முடியரசன் தமிழ் வழிபாடு/047-049
கோவில் எனது நெஞ்சம் - தனிலே
கூடி யருள் புரிவாய்
காவியப் பா மாலை - அணிந்தே
காத்திட வேண்டு மம்மா
நாவின் மிசை யிருப்பாய் - எனக்கு
நல்ல மனந் தருவாய்
பாவினில் சொல் லிவெல்லாம் - சத்தி
பாய்ந்து வர வேண்டும்
உன்றன் திருப் பெயரைச் - சொல்லி
ஊரினை ஏய்த் திடுவோர்
நன்றென வா ழுகின்றார் - நின்றன்
நன்மையை நா டுகிலார்
துன்றிய பண் பினரும் - உன்பால்
தூயநல் லன் பினரும்
நின்று வருந் திடவே - செய்தல்
நீதியின் பாற் படுமோ?
நெஞ்சில் உனை நினைந்தே - என்றும்
நேர்மையில் நிற் பவரை
மிஞ்சும் வறு மையினால் - துன்பம்
மேலிடச் செய் துநின்றாய்
வஞ்சனை செய் மனிதர் - அவர்க்கு
வாழ்வுகள் தந் துநின்றாய்
வஞ்சியுன் சோ தனையோ? - எங்கள்
வாழ்வெலாம் வே தனையோ?
நித்தம் உனைத் தொழுதே - எங்கும்
நின்புகழ் பா டுமெனைப்
பித்தன் வெறி யனென்றே - உலகம்
பேசுதல் காண் கிலையோ?
முத்தமிழ் தந் தபித்தால் - செல்வம்
முன்னின்று தே டுகிலேன்
இத்தரை மீ தினிலே - வறுமை
எத்தனை துன் பமம்மா!
கொல்லும் வறு மையிலும் - செம்மை
குன்றா திலங் கிடவே
வெல்லும் மன நிலையைத் - தாயே
வேண்டுகி றேன் அருள்வாய்
சொல்லுமென் பா டலினால் - உலகம்
சூழ்ந்து வணங் கிடவே
வல்லமை வேண் டுமம்மா - என்றும் நான்
வாழ்ந்திட வேண் டுமம்மா.
[காவியப் பாவை]]