உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 1/009-027

விக்கிமூலம் இலிருந்து

9. வேலூர் ஜலகண்டேச்வரர்

பாண்டிய மன்னனின் அமைச்சராய் அமைந்த வாதவூரர், மன்னவன் படைக்குக் குதிரைகள் வாங்கத் திருப்பெருந்துறை செல்கிறார். அங்கு குருந்த மரத்தடியில் இறைவன் தன் சீடர்களுடன் எழுந்தருளியிருப்பதைக் கண்டதும், வந்த காரியத்தை மறந்து அங்கேயே உட்கார்ந்து விடுகிறார். கொண்டு வந்த பணத்தை எல்லாம் திருக்கோயில் கட்டுவதிலே செலவு செய்கிறார்.

மன்னன் விடுத்த ஏவலாளர் வந்து வாதவூரரை அழைத்துச் செல்ல, இறைவன் அவருக்காக நரிகளைப் பரிகளாக்கிக் கொணர்கிறான். பின்னர் பரிகளையே நரிகளாக்கிப் பெரிய கலாட்டா செய்கிறான். வாதவூரர் இதனால் எல்லாம் துயர் உற்ற போது, அவருக்காக மண் சுமந்து பாண்டியனிடம் பிரம்படி படுகிறான்.

இத்தனை அனுபவமும் பெற்றபின், வாதவூரர் திருவாசகம் பாடுகிறார். மணிவாசகர் எனப் புகழ் பெறுகிறார். அவர் வாழ்க்கையில் நடந்த இத்தனை காரியங்களும் அரிய அற்புதங்கள்தானே. வாழ்க்கைக் கடலில் சிக்குண்டு கலங்கிய தன்னை, இறைவன் ஆட்கொண்டு, அற்புதங்கள் நிகழ்த்தியதை எல்லாம் நினைக்கிறார். பாடுகிறார்.

வணங்கும் இப்பிறப்பு இறப்பு இவை
நினையாது மங்கையர் தம்மோடும்
பிணைந்து, வாயிதழ்ப் பெரு வெள்ளத்து
அழுந்தி நான், பித்தனாய்த் திரிவேனை
குணங்களும் குறிகளும் இலாக்
குணக்கடல் கோமளத் தொடும்கூடி
அணைந்து வந்துஎனை ஆண்டுகொண்டு
அருளிய அற்புதம் அறியேனே!

ஜலகண்டேச்வரர் கோயில்

என்றே வியக்கிறார், மணிவாசகர். இந்தப் பாட்டைப் பாடிக் கொண்டே வேலூர் சென்ற எனக்கு, இன்னும் என்ன என்னவோ அதிசயங்கள் அங்கே காத்துக் கிடந்தன. நீர் இல்லாத ஆறும், மரங்களே இல்லாத மலையும், கோமகன் இல்லாத கோட்டையும், அதிகாரம் இல்லாத போலீசும் (இன்னும் மற்றவற்றையும் சொன்னால் வேலூர் மக்கள் கோபித்துக் கொள்வார்களே!) என்று அதிசயங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள் அங்கு இருப்பவர்கள்.

இத்தனை அதிசயங்களையும் தூக்கி அடிக்கும் வகையில், அங்குள்ள கோட்டைக்குள்ளே கோயில் உண்டு. ஆனால் மூர்த்தி இல்லை. தமிழ் நாட்டில் இப்படி எத்தனையோ கோயில்கள் இடிந்து பழுதுற்றுக் கிடக்கின்றன. என்றாலும் அந்த இடிந்த கோயில்களுக்கு உள்ளே கூட ஒரு மூர்த்தி நின்று கொண்டிருக்கும், பூசை புனஸ்காரம் இல்லாமல். ஆனால் மூர்த்தி இல்லாக் கீர்த்தியை உடைய கோயில் இந்த வேலூர் ஜலகண்டேச்வரர் கோயில் ஒன்றுதான்.

