உள்ளடக்கத்துக்குச் செல்

அம்புலிப் பயணம்/அப்போலோ - 10

விக்கிமூலம் இலிருந்து
10. அப்போலோ-10

ப்போலோ-10 என்ற விண்வெளிக் கலமும் அமெரிக்காவின் மிகப் பெரிய சாட்டர்ன்-5 என்ற இராக்கெட்டினாலேயே இயக்கப்பெற்றது.[1] திங்களுக்கு 15-3 கிலோ மீட்டர் தொலைவில் அம்புலி ஊர்தியைத் திங்களைச் சுற்றி இரண்டரை நாள்கள் வட்டமிட்டு வருகின்ற ஜூலை 16இல் மேற்கொள்ள இருக்கும் அப்போலோ-11 இன் இரண்டு விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாகத் திங்களில் இறங்குவதற்குரிய நல்ல இடத்தைக் கண்டறிவதே இப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இப்பயணம் தொடங்கி முற்றுப்பெறும் காலம் 8 நாள் 5 நிமிடம். இப் பயணத்தில் பங்கு கொண்டவர்கள் தாமஸ் ஸ்டாஃபோர்டு (Thomas Stafford), யூஜினேர் செர்னான் (Eugenére Cerna'n), ஜான் யங்க் (John Young) என்ற மூன்று விண்வெளி வீரர்கள் ஆவர். இவர்களுள் இருவர் திங்களின் தரையினின்றும் 15,000 மீட்டர் உயரத்திலிருந்து கொண்டு திங்களில் இறங்க வேண்டிய இரண்டு இடங்களைச் சோதித்தனர். மூன்றாவது விண்வெளி வீரர் திங்களினின்றும் 112 கிலோ மீட்டர் தொலைவில் தாய்க்கலத்திலிருந்து கொண்டு திங்களை வட்டமிட்ட நிலையில் இருந்தார். இந்த மூவரும் அறிவியலறிஞர்கள் "சுற்றுவழிக் குழப்பங்கள்“ {orbital Perturbations) என்று குறிப்பிடும் நிலைகளைப்பற்றி அதிகமான் செய்திகளைத் திரட்டுவதில் முனைந்தனர், சாதாரணமாக இவை திங்களுக்குச் செல்லும் சாலையிலுள்ள 'ஆட்டங்கள்' (Bumps) என்று வழங்கப்பெறும்.

திங்களைச் சுற்றி வலம் வரும்பொழுது பொருள்கள் தாம் செல்லும், சுற்றுவழியில் சிறிதளவு எழும்பிக் குதிப்பதற்குக் காரணம் திங்களின் ஈர்ப்பு விசையிலுள்ள ஒழுங்கீனமே என்று அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். மேலும், இவர்கள் திங்களின் தரைமட்டத்திற்குக்கீழ் காந்தப் பொருள்களின் குவியல்கள் கரடுமுரடாக வினியோகிக்கப் பெற்றிருப்பதே இத்தகைய ஈர்ப்பு விசையின் ஒழுங்கீனத்திற்குக் காரணமாகலாம் என்றும் நம்புகின்றனர். அம்புலி அறிவல்லுநர்கள் இத்தகைய பொருண்மைத் திரட்சியினை (Mass Concentration) மிகச் சுருக்கமாக 'மாஸ் கான்ஸ்' {Mas - Cons) என்று வழங்குவர். அப்போலோ-10 பயணத்தில் அது திங்களைச் சுற்றி இரண்டரை நாட்களில் 31 முறை வலம் வரும்பொழுதும், இது தவிர அம்புலி ஊர்தி பல தடவைகள் வலம் வரும்பொழுதும் திங்களைச் சுற்றிப் பறத்தலின் பொழுது இந்த 'மாஸ் - கான்ஸ்' தரும் விளைவுகள் பற்றியும், தேவையாயின் இவ் விளைவுகளைச் சமாளிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பெற்றன.

