுங்கு வைப்பர். புதன் கிழமையன்று இரு வீட்டின் முன்னும் பந்தல்கள் போடப்படும். வியாழக்கிழமை பெண் வீட்டில் திரு மணம் நடைபெறும். பொதுவாக மலையாளிகளின் திருமணம் மாப்பிள்ளை வீட்டிலேயே நடைபெறும். பெண் வீட்டிலும், மாப்பிள்ளை வீட்டிலும் மூன்று புதுப் பாத்திரங்களை ஒன்றின்மேல் ஒன்று அடுக்கிக் கலசம்போல் வைத்து, புதன்கிழமை இரவு விநாயகர் கோயிலுக்கு எடுத்துச் சென்று வணங்குவர். அப்போது தாம்பூலம் எல்லாருக்கும் வழங்கப்பட வேண்டும். இம் மரியாதை மிகவும் கண்டிப்போடு எதிர்பார்க்கப்படுகிறது. இத் தாம்பூலத்தில் பெரிய துரை ஐந்து பங்கும், மற்ற துரைகள் ஒவ்வொருவரும் நான்கு பங்கும், மந்திரிகள் ஒவ்வொருவரும் மூன்று பங்கும், குட்ட கவுண்டன் இரண்டு பங்கும், மூப்பன் ஒரு பங்கும் பெறுவது வழக்கம். இச் சடங்கு முடிந்ததும் மணமகன் மணமகளுக்குக் கூறை பரிசளிப்பது வழக்கம். இது கருப்புக் கரையிட்ட வெள்ளைச் சேலையாகவோ அல்லது சிவப்புச் சேலையாகவோ இருக்கும். இதனுடைய நீளம் 12 முழத்திலிருந்து 17 முழம் உடையதாகவும், அகலம் இரண்டு அல்லது மூன்று முழம் உடையதாகவும் இருக்கும், ஆனால் பெரிய மலையாளிகள் மட்டும் 3 அல்லது 4 முழமுள்ள கூறை அளிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. கொல்லி மலையில் மணப் பெண் விடியற் காலத்தில் ஏழு மணிக்கு முன்பாக மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். திருமணச் சடங்குகள் அங்கு நடைபெறும்.

மணமகன் தாலியை மணமகளின் கழுத்தில் வைத்ததும், பின்னால் நின்று கொண்டிருக்கும் ஊர்க் கவுண்டன் அதைக் கட்டுவது வழக்கம். பிறகு மணமகனின் கையைப் பெண்ணின் கையில் வைத்து, ஊர்க் கவுண்டன் தாரை வார்த்துக் கொடுப்பான். ஆனால் பெரிய மலையாளிகளின் வழக்கம் இதனின்றும் மாறுபட்டது. 'கணியான்' என்பவன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவான். மணமகளின் கலவிக்குக் கணியான் முதல் உரிமை பெற்றவனாகக் கருதப்படுகிறான். (கேரளத்தில் தடக்கும் தாலி கட்டுக் கலியாணங்களில் 'மணவாளன்' என்பவன் 'கணியான்' செய்யும் வேலைகளைச் செய்கிறான்). இப் பழக்கம் மற்ற மலையாளிகளால் முறை கெட்டதாகக் கருதப்படுகிறது.


மணவிலக்கும் மறுமணமும் :

பெரிய மலையாளிகள் மணவிலக்கு {divorce) முறையை அனுமதிப்பதில்லை. ஆனால் கொல்லி மலையாளிகளிடம் மணவிலக்குச் செய்து. கொள்ளும் பழக்கம் உண்டு. ஆனால் மணவிலக்கின் போது எல்லாக் குழந்தைகளையும் (வேறு கணவனுக்குப் பிறந்தவைகளாய் இருந்தாலும் சரி) கணவனிடம் ஒப்படைத்து விடவேண்டும்.