ஜலகண்டேச்வரர் ஜாதகம் நிறையக் கண்டங்கள் நிறைந்த ஜாதகம். ஏரிக்கு நடுவிலே ஒரு தீவு. அந்தத் தீவிலே ஒரு புற்று. அந்தப் புற்றிடத்திலே ஒரு சிவலிங்கம். அந்தச் சிவலிங்கத்தைச் சுற்றி ஒரு ஐந்து தலை நாகம். அந்த நாகத்திற்குப் பாலருத்துகிறது ஒரு பசு. இவை யெல்லாம் அறிந்த அந்த நாட்டு மன்னர் பொம்மி ரெட்டி புற்றினை அகற்றிப் புற்றிடங் கொண்ட பெருமானுக்கு ஒரு கோயில் கட்ட முனைகிறார்.

கோயில் கட்ட அடிகோலியது, சாலிவாகன சகாப்தம், சுக்கில வருஷம் (கி.பி.1274) பங்குனி மாதம் பத்தொன்பதாம் தேதி, வடநாட்டுச் சிற்பி பத்ரிகாசி இமாம் கோயில் கட்டும் பணியில் ஈடுபடுகிறான். கட்டி முடிய ஒன்பது வருஷங்கள் ஆகின்றன. ஜலகண்டேச்வரர் (ஆம், கண்டம் வரை ஜலத்துக்குள்ளேயே இருந்த மூர்த்தி அல்லவா?) அகிலாண்டேஸ்வரி பிரதிஷ்டையும் நடக்கிறது சிறப்பாக.

ஆனால், கோயில் கட்ட அடிகோலிய நாள் நல்ல நாளாக இல்லை என்று கண்டு சொல்லச் சிற்பி மகன் சிற்பியே வர வேண்டியிருக்கிறது பின்னால். அதனால் மனங்கவன்ற மன்னன் கோயிலைக் காப்பாற்றக் கோயிலைச் சுற்றியே ஒரு நல்ல அழகிய மதிலையும் கட்டுகிறான். இதனால் கோயிலைக் காப்பாற்ற முடிந்ததே ஒழிய, மன்னனுக்குக் கோயிலில் உள்ள மூர்த்தியை நிலை நிறுத்த முடியவில்லை.

பொம்மி ரெட்டிக்குப் பின்னால் தெங்கணிக் கோட்டை வேங்கட தேவமகாராயலு வேலுர் வட்டத்தை ஆளுபவனாக அமைகிறான். அவன் சந்ததியினர் பத்துப் பேர் இந்த ராயவேலூரில் இருந்து அரசாண்டிருக்கிறார்கள்.

பதினேழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வேலூரைப் பிஜப்பூர் சுல்தான்கள் கைப்பற்றி இருக்கின்றனர். கான்கானும், அவனுடைய மகன் முகம்மது கானும் ஆண்டு வந்த காலத்தில், கோயிலுக்குப்பழுதுநேரவில்லை. ஆனால் முகம்மது கானுக்குப் பின் வந்த அப்துல்லாவிடம், யாரோ மூர்த்தியின் பீடத்தின் கீழ் உயர்ந்த ரத்தினங்கள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். பிடித்தது சனி, ஜலகண்டேச்வரரை. அவர் பீடத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார். அகழியில் எறியப்பட்டிருக்கிறார்.

பிஜப்பூர் சுல்தானின் ஆட்சி அதிக காலம் நீடிக்கவில்லை. மராத்திய மன்னர் ஆதிக்கம்பெற்றபோது, 1676இல்துக்கோஜிராவ் வேலூர்க் கோட்டையை முற்றுகையிட்டு, வெற்றி பெற்றிருக்கிறார். கோட்டையைக் கைப்பற்றியவர்கள் ஜலகண்டேச்வரரை அகழியிலிருந்து எடுத்துத் திரும்பவும் பிரதிஷ்டை செய்து பூஜையை எல்லாம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் ஜலகண்டேச்வரர்தான் கண்டங்களுக்கு உட்படுபவர் ஆயிற்றே! ஆதலால் இரண்டுவருஷம் கழியுமுன்பே சுல்தான்கள் திரும்பவும் படை எடுத்து, மராத்திய மன்னன் துக்கோஜியின் குமாரன் சிங்கோஜியை வெற்றி கண்டு, கோட்டையைக் கைப்பற்றி இருக்கிறார்கள். அவ்வளவுதான். ஜலகண்டேச்வரரது அபிஷேக ஆராதனைகள் நின்றிருக்கின்றன. இப்படியே அன்ன ஆகாரம் இல்லாமல் இருந்திருக்கிறார் இருபத்து ஒரு வருஷம்.

