வேங்கடம் முதல் குமரி வரை 1/015-027

விக்கிமூலம் இலிருந்து
15. ஆலங்காட்டு அடிகள்

சென்னை பூக்கடை பஜாரில் ஒரு கடை. கண்ணாடிச் சாமான்களின் விற்பனை அங்கே. ஆதலால் பெரிய நிலைக் கண்ணாடிகள், சிறிய கண்ணாடிகள், பீங்கானில் வண்ண வண்ணக் கோப்பைகள், பாத்திரங்கள், எலெக்டிரிக் லைட்டுகளில் எத்தனையோ ஷேடுகள், குளோப்புகள், சர லாந்தல்களே அக் கடையில் நிறைந்திருக்கின்றன. இவையெல்லாம் நூறு அடி நீளமும் நாற்பது அடி அகலமும் உள்ள கடையில் அடுக்கியும் தொங்கவிடப் பட்டும் இருக்கின்றன.

இந்தக் கடைக்குள் நுழைகிறேன் நான், ஏதோ கண்ணாடி ஒன்று வாங்க. எனக்கோ ஒரே பயம், கையை வீசி நடந்தால், எங்கே கை பட்டுக் கண்ணாடிகள் கீழே விழுந்து உடைந்து விடுமோ என்று. ஆதலால் மிக்க கவனமாக, அடக்கமாக அடி மேல் அடி எடுத்து வைத்தே நடக்கிறேன்.

இந்தச் சமயத்தில் ஒரு சிலம்ப வீச்சுக்காரன் அங்கு வருகிறான். அவனுடன் அவன் சகாக்களும் மற்றவர்களும் வருகிறார்கள். அவன் கையிலே இரண்டு கம்புகள். கடைக்காரர் அனுமதி இல்லாமலேயே, சிலம்பக் கம்புகளைச் சுழற்றிச் சிலம்ப வித்தைகள் காட்ட ஆரம்பித்து விடுகிறான், கண்ணாடிக் கடைக்குள்ளே. நெடுக்கும் குறுக்குமாக ஓடி, மேலும் கீழுமாகக்கம்பைச் சுழற்றுகிறபோது, கடைக்காரருக்கு ஒரே கவலை. இது என்ன? தப்பித் தவறிக் கம்பு ஒரு கண்ணாடிச் சாமான் மீது பட்டால் போதுமே, அடுக்கி வைத்திருக்கும் சாமான்கள் அத்தனையும் பொலபொல வென்று விழுந்து உடைந்து தவிடு பொடியாகிவிடுமே என்று.

ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஒரு சிறு கண்ணாடிச் சாமானுக்கும் சேதம் ஏற்படவில்லை, இந்தச் சிலம்ப வீச்சினால். வீச்சு நின்றது. எல்லோருக்கும் ஒரே அதிசயம். சிலம்பு ஆடியவனின் லாவகத்தைக் கண்டு மூக்கிலே கை வைத்து நின்று விட்டார்கள் கடையிலும் தெருவிலும் கூடி நின்ற அத்தனை பேரும்.

இப்படி நடக்குமா என்றுதானே நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆம்! அப்படி ஒன்றுமே நடக்கவில்லைதான். இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்களேன்.

இத்தகைய கற்பனைச் சிலம்பக்காரனுக்கும் மேலான ஒரு சிலம்பக்காரனாக அல்லவா இருக்கிறான், இறைவன். கோடானு கோடி அண்டங்களைப் படைத்திருக்கிறான். அவைகளை உலகம், பாதாளம், வான்முகடு என்று நாலா பக்கமும் பரவி நிற்கவும், அவைகளெல்லாம் ஒரு நியதியில் சுழன்று கொண்டு, சுற்றிக் கொண்டு வரும்படியும் அமைத்திருக்கிறான். இவைகளுக்கு ஊடே, அவற்றின் ஊனாய் உயிராய் உணர்வாய் இயங்குகிறான். அற்புதமாய் நடனமே ஆடுகிறான் அவன்.