மேலும், அப்போலோ-10 பயணத்தில் திங்களின் சூழ் நிலையில் அப்போலோ கலம் முற்றிலும் நன்கு சோதிக்கப் பெற்றது. அடுத்து வரும் பயணங்களில் அம்புலியில் இறங்குவதற்கு முன்னர் இந்தச் சோதனையை மேற்கொள்ள வேண்டியது மிகமிக இன்றியமையாதது. அப்போலோ-8 பயணத்தில் கட்டளைப் பகுதியும் பணிப் பகுதியும் கொண்ட தாய்க்கலம் மட்டிலுமே சந்திரனின் சுற்று வழியில் இயங்கியது. இந்தப் பயணத்தில் அம்புலி ஊர்தி. என்ற பகுதியும் தாய்க்கலத்துடன் சேர்ந்து இயங்கியது. இந்த ஊர்திதான் தாய்க் கலத்தினின்றும் விண்வெளி வீரர்கள் திங்களின் தரையிலிறங்குவதற்கும் அங்ஙனம் இறங்கியவர்கள் மீண்டும் தாய்க் கலத்தை வந்து அடைவதற்கும் பயன்படக் கூடியது. மேலும், இந்த ஊர்தி தாய்க்கலத்தினின்றும் கழற்றப்பெற்றுப் பல மணி நேரம் தன்னந்தனியாகப் பறந்து கொண்டிருந்தது. தாய்க்கலத்தைச் சேர்வதற்கு முன்னர் இங்ஙனம் பறப்பது திங்களில் இறங்கும் பொழுது தொடர்ந்து நடைபெற வேண்டிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

பயணம் தொடங்கிய நான்காம் நாள் (மே - 21) அப்போலோ-10 விண்வெளி வீரர்கள் திங்களின் ஈர்ப்பு - விசையை உணரத் தொடங்கினர். 47 டன் எடையுள்ள கலம் திங்களின் ஈர்ப்பு விசை எல்லைக்குள் நுழைந்தது. அது திங்களின் ஈர்ப்பு விசையை உணரத் தொடங்கிய பொழுது அஃது இருவேறு வேகங்களில் சென்று கொண்டிருந்தது. திங்களின் ஈர்ப்பு விசையால் பாதிக்கப்பெற்ற பொழுது அது விநாடிக்குச் சுமார் 930 மீட்டர் வீதம் சென்றது; இது பூமியோடு தொடர்புடைய வேகமாகும். ஆனால், திங்களோடு தொடர்புடைய அதனுடைய வேகம் விநாடிக்குச் சுமார் 210 மீட்டராக இருந்தது. இந்த விண்வெளி வீரர்கள் மூவரும் தங்களின் எட்டு நாள் பயணத்தின் மிகச் சுறுசுறுப்பான பணியைத் தொடங்குவதற்கு முன்னர் மிக நன்றாக உறங்கி எழுந்தனர். அப்போலோ-10 வீரர்கள் கட்டுப்படுத்தும் இராக்கெட்டுகளை இயக்கித் தங்கள் கலத்தைத் திங்களைச் சுற்றிய நீள் வட்டத்தில் சுற்றி வரச் செய்தனர். அடுத்து 4 மணி 25 நிமிடங்கட்குப் பிறகு இராக்கெட்டுகளை இயக்கித் தங்கள் கலத்தைத் திங்களினின்றும் 110 கி.மீ. - உயரத்தில் வட்டச் சுற்று வழியில் இயங்கி வரச்செய்தனர்.

செர்னான் தாய்க்கலத்தினை அம்புலி ஊர்தியுடன் இணைக்கும் ஒரு சுரங்க வழியாகச் சென்று அதன் பொறியமைப்புகள் சரியாக இயங்குகின்றனவா என்பதைச் சோதித்தார். அடுத்து, தாமஸ் ஸ்டாஃபோர்டும் தானும் அம்புலி ஊர்திக்குள் சென்று அதனைத் தாய்க்கலத்தினின்றும் கழற்றிவிட்டனர். அப்போலோ-9 இல் இருந்த அம்புலி ஊர்தி பூமியின் சுற்று வழியில் சோதிக்கப்பெற்றபொழுது அதில் திங்களில் சென்று இறங்குவதற்கும், அங்கிருந்து மீண்டும் தாய்க்கலத்தை அடைவதற்கும் தேவையான எரி பொருள்களைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், இந்த அம்புலி ஊர்தியில் தேவையான எரிபொருள்கள் இருந்தன.