இப்படி உபவாசம் இருந்தபோதும் அவர் சும்மா இருக்கவில்லை. பழையபடி மராத்திய மன்னர்களை அழைத்திருக்கிறார். மராத்திய மன்னர் ஸ்ரீனிவாச ராவ் கோட்டையை முற்றுகை இட்டுக் கோயிலைக் கைப்பற்றி இருக்கிறார். இவரும் இவர் மகன் ராமராவும் ஆண்ட முப்பது வருவடி காலம் ஜலகண்டேச்வரருக்குயோக ஜாதகம். அதன்பின்தான் தகராறு.

1708இல் தாவூத்கான் மராத்தியர்களைத் திரும்பவும் முறியடித்து வேலூரைக் கைப்பற்றி இருக்கிறான். ஆர்க்காட்டு நவாபுகளான சதாதுல்லா கான், குலாம் அலிகான், பாக்கர் அலி முதலியவர்களின் ஆட்சிக் காலத்திலும் பூஜை நிற்கவில்லை. என்றாலும் அப்போது இருந்த மகம்மதிய அரசிளங்குமாரன் அழகில் சிறந்த உருத்திரகணிகை ஒருத்தியை விரும்பி, அவளைக் கோயில் பிராகாரத்திலேயே சந்தித்துப் பலாத்காரம் பண்ணியிருக்கிறான். அழகியாக இருந்த ஆரணங்கு நல்ல வீர மகளாகவும் இருந்திருக்கிறாள். அரசகுமாரனது உடைவாளையே யுருவி அவன் நெஞ்சில் பாய்ச்சி இருக்கிறாள். தன்னையுமே மாய்த்துக் கொண்டிருக்கிறாள்.

அன்று இந்தப் பிராகாரத்தில் படிந்த இரத்தக் கறையை, முழுக்க முழுக்க ஜலத்துக்குள்ளேயே இருந்த ஜலகண்டேச்வரராலும் கழுவித் துடைக்க முடியவில்லை. அந்த அவமானம் தாங்க மாட்டாமலோ என்னவோ, அன்று கோயிலை விட்டு ஓடியவர்தான் இன்னும் திரும்பவில்லை. வேலூருக்குப் பக்கத்திலே உள்ள சின்னஞ் சிறிய ஊரான சத்துவாச் சேரியிலே, 'கோயிலுக்கே வர மாட்டேன்' என்று சத்தியாக்கிரஹமே செய்து கொண்டிருக்கிறார் இன்னும்.

இதுவரை சொன்னதில் எவ்வளவு கர்ண பரம்பரை, எவ்வளவு சரித்திர உண்மை என்று அறுதி இட்டு உரைக்க முடியாது. கோவில், கோட்டைக்குள் இருப்பது நிதரிசனம். கோயிலுக்குள் மூர்த்தி இல்லை என்பதும் கண்கூடு. யார் காலத்தில் யாரால் வெளியேற்றப்பட்டார் என்பதற்குப் போதிய சரித்திரச்சான்றுகள்கிடைக்கவில்லை. சுமார் இருநூறு வருஷங்களாக, ஆங்கிலேயர் ஆட்சிநடந்த காலம் முழுவதும், அதற்கு முன்னும் பின்னும் கோயிலுக்குள் மூர்த்தி இருக்கவில்லை என்பது மட்டும் நிச்சயிக்க முடிகிறது.

இந்த மூர்த்தியைத் திரும்பவும் கோயிலுக்குள் எழுந்தருளப் பண்ண எவ்வளவோ முயற்சிகள். வேலூரில் உத்தியோகம் ஏற்றிருந்த பொழுது என்னால் இயன்றதை எல்லாம் நானும் செய்தேன். திரு. ராதாகிருஷ்ணன், திரு. ஹுமாயூன் கபீர் முதலியவர்களை எல்லாம் அழைத்தேன். கோயிலைக் காட்டினேன். ஜலகண்டேச்வரருக்கு வக்காலத்து வாங்கிப் பேசினேன். பலன்தான் இல்லை. நாளும் கிழமையும் வர வேண்டாமா? ஜலகண்டேச்வரரே மனம் வைக்க வேண்டாமா?

