உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 1/022-027

விக்கிமூலம் இலிருந்து

22. போரூர் முருகப் பெருமான்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்ம்மை பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்

என்றெல்லாம் விண்ணப்பித்துக் கொள்கிறார், ராமலிங்க அடிகள். யாரிடம் இப்படி விண்ணப்பித்துக் கொள்கிறார் என்றால், அந்தக் கந்த கோட்டத்துக்குள் இருக்கும் கந்தவேளிடம்தான்.

கந்த கோட்டம் என்றால் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். சென்னைப் பூக்கடைக் கந்தசாமி கோயில் என்றால் எல்லோருக்கும் தெரியும். எவ்வளவோ ‘கச்சவடம்' நடக்கும் இடத்திலே கோயில் அமைந்திருந்தாலும், ராமலிங்கர் அந்தச் சென்னையை, அச்சென்னையிலுள்ள கோயிலைத் தருமமிகு சென்னை, என்றும், 'கந்த கோட்டத்துள் வளர் தவம் ஓங்கும் கந்தவேள்' என்றுமே குறிப்பிடுவார்.

இந்தக் கந்தவேளிடம் அவர் விண்ணப்பித்து வேண்டிக் கொள்ளும் வேண்டுகோளோ அனந்தம். அத்தனை வேண்டுதல்களையும் இக்கோயிலுக்குச் செல்லும் அன்பர்கள் (டிரவுசர் கோட்டோடு குல்லாவும் அணிந்தே செல்லும் அன்பர்கள்தான்) இன்றும் வேண்டிக் கொண்டே செல்கிறார்கள். கோயில் புராதனமான கோயில் இல்லை என்றாலும், பிரபலமான கோயில். அங்குள்ள மூர்த்திகள் எல்லாம் சின்னஞ்சிறு வடிவங்கள்தான். கோயிலுள் ஒரு மாடத்தில் ராமலிங்கரையுமே பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார்கள்.

இக் கோயிலை விடச் சென்னையில் இன்று பிரபலமாயிருப்பது வடபழனி ஆண்டவர் கோயில்தான். பூக்கடைக் கந்தசாமி கோயில் ஏதோ இருநூறு வருஷங்களுக்குள் உருவான கோயில்தான் என்றால், சமீபத்தில் இருபத்தைந்து வருஷ காலத்துக்குள்ளேயே உருவான கோயில் கோடம்பாக்கம் வடபழனி ஆண்டவர் கோயில்.

'பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே' என்று பாடிக் காவடி தூக்கி ஆடியவனே, தேன் மணக்குது தினை மணக்குது தென் பழனியிலே' என்று பாடியிருக்கிறான். உடனே அந்தப் பழைய பழனியில் உள்ளவனைத் தென்பழனி ஆண்டவன் ஆக்கி, புதிதாக உருவாக்கிய முருகனை இந்தப் பட்டினத்துக்காரர்கள் வடபழனி ஆண்டவனாக ஆக்கியிருக்கிறார்கள்.

அண்ணாசாமி நாயக்கர் என்ற ஒரு பக்தர், திருத்தணிகை முருகனிடத்தும் பழனி ஆண்டவனிடத்தும் ஆறாத காதல் உடையவர். அவர் பழனி சென்றிருந்தபோது, பழனி ஆண்டவர் படம் ஒன்று வாங்கி வந்து அதைப் பூஜை செய்து வந்திருக்கிறார். பூஜை முடிந்ததும் அவருக்கு ஆவேசம் வருவதுண்டாம். அப்போது அவர் என்ன சொன்னாலும் அது அப்படியே நடக்க ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலையில் பிரபல வியாபாரியான இரத்தினவேல் செட்டியார் இவருடைய சிஷ்யர் ஆகியிருக்கிறார். அவரும் துறவு பூண்டு, அண்ணாசாமி நாயக்கருடன் சேர்ந்து வழிபட்டிருக்கிறார். அவர் மிகக் குறைந்த முப்பத்தைந்து ரூபாய் செலவிலே ஒரு சிற்பியைக் கொண்டு பழனி ஆண்டவர் திரு உரு ஒன்றைச் செய்து வைத்திருக்கிறார்.

