உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 1/017-027

விக்கிமூலம் இலிருந்து

17. முல்லை வாயில் நாதன்

ண்டைத் தமிழ் நாட்டு வள்ளல்களில் பிரபலமானவன் வேள்பாரி. பல வளங்கள் உடையதும் முந்நூறு ஊர்களைக் கொண்டதுமான பறம்பு மலையிலிருந்து ஆட்சி செலுத்திய சிற்றரசன் அவன். வேளிர் குலத் தலைவனான இப்பாரி வரையாது கொடுக்கும் வள்ளல். பாடி வந்த புலவர்களெல்லாம் முந்நூறு ஊரையும் பரிசிலாகவே பெற்றுச்சென்று விடுகின்றனர். மிஞ்சியது குன்று ஒன்றுதான்.

இப்பாரியின் புகழைக் கேட்ட தமிழ் தாட்டு மூவேந்தர் இவனிடம் தீராப் பகைமை கொள்கின்றனர். வள்ளல் பாரி நல்ல வீரனும் கூட. ஆதலால் அவனைப் போரில் வெல்வது என்னவோ இயலாத காரியமாக இருக்கிறது, அவர்களுக்கு. இந்தப் பாரியை வெல்ல அவர்கள் கண்ட ஒரே வழி பாடும் பாணர்களாக வேஷமிட்டு வந்து பரிசிலாகக் குன்றைப் பெறுவதுதான். குன்றைக் கைக் கொண்டதோடு, வஞ்சனையால் பாரியையுமே கொன்று விடுகின்றனர், மூவேந்தரும் சேர்ந்து.

இத்தகைய பாரியின் கொடைத் திறனை விளக்க ஒரு சிறு கதை உண்டு. ஒரு நாள் வேள்பாரி தேரிலே ஏறிக்கொண்டு காட்டுக்குச் செல்கிறான். திரும்பம்பொழுது வழியில் முல்லைக் கொடி ஒன்றைப் பார்க்கிறான். அக்கொடி பற்றிப் படர்வதற்குக் கொம்பு ஒன்றில்லாமல் துவண்டு விழுவதைக் காண்கின்றான்.

இதைக் கண்ட பாரியின் உள்ளத்தில் ஒரு கருணை பிறக்கிறது. துவளும் முல்லைக் கொடிக்குத்தான் ஊர்ந்து வந்த தேரையே கொழு கொம்பாக நிறுத்திவிட்டு நடந்தே திரும்புகிறான், தன் அரண்மனைக்கு. முல்லைக் கொடிக்கே இத்தனை கருணை காட்டியவன் என்றால், அவன் கொடைத் திறனைப் பற்றி விவரிப்பானேன்! இந்தப் பாரியின் உயிர்த் தோழர் புலவர் பெருமகனான கபிலர். அவர் பாடுகிறார், இவன் முல்லைக்குத் தேர் அளித்த செயலைக் குறித்து.

பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்ப பாடாதாயினும்
கறங்குமணி நெடுந்தேர்
கொள் கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்புடை பாரி

என்று கபிலரால் பாரியும், பாரியால் முல்லைக் கொடியும் பிரசித்தி பெற்று விடுகின்றனர்.

இதை விடப் பெரிய சமயப் பிரசித்தியே பெறுகிறது, மற்றொரு முல்லைக் கொடி. அந்தக் கொடி காரணமாக ஒரு கோயிலே உருவாகிறது. கோயிலைச் சுற்றி ஒரு கிராமமும் எழுகிறது. அப்படி எழுந்த கோயில் தான் மாசிலாமணி ஈசுவரர் கோயில்.

இத்தலத்தின் வரலாற்றை அறிய வேண்டாமா? சோழ மன்னனான கிள்ளி வளவனுக்கும் நாக கன்னிகையான பீலிவளைக்கும் பிறந்தவனே தொண்டையர் குலத் தோன்றலான ஆதொண்டைச் சக்கரவர்த்தி. சோழமன்னன் தன் நாட்டை இரு கூறாக்கித் தென்பகுதியைச் சோழனுக்கும், வடபகுதியை ஆதொண்டைக்கும் பகிர்ந்து கொடுக்கிறான்.

இந்தத் தொண்டைமான் சக்கரவர்த்தி காடு வெட்டி நிலம் திருத்தி அங்கிருந்த குறும்பர் குறும்படக்கித் தொண்டை மண்டலத்தையே உருவாக்குகிறான். காஞ்சியிலிருந்து புழல் கோட்டத்துக் குறும்பர் தலைவனை அடக்கப் புறப்படுகிறான். படைகள் பின் நடந்து வர இவன் யானைமீது ஆரோகணித்து முன்னே செல்கிறான்.