ஜான் பங்க் என்பவரால் இயக்கப்பெற்ற தாய்க்கலம் திங்களினின்றும் 96 கி.மீ. உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அக் கலத்திறுகுக் கீழாகத் தாமஸ் ஸ்டாஃபோர்டும் யூஜினேர் செர்னானும் அம்புலி ஊர்தியில் சுற்றி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அப்போலோ-11 இல் பயணம் செய்யும் தம் தோழர்களாகிய இரண்டு விண்வெளி வீரர்கள் பாதுகாப்புடன் இறங்கக்கூடிய திங்களிலுள்ள அமைதிக் கடல் (Sea of Tranquillity) என்ற இடத்தை இருமுறை மிக அண்மையிலிருந்து சோதித்தனர். அந்த இடம் ஒரே மட்டமாக இருப்பதையும் கண்டனர், இங்ஙகனம் திங்களுக்கு 15 கி. மீட்டர் அருகில் வெற்றியுடன் சுற்றி வந்ததால் திங்களின் சூழலில் அம்புலி ஊர்தி சரியாக இயங்கும் என்பதும் நிலை நாட்டப்பெற்றது.

அம்புலி ஊர்தி பிரிந்து சென்ற எட்டு மணி நேரத்திற்குப் பிறகு அதில் சென்ற இரு வீரர்களும் தங்கள் ஊர்தியைத் தாய்க்கலத்துடன் திரும்பவும் இணைத்தனர். திங்களின் சூழலில் இவ்வாறு இணைத்தது இதுவே முதல் தடவையாகும். இங்ஙனம் இணைந்து இரு வீரர்களும் தாய்க் கலத்திலிருந்த ஜான் யங்க் என்ற வீரருடன் சேர்ந்ததும், தாம் இருந்த அம்புலி ஊர்தியைத் தாய்க்கலத்தினின்றும் கழற்றிவிட்டனர். அது தனியான ஒரு சுற்று வழியில் திங்களைச் சுற்றி வந்துகொண்டிருந்தது. இந்த மூன்று வீரர்களும் தாய்க்கலத்திலிருந்து கொண்டு மீண்டும் 24 மணி நேரம் திங்களைச் சுற்றி வந்துகொண்டிருந்தனர். மனிதனைக் கொண்ட திங்கள் மண்டலச் செலவு வரலாற்றில், இம் மூவரும் திங்களைச் சுற்றி வந்த "இரண்டாவது மும்மணிகள்“ ஆவர். அப்போலோ-8இல் சென்ற ஃப்ராங் போர்மனும் அவரது இரு தோழர்களும் "முதல் மும்மணிகள்“ என்பதை நாம் அறிவோம்.

இந்த விண்வெளி வீரர்கள் விண்வெளியிலிருந்த வண்ணம் இலட்சக்கணக்கான மக்கள் காண்பான் வேண்டி தொலைக் காட்சிப் படங்களை ஒளிபரப்பினர். திங்களில் இறங்கும் இடத்தைப்பற்றி விரிவான கோட்டுப் படங்கள் (Charts) காட்டப்பெற்றன.. பூமியில் இராக்கெட்டுத் தளத்திலிருந்து அறிவியலறிஞர்கள் இவர்களுடன் தொடர்பு கொண்ட வண்ணம் இருந்தனர். அவர்கள் அடிக்கடி தேவையான கட்டளைகளை அனுப்பிக்கொண்டே இருந்தனர்.