பச்சை மலையாளிகள் ரூ 25 ஒறுப்புத் தொகை (Fine) யாகப் பெற்றுக் கொண்டு மணவிலக்கு அளிப்பர். இது சமவெளியிலிருந்து கற்றுக் கொண்ட பழக்கம். ஒரு பச்சை மலையாளி மணவிலக்குப் பெறவிரும்பினால் அதைக் குருவின் முன்னிலையில் கூற வேண்டும். மண விலக்கிற்கு அறிகுறியாக ஒரு வைக்கோல் துண்டையோ அல்லது மரத்துண்டையோ, கணவன் மனைவியிடம் கொடுப்பான். மணவிலக்குப் பெற்ற பெண் முன்னாள் கணவன் இறந்த பிறகே மறுமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறாள். கைம்பெண் மணம் {Widow remarriage) எல்லா மலையாளிகளிடையிலேயும் காணப்படுகிறது. கொல்லி மலையாளிகள், கணவனின் உடன் பிறந்தானை மணக்க எந்தக் கைம்பெண்ணையும் அனுமதிப்பதில்லை. பச்சை மலையாளிகளிடம் இக் கட்டுப்பாடு கிடையாது.

கொல்லி மலையாளிகளிடையே கைம்பெண் மணம் நடந்தால் மணப் பெண்ணும் மணமகனும் எதிரெதிரில் முழந்தாளிட்டு உட்கார்ந்து கொள்ள வேண்டும். நடுவில் ஒரு திரையிடப்படும். மணமகன் தாலியைத் திரையினடியில் கொண்டுவந்து பெண்ணின் கழுத்தில் வைப்பான். ஊர்க்கவுண்டன் தாலியைக் கட்டிய பிறகுதான் மணமகன் பெண்ணின் முகத்தைப் பார்க்க முடியும். மறுமணத்தின் போது, கைம் பெண்ணானவள் தன் முதல் கணவனுக்குப் பிறந்த குழந்தைகளை, அவன் உடன் பிறந்தாரிடமோ அல்லது நெருங்கிய உறவினரிடமோ ஒப்படைத்துவிட வேண்டும். தந்தையின் சொத்துக்களெல்லாம் அக் குழந்தைகளுக்குப் பட்டா செய்யப்படும். அல்லது முன் கூட்டியே பட்டா செய்யப்பட்டிருக்கும். அச் சொத்துக்களை இரண்டாம் கணவன் அனுபவிப்பதைத் தடுக்கவே இம் முறையைக் கையாளுகின்றனர்.

பூப்பெய்தல் :

ஒரு பெண் பூப்பெய்தியதும், அவளை வீட்டிலிருந்து விலக்கித் தனியிடத்தில் வைப்பது மலையாளிகளின் வழக்கம். 30 நாட்கள் விலக்கு நாட்களாகக் (Pollutionperiod) கருதப்படும். ஆனால் சமவெளியிலுள்ள மக்களைப் பார்த்து இவர்களும் இப்போது அந்நாட்களைக் குறைத்துக் கொண்டு வருகின்றனர். பச்சை மலையாளிகள் ஒரு பெண் பூப்பெய்தியதை அறிந்ததும் ஊருக்கு வெளியிலுள்ள ஒரு குடிசையில் ஐந்து நாட்கள் வைத்திருப்பர். ஆறாம் நாள் அப் பெண்ணை நன்னீராட்டி வீட்டிற்கு அழைத்து வருவர். அடுத்த முப்பது நாட்கள் விலக்கு நாட்களாகக் கருதப்படும். அந்நாட்கள் கழியும் வரையிலும் ஊர் மக்கள் யாரும் அவ் வீட்டிற்குள் செல்ல மாட்டார்கள். அந்த முப்பது நாட்களில் பெண்ணானவள் நாள் தோறும் தலையில் நீர்பெய்து குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை வீட்டைத் தூய்மைப்படுத்த வேண்டும். ஊத்தங்கரையிலுள்ள பச்சை மலையாளிகள் 12 நாள் விலக்கிவைக்கின்றனர். கொல்லி மலையாளிகளில் சிலர் 30 நாட்களும், வேறு சிலர் 15 நாட்களும் விலக்கு நாட்களாகக் கொள்கின்றனர். பெரிய மலையாளிகள் இடத்திற்குத் தகுந்தாற்போல் 7 நாட்களிலிருந்து 11 நாட்கள் வரை விலக்கு நாட்களாகக் கொள்கின்றனர். விலக்கு நாட்கள் முடிந்ததும், ஒரு பார்ப்பனப் புரோகிதரை அழைத்து வந்து வீட்டைத் தூய்மைப்படுத்துவர்.