திருமுல்லைவாயில் கோபுரம்

வழியிலே ஒரு முல்லைவனம். அங்கே ஒரு கொடி மன்னன் ஏறிச் செல்லும் யானையின் கால்களைச் சுற்றிக் கொள்கிறது. அதனால் யானை நடக்க இயலாதது கண்டு, யானை மீதிருந்த சக்கரவர்த்தி உடைவாளால் அக் கொடியை வெட்டி எறிகிறான். இப்படி அவன் வீசிய வாள்வெட்டு முல்லைக் கொடியின் கீழ் இருந்த சிவலிங்கத்தின் மீது படுகிறது.

லிங்கத் திருவுருவின் தலையிலிருந்து ரத்தம் சிந்துகிறது. மன்னன் இதனைக் கண்டு, யானை யினின்றும் இறங்கித் தான் செய்த அபசாரத்துக்கு வருந்துகிறான்.

உடனே இறைவனும் தொண்டைமானை ஆட்கொள்ளக் கருதி, அவனுக்குத் தரிசனம் தருகிறான். அவன் மேற்கொண்ட படையெடுப்பில் தக்க துணையாக இருக்க நந்திதேவனையே உடன் அனுப்பிவைக்கிறான். மன்னனும், குறும்பரை வென்ற பின் தன்னை ஆட்கொண்ட இறைவனுக்கு ஒரு கோயில் கட்டுகிறான். தான் வெற்றி கொண்ட புழற்கோட்டத்திலிருந்து இரண்டு எருக்கந் தூண்கள் கொண்டு வந்து நிறுத்தி விதானம் அமைக்கிறான்.

இப்படித் தான்தோன்றி ஈசராக அமைந்தவரே மாசில்லா மணிநாதர். இவர் கோயில் கொண்டிருக்கும் இடமே வடதிரு முல்லைவாயில். இந்தத் திருமுல்லைவாயில் நாதனை ஆளுடை நம்பியாம் சுந்தரர் விளக்கமாகவே பாடுகிறார்.

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையால் கட்டிட்டு
எல்லையில் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு
அருளிய இறைவனே என்று
நல்லவர் பரவும் திருமுல்லை வாயில்
நாதனே நரை விடை ஏறி!
பல்கலைப் பொருளே! படுதுயர்களையாய்
பாசுபதா! பரஞ்சுடரே!

இப்படிச் சுந்தரர் திட்டவட்டமாகக் கூறியிருந்தும், இக்கதைக்கு வேறு இரண்டு பாடங்களும் ஏற்பட்டிருக் கின்றன. சுந்தரர் பாடிய ஊர் வட திருமுல்லைவாயில். அவர் சொல்லும் கதையில் தொண்டைமான் களிற்றை முல்லைக் கொடி சுற்றிக் கொள்கிறது.

இதே கதையை இதே வடதிரு முல்லை வாயில் தலத்துக்கே ஏகாம்பரநாதர் உலா பாடிய இரட்டையர்களும் ஏற்றுகிறார்கள், ஒரு சிறு மாறுதலுடன். யானைக்குப் பதிலாக இவர்கள் குறிப்பது தேரை.

மல்லல் தொடைத் தொண்டைமான்
கடவும் தேரை ஒரு முல்லைக்கொடி தடுத்தமூதூர்!

என்பது அவர்கள் சொல்லும் பாடம். இன்னும் முல்லை வாயில் என்ற பெயரிலேயே சோழநாட்டிலே, சம்பந்தர் பிறந்த சீகாழிக்குக் கிழக்கே ஒன்பது மைல் தூரத்தில் கடற்கரையில் ஓர் ஊர் இருக்கிறது. அதைத் தென் திருமுல்லைவாயில் என்கிறார்கள்.

சம்பந்தரோ,

வரைவந்த சந்தொடு அகில் உந்தி வந்து
முளிர்கின்ற பொன்னி வடபால்
திரைவந்து வந்து செறி தேறல்
ஆடுதிரு முல்லை வாயில் இதுவே!

என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

இங்குள்ள இறைவன் முல்லை வனநாதர், இறைவி கோதை. இங்கேயும் ஒரு பாட பேதம். கிள்ளி வளவனது குதிரை ஊர்ந்து செல்லும் போது, முல்லைக் கொடி ஒன்று அக் குதிரையின் காலைப் பிணைத்தது என்று சொல்கிறது, தென் திருமுல்லைவாயில் புராணம்.

இந்தப் பாடங்களையெல்லாம் அலசி ஆராய்ந்து முடிவு காண வேண்டியதை ஆராய்ச்சியாளர்களுக்கு விட்டுவிடலாம். மூன்று கதையிலும், ஆம்! களிறு தேர் குதிரை என்றெல்லாம் பாடம் மாறுபட்டாலும் பிணைத்தது என்னவோ முல்லைக் கொடி என்பதை மறுப்பவர் இலர். முல்லைக் கொடி தடுத்த முதூர் திருமுல்லை வாயில் என்று பிரசித்தி பெற்றிருப்பதும் உண்மை. அது போதும் அல்லவா நமக்கு?