இந்தப் பயணத்தில் கவலைக்கிடமான சந்தர்ப்பங்களும் இருந்தன. அம்புலி ஊர்தி இரண்டாவது முறை அம்புலியை நோக்கிச் சென்றபொழுது ஒரு பயங்கரமான சுற்று வழியை அடைந்தது. எட்டு நிமிட நேரம் பைத்தியம் பிடித்த நிலை ஏற்பட்டது. ஆனால், விரைந்து ஏற்பட்ட மனத் தெளிவினால் விண்வெளி வீரர்கள் திகழவிருந்த விபத்தினைத் தடுத்தனர். தானாக இயங்கும் சொடுக்கி {Switch) ஒன்றினைக் காலா காலத்தில் சரிப்படுத்தாததனால் ஏற்பட்டதன் விளைவு இஃது என்பது பின்னர்த் தரையிலிருந்த அறிஞர்கள் தந்த விளக்கத்தால் தெளிவாயிற்று. இரண்டாவது முறை நேரிட்ட குழப்பம் அப்போலோ-10 பூமிக்குத் திரும்பும் பொழுது ஏற்பட்டதாகும். கலம் திங்களின் பின்புறம் சென்று கொண்டிருந்தபொழுது விண்வெளி வீரர்கள் திரும்புவதற்கு வேண்டிய இராக்கெட்டுகளை இயக்கினர். இவை இயக்கப் பெறுங்கால் வானொலித் தொடர்பு இல்லாது போயிற்று. ஒன்பது நிமிட நேரம் தரையிலிருந்தோர் கவலையால் தடுமாறினர். அப்போலோ-10 திங்களின் விளிம்பைக் கடந்து முன்புறம் வந்ததும் வானொலித் தொடர்பு மீண்டும் ஏற்பட்டது. "நாங்கள் பூமிக்குத் திரும்பிக் கொண்டுள்ளோம்“ என்றது ஸ்டாஃபோர்டின் குரல், "உங்களைத் திரும்பவும் காண மகிழ்ச்சி அடைகின்றோம்" என்ற மறுமாற்றம் தரையிலிருந்து விண்வெளி வீரர்களை எட்டியது.

அப்போலோ-16 பயணத்தின் பணி, பயணம் தொடங்கிய ஆறாம் நாள் (மே - 24) நிறைவு பெற்றது. பூமிக்குத் திரும்ப விண்வெளி வீரர்கள் விரைந்தனர். அன்றைய நாளே அவர்கள் பூமியின் ஈர்ப்பு ஆற்றலின் எல்லையை அடைந்தனர். எட்டாம் நாள் மூன்று விண்வெளி வீரர்கள் அடங்கிய அப்போலோ -10 கலம் பூமியின் வளி மண்டலத்தைக் கிழித்துக் கொண்டு சோமா வோன் தீவுகளுக்குத் தெற்கே கரிய பசிபிக் மாகடலில் ஒரு குதிகொடை மூலம் பாதுகாப்பாக இறங்கியது. உடனே மீட்புக் கப்பல்கள் விரைந்து அவ் வீரர்களை மீட்டன. அப்போலோ.10 கலம் பூமியின் வளிமண்டத்தில் திரும்பவும் துழைவதற்கு முன்னர் 1556 துணைக்கோள்களைக் கடந்து சென்றது. இவை வட அமெரிக்காவின் ஆகாயப் பாதுகாப்புப் படையினர் அமைத்த பாதுகாப்பு வலையாகும். விண்கலம் பூமியை நெருங்கி வந்து கொண்டிருந்த பொழுது இந்தியா செந்நீல நிறமாகவும், ஓமன் வளைகுடா மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும், சாடி அரேபியா சிவந்த மஞ்சள் நிறமாகவும் இருந்தன என்று விண்வெளி வீரர்கள் வருணித்தனர்.

அப்போலோ-10 சந்திரனை அடைவதற்கு 72 மணி நேரம் ஆயிற்று; அங்கிருந்து பூமிக்குத் திரும்புவதற்கு 54 மணி நேரம் ஆயிற்று. இந்தப் பயணத்தை மேற்கொள்ள ஆன செலவு 35 கோடி டாலர் (350 மில்லியன்). இந்தச் செலவில் மிகப் பெரிய திங்கள் மண்டலச் செலவின் ஆடை. ஒத்திகை (Dress Rehearsa]) மிக வெற்றியுடன் நிறைவு பெற்றது. இந்த வெற்றி அமெரிக்க அறிவியலறிஞர்களின் துறை நுட்பத் திறனுக்கு ஒரு நற்சான்றாகும்.


  1. 1969ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள்.