மகப் பேறு :

குழந்தை பிறந்த பன்னிரண்டாம் நாளிலோ அல்லது பதினைந்தாம் நாளிலோ அல்லது பதினாறாம் நாளிலோ வீட்டைத் தூய்மைப் படுத்தித் தாயை வீட்டுக் கழைப்பர். ஆனால் பச்சை மலையாளிகள் முப்பதாம் நாள் வரையில் விலக்கு நாட்களாகக் கருதுவர். குழந்தைக்குப் பெயர் சூட்டுவதற்கென்று, குறிப்பிட்ட எந்தச் சடங்கும் கிடையாது. எப்பொழுது பெயர் சூட்டுவது என்ற வரையறையும் இல்லை. கொல்லி மலையாளிகள் குழந்தை பிறந்த பத்தாம் நாளிலோ அல்லது மூன்றாம் திங்களிலோ பெயரிடுவர். பச்சை மலையிலுள்ளவர்கள் முதல் ஆண்டின் இறுதியிலும், சேர்வராயன் மலையிலுள்ளவர்கள் மூன்றாம் நாளிலும் பெயரிடுவர். பெயரிடுவதற்கு முன்பாக, எந்தப் பெயர்வைப்பது யென்பது பற்றி அவ்வூரிலுள்ள பூசாரியைக் கலந்து கேட்பர். சில சடங்குகட்குப் பிறகு பூசாரி மருள் கொண்டு ஆடி, அக்குழந்தைக்கு இடவேண்டிய பெயரைக் கூறுவான். எப்பொழுதும் கடவுளின் பெயர்களையே குழந்தைகட்குப் பெரும்பாலும் இடுவர். ஆணாக இருந்தால் கொங்கன், வடமன், சீரங்கன், பிடவன், காளி, அறப்பளி என்றும், பெண்ணாக இருந்தால் கொங்காயி, வடமி, சீரங்கி, பிடாரி என்றும் பெயரிடுவர். கரியன், வெள்ளையன், குட்டையன், சடையன், பெரிய பையன், சின்னப் பையன் எனக் காரணப் பெயர்களும் இடுவதுண்டு.

ஆடை அணிகள் :

மலையாளிப் பெண்கள் இரவிக்கை அணிவதில்லை. வீட்டிலிருக்கும்போதும், வயல்களில் வேலை செய்யும் போதும் உடலின் மேற்பகுதி திறந்தே இருக்கும். வேற்றார் முன்னிலையில் வரும்போதும், சந்தைக்குச் செல்லும்போதும் ஆடையின் முன் தானையைத் தளர்த்தி மார்பைப் போர்த்து, இடது தோளின் மேல் கொணர்ந்து முதுகுப்புறம் தொங்க விடுவார்கள். பச்சை மலையாளிகள் எப்பொழுதும் வண்ண ஆடைகளையே விரும்புவர். பச்சை மலையாளிப் பெண்கள் திருமணத்தின்போது மட்டும் வெள்ளை நிறமான கூறை (புத்தாடை) அணிவர். மற்ற நேரங்களில் சிகப்பு அல்லது கருப்பு ஆடைகளையே அணிவர். ஆனால் பளிச் சென்றிருக்கும் மஞ்சள், ஆரஞ்சு, பச்சை நிறப் புடவைகளின்மீது அவர்கட்கு விருப்பமதிகம். ஆண்கள் அணியும் ஆடை கோவணம் ஒன்றுதான். ஆனால் அதில் கூட வண்ணத்தை விரும்புவர். கொல்லி மலையாளிப் பெண்கள் இடது பக்கமும். பச்சை மலையாளிப் பெண்கள் வலது பக்கமும் மூக்குக் குத்திக் கொள்வர். பெரிய மலையாளிப் பெண்கள் மூக்கே குத்திக் கொள்வதில்லை. பச்சை நிறமானதும், இரத்தச் சிவப்பு நிறமானதுமான கண்ணாடிகள் பதித்த காது வளையங்களை அணிவர்.

