உள்ளடக்கத்துக்குச் செல்

முடியரசன் தமிழ் வழிபாடு/043-049

விக்கிமூலம் இலிருந்து



43. தமிழ் – என் மனைவி


வெள்ளி நிலா வினிலே - ஒரு
          வெட்ட வெளி தனிலே
அள்ளி அனைத் தசுகம் - அதனால்
          ஆவி சிலிர்த் ததடி

சிந்தா மணி தவழும் - மார்பில்
          சேர்ந்து திளைத் தசுகம்
எந்த விதம் உரைப்பேன் - எழுதி
          ஏட்டினில் காட் டுவதோ?

நற்றினை ஐங் குறுநூ-றகமும்
          நல்ல குறுந் தொகையும்
உற்ற கலித் தொகையும் - தமிழே
          ஊட்டி மகிழ வைத்தாய்

மேவித் தழு வவதற்கே - உன்மணி
          மேகலை பற் றுகையில்
நீவிட் டகன் றுவிடின் - பிரிவு
          நெஞ்சைத் துளைக் குமடி

வந்த வடக்குத் தெரு - மகள்பால்
          வாஞ்சை என் றெண் ணினையோ
அந்தப் பொது மகளைத் - தொடவும்
          ஆசையொன் றில் லையடி

வாழ்வு வளம் இழந்தாள் - வடக்கில்
          வாடகை வீடு டையாள்
கழ்வினை ஒன் றுடையாள் - வலையில்
          சொக்கிவிட் டேன் எனவோ

ஊடிப் புலந் துநின்றாய் என்றன்
          உள்ளம் அறிந் திலையோ?
நாடித் திரி பவனோ - வஞ்சக
          நங்கையின் கா தலுக்கே

மேலைத் திசை யுடையாள் - ஒருத்தி
மேன்மைக் குண முடையாள்
வாலைக் கும ரியுடன் - நண்பாய்
வாய்மொழி பே சிடுவேன்

நெஞ்சிற் கெடு தியில்லை - அவளால்
நேர்வது நன் மையடி
வஞ்சிக் கொடி யிடையே புலவி
வாட்டந் தவிர்ந் திடடி

நெஞ்சத் தடந் தனில்நீ - உலவும்
நீள்சிறை அன் னமடி
வஞ்சனை இல் லையடி - நீயே
வாழ்க்கைத் துணை வியடி

பேதை மனக் குயிலே - உன்னைப்
பெற்றவள் இல் லையடி
ஏதுக் கடி புலவி - தமிழே
என்னைவிட் டெங் ககல்வாய்?

காலில் சிலம் பொலிக்க - வருவாய்
காதல் மது பருகிக்
கோலப் பெரு வெளியில் - கவிவெறி
கொண்டு திரி வமடி

சோலை வெளியிடையே - நாம்
சுற்றித் திரி வமடி
மாலை நிலா வரவே - தனியாய்
மாடந் தனை யடைவோம்

அங்குநம் கூட்டுறவால் - பிறந்த
அன்புக் குழந்தைகளை
சங்கக் கவிதை என்றே - உலகம்
சாற்றிப் புக ழுமடி

[காவியப் பாவை]]