சரிதான். இப்படி ஆடும் நடனத்தில் ஒரு கால் தாளம் தவறிச் சிறிது பெயர்ந்து விட்டால் என்னவாகும்? பாதாளமே பெயர்ந்து விடாதா? இல்லை, வீசியாடும் கைகள்தாம் ஆட்டத்தின் வேகத்தில் அங்கே இங்கே பட்டுவிட்டால், வான் திசைகளே பெயர்ந்து விடாதா? இப்படி யெல்லாம் நேராமல் ஆடுகின்றானே, ஆடிக் கொண்டே இருக்கிறானே, கற்ப கோடி காலங்களாக இறைவன். இது இவனுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று என்று எண்ணுகிறோம்.

இதே வியப்பு காரைக்கால் அம்மையாருக்கும் அன்று ஏற்பட்டிருக்கிறது. நாம் வியந்து மூக்கில் விரலை வைத்து நின்றால், அம்மையோ தன் வியப்புக்கு விடை பெற இறைவனிடமே கேள்வி கேட்டிருக்கிறாள். அதையும் ஒரு நல்ல பாட்டிலேயே கேட்கிறாள்.

அடி பேரில் பாதாளம் பேரும், அடிகள்
முடிபேரில் மாமுகடு பேரும் - தொடிகள்
மறிந்தாடும் கைபேரில் வான் திசைகள் பேரும்
அறிந்து ஆடும் ஆறுஎன் அரங்கு?

'இப்படிப் பாதாளம் மாமுகடு வான் திசைகள் எதுவும் பெயராமே, நீ அரங்கத்தில் அறிந்து ஆடக் கற்றிருக்கிறாயே, அது எப்படிச் சாத்தியமாகிறது?' என்றே கேட்கிறார், அம்மையார்.

இப்படி இறைவன் ஆடும் அற்புத தடனத்தையும், இந்த ஆட்டத்தைக் கண்டு அதிசயித்து நிற்கும் காரைக்கால் அம்மையாரையும் காண வேண்டும் என்றால், நேரே நாம் திருவாலங்காடு செல்ல வேண்டும். அங்குள்ள தேவர் சிங்கப் பெருமாளாம் ஆலங்காட்டு அடிகள் கோயிலுக்குள் நுழைய வேண்டும். அப்படி நுழைந்தால், அங்குள்ள ரத்ன சபையிலே ஊர்த்துவ நடனம் ஆடிக் கொண்டிருக்கும் இறைவனையும் அங்கே பேயுருவில் அமைந் திருக்கும் காரைக்கால் அம்மையையுமே காணலாம்.

தாளொன்றால் பாதாளம் ஊடுருவி, மற்றைத் தாளொன்றால் அண்டங் கடந்து உருவி நிற்கும் அந்த ஊர்த்துவ தாண்டவம் இறைவன் ஆடுவதற்கு நேர்ந்த காரணம் தெரிய வேண்டாமா? இந்த ஆலங்காடு பெயருக்கேற்ப நல்ல காடாகவே இருந்திருக்கிறது. காட்டிடையே கோயில் கொண்டிருக்கிறாள் காளி. அவளது ஆதிக்கம் அங்கு குறைவின்றி நடந்திருக்கிறது. உலகம் முழுவதையுமே முடிவு செய்தல் கூடும் என்று அகங்கரிக்கிறாள் அவள். இத்தோடு அவள் ஆடவும் வல்லவள். அதனால் இறு மாப்புவேறே.

இந்த நிலையில், தேவர்கள் இவள் தன் கர்வத்தை அடக்க இறைவனை வேண்டுகின்றனர். இறைவனுமே ஆலங்காட்டுக்கு வருகிறான். ஆடல் போட்டிக்கு அன்னை காளியையே அழைக்கிறான். அவளும் இசைகிறாள்.

போட்டி நடனம் நடக்கிறது (இன்றைய வெள்ளித் திரையிலே இந்த நடனப்போட்டிகள் தாம்சர்வசாதாரணமாயிற்றே. ஆனால் ஒரேயொரு வித்தியாசம். அன்று நடப்பதற்கும் இன்று நடப்பதற்கும். இன்று போட்டி இடுபவர்கள் இருவரும் அநேகமாய்ப் பெண்களாகவே இருப்பர். அன்று போட்டியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஆண் மற்றவர் பெண் என்பதையும் கொஞ்சம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்). இறைவன் ஆடும் ஒவ்வொரு நடனத்தையும் காளியும் சளைக்காது ஆடுகிறாள். ஆட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. போட்டியும் மும்முரமாகிக் கொண்டே வருகிறது. வெற்றி கிட்டக் காணோம் இறைவனுக்கு.