இறுதிச் சடங்கு :

மலையாளிகள் பொதுவாக, பிணங்களைப் புதைக்கும் பழக்க முடையவர்கள். ஆனால் காலரா, தொழுநோய் முதலியவற்றால் பீடிக்கப்பட்டு இறந்தவர்களுடைய பிணங்களுக்குப் 'பால் தெளிக்கும் சடங்கு' கிடையாது. மற்றச் சடங்குகளெல்லாம் சமவெளியிலுள்ளவற்றைப் போலவே இருக்கின்றன. பிணத்தைத் தூக்கிச் செல்லும் பாடையை அவர்களும் 'தேர்' என்றே கூறுகின்றனர். தீட்டு நாட்கள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன. பச்சை மலையில் இத்தீட்டு நாட்கள் ஒரு திங்கள் வரை நீடிக்கும். ஊத்தங்கரை வட்டத்திலுள்ள பச்சை மலையாளிகள் 10 நாட்களும், பெரிய மலையாளிகள் 12 அல்லது 15 நாட்களும், கொல்லி மலையாளிகள் 3 நாட்களும் தீட்டாகக் கருதுவர். இறந்தவர்களுடைய ஆவி சில நாட்கள் வீட்டைச் சுற்றி அலையும் என்று கருதுகிறார்கள். அதைத் திருப்திப் படுத்துவதற்காகப் பூசாரி கூறும் முறைப்படி கோழி, ஆடு, பன்றி முதலியவற்றைப் பலியிடுவர். ஓர் இருப்பாணியையோ அல்லது முளையையோ புதைகுழியில் பிணத்தின் தலைக்கு நேராக அடித்து, அவ்வாவியை வீட்டின் பக்கம் வராமல் தடுப்பர். இறந்துபோன முன்னோரை வழிபடுவதற்காக அவர்கள் 'சிரார்த்தம்' செய்வதில்லை. ஆனால் திருமணம், மகப்பேறு, பூப்பெய்தல் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறும் போதும், விழாக் காலங்களிலும், வெள்ளிக் கிழமைகளிலும் இறந்தோருக்கு வழிபாடு செய்யும் வழக்கம் இவர்களிடம் உண்டு. இவ்வாறு வணங்கும் முன்னோர்களை 'வீட்டுத் தெய்வங்கள்' என்றும், 'பட்டவன்' என்றும் இவர்கள் கூறுகின்றனர். மலையாளிகள் தங்கள் இல்லங்களை மிகவும் புனிதமான இடங்களாகக் கருதுகின்றனர். பார்ப்பனப் புரோகிதரைக்கூட, செருப்புக் காலோடு இவர்கள் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை. சமய வாழ்வு : மலையாளிகள் சிவபெருமானையும் திருமாலையும் வேறுபாடின்றி வணங்குகின்றனர். நாள்தோறும் திருநீறு அணியும் வழக்கத்தைக் கடைப் பிடிக்கின்றனர். ஆனால் சில குறிப்பிட்ட சமய வழிபாட்டின் போது மட்டும் திருமண் (நாமம்) சார்த்திக் கொள்கின்றனர். தங்களுடைய கோயில்களில் தங்கள் இனத்தாரையே அர்ச்சகர்களாக அமர்த்தியிருக்கின்றனர். மலையாளிகளின் வழிபாட்டிற்கு உரிமை பெற்ற பெருந் தெய்வம் திருமாலின் அவதாரமான கரிராமன். அவன் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் இடங்களில் தலைமையானது பெரிய கல்ராயன் மலையிலிருக்கும் 'மேல் நாட்டை'ச் சார்ந்த 'கோயில் புதூர்' ஆகும். தம்மம்பட்டியிலும் கரிராமனுக்குக் கோயில் உண்டு. சேர்வராயன் மலைமீதுள்ள கரடியூரிலும் இக்கடவுளுக்குக் கோயில் எடுக்கப்பட்டுள்ளது. இது உருவத்தில் கோயில் புதூரிலிருக்கும் கோயிலைப் போன்றே உள்ளது சேர்வராயன் மலையிலுள்ளோர் அங்கு எழுந்தருளியிருக்கும் கடவுளைக் 'கரிய பெருமாள்' என்றே அழைக்கின்றனர். சேலத்திற்கு அண்மையில் ஒரு குன்றின்மேல் கரியபெருமாள் கோயில் உள்ளது, அக்குன்று 'கரியபெருமாள் மலை' என்ற பெயர் கொண்டு விளங்குகிறது.