கண்டத்தில் விடமும், கையினில்
மழுவும், காதினில்
துலங்கும் நாக

குண்டலத்து அழகும், தலையில்
வெண்மதியும், குரைகழல்
சிலம்பும், நன்னுதலில்
புண்டரத்து அழகும், பொருப்பன
மார்பில் புனை தலை
மாலையின் சிறப்பும்
கண்டு அகமகிழ்ந்து களிக்கும் நாள்
உளதோ? கருணைசேர்
ஜலகண்டேச்வரனே!

என்று பாடுகிறார் இன்றைய கவிஞர் ஒருவர். அதுவேதான் வேலூர் வாசிகளின் பிரார்த்தனையும், ஏன், தமிழ் மக்கள் பிரார்த்தனையும் அதுதானே.

வேலூர் ஜலகண்டேச்வரர் கோயில் மிகவும் அழகான கோயில். கோயில், கோயிலைச் சுற்றியிருக்கும் கோட்டை,

கல்யாண மண்டபம்

கோட்டையைச் சுற்றியிருக்கும் அகழி எல்லாம் விஸ்தqரமqக அமைந்தவை. கோயில் வாசலில், ராஜ கோபுரத்துக்கும் வெளியே நிற்கிறர்கள், துவார பாலகர்கள் இருவர். ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், பெரிய வெளிப் பிராகாரம்.

அந்தப் பிராகாரத்திலே, தென் பகுதியிலே உலகப் பிரசித்தி பெற்ற கல்யாண மண்டபம். மண்டபம் முழுவதும் ஒரே சிற்பச் செல்வம். மண்டபத்தின் முகப்பிலே ஆறு பெரிய கல் தூண்கள். ஒவ்வொரு தூணிலும் குதிரை மீது வரும் வீரர்கள் சிறுத்தை வேட்டையாடும் காட்சி. தூண்களுக்கு மேலே தவழ்ந்து தாழும் போதிகை.

மண்டபத்திலே அடுக்கடுக்காக நாற்பது தூண்கள். பெரிய தூண்கள் இருபத்து நான்கு. உயர்ந்திருக்கும் உள் மண்டபத்திலே பதினாறு தூண்கள். ஒவ்வொரு தூணிலும் மூன்று தளங்கள். தளம் ஒன்றுக்கு நான்கு பட்டைகள், அப்படித் தூண் ஒன்றுக்குப் பன்னிரண்டு சிற்பங்கள்.

கணக்குப் போட்டுத்தான் பாருங்களேன். நானுறுக்கு மேற்பட்ட சிற்ப வடிவங்கள் அல்லவா? மூஞ்சூறு வாகனப் பிள்ளையாரும், மயிலேறும் கோலக் குமரனும் பல நிலைகளில். ஊர்த்துவதாண்டவர், பிக்ஷாடனர், கஜசம்ஹாரர், திரிபுராந்தகர், தக்ஷிணாமூர்த்தி என்று எண்ணரிய திருக்கோலங்களில் சிவபிரான், விஷ்ணுவின் அவதாரத் திரு உருவங்கள், கண்ணன் லீலைக் காட்சிகள், எண்ணற்ற பெண்கள் எழில் நிறைந்த வண்ணங்களில் எல்லாம் அங்கே உருப் பெற்றிருக்கின்றன. தூண்களை விட்டு விதானத்தை நோக்கினால், விரிந்த தாமரை மலர்கள், அந்த மலர்களின் இதழ்களைக் கொத்திக் கொண்டிருக்கும் கிளிகள் எல்லாம் கல்லிலே உருவாயிருக்கின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஆங்கில ரஸிகன் ஒருவனும் இக் கலைப் பொருள்களைக் கண்டு கழிபேருவகை எய்தி இருக்கிறான். இந்த மண்டபத்தையும், மண்டபத்தில் உள்ள சிற்பச் செல்வம் அத்தனையையும் அப்படியே பெயர்த்து எடுத்து, ஆங்கில நாட்டுக்கு அனுப்பி, அங்கே பிரைட்டன் என்னும் பட்டணத்திலே ஒரு கலைக் கூடத்தையே நிர்மாணித்து விட முனைந்திருக்கிறான்.