இந்தநிலையில் இறைவன் வலது காதிலே உள்ள குழைநழுவி விழுகிறது, கீழே. இதற்காக நடனத்தை நிறுத்தாமல், அப்படியே அந்தக் குழையைத் தனது கால் விரலால் எடுத்து, அக்காலை அப்படியே அநாயாசமாக உயர்த்தி, லாவகமாகக்குழையை வலது காதிலே பொருத்திவிடுகிறார்.

ஒரு காலை ஊன்றி, ஒரு காலை வான் நோக்கி உயர்த்துவது பெண்ணால் ஆகிற காரியமா என்ன? முடியாது வெட்கித் தலை குனிகிறாள் காளி, தோல்வியை ஒப்புக்கொள்கிறாள். இறைவன் வெற்றிக் கொடி நாட்டுகிறார். (அன்பர்கள் கேட்கலாம், பாலே நடனத்தில் பெண்கள் இதையெல்லாம் செய்கிறார்களே என்று. அவர்கள் பணத்திற்கும் புகழுக்கும் உணர்வு நாணம் கடந்த நவீன காலப்பெண்கள் என்கிறேன் தான்) இந்தக் கதையையே,

கொடிய வெஞ்சினக் காளி குவலய முழுதும்
முடிவு செய்வன் என்று எழுந்த நாள்
முளரியோன் முதலோர் அடைய அஞ்சலும்
அவள் செருக்கு அழிவுற, அழியாக்
கடவுள் ஆடலால் வென்றதோர்
வடவரைக் கண்டான்

என்று கந்த புராணம் கூறும்.

இப்படிக் காளியை வெல்ல ஆடிய ஆட்டமே ஊர்த்துவ தாண்டவம். அந்தத் தாண்டவம் ஆடியவரே ஆலங்காட்டு அடிகள். அவரது திருக்கோலம் பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தின சபையிலே செப்புச் சிலை உருவில் இருக்கிறது. எத்தனைதான் சொன்னாலும் அங்குள்ள அர்ச்சகர்கள் நிர்வாகிகள் வஸ்திரத்தைக் களைந்து ஊர்த்துவ மூர்த்தத்தைக் காட்ட மாட்டார்கள். பத்து முழத்துச் சோமனை இறைவன் திரு உருவில் வரிந்து வரிந்து கட்டி வைத்தே காட்டுவார்கள்.

ஆதலால் அன்பர்கள் இந்த ஊர்த்துவ தாண்டவக் கோலங் காணத் தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்துக்கே போக வேணும். அங்குள்ள மகாமண்டபத்தில் ஒன்றுக்கு இரண்டாக அமைந்திருக்கும் ஊர்த்துவ தாண்டவரையே பார்க்கலாம், எளிதாக. அதில் ஒன்றையே பார்க்கிறீர்கள், இக்கட்டுரையிலே.

திருவாலங்காட்டுக்குச் செல்வதானால் ரயிலில் செல்வது தான் நல்லது, சென்னைக்கு மேற்கே அறுபது கிலோ மீட்டரில் திருவாலங்காடு ரயில்வே ஸ்டேஷன் , அங்கு இறங்கி வண்டி பிடித்துக் கொண்டு வடக்கே நான்கு கிலோ மீட்டர் சென்றால் கோயில் வாயிலில் கொண்டுபோய் விடும்.