கோயில் புதூரிலிருக்கும் கரிராமன் கோயிலில் பரமசிவன், பார்வதி, திருமால், இலக்குமி, விநாயகன் ஆகியோரின் படிமங்கள் உள்ளன, அவற்றோடு பன்னிரண்டு நடுகற்களும் வெண் புள்ளி சார்த்தப்பட்டு, இரண்டு வரிசைகளாக நிற்கின்றன. கோயிலின் வாயிலைச் சங்கு சக்கரங்களும், நாமமும், திருமால், இராமன் உருவங்களும், நான்கு கருடனும், நான்கு நந்தியும் அழகு செய்கின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும், அக் கோயிலில் வழிபாடு நிகழ்கின்றது. ஆண்டு தோறும் மாசி மாதத்தில் ஒரு தேர்த் திருவிழாவும் அங்கு நடைபெறுகின்றது. அக் கோயிற் பூசாரி புலால் உண்ணக் கூடாது. உயிர்ப் பலி நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளக் கூடாது. புலால் உண்போரின் உடனமர்ந்து உண்ணக் கூடாது. கரி ராமன் கோயிலில் உயிர்களைப் பலியிடும் வழக்கம் எப்பொழுதும் கிடையாது. அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்கள், மூன்று நாட்கள் கடந்த பிறகுதான் கோயிலுக்குள் நுழைய வேண்டும். மலையாளி ஆண்களும், பெண்களும் அக் கோயிலுக்குச் சென்று முடி எடுக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

கொல்லி மலைச் சரிவில் வேலப்பூர் நாட்டில் ஒரு சிவன் கோயில் உள்ளது. அங்கு எழுந்தருளியிருக் கும் இறைவன் 'அறப்பளீசுவரன்' என்று அழைக்கப் படுகிறான். மற்ற மலையாளிகள் கோயிலைப் போலல்லாமல், இங்குப் பார்ப்பனக் குருக்கள் அர்ச்சகராக அமர்த்தப்பட்டிருக்கிறார். இவ் விறைவன்மீது அம்பல வாணக் கவிராயர் என்பவர் ஒரு சதகம் பாடியுள்ளார், (சதம் என்றால் நூறு. சதகம் என்றால் நூறு பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள்படும்). அறப்பளீசுவர சதகத்திலுள்ள நூறு பாடல்களும் "அனுதினமும் மனதில் நினை தருசதுரகிரிவளர் அறப்பளீஸ்வர தேவனே“ என்ற அடிகொண்டு முடிகின்றமையால் கொல்லி மலைக்குச் 'சதுர கிரி' என்ற பெயரும் வழங்கியது போலும். 'தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் திருவரங்கப் பெருமானை'யும் இவர்கள் பக்தியோடு வணங்கு கின்றனர்.

மலையாளிகள் வாழும் சிற்றூர்களில் உள்ள பெருமாள் கோயில்களில் திருமால் வழிபாடு பல மாறுபாடுகளோடு சிதைந்து காணப்படுகிறது. அக் கோயில்களில் நடைபெறுவது உண்மையில் திருமால் வழிபாடுதானா என ஐயுற வேண்டியிருக்கிறது. திருமால் வழிபாட்டிற்கு இன்றியமையாத பலிபீடம் (shrine) சில கோயில்களில் காணப்படுவதில்லை, பொதுவாக இக் கோயில்களில் உயிர்ப் பலி நடைபெறுவதில்லை. இங்குப் பணிபுரியும் பூசாரி (மலையாளி)யும் புலால் உண்ணாதவனாகவே இருக்கிறான்.

நாமக்கல் கொல்லி மலையிலுள்ள குகை நாட்டில் இத்தகைய கோயில் ஒன்று உள்ளது. அக் கோயிலில் வீற்றிருக்கும் இறைவனைப் 'பேய்ப் பெருமாள்' என்று அழைக்கின்றனர். இங்கு சனிக்கிழமைகளிலேயே பூசை நடைபெறுகிறது.