இந்த ஆண்டவருக்குக் கோயில் கட்ட இன்னொரு அன்பர் வரவேண்டி இருந்திருக்கிறது. பாக்கியலிங்கத் தம்பிரான் என்பவரே கோயில் திருப்பணியை ஆரம்பித்துச் செய்து முடித்திருக்கிறார்.

இப்படி மூவரால் உருவாக்கப்பட்ட கோயிலே இன்று பிரபலமாக இருக்கும் வடபழனி ஆண்டவர் கோயில். இந்தக் கோயிலில் மூல மூர்த்தியாக இருப்பவர், அந்தத் தென்பழனியில் உள்ளவரைப் போல, மெலிந்து தேய்ந்தவர் அல்ல, நல்ல திடசரீரி. அதோடு நிற்கும் ஸ்டைலும் மிக்க அழகு. இவரையே,

கண்டார் தம்மனம் கவரும் முண்டிதமாம்
சிரத்து அழகும் காணக் காணக்
கொண்டாடத் தக்க திருநீற்று அழகும்
கண்டிகையின் கோலச் சீரும்
பண்டாய நான்மறைக் கோவணச் சீரும்
கொண்டு வடபழனி மேவும்
தண்டாயுதப் பெருமான்

என்று தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்கள் பாடியிருக்கிறார்கள். சென்னையில் உள்ளவர்களும் சென்னைக்குச் செல்பவர்களும் அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் பூக்கடைக் கந்தசாமி கோயிலுக்கும் கோடம்பாக்கம் வடபழனி ஆண்டவர் கோயிலுக்கும் சென்று முருகனை வணங்கலாம். வந்தித்து வாழ்வு பெறலாம்.

இன்று நான் உங்களை அழைத்துச் செல்ல விரும்புவது, சென்னைக்கு அணித் தேயுள்ள மற்றொரு பிரபலமான முருகன் கோயிலுக்கே. அந்தக் கோயில்தான் திருப்போரூர்க் கோயில், சென்னையிலிருந்து மகாபலிபுரம் என்று வழங்கும் மாமல்லபுரம் செல்லும் வழியில் முப்பத்து. ஆறு மைல் தூரத்தில் உள்ள சிறிய ஊர் அது.

இன்று அங்குள்ள கோயிலும் குளமும் முந்நூறு வருஷங்களுக்குள் உருவானவைதான். என்றாலும் அந்த இடத்தில் ஒரு பழைய முருகன் கோயில் இருந்திருக்க வேணும். பல்லவ மன்னர்கள் காலத்திலேயே இந்தக் கோயில் எழுந்ததாக வரலாறு. பதின்மூன்றாவது நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டில், இவ்வூர் தொண்டை நாட்டில் ஆமூர் கோட்டத்தில் உள்ள ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று குறித்திருக்கிறது.

விக்கிரம சோழன் ஏற்படுத்திய நிபந்தங்களையும், விஜய கண்டதேவர் நந்தா விளக்குக்காகப் பொன் கொடுத்ததையும் அறிவிக்கும் கல்வெட்டுகள் எல்லாம் இங்குள்ள தெய்வயானையார் கோயில் சுவர்களில் சிதைந்து காணப்படுகின்றன. இவைகளே இக்கோயில் புராதனமானது என்பதற்குச் சான்றுகள்.

இந்த ஊருக்கு அந்த நாளிலே சமரபுரி என்ற பெயரும் இருந்திருக்கிறது. இந்தக் கோயிலை விட, இங்குள்ள முருகனைப் பற்றிச் சிதம்பர சுவாமிகள் பாடிய 'திருப்போரூர் சந்நிதி முறை' என்ற பிரபந்தம் சிறந்த இலக்கியப் பிரசித்தி உடையது. இந்தக் கோயில் திருப்பணி பண்ணியவரும் அவரே.

