முடியரசன் தமிழ் வழிபாடு/044-049

விக்கிமூலம் இலிருந்து

44. தமிழ் – என் மகன்


பிள்ளைக் கலிதனைத் தீர்க்கவந்தாய் - அன்புப்
பெட்டக மேஇன்பம் சேர்க்க வந்தாய்
உள்ளக் கவலைகள் ஓட்டவந்தாய் என்றன்
ஒவிய மேபுகழ்க் காவியமே

கொஞ்சுங் கனியிதழ் நீதிறந்தால் - உள்ளம்
கொள்ளைகொள் ளுங்களி கூடுதடா
விஞ்சு நலந்தரு யாழுடனே - குழல்
வேண்டுகி லேன்தமிழ் மாமகனே

பைந்தளிர் மேனியைத் தீண்டுகையில் - தமிழ்ப்
பாலக னேநடை காணுகையில்
பைந்தமி ழேஎன நின்பெயரைச் - சொல்லிப்
பாடிப் புகழ்ந்துனைப் பேசுகையில்

நின்மொழி என்செவி சேருகையில் - நெஞ்சில்
நேரும் மகிழ்வினை யாதுரைப்பேன்
என்னுயிர் மூச்சென ஆனவனே - எனக்
கேதுக்கடா அந்த மேலுலகம்

வீதி களில்விளை யாடுகையில் - என்றன்
வேதனை யாவுமே ஓடிடினும்
தீது புகுந்து விளைந்திடுமோ - என்று
செந்தமி ழேமனம் அஞ்சுகிறேன்

கெட்ட மொழியினைப் பேசுவது - மிகக்
கேடு தருஞ்செயல் விட்டுவிடு
சிட்டு நிகர்த்திடும் என்மகனே - வரும்
சின்ன மொழியையும் தள்ளிவிடு

சாதி சமயங்கள் என்பவரை - நண்பிற்
சார்ந்து பழகுதல் தீமையடா
ஓதிய சங்கத்தில் உள்ளவரே - நம்மை
ஓம்பி வளர்த்திடும் நல்லவராம்

உன்னைச் சிறியவர் ஏசுகையில் - பெற்ற
உள்ளம் கொதிப்பதை யாரறிவார்?
முன்னைப் பெருமைகள் அத்தனையும் கொண்டு
முன்னேறிச் செல்லுதல் வேண்டுமடா

முற்றவும் உன்திறம் ஆய்ந்துணர்ந்தே - இன்பம்
மூழ்கித் திளைப்பவ ளாயிடினும்
பெற்ற பொழுதினும் நான்மகிழ்ந்தேன் - பிறர்
பேசிப் புகழ்ந்துனைப் போற்றுகையில்

வந்தவள் காதலில் சிக்கியதால் - தந்தை
வாழ்வில் மனங்கொளும் பான்மையின்றி
நொந்திடச் செய்தனர் ஆயினுமே - நன்னூல்
நூற்று வளர்த்திடு வேன்உனையே

நின்னைப் பெறுவதற் கென்னதவம்- செய்தேன்
நேரினில் உன்னடை கண்டவர்கள்
என்னைஓர் தக்கவள் என்றுரைத்தார் - புகழ்
ஏற்றிட வந்தனை வாழியவே

[காவியப்பாவை]