உள்ளடக்கத்துக்குச் செல்

ஓங்குக உலகம்/004-026

விக்கிமூலம் இலிருந்து

4. “வேண்டுவது அஞ்சாமை”

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு”

என்று திருவள்ளுவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே கூறிச் சென்றுள்ளார். நாடாளும் மன்னருக்கு இருக்க வேண்டிய நல்லியல்புகளாகிய சிலவற்றுள்ளே ‘அஞ்சாமையும்’ ஒன்றாக அடங்குகின்றது. இந்தக் குறளை வள்ளுவர். ‘முடியரசர்’களுக்குக் கூறிய ஒன்றாகவே கொள்ளினும், இன்று குடியரசுகள் உலகெங்கணும் ஓங்கும் நிலையிலும், இக் குறள் தேவைப்படுகிற தென்பதை யாவரும் அறிவர். நாட்டை ஆளுகின்ற நல்ல மன்னராயினும் மந்திரியாயினும் அல்லது சாதாரண மக்களாயினும் அவர்கட்கு ‘அஞ்சாமை’ அடிப்படை வாழ்வாக அமைந்தாலன்றி உலகம் என்றும் முன்னேறாது. அஞ்சி அஞ்சி மக்களினம் மாண்டு கழிவதைக் கண்டு வருந்திப் பாடிய புலவர்-அறவோர்-செந்தண்மை பூண்டொழுகும் அந்தணாளர் எண்ணற்றவர். இந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி அவர் நிலைகண்டு ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என நைந்து பாடுகின்றார்.

‘நெஞ்சு பொறுக்கு தில்லையே-இந்த
நிலை கெட்ட மனிதரை கினைந்து விட்டால்
அஞ்சி அஞ்சிச் சாவார்-அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே’

என்று அவர் கூறி மேலே அவர்களைப் பயமுறுத்தும் பொருள்களின் பொய்த் தோற்றங்களை நன்கு விளக்குகின்றார். ஆம்! இப்படி அஞ்சாததற் கெல்லாம் அஞ்சி அஞ்சி நிற்கின்ற காரணமே மனித சமுதாயத்தை எங்கோ படுகுழிக்கு இழுத்துச் செல்லுகிறது என்பதை நல்லோர் உணர்வார்.

‘அஞ்சாமை அரசர்க்குரிய இயல்புதானே நமக்கு அது ஏன்?’ என்று சிலர் மனத்துக்குள் எண்ணியும் சிலர் வெளியில் பேசியும் வாழ்வதை நாம் அறிவோம். இருபதாம் நூற்றாண்டின் இடையில் வாழும் குடியாட்சியில் எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அந்த மறதி உண்டாகாதிருப்பதற்காகவே ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, குடியாட்சி நாடுகளில் தேர்தல் நடத்தி நாடாளும் நல்லவரும் வல்லவரும் வீடுதோறும் வந்து வேண்டி வரம் கிடக்கவேண்டிய நிலை உண்டாக்கப் பெறுகின்றது. எனவே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் அஞ்சாது வாழவே கடமைப்பட்டவனாகின்றான்.

சமயத் தலைவர்கள் இந்த உண்மையை நன்கு விளக்கிக் காட்டுகின்றார். நாடாண்ட மகேந்திரன் ‘வருக’ என்று ஆணையிட்டபோது, ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்று வீறு பேசி, வெற்றி கண்ட வாகீசராகிய நாவுக்கரசர் வாழ்ந்த நாட்டில்தான் நாமும் வாழ்கின்றோம். ‘அஞ்சுவதியா தொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை’ என்ற அவர் பாடலை வாயிடை முணு முணுத்துக் கொண்டே, அஞ்சாததற்கெல்லாம் அஞ்சி அஞ்சி வாழ்கின்றோம். ‘யாமார்க்கும் குடியல்லோம் யாதுமஞ்சோம்’ என்ற மணிவாசகரின் அடியை ஓதி ஓதி உடனுக்குடன் அஞ்சி அஞ்சியே நாம் வாழ்கின்றோம். இந்த நிலை எல்லா நாடுகளிலும் காணப்பெறுகின்ற ஒரு நிலையேயாகும்.

இவ்வாறு அஞ்சாத பொருளுக்கெல்லாம் அஞ்சி வாழ்கின்ற வாழ்வே மனித வாழ்வாகாது. இயேசு தம் எதிரிகளுக்கு அஞ்சித் திரும்பியே தன்னாட்டுக்கு வாராதிருந்தால் உலகில் இன்று அந்தச் சமயம் அன்புச் சமயமாக வாழுமா? அஞ்சாமையில் தானே அன்பு பிறந்தது. இப்படியே ஒவ்வொரு சமயத்தையும் அதனதன் சமயத் தலைவர்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அதனால் நான் யாவற்றையும் அஞ்சாத பொருள் என்று கூறவில்லை. அஞ்சவேண்டுவனவற்றுக்கு அஞ்சவேண்டுவதே. திருவள்ளுவரும் இதைத்தான்.