கொல்லி மலையாளிகள் 'அரங்கட்டப்பன்' என்ற ஒரு கடவுளையும் வழிபடுகிறார்கள். 'அரங்க சிவன்' என்ற வேறு பெயரும் அக் கடவுளுக்கு உண்டு. மலையாளிகளின் குல முதல்வரான மூன்று சகோதரர்களும் வணங்கிய குல தெய்வமே அரங்கட்டப்பன் என்று எண்ணுகின்றனர். மேலும் கரிராமனின் வேற்றவ தாரமாகவும் இக் கடவுளைக் கருதுகின்றனர். குண்டூர் நாட்டிலும் அரங்கட்டப்பன் கோயில் உள்ளது. இக்கோயில்களில் பார்ப்பனக் குருக்களே பணிபுரிகின்றனர். இங்கு நடைபெறும் வழிபாடு மற்ற சிவன் கோயில் வழிபாட்டினின்றும் சிறிது மாறிக் காணப்படுகிறது. முதலில் தண்ணீரிலும் பிறகு பாலிலும், மூன்றாவதாக நல்லெண்ணெயிலும் இறைவனுக்கு அபிடேகம் நடைபெறுகிறது. பிறகு புத்தாடை அணிவித்து, இறைவனின் திருமேனியில் சந்தனத்தையும், குங்குமத்தையும் பூசுகின்றனர். பிறகு தூபம் காட்டப்படுகிறது. தீபங்களையும் கொளுத்தி வைக்கின்றனர், ஒரு வாழையிலையை இறைவன் திருமுன்னால் விரித்து, அதில் பொங்கலைப் படைக்கின்றனர். வழக்கமான மந்திரங்களைக் கூறி, சூடத்தைக் கொளுத்தி வணங்குகின்றனர். உயிர்ப் பலி இங்குக் கிடையாது. பொங்கல், பால், சர்க்கரை, பழம் முதலியனவும் சிவ வழிபாட்டிற்குரிய வேறு பொருள்களுமே இங்குப் படைக்கப்படுகின்றன, அரங்க சிவனுக்கு அடிமைப் பணிபுரியும் ஒரு சிறு தெய்வமும் மலையாளிகளால் வணங்கப்படுகிறது. அக்கடவுளுக்கு 'அரங்க சேவகன்' என்று பெயர். அரங்க சேவகன் கோயிலில் பணிபுரியும் பூசாரி பார்ப்பனரல்ல; மலையாளியே. அரங்க சேவகனுக்கு ஆடு, கோழிகள் முதலில் பலியிடப்பட்டனவாக அறியப்படுகிறது. இப்பொழுது அப் பழக்கம் இல்லை.

விநாயகர் வழிபாடு சமவெளியில் நடப்பதைப் போன்றே மலையாளிகளிடையிலும் நடைபெறுகிறது. செங்குத்தான ஒரு கல்லை நட்டு, மேலே கூரையில்லாமல் இக் கோயில்கள் அமைக்கப் பெறும். சில கோயில்கள் சுற்றுச் சுவர் இல்லாமலும் அமைக்கப் பெறும். இத்தகைய கோயில்கள் சேர்வராயன் மலையிலுள்ள மேலூரிலும், காகம்பாடியிலும் உள்ளன. விநாயகர் வழிபாட்டிற்கு ஏற்ற நாள் திங்கட்கிழமையே. முருகன் வழிபாடும் மலையாளிகளிடையே உண்டு. பிறகரை நாட்டிலுள்ள கந்தசாமி கோயில் புகழ் பெற்றதாகும். பங்குனி உத்தரத்தின்போது, இக் கடவுளுக்கு விழா எடுக்கின்றனர். உமையின் வடிவமான காமாட்சியைப் பல இடங்களில் கோயில் கட்டி வழிபடுகின்றனர். பல இடங்களில் தருமராசர் கோயில் இருப்பதால் பாண்டவர் வழிபாடும் மலையாளிகளிடையில் இருந்திருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது.