மதுரையில் சங்கப்புலவர் மரபிலே தோன்றியவர் சிதம்பர சுவாமிகள். இளமையிலேயே சிவானுபூதிச் செல்வராக வளர்ந்திருக்கிறார். விருத்தாசலத்திலே இருந்த குமர தேவரை அடுத்து, அவரைக் குருவாகப் பெற்றிருக்கிறார். குமரதேவரோ, பேரூர் சாந்தலிங்க சுவாமிகளின் சிஷ்யர். இப்படிச் சாந்தலிங்கரது அருளும், குமரதேவரது ஆசியும் பெற்று விருத்தாசலத்திலே சமாதி நிலையிலே இருந்தபோது. வேலனுடைய மயில் ஆடும் காட்சியைக் கண்டிருக்கிறார்.

குருதாதரது கட்டளைப்படியே சமரபுரிக்கு வந்து ஒரு பனை மரத்தடியிலே புதைந்து கிடந்த முருகனையும் தேவியாரையும் வெளிக் கொணர்ந்து வணங்கியிருக்கிறார். நோய் தவிர்த்தல் முதலிய அற்புதங்களை இந்தச் சிதம்பர சுவாமிகள் செய்ய, அதனால் பக்த கோஷ்டிகள் பெருகியிருக்கிறார்கள். திண்டிவனத்தை அடுத்த கிளியனூரிலிருந்து ஓர் அம்மையார் தாம் அரும்பாடு பட்டுத் தேடிய பொன் ஒன்றைச் சமர்ப்பிக்க, அதோடு சென்னைப் பாளையத்தா செட்டியார் என்பவர் கொண்டு வந்து கொடுத்த இரண்டு பை வராகன்களையும் வைத்துக் கொண்டு, திருப்பணி ஆரம்பித்துக் கோயிலைச் சிறப்பாகக் கட்டி முடித்திருக்கிறார், திருக்குளம் வெட்டி யிருக்கிறார். உற்சவாதிகள் நடத்த வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.

அன்று பரம்பரை பரம்பரையாக நாட்டை ஆண்ட அரச பெருமக்கள் செய்த சீரிய பணியையே முருகன் அருள் கொண்டு ஓர் ஏழைத் துறவி சிறப்பாகச் செய்திருக்கிறார் என்றால், அது வியப்புக்கு உரியது தானே.

இந்தக் கோயிலுக்குள் செல்லுமுன், பக்கத்திலே மலைமேல் உள்ள கைலாச நாதரையும் அவர் துணைவி பாலாம்பிகையையும் தரிசிக்கலாம். அம் மலை ஏறுமுன், வேம்படி விநாயகர் வேறே வழியை மறிப்பார். இவர்களை பிரணவம் யெல்லாம் வணங்கிய பின்பே முருகனைத் தரிசிக்கப் போகவேணும்.

மூர்த்தி கிழக்கு நோக்கியிருந்தாலும் பிரதான வாயில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இந்த வாயிலைக் கடந்து, வெளிப் பிராகாரத்தில் உள்ள கோபுர வாயிலையும் கடந்தே முருகன் சந்நிதிக்குச் செல்ல வேணும். மூல மூர்த்தி பனையடியில் புதைந்திருக்கிறார். ஆதலால் புற்றிடங் கொண்ட அந்தப் பெருமானுக்கும் அவன் துணைவியாருக்கும் புனுகுச் சட்டமே சாத்தி அலங்கரிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது, உருவங்களும் மொழு மொழு வென்றே இருக்கும்.

இந்த மூல மூர்த்திகளுக்கு முன்னால் மிகச் சிறிய வள்ளி தெய்வயானை சமேதனாகக் கந்தனை உருவாக்கி நிறுத்தி யிருக்கிறார்கள். இந்தக் கந்தன் கரங்களிலே உடம்பிடி, குலிசை முதலிய ஆயுதங்கள் இல்லை. தூக்கிய திருக்கரங்களிலே ஜபமாலையும் கமண்டலமுமே காணப்படுகின்றன. இங்குள்ள முருகன், பிரணவப் பொருள் அறியாத பிரமனைச் சிறையில் அடைத்த பின், தானே சிருஷ்டித் தொழிலை மேற்கொண்டிருக்கிறான். அந்த நிலை உருவாகி இருக்கிறது.