கோயில் நிரம்பப் பெரியதுமல்ல, சிறியதுமல்ல. உள்கோபுர வாயிலிலே வலப்பக்கம் இருப்பவர் சித்தி விநாயகர். விநாயகர் பிரம்மசாரி என்றுதானே அறிவோம். இல்லை, அவருக்குச் சித்தி புத்தி என்று இரண்டு மனைவியர் என்றும் கூறுவர். ஞானமாம் புத்தியை மனைவியாகப் பெற்றால், பெறற்கரிய சித்திகள் எல்லாம் தானே வந்து அடையாதா? அந்தச் சித்தியையே {ஆம், பெண்ணுருவில் இருக்கும் சித்தியைத்தான்) தன் மடி மீது வைத்துக் கொண்டிருக்கும் கோலத்தில் இங்கு விநாயகரைப் பார்க்கிறோம்.

சித்தி விநாயகரை வணங்கி, அவர் அருள் பெற்றுக் கோயிலுள் நுழைந்தால், முதல் முதல் நாம் காண்பது ஊர்த்துவ தாண்டவரையே. தெற்கு நோக்கிய ரத்ன சபையிலே செப்புச்சிலை உருவிலே நிற்கிறார் அவர். ரத்ன சபை என்றால், ஏதோ முழுக்க முழுக்க நவரத்தினங்கள் இழைத்த மண்டபம் என்று நினைத்து விடாதீர்கள். கல்லாலாகிய ரத்தினம்தான். அங்குள்ள மஞ்சத்தில் மற்ற நவரத்தினங்களும் இருக்கலாம். அவையெல்லாம் பளிச் சென்று நம் கண்ணுக்குத் தெரியவில்லை.

இந்த ரத்ன சபையைக் கடந்து சென்றால், உட்பிராகார வாயிலிலே வடக்கு நோக்கிய ஒரு சிறு கோயிலிலே காளி இருக்கிறாள். ஐயோ பாவம்! போட்டியில் தோற்ற அவமானம் தாங்கமாட்டாமல் ஏதோ ஒதுக்குப்புறமாக இடந்தேடி ஒளிந்து கொண்டிருக்கிறாள் அவள். இனி கோயில் உள்ளே கர்ப்ப கிருஹத்தில் இருப்பவர் தேவர்சிங்கப்பெருமான். அவரது துணைவிதான் வண்டார் குழலி. தேவர்சிங்கப்பெருமானை வலம் வந்தால், அகோர வீர பத்திரர் கம்பீரமாக நின்று கொண்டிருப்பதையும் பார்க்கலாம்.

இத்தனைதிரு உருவங்களைப் பார்த்தாலும் நமக்குத் திருப்தி ஏற்படாது. ஆலங்காடு என்றவுடனேயே காரைக்கால் அம்மை யாரும் அவர் பாடிய மூத்த திருப்பதிகம் இரட்டை மணி மாலை அற்புதத் திருவந்தாதி பாடல்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வருமே.

புனிதவதியான காரைக்கால் அம்மை தன் கணவனை விட்டுப் பிரிந்து, இந்த ஊனுடை வனப்பையெல்லாம் உதறித் தள்ளிப் பேய் உரு எய்திக் கைலாசகிரியிலே இருந்து தலையாலேயே நடந்து வந்து நடராஜனது திருவடிக்கீழ் என்றும் சிவானந்தத்தை அனுபவித்து கொண்டிருக்கிறாள் என்று வேறே படித்திருக்கிறோம். அதோடு இறவாத இன்ப அன்பு வேண்டிய அவர், பின்னும், 'பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும். இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அரவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க!' என்றெல்லாம் வேண்டிக் கொண்டவர் ஆயிற்றே. அவரைக் காணவில்லையே என்று உள்ளம் ஏங்கும்.

இத்தனை விஷயங்களைத் தெரிந்த நாம், 'எங்கே அந்தக் காரைக்கால் அம்மை?, என்று கேட்டால், கோயில் நிர்வாகிகள், 'ஓ! அவரையா கேட்கிறீர்கள்?' என்று சொல்லி ரத்ன சபைக்குத் தெற்கே இரும்புக் கிராதிகளுக்குள் அடைத்து வைத்திருக்கும் மண்டபத்துக்கு அழைத்துப் போவார்கள் நம்மை. அங்கு சென்றால், மற்றச் செப்புச் சிலைகளோடு செப்புச்சிலையாய்க் காரைக்கால் அம்மையையும் பேயுருவத்திலேயே காண்போம், கொங்கை திரங்கி, நரம்பு எழுந்து, குண்டுக் கண்களும், வெண்பற்களும், குழி வயிறும் உடைய பேயுருத்தான் என்றாலும், அந்த அம்மையின் புனிதமாக உள்ளமும் அன்பும் நம்மை அடிமை கொள்ளும்.