நாம் இன்று பார்க்கப் போவது வடமுல்லை வாயிலை (தென் திருமுல்லை வாயில் தொலைதூரத்தில் தெற்கே இருக்கிறது. மிகவும் சின்னஞ் சிறிய கோயில்தான். ஆதலால் அதை விட்டு விடலாம்தானே). இந்தத் திருமுல்லை வாயில் சென்னைக்கு மேற்கே பன்னிரண்டு மைல் தொலைவில் இருக்கிறது. சென்னையிலிருந்து செல்வோர் ஆவடி செல்லும் பாதையில் சென்று கொஞ்சம் வடக்கே திரும்பி ஊருக்குள் போக வேண்டும்.

கோயில் கோபுரம் தெற்கு நோக்கி இருந்தாலும் மாசில்லாமணி நாதர் கிழக்கு நோக்கியே இருக்கிறார். மகா
நந்தி மண்டபம்

மண்டபத்துக்கு வெளியே ஒரு சிறிய மண்டபத்தில் இருக்கும் நந்தியோ (திருவலத்தில் இருந்தது போல்) இறைவனுக்குப் பின்புறத்தைக் காட்டிக் கொண்டு, கிழக்கு நோக்கியே இருக்கிறது, தொண்டைமான் சக்கரவர்த்திக்குத் துணைபோன அவசரத்தில்.

கோயிலுக்குச் சென்றால் கர்ப்ப கிருகத்துக்கு வெளியே இருக்கின்றன, இரண்டு எருக்கந் தூண்கள். தேக்கு மரத்தை விட வலிவுடைய

பல்லவ சிங்கத் தூண்கள்

தூண்கள் அவை. பித்தளைப் பூண்கள் வேறே கட்டி வழு வழு என்று இருக்கின்றன. இறைவனோ தீண்டாத திருமேனி தாங்கியவராக இருக்கிறார். அவருக்குச் சந்தனம் காப்பிடுகிறார்கள். இவரையே வெட்டு தாங்கி ஈசுவரர் என்றும் அழைக் கிறார்கள். தொண்டை மான் சக்கரவர்த்தி வெட்டிய வெட்டினால் ஏற்பட்ட வடு இன்றும் இருக்கிறது, அவரது திருவுருவில்.

இங்குள்ள இறைவியின் திருநாமம் கொடி இடை நாயகி. முல்லைக் கொடியின் அடியில் இருந்த இறைவன் வெளிவந்த போது, அவனைக் கொழு கொம்பாகச் சுற்றி நிற்கும் அம்மையைக் கொடி இடையாள் என்று சொல்வது எவ்வளவு பொருத்தம்!

கோயில் நிரம்பப் பழைய கோயில் என்பதற்குக் கோயிலின் பிரதான வாயிலை நோக்கி இருக்கும் விநாயகர் சந்நிதியை அலங்கரிக்கும் இரண்டு சிம்மத் தூண்கள் சான்று பகரும். பல்லவர் கோயில்களில் காணும் சிம்மத் தூண்கள் இங்கே கிடந்திருக்கின்றன. அவற்றை வைத்தே இச்சிறு கோயில் உருவாக்கப்பட்டிருக்குமெனத் தோன்றுகிறது.

இந்தக் கோயிலின் விமானத்திலே ஒரு பளிங்கு விநாயகர் வலம் சுழித்த தும்பிக்கையுடன் இருக்கிறார். ஓர் அடிக்கும் குறைவான உயரமே உடையவர் அவர். எங்கேயோ பூனாப் பக்கத்திலிருந்து வந்தவர் இவர் என்று தோன்றுகிறது.

இந்தத் திருக்கோயில் அமைப்பெல்லாம் அழகாக இருந்தாலும், சென்று காண்பவ்ர்களுக்கு ஓர் ஏமாற்றம் இருக்கவே செய்யும். முல்லைக் காடாக இருந்த இடம் இது என்றும், முல்லைக் கொடிதடுத்து நிறுத்தியது தொண்டைமான் சக்கரவர்த்தியை என்றும், ஒன்றுக்கு மூன்றாகக் கதைகள் உருவாகியிருக்க, இன்று கோயிலுக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ மருந்துக்குக்கூட ஒரு முல்லைக் கொடியைக் காணோம்.

அரளியை எல்லாம் வைத்து வளர்த்திருக்கும் கோயில் நிர்வாகிகள் முல்லைக் கொடியை மட்டும் வைத்து வளர்க்க மறந்ததன் காரணம் என்னவோ? முல்லை வன நாதராம் மாசில்லாமணி ஈசுவரரையும் கொடியிடைநாயகியையும்தான் கேட்க வேண்டும்.