இங்கே வள்ளியையும் தெய்வயானையையும் உடன் வைத்துக் கொண்ட பெருமான் இவர் என்றாலும், அவர்களுக்குத் தனித்தனிச் சந்நிதி வேறே அமைத்துக் கொடுத்திருக்கிறார். இக் கோயிலில் இருபத்து நாலு தூண்களோடு கூடிய ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. ஒவ்வொரு தூணிலும் ஒரு கையில் கேடயமும், ஒரு கையில் வாளும் உடைய நவவீரர் முதலியோரது உருவங்கள் உண்டு. இது போர் ஊர் அல்லவா? சூரபதுமனின் துணைவர்களான அசுரர்கள் போருக்கு எழுந்த போது, அவர்களை இங்குதான் சமர் புரிந்து வென்றார் என்பதுதானே வரலாறு. ஆகையால் சமரபுரி முருகன் சந்நிதியில் இவ்வீரர்களை யெல்லாம் உருவாக்கி நிறுத்தியிருப்பது பொருத்தம்தான்.

இப்படியெல்லாம் சிதம்பரசுவாமிகள் கட்டிய கோயிலை விட, அவர் எழுநூற்று இருபத்தாறு பாடல்களால் பாடிப் பரவி முருகனை வலாங்கியிருக்கும் 'திருப்போரூர் சந்நிதி முறை' சிறப்பானது. பிள்ளைத் தமிழ் அலங்காரம் தாலாட்டு திருப்பள்ளி எழுச்சி கட்டியம் என்றெல்லாம் அந்தப் பாடல்கள் விரிந்திருக்கின்றன. 'ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கித்தீது புரியாத தெய்வமே!' என்று போரூர் முருகனைக் கூவி அழைப்பார், ஒரு தரம். பின்னர் -

நோயில் தளராமல் நொந்து மனம் வாடாமல்
பாயில் இடவாமல் பாவியேன் - காயத்தை
ஓர் நொடிக்குள் நீக்கி எனை ஒண்போரூர் ஜயா! நின்
சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து!

என்று அவரிடமே வேண்டுவார். அவர் பாடிய பாடல்களைப் படிப்பவர்கள் பக்திப் பரவசம் அடைவது கண்கூடு. 'குஞ்சரமுகற்கு இளைய கோவே! கொஞ்சி உமை முத்தமிடு பூவே!' என்று அவர் கொஞ்சும் தமிழில் முருகனை வர்ணிப்பதில்தான் எத்தனை அழகு! அவகாசமும் ஆர்வமும் உடையவர்கள் சந்நிதி முறைப் பாடல்களையெல்லாம் பாடிப் பாடி மகிழலாம். பாராயணமே பண்ணலாம்.

நீண்ட புராண வரலாறோ அல்லது பழைய சரித்திரப் பிரசித்தியோ இல்லாத இந்தத் தலத்தை இந்த வரிசையில் சேர்ப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று. இன்று அங்குள்ள கோயில் அவ்வளவு பழைய கோயில் அல்லதான் என்றாலும், அக் கோயிலுக்குள் இரண்டு பழைய செப்புச் சிலை உருவங்கள் இருக்கின்றன.

ஒன்று, போர்க் கோலத்தில் வில்லேந்தி நிற்கும் வேலன். மற்றொன்று குருவாய்ச் சிவனுக்கு உபதேசம் செய்த குகன். இரண்டுமே கலை அன்பர்கள் சென்று காண வேண்டிய திரு உருவங்கள். தேவ சேனாதிபதியான கார்த்திகேயன் வில்லேந்திப் போருக்குப் புறப்பட்ட நிலையைக் கல்லுருவிலே திருவையாற்றிலும், திருவண்ணா மலைக் கம்பத்து இளையனார் கோயிலிலும் பார்க்கிறோம். அதோடு செப்புச் சிலை வடிவில் திருவெண்காட்டை அடுத்த சாய்க்காடு என்னும் சாயவனேசுவரர் கோயிலிலும் காண்கிறோம்.