மலையாளிகள் வணங்கும் சிறு தெய்வங்கள் (Demi Gods) கணக்கிலடங்காதவை. சக்தியின் அவதாரங்ளான காளி, பிடாரி, மாரி முதலிய தெய்வங்கட்கு எங்கு பார்த்தாலும் கோயில்கள் உள்ளன. அய்யனாருக்கும் கோயில் உண்டு. சித்திரை அல்லது வைகாசித் திங்களில் எடப்புலி நாட்டில் காளி தேவிக்குத் தேர் விழா நடத்துகின்றனர். சனிக்கிழமை, காளி தேவியின் வழிபாட்டிற்குகந்த நாளாகக் கருதப்படுகிறது. பிடாரி என்ற தெய்வம், பெரிய பிடாரி, சின்னப் பிடாரி, சொக்கப் பிடாரி, புதுப் பிடாரி, கரும் பிடாரி, காரக் காட்டுப் பிடாரி, மலுங்குப் பிடாரி எனப் பல அடை மொழிகளோடு மலையாளிகளால் அழைக்கப்படுகிறது பிடாரிக்குரிய வழிபாட்டு நாளும், ஆண்டு விழாவும் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன. சிறு தெய்வங்களுக்கான விழாக்களில் சிறப்பானது மாரியம்மன் திருவிழாவாகும். இவ்விழா வசந்த காலத்தில் (தை, மாசி, பங்குனி) முழு நிலா நாட்களில் கொண்டாடப் படுகிறது. செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மாரியம்மன் வழிபாட்டிற்குகந்த நாட்கள். நாச்சியம்மன், பொங்கலாயி, கொங்கலாயி, பொன்னாயி என்பவை வேறு பல குறிப்பிடத்தக்க பெண் தெய்வங்கள். மேல நாச்சி, கொடைகரை நாச்சி, அரிய நாச்சி, இளைய நாச்சி, எழுகரை நாச்சி எனப் பல பெயர்களோடு நாச்சி காட்சியளிக்கிறாள். அவள் வழிபாட்டுக்குகந்த நாள் வியாழக்கிழமையாகும். வழிபடும்போது நாச்சியார் கோயிலில் நிறைந்த அமைதி நிலவல் வேண்டும். வழிபாட்டின் இறுதியில் படையல் (பிரசாதம்) எல்லாருக்கும் வழங்கப்படும். வேடர்களைக் காக்கும் குல தெய்வமாக நாச்சி கருதப்படுகிறாள். கொல்லி மலையில் இவளுக்கு நிறையக் கோயில்களுண்டு, நடுவண்ணனை மணந்த வேடச்சியிடமிருந்து, நாச்சியம்மன் வழிபாடு மலையாளிகளிடையே பரவிற்று என்பர். பொங்கலாயி, குசக்குழிப் பொங்கலாயி, மயிலாத்திப் பொங்கலாயி, தண்ணிப் பாழிப் பொங்கலாயி, வேலராயன் பொங்கலாயி, மூலைக்காட்டுப் பொங்கலாயி, பணிக்கன் காட்டுப் பொங்கலாயி, பேய்க் காட்டுப் பொங்கலாயி எனப் பல அடை மொழிகளோடு, பொங்கலாயி என்னும் சிறு தெய்வம் மலையாளிகளிடையே கோயில் கொண்டு விளங்குகிறாள்.

அய்யனார், பெரிய ஆண்டவன், ஆண்டியப்பன், நம்பியாண்டான், சடையன், வெட்டுக்காரன், மாசி மலையன், உருளையன் என வேறுபல சிறு தெய்வங்களும் உண்டு. ஆனால் கருப்பனார் வழிபாடு மலையாளிகளிடையே மிகுந்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் கருப்பனாருக்குக் கோயிலுண்டு. பன்றிப்பலி கருப்பனாருக்கு விருப்பமான ஒன்று. கன்னியம்மாள் என்ற பெண் தெய்வம் கருப்பனாரோடு தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது.

பொதுவாகச் சிறு தெய்வங்களுக்கு, முறையாகக் கட்டப்பட்ட கோயில்கள் கிடையா, திறந்த வெளியிலோ அல்லது கூரையில்லாத சுவர்களுக்கு நடுவிலோ சிறு தெய்வங்களின் உருவங்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன. குறிப்பாகக் கருப்பனார் கோயில் எல்லா இடங்களிலும் இவ்வாறே அமைக்கப்பட்டுள்ளது. மலையாளிகளே இக்கோயில்களின் பூசாரிகளாக உள்ளனர். அவர்களைத் 'தாசன்' என்றும் 'ஆண்டி' என்றும் அழைக்கின்றனர். இக்கோயிற் பணி அவர்களுக்குப் பரம்பரை உரிமையுடையது. ஒரே பூசாரி பல கோயில்களிலும் பணிபுரிவதுண்டு. தலைப்பாகையும், நீண்ட முடியும் இவர்களை மற்ற மலையாளிகளினின்றும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. வாழ்நாள் முழுதுமோ அல்லது குறிப்பிட்ட சில நாட்களோ இவர்கள் புலால் உணவை ஒதுக்கி விடுகின்றனர். மலையாளிகளின் முக்கியமான பெருவிழாக்கள் பொங்கல், தீபாவளி, ஆடிப்பதினெட்டு ஆகிய மூன்றுமே. அவற்றில் பொங்கல் திருநாள் மிகவும் சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலன்று மலையாளிகள் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு வேட்டைக்குச் (Hunting Excursion) செல்வதுண்டு . அன்று நடைபெறும் எருதாட்டம் (Bull Dance) கண்டு மகிழத்தக்கது.

