முடியரசன் தமிழ் வழிபாடு/045-049
செந்தமிழ் என் பவளாம் - நல்ல
செல்வக் குடி மகளாம்
முந்தை மொழி களிலே - அவளும்
மூத்தவ ளாய்ப் பிறந்தாள்
முந்திய மூ வரசர் - அவையில்
மொய்ம்புறத் தான் வளர்ந்தாள்
வந்தவர் யா வருக்கும் - செல்வம்
வாரி வழங் கிடுவாள்.
தென்ற லுடன் பிறந்தாள் - நல்ல
செய்கையொன் றே யறிவாள்
என்று பிறந் தவளோ? இவள்
எத்தனை ஆண் டினளோ?
இன்றும் இள மையுடன் - அன்னை
ஏற்றம் உறப் பொலிவாள்
ஒன்றிய நான்கு பெண்கள் - பெற்ற
ஒண்டொடியா மவளே.
கன்னடத் தான் துளுவன் - மலையன்
கண்டு மொழித் தெலுங்கன்
என்னுமிந் நால் வருக்கும் - அவரை
ஈந்து மணம் முடித்தாள்
பெண்ணெடுத் தே மகிழ்ந்தோர் - என்னைப்
பெற்றவ ளைப் பகைத்தார்
நன்னடைப் போக் கிழந்தார் - அந்த
நால்வரும் நன் றிகொன்றார்.
ஈன்றெனைக் காத் தவளை - மனமே
எங்ஙனம் நான் புகழ்வேன்
சான்றவர் மெச் சிடவே - முப்பால்
தந்து வளர்த் தனள்தாய்
தோன்றுசங் கப் புலவர் - படைத்த
தொட்டிலில் ஆட் டினவள்
மூன்றர சர் கதைகள் - சொல்லி
மூள்வலி யூட் டினள்தாய்
என்றன் வய துநிலை - பருவம்
ஏற்பவை தான் உணர்ந்தே
நன்றறி வுக்கதைகள் - நகை
நாட்டும் பிற கதைகள்
ஒன்றிய வீ ரமுடன் - காதல்
ஊட்டுஞ் சுவைக் கதைகள்
மின்றளிர் மேனியினாள் - சொல்லி
மேன்மை யுறப் பணித்தாள்.
மேவுக தொண் டுளமே - என்பாள்
மேகலைக் கா தையினால்
பாவுக நீ தியென்பாள் - எங்கள்
பாண்டியன் கா தையினால்
கோவுயர் குட் டுவனால் - வீரங்
கொட்டி முழக் கிடுவாள்
பாவில் நகைச் சுவையாத் - தருவள்
பாண்டவர் காதையினால்.
வாழ வழி வகுத்த - திரு
வள்ளுவன் ரா மலிங்கம்
ஆழ நெடும் புலமைக் - கம்பன்
அவ்வை யுட னிளங்கோ
சோழரில் பாண் டியரில் - கவி
சொன்னவர் சீத் தலையான்
தோழர்கள் என் றிவர்போல் - பலரைத்
தொல்புகழ்த் தாய் கொடுத்தாள்.
தன்கடன் ஆற் றிவிட்டாள் - தமிழ்த்
தாயெனைக் காத் தமையால்
தன்கடன் போற்றுதற்கே - கவிஞன்
தந்தனன் வேற் படையே
நன்னடை நல் கினரோ - இந்த
நாட்டினை ஆள் பவரே
என்கடன் ஆற் றிடுவேன் - பகையை
எற்றி முருக் கிடுவேன்.
[காவியப் பாவை]