அவைகளில் எல்லாம் இல்லாத கம்பீரம் இப்போரூரில் உள்ள சிலை வடிவில் இருக்கிறது. ஒரு காலைத் தரையிலும், மற்றொரு காலை மயிலின் முதுகிலும் ஊன்றி, உடலை வளைத்து நிற்பதில், சேனாபதியின் மிடுக்குத் தெரிகிறது. சக்திவேல் தாங்கிய ஒரு கரம் போக, மற்றொரு வலக்கரம் மயிலின் கழுத்தையே வளைத்து நிற்கிறது, இடக்கையை வில்லேந்தும் பாணியில் தலைக்கு மேலேயே உயர்த்தி யிருப்பது மிக்க எடுப்பாக இருக்கிறது. வில்லென்ற ஒன்று இல்லாமலேயே முகத்திலே ஓர் உக்கிரம், நெஞ்சிலே ஒரு பதக்கம், அரையிலே ஒரு சல்லடம் எல்லாம் உடைய அவன் வானோர் வணங்கும் வில்தானைத்தலைவன், என்பதை நன்கு எடுத்துக் காட்டுகிறது. வில்லேந்திய வேலனது திருவுருவங்களில் எல்லாம் சிறந்த திரு உரு இதுவே. அது சமரபுரியில் இருப்பதும் விசேஷமே.

அடுத்த வடிவமும் அழகானது. சின்னஞ்சிறு பாலன். ஆனாலும் பிரணவத்தின் பொருள் தெரியாது விழித்த பிரமனைக் குட்டிச், சிறை இருத்திவிட்டுத், தன் தந்தையாம் இறைவனுக்கே பிரணவப் பொருளை விளக்கும் நிலையில் குரு மூர்த்தமாக எழுந்தருளும் கோலம் அல்லவா அது.

இந்த நிலையைச் சுதை உருவிலே சுவாமி மலையிலே செய்து வைத்திருக்கிறார்கள். அங்கு மைந்தனாய குமரன் முகத்திலே பால் வடிகிறதே ஒழிய, குருவாயிருப்பதிலே உள்ள மிடுக்கு இல்லை. ஆனால் இங்குள்ள மூர்த்தி தாமரைத் தவசில் இருந்தாலும், மடக்கிய கால் மேலே கையை நீட்டி உபதேச முறையில் ஒரு கையை உயர்த்தி அபயம் அருளும் நிலையில் இருக்கிறது.

இதை விடச் சிறப்பாகச் சீடனாக இருக்கும் சிவபிரான் கை கட்டி வாய் பொத்தி மகன் செய்யும் உபதேசமே என்றாலும், அதைப் பவ்வியமாகக் கேட்கும் நிலையையும் நன்றாக உருவாக்கியிருக்கிறான் சிற்பி.

'இரு என இருந்து, சொல் எனச் சொல்லிப் பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச் சித்திரப்பாவையின் அத்தக அடங்கிச் செவி வாயாக நெஞ்சு களனாகக் கேட்டவை கேட்டவை விடாது உளத்து அமைக்கும்' சீடனின் நிலையை நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர் சொல்கிறார்.

அவர் சொல்லும் இலக்கணத்துக்கு இலக்கியமாய் அமைந்த சீடனாக இறைவன் இருப்பது பார்த்துப் பார்த்து அனுபவிக்கத் தக்கது. இந்த இரண்டு வடிவங்களையுமே பார்க்கிறீர்கள், இங்கே. இவை எக்காலத்தன என்று சொல்ல இயலவில்லை. சோழர் காலத்து விக்கிரகமாக இருக்கலாம். இத்தலத்தில் முருகனைக் கண்டு வணங்கித் திரும்பும் போது, இத்தகைய அரிய சிற்ப வடிவங்களை உருவாக்கிய தமிழகத்துச் சிற்பிகளுக்குமே வணக்கம் செய்து திரும்பலாம்தானே.