உள்ளடக்கத்துக்குச் செல்

ஓங்குக உலகம்/013-026

விக்கிமூலம் இலிருந்து

13. வளரும் தமிழை

வாழ வைத்தவர்

மிழ் தொன்மையான மொழி. அத்துடன் அது தன்னைத் தொட்டாரை வாழ வைக்கும் தன்மை வாய்ந்தது. வேற்றுப் பணி புரியவந்த பிற நாட்டவருள் சிலர் தமிழைத் தொட்டுச் சாகாவரம் பெற்றமை நாடறியும். அப்படியே தமிழ்நாட்டில் தமிழராகப் பிறந்து தமிழைக் கற்காது-தமிழ் அறியாது-செம்மாந்து வாழ்ந்து உலகில் தாம் வாழ்ந்த சுவடே தெரியாமல் மறைந்தவர் பலர். ஆனால் ஏழையராயினும் எளியராயினும் தமிழைத் தொட்டுத் தமிழைப் போற்றி, தமிழ் வாழத் தாம் வாழ நினைத்தவர்களை அத் தமிழ் வாழ வைக்கத் தவறவில்லை. இலக்கிய வரலாற்றினை நன்கு அறிந்தவர் யாவரும் இவ்வுண்மையை நன்கு உணர்வர். ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன்’ என்ற தமிழ்விடு தூதின் அடிக்கேற்ப, சிலர் நாட்டில் தமிழால் தம் வாழ்வைப் பெருக்கிக்கொண்டு, வாழ்ந்து மறையும் அதே வேளையில், ‘இருந்தமிழே உனக்காக இருந்தேன்’ என்று தம் வாழ்வைத் தமிழுக்காக ஒப்படைக்கும் நல்லவர்கள் காலத்தை வென்று வாழ்கின்றார்கள். இது அன்றுதொட்டு இன்று வரையில் காணும் வரலாற்று-வாழ்வு நிகழ்ச்சியாகும். இந்த வரிசையில்-மரபில் இன்றை தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும் சிறக்க இடம் பெறுகிறார்கள்.

தமிழர், தமிழ், தமிழ்நாடு என்று சொன்னாலே தமிழராலேயே வேற்றுப் பார்வையில் பார்க்கப்பெற்ற அந்த நாளிலேயே ‘தமிழ் வாழ்க’ எனப் பட்டிதொட்டிகளிலெல்லாம் முழக்கித் தமிழ் மாணவரினத்தைத் தட்டி எழுப்பித் ‘தமிழினம்’ என்ற தனி இனம் உண்டு என்ற உணர்வை மூட்டி, அத் தமிழினம் உலகில் தலைநிமிர்ந்து வாழத்தக்க வளமும் வரலாறும் பெற்ற ஒன்று என்பதையும் நிறுவி, மக்கள் உள்ளங்களில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்த பெருமை பேரறிஞர் அண்ணா அவர்களைச் சாரும். அவர்தம் உடன்பிறவாத் தம்பியாய்-அவர் தொட்ட பணிகள் துலங்கும் வகையில் தம் வாழ்வை அமைத்துக் கொண்ட கலைஞர் அவர்தம் தொண்டு போற்றக் கூடியதாகும்.

தமிழ்நாட்டில் பிறந்தவர் தமிழையே அறியாத நிலையில் வேற்றுமொழிகளைக் கட்டாயமாக்கிய அரசாங்கங்களை எதிர்த்துப் போராட்டக் காலங்களில் எல்லாம் கலைஞர் அவர்கள், அப்போர்களின் முன்னணியில் நின்று வீரம் விளைத்து வெற்றி கண்டவராவார். தம் உடல் நலம் தளர்ந்த நிலையிலும் உள்ளம் தளராது நோய் தாங்கிக் காவலர் (போலீஸ்) தம் தடியடியினைத் தாங்கித் தமிழுக்காகவே வாடி, வதங்கிச் சிறையிடைப் பட்டு உழன்ற காலத்தை எண்ணின் கண்ணில் நீர் முட்டுகின்றது. ஆம்! அத்தகைய அருமைத் தமிழ்த் தொண்டே-ஆக்கப் பணியே-மொழிப்பற்றே இன்று அவரைத் தமிழக முதல்வராக்கிற்று என்றால் இதில் யாரும் ஐயப்படமாட்டார்கள் அன்றோ!

எழுத்திலும் பேச்சிலும் தமிழ் நலத்தைக் கண்ட மக்கள் அண்ணாவிடத்தும் அவர்தம் தம்பியரிடத்தும் தம் உள்ளத்தைப் பறிகொடுத்த காரணம்தான், பாராளும் சட்டமன்றங்களில் அவர்தம் கழகத்தைச் சார்ந்த பலர் இடம்பெற ஏதுவாகின்றது. ஏழைத் தமிழ் மக்கள் தம் தெய்வத் தமிழ் நலம் காப்பார் யாரையும் காப்பார் என்ற உண்மையை நிறுவிவிட்டனர். எனவே கலைஞர் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்து சிறக்கின்றது.