இனி, கோயிலை விட்டு வெளியே வரலாம். தேவாரம் பாடிய மூவரும் பேறும் பழையனூர், ஆலங்காடு இந்த ஆலங்காடுதானே என்று கேட்டால், இந்தக் கோயிலுக்கு வெளியே ஊருக்கு வட மேற்கேயுள்ள நீலி கோயிலைக் காட்டுவர் மக்கள். இந்தப் பழையனூர் நீலிவரலாறு இலக்கியப் பிரசித்தி உடையதாயிற்றே. அதைத் தெரிந்து கொள்ளாமல் திரும்ப முடியுமா நம்மால்?

கதை இதுதான். காஞ்சியில் சுதரிசனச் செட்டி என்ற ஒரு வணிகன், அவனுக்கு மனைவியர் இருவர், இளையாள் மோகத்தால் மூத்தாள் நீலியை வஞ்சனையால் சொல்கிறான் அவன். அவளோ இந்த ஆலங்காட்டில் பேயாய் அலைகிறாள்.

வணிகன் ஒரு நாள் இந்த ஆலங்காட்டு வழியே தனியே வருகிறான். பேயாக இருந்த நீலி பெண் வடிவில் வணிகனைத் தொடர்கிறாள். அவள் வஞ்ச மொழிகளுக்குச் செவிகொடாது செல்கிறான் வணிகன்.

பின்னும் தொடர்வது! அறிந்து, பழையனூர் அம்பலத்து வேளாளரிடம் முறையிடுகிறான், பேயாம் நீலியும், அவள் தன் கணவனுடன் வாழ வழி செய்ய வேண்டுகிறாள். பேயின் இடையில் இருந்த குழந்தையும் வணிகனைத் தந்தை உறவுடன் அணைகிறது.

இதனால் ஏமாந்த வேளாளர் எழுபதின்மரும் வணிகனை அப் பெண் பேயுடன் ஓர் இரவு தங்கள் ஊரில் தங்கச் சொல்கின்றனர். வணிகன் அதற்கு மறுக்க, அவர்கள் அவனுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால், அவர்கள் எல்லோரும் தீ மூழ்குவதாகச் சத்தியம் செய்கின்றனர். பேயுடன் தங்கிய வணிகனின் உயிர் குடித்துப் பேய் மறைந்து விடுகிறது. சொன்ன சொல்லைக் காப்பாற்றி, வேளாளர் எழுபதின்மரும் தீக்குளிக்கின்றனர்.

மாறுகொள் பழையனூர் நீலிசெய்த வஞ்சனையால்
வெணிகர் உயிர் இழப்பத் தாங்கள்
கூறிய சொல் பிழையாது துணிந்து செந்திக்
குழியில் எழுபது பேரும் முழுகிய

கதையைத் தொண்டை மண்டல சதகமும், உமாபதி சிவாச்சாரியார் சேக்கிழார் புராணமும் வியந்து கூறுகிறது.

சத்தியத்துக்கு உயிர் கொடுத்தவர் வேளாளர் என்றாலும், கோயில் எடுப்பித்திருப்பது பழையனூர் நீலிக்கே. ஆம். 'வஞ்சப்படுத்தொருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு' நாம் அஞ்சுவது, பழையனூர் நீலியைக் கண்டுதானே.

அப்படி அஞ்சும் போதெல்லாம், 'அள்ளளம்பழனைமேய. ஆலங்காட்டு அடிகளை' நினைத்தால், அவர் வினைகளை யெல்லாம் கரி சலுத்திடுவர் என்பர் அப்பர். ஆம் அவருடன் சேர்ந்து ஆலங்காட்டு அடிகளை நினைந்து, நாமும் நம் வினைகளைக் களையலாம் அல்லவா?