‘அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்’

என்றார். எனவே அஞ்சக் கடவதாகிய பழி பாவங்களுக்கும் பிற கொடுமைகளுக்கும் அஞ்சவேண்டுவதே கடமையாகும். ஆனால் மனிதன் அவற்றிற்கெல்லாம் அஞ்சாது, அளவுக்கு மீறிய பழிதரும் செயல்களையும் பாவச் செயல்களையும் கூசாது செய்கின்றான்; அவற்றால் தான் வென்றுவிட்டதாகவும் மார்தட்டி எக்காளமிடுகின்றான். ஆனால் அதே வேளையில் அஞ்ச வேண்டாததற்கெல்லாம் அஞ்சி எதை எதையோ கோட்டைவிட்டுக் கொண்டே போகின்றான். முதலாவதாக, இந்த அச்சத்தின் காரணமாக மனிதப் பண்பாடே நிலை கெடுகின்றது. தம் தலைவர் முன்னே ‘நல்லதை நல்லது’ என்று சொல்ல அஞ்சி, அவர் ‘கெட்டது’ என்றால், ‘ஆம்; கெட்டது’ என்று கூத்தாடும் காட்சி நாட்டில் பலப்பல. ஆகவே உயர்ந்த ஒழுக்க நெறியே மறக்கப்பட்டு மறைக்கப்படுகின்றது. நாடாளும் அரசராயினும் தவறு செய்தால் சுட்டிக் காட்டவேண்டிய் அஞ்சாமையை விடுத்து, தமது பதவியும் பிறநலன்களுமே கெடும் என்ற காரணத்தால் பிறரையும் பொது நலத்தையும் காட்டிக் கொடுக்கும் அச்சத்தை இன்று உலகில் எங்கும் காணமுடிகின்றதன்றோ. தன் தாய்மொழி எந்த நிலையில் கெட்டாலும் கவலையுறாது, மேலுள்ளவர்களுக்கு அஞ்சி, தம் வாழ்வை வளமாக்கிக்கொள்ளவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் வாழ்கின்ற ‘தமிழர்’களுக்குத் தமிழ்நாட்டில் பஞ்சமில்லையல்லவா! இப்படியே நாடு கெடினும் நலமெலாம் சாயினும், தன் வாழ்வினையே மதித்து, மேலுள்ளவருக்கு அஞ்சி வாழும் வன்கணாளர் வாழ்வு நாட்டில் இருப்பதை நாம் அறிவோம். அதனாலேயே தமிழ்நாடு எல்லை அளவிலும், பண்பாட்டு நெறியிலும் பிற நல்லியல்புகளிலும் மெள்ள மெள்ளத் தாழ்ந்துகொண்டே செல்லுகின்றது. நல்லவேளையாக இடையிடையிலே சில அஞ்சா வீரர்கள் தோன்றி தமிழர்தம் மானத்தைக் காக்க ஆவன செய்வதால், ஓரளவு ‘பாழ்பட்டு வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு’ப் போகாமல் வாழ்ந்துவருகின்றோம்.

தமிழ், தோன்றிய அந்த நாள்தொட்டு இன்றுவரை இத்த்கைய அஞ்சா நெஞ்சம் கொண்ட அறவோர் துணையாலேயே வாழ்ந்து வருகின்றது. இவ்வுண்மையை வரலாறு நன்கு விளக்குவதை யாவரும் அறிவர். நாவரசர் அன்று அஞ்சாது நிற்காதிருந்திருப்பராயின் பல்லவர்வழி அவர்தம் பிராகிருதமும் சமஸ்கிருதமும் நாட்டையும் மொழியையும் மாற்றியிருக்கும். இன்றைய நம் அண்டை நாட்டு மொழிகளாகிய மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்று தமிழும் தன் உரிமை கெட்டு வேற்று மொழி இன்றேல் வாழ்வில்லை என வழக்கிழந்திருக்கும். இப்படியே பலகால எல்லைகளினின்றும் காரணங் காட்டலாம்.

இவ்வாறு நம் முன்னோர் காத்த நல்ல தமிழ் மொழியையும் பண்பாட்டையும் இனியும் வரும் எல்லையற்ற தொல்லைகளைப் போக்கிக் காக்கவேண்டிய பெரும்பணி இன்று வாழும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் வருங்காலச் சமுதாயத்துக்கும் உண்டு. இதை உணர்ந்து எல்லா வேறுபாடுகளையும் மறந்து தமிழால் ஒன்றுபட்டு தமிழ் வாழ, தமிழினம் வாழ, தமிழ்ப் பண்பாடு வாழ அஞ்ச வேண்டாததற்கெல்லாம் அஞ்சாது எல்லாவற்றையும் வென்று உற்ற புகழை நிலைநாட்ட முற்பட வேண்டும். இயல்பாக எல்லா நலன்களும் நிரம்பப்பெற்ற நம் தமிழ் மொழி அஞ்சா நல்லாண்மையாளரால் வருங்காலத்தில் உலகில் சிறக்கும் என்பது உறுதி. அதற்கு வேண்டுவது உளஉரமே! வேண்டுவது அஞ்சாமையே! அதுவே தமிழ்ச் சமுதாயத்தை வாழ வைப்பது! வளர வைப்பது!
—1962 மங்கலங்கிழார் மலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/004-026&oldid=1135771" இலிருந்து மீள்விக்கப்பட்டது