வேறு சில பழக்கங்கள் :

மலையாளிகள் பொதுவாக வரகு, தினை, அரிசி ஆகியவற்றைச் சமைத்து உண்கின்றனர். பன்றி இறைச்சியும் அவர்களுடைய உணவில் முக்கிய இடம்பெறுகிறது. சக்கிமுக்கிக் கல்லை இரும்புத்துண்டால் அடித்து நெருப்புண்டாக்கும் பழக்கம் இன்னும் பச்சை மலையாளிகளிடம் நிலவி வருகிறது. ஒவ்வொரு பட்டியிலும் இருவர் அல்லது மூவரே இக்கருவியை வைத்திருக்கின்றனர். நெருப்பு உண்டாக்குவதற்குப் பயன்படும் துணைப் பொருளான பஞ்சை ஒரு தோற் பையில் பொதிந்து வைத்துள்ளனர். வண்ணான், நாவிதன், மருத்துவச்சி ஆகியோரின் பணியை அவர்களிலேயே ஒரு சிலர் மேற்கொண்டு செய்கின்றனர். முக்கியமான செய்திகளைத் துடும்பு கொட்டி எல்லாப் பட்டிகளிலும் அறிவிக்கும் வேலையை அங்குள்ள அரிசனங்கள் (பறையர்) செய்கின்றனர். வயல்களில் வேலைசெய்வதற்கும், வேட்டையில் துணை புரிவதற்கும் அரிசனங்களையே அமர்த்தியிருக்கின்றனர். கால்நடைகளில் ஏதாவதொன்று இறந்துவிட்டால், மலையாளிகள்யாரும் அதன் அருகில் கூடச் செல்லமாட்டார்கள் ; அதைத் தொடவுமாட்டார்கள். அருகிலிருக்கும் அரிசனங்களுக்குத் தெரிவித்து எடுத்துக்கொண்டு செல்லுமாறு கூறுவார்கள். ஆனால் ஏதேனும் விபத்துக்குள்ளாகி அடிபட்டுச் சாகும் நிலையிலிருக்கும் கால் நடைகளைத் தங்களிடம் கூலிவேலை செய்பவர்களுக்கு விற்றுவிடுவார்கள். அதற்கு ஈடாகச் சிறுதொகை பெற்றுக்கொள்வர். மலையாளிகளில் சிலர் சிறந்த மாட்டு வைத்தியர்களாக விளங்குகின்றனர். இவர்கள் மாட்டின் ஒடிந்த எலும்பை மிக விரைவில் கூடுமாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள், பசுமாட்டின் தோலை அவர்கள் தொடுவது கூடக் கிடையாது. உழவுத் தொழிலுக்குப் பயன்படும் பொருள்களையும் அத்தோலினால் செய்வதில்லை. இறந்துபோன பசுவின் தோலைக்கூடத் தாங்கள் உரிமையாக்கிக் கொள்ள விரும்புவதில்லை. அப்பிணத்தை எடுத்துச் செல்லும் அரிசனங்களுக்கே கொடுத்து விடுவர். மலையாளிகளும் பெண்களும் மிகுதியாகப் புகைப் பிடிக்கும் பழக்கமுடையவர்கள்.

குறிஞ்சி நிலங்களில் வாழும் இம் மலையாளிகள் பல்வேறு காரணங்களால் சமவெளியிலுள்ள மக்களோடு தொடர்பின்றி வாழ்ந்து வந்தனர். மலைபடு பொருள்களைக் கொண்டே தங்கள் இன்றியமையாத தேவைகளைத் தீர்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர், முன்னேற்றத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை. ஆனால் நம் நாட்டு அரசியலார், இவர்களுடைய முன்னேற்றத்திலும் இப்பொழுது கருத்துச் செலுத்துகின்றனர். நல்ல மலைப்பாதைகள் கொல்லி மலைமீது இப்போது அமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்புக்கான வீடுகளும், கல்விவசதிக்கான பள்ளிகளும் இப்பொழுது நிறையக் கட்டப்பட்டுள்ளன. மருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில திங்கள்களில் உந்து வண்டிகளும் இம்மலையின் மேல் விடப்படும். பழமையான வழக்கங்களின் பிடியிலிருந்து இவர்கள் இப்போது நீங்கி வருகின்றனர்.


  1. சேலத்தில் இவர் பெயரால் இன்றும் ஒரு வீதி உள்ளது.