உள்ளடக்கத்துக்குச் செல்

முடியரசன் தமிழ் வழிபாடு/046-049

விக்கிமூலம் இலிருந்து

46. தமிழ் – என் தந்தை


முன்னைத் தமிழ் மொழியே! - உலகில்
          மூப்பறி யா முதலே!
என்னை மகன் எனவே - புவியில்
          ஏற்றமுடன் அளித்தாய்.

கற்றுத் தெளி வதற்கே - ஆசான்
          கண்டு பயிற் றுவித்தாய்
முற்றும் உணர்ந் தவனாம் - அந்த
          முன்னவன் வள்ளுவனாம்.

முத்தமிழ் வா ணர்கள்சூழ் - அவையில்
          முந்தி யிருந் திடவே
அத்தனே என்னை யுமோர் - சான்றோன்
          ஆக்கி மகிழ்ந் தனைநீ.

துாது கலம் பகமாய்ப் - பெருகும்
          தோழர்கள் பற் பலராம்
தீது விளைப் பவராய் - அமையின்
          செப்பித் திருத் துவைநீ.

குற்றமொன் றில் லதுவாம் - நல்ல
          கோல மனை யளித்தாய்
கற்றவன் கட் டியதே - அதுதொல்
          காப்பியம் என் பதுவே.

வாரி முகந் தெடுத்தே - இன்ப
          வாரி திளைப் பதற்கே
நேரிய செல் வங்கள்தாம் - தொகையில்
          நேடித் திரட்டி வைத்தாய்.

ஐவகைக் காப் பியமாம் - செல்வம்
ஆக்கி எனக் களித்தாய்
கைதவக்[1] கள் வரினால் - இரண்டு
காப்பியம் காணுகில்லேன்.

பாட்டிசைச் செல் வங்களும் - இழந்தேன்
பட்டயம் மட் டுமுண்டு
நாட்டினில் முன் பிறந்தோர் - அயர்வால்
நானவை காண் கிலனே.

இத்தனை போய் விடினும் - இன்னும்
எட்டுத் தொகை யுடனே
பத்தெனும் பாட் டுளதாம் - ஒவ்வொன்றும்
பற்பல கோடி யன்றோ !

பாட்டுப் புறப் பொருளால் - வீரப்
பாங்கில் எனை வளர்த்தாய்
ஈட்டும் அகப் பொருளால் - காதல்
இல்லறம் கூட் டுவித்தாய்.

நின்பெயர் காத் திடுவேன் - தமிழே
நீ எனைப் பெற் றதனால்
உன்பெயர் ஒங் குதற்கே - பற்பல
ஒவியம் நான் படைப்பேன்.

[காவியப் பாவை]]

  1. கைதலம் - வஞ்சகம்