மண்டபத்திலே உள்ள கற்கள், அக் கற்களைத் தாங்கும் தூண்கள் அத்தனைக்கும் நம்பர் போட்டு, பெயர்த்து எடுத்துக்
விதானம் கல்யாண மண்டபம்

 கப்பலில் ஏற்றி எடுத்துச் சென்று, பிரைட்டன் நகரிலே திரும்பவும் மண்டபத்தை ஒன்றித்து விடுவது என்பது அவனது திட்டம். அதற்கென்று ஒரு பெரிய கப்பலையே கொண்டுவரச் செய்திருக்கிறான் லண்டனிலிருந்து.

ஆனால் ஜலகண்டேச்வரர், எவ்வளவு தான் அந்தர்யாமியாக இருந்தாலும், தனக்கும் தன் துணைவி அகிலாண்டேஸ்வரிக்கும் விதானம் கல்யாண மண்டபம் திருமணம் நடத்தப் பொம்மி ரெட்டி கட்டிய கல்யாண மண்டபத்தை இழந்துவிட விரும்பவில்லை. என்ன பண்ணினாரோ, ஜலத்திலேயே ஒரு கண்டம் கப்பலுக்கு நேரும்படி செய்திருக்கிறார். கடலில் மிதந்த கப்பல் மூழ்கி இருக்கிறது. மண்டபம் பெயர்வது தடைப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் பண்ணிய புண்ணியவசமாக எவ்வளவோ ஜாதகக் கோளாறு உடையதுதான் இந்தக் கோயில் என்றாலும், இங்கேயே நிலைத்து நிற்கிறது மண்டபம்.

கல்யாண மண்டபத்தைப் பார்த்த பின், வேறு ஒன்றையுமே பார்க்கத் தோன்றாது நமக்கு. பார்க்க வேண்டியதும் அதிகம் இல்லைதான். என்றாலும் கோயிலின் உட்பிராகாரத்துக்கும் செல்லலாம். ஜலகண்டேச்வரரும் அவரது துணைவி அகிலாண்டேஸ்வரியும் கோயில் கொண்டிருந்த (ஆனால் அந்தச் சுவடே இல்லாமல் காலியாய் வெற்றிடமாய் இருக்கும்) கர்ப்ப கிருஹத்தை எல்லாம் பார்க்கலாம்.

கர்ப்ப கிருஹத்தின் வெளியே உள்ள ஒரு மண்டபத்திலே ஒரு சுரங்கப் பாதை. அந்தப் பாதை விரிஞ்சிபுரம் வரை செல்கிறது என்று சொல்வார்கள் மக்கள். ஆனால், அப்படிச் சென்று பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. அதைப் பற்றி நாமும் அதிக அக்கறை காட்ட வேண்டியதில்லை.

தமிழ் நாட்டில் உள்ள கோட்டைகளில் எல்லாம் மிகவும் அழகுடையது வேலூர்க் கோட்டைதான். செஞ்சிக் கோட்டை அளவிலும், உறுதியிலும் உயர்ந்ததுதான். ஆனால் இக்கோட்டையில் உள்ள அழகு அங்கு இல்லை. கோட்டை சதுர வடிவமானது. கோட்டை மதிலில் இரண்டு அடுக்குகள். கீழ்த்தளத்தில் அர்த்தசந்திர வளைவுகள். கோட்டைச் சுவரின் மேல் தளத்திலே ஒரு கார் செல்லக் கூடிய அளவுக்கு விதி. கோட்டையைச் சுற்றி அகழி.

கோட்டைக்குள்ளே வட ஆர்க்காடு மாவட்டத் தலைமைக் காரியாலயங்கள். அங்கேயே போலீசார் பயிற்சிப் பள்ளி. இவைகளைத் தவிர, கோட்டைக்குள்ளேயே ஒரு மசூதி, ஒரு கிறிஸ்தவக் கோயில் எல்லாம், எம்மதமும் சம்மதம் என்ற சமரச சன்மார்க்கத்தையே அல்லவா பறை சாற்றுகிறது. இக் கோட்டை.

கோட்டையைப் பார்ப்பதற்காகவே வேலூருக்குப் போகலாம் ஒரு நடை. அங்கு நடந்த சிப்பாய்க் கலகம்-வேலூர்ப் புரட்சி இயக்கம் இவைகளையும் தெரிந்து கொள்ளலாம், கோட்டைக்குள் சென்றால், கோட்டை மீது வானளாவிப் பறக்கும் நாட்டுக் கொடிக்கும் வணக்கம் செலுத்தி விட்டுத் திரும்பலாம்.