கலைஞர்தம் பேச்சுத் திறனும் எழுத்தும் கவித்திறனும் நாடறிந்தவையே. ஆசுகவியாக அகில உலகம் புகழும் வகையில் அவர்தம் ஆக்கப்பாடல்கள் பல நாட்டு மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மாற்றாரும் விரும்பிப் படிக்கும்வண்ணம் அவர்தம் தெள்ளிய துள்ளும் தமிழ் நடையை நாளிதழ், கிழமை இதழ்கள் வழியே காண்கிறோம். அவரைப் பழித்துரைக்கும் பத்திரிகையாளர்களும்கூட, அவர்தம் கவிதைகளையும் கட்டுரைகளையும் போட்டியிட்டு வாங்கி வெளியிடும் செயலொன்றே அவர்தம் கலைநலத்தை-கருத்து விளக்கத்தை-கலையுள்ளத்தைக் காட்டும்,

எழுத்தில் மட்டுமன்றிக் கலைஞர்தம் செயலிலும் தமிழ் நலம் தெளிவாகும். ஓடும் உந்து வண்டிகள் எல்லாம், திருக்குறளை மக்களுக்கு விளக்கிக்கொண்டே இருக்கின்றனவன்றோ? எத்தனையோ ஊர்ப்பெயர்கள் உண்மையான நல்ல தமிழ்ப்பெயரைப் பெற்றுத் திகழ்கின்றன. பாரதியார் கண்ட ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இந்நாட்டுக்கு இவர்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகே பெற வாய்ப்பு உண்டாயிற்று.

“தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற
தாயென்று கும்பிடடி பாப்பா”

என்ற பாரதியின் வாக்கை வாழவைத்த பெருமையோடு, அத் தமிழ்த்தாய் வணக்கத்தையே தெய்வ வணக்கமாக்கிய பெருமையும் இவர்கட்கு உண்டன்றோ? வள்ளுவர் கோட்டம் கண்டு அவர் புகழ் பரப்ப வழி வகுத்தது — பூம்புகார் கண்டு தமிழர் பழைமையைக் காத்தது — இவை போற்றப்பட வேண்டியவை.

அலுவலகங்களிலும் ஆவணங்களிலும் பிற இடங்களிலும் நல்ல தமிழ்-நாட்டுமொழி-மக்கள் உணரும் மொழி இடம்பெறச் செய்த பெருமை கலைஞரையே சாரும் என்பது தெளிவு. பெயர் விளங்காப் பல ஊர்களின் பெயர்கள் தற்போது தெளிவுற்றுத் தம் பெயர்களை விளக்கிக் கொண்டுள்ளன. எங்கு நோக்கினும் நல்ல தமிழைத் தாங்கிக்கொண்டு பெயர்ப் பலகைகளும் விளம்பரங்களும் காட்சி அளிப்பதைக் கண்டு தமிழ் உள்ளம் களிதுளும்புகின்றது இவ்வாறு தமிழ்நாட்டில் எங்கும் எதிலும் தமிழ் என்பதைச் செயலில் கொண்டு வந்து, அத் தமிழை வாழவைத்த நல்ல ஆட்சிக்குத் தலைவராக உள்ள கலைஞர் அவர்கள் ‘நீடு வாழ்க’ என வாழ்த்துகிறேன்.

கற்றாரும் மற்றாரும் போற்றும் வகையில் ஆட்சிப் பணிகளுக்கு இடையில் அரிய கட்டுரைகளையும் கவிதைகளையும் நாள்தொறும் வடித்துத் தந்துகொண்டிருக்கும் கலைஞர் செயலே அவர் தமிழ் உள்ளத்தினைத் தெள்ளத் தெளியக் காட்டுகின்றது. இன்னும் தமிழ் நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் செய்ய வேண்டிய தொண்டுகள் பல தமிழ் மொழியை உலகம் உணர்ந்து போற்றத் தொடங்கிவிட்ட போதிலும் அதன் ஏற்றம் முற்றும் போற்றப் பெறவில்லை தமிழ் வாழ்வு ஏற்றம் பெறவேண்டிய அளவு முற்றும் உயரவில்லை. தமிழகம் ‘நாடென்ப நாடா வளத்தன’ என்ற வள்ளுவர் வாக்குக்கு முற்றும் இலக்காகவில்லை. கலைஞர் அவர்கள் இன்னும் முயன்று, நாட்டில் உலகில் நம் தமிழை-தமிழரை-தமிழ்நாட்டை எல்லா வகையிலும் ஏற்றம் பெறுமாறு காண ஆவன செய்வார்கள் என்ற நம்பிக்கையுடையேன். அவர்தம் திறன்மிகு செயலால், பாட்டால், எழுத்தால் தமிழ்நாடு-மொழி-மக்கள் அனைத்தும் நலம் பெறும் என்ற துணிவோடு. கலைஞர் அவர்கள் செயலும் திறனும் காலம் வென்று அவரை வாழ்விக்கும் என்ற உணர்வோடு, அவர்தம் ஆக்கப்பணிகள் சிறக்க என்ற வாழ்த்தோடு என் உரையை முடித்துக்கொள்கிறேன்.

பேச்சு—1972

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/013-026&oldid=1135822" இலிருந்து மீள்விக்கப்பட்டது