உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

மணிபல்லவம்

“தம்பி ! உன்னையும், என்னையும் சுற்றி எத்தனையாயிரம் பூக்கள் மலர்ந்து மணம் பரப்புகின்றனவே, இவ்வளவு அழகையும், இவ்வளவு மணத்தையும் இவற்றுக்கு அளித்திருப்பவனை யார் புகழ முடியும்? எப்படிப் புகழ முடியும்!”

அவர் கூறுவனவற்றைக் கேட்கக் கேட்க இன்பமாக இருந்தது இளங்குமரனுக்கு போகிற வழியில் ஒரு பெரிய தாமரைப் பொய்கை வந்தது.

“வா! நீராடி விட்டுச் செல்லலாம்” என்று இளங்குமரனையும் உடனழைத்துக் கொண்டு நீராடச் சென்றார் நாங்கூர் அடிகள். படிகம்போல் தெளிந்த அந்தப் பொய்கையின் நீர்ப்பரப்பில் சிறுபிள்ளைபோல் நீந்தி விளையாடிக் குளித்தார் அடிகள். இருவரும் நீராடி முடிந்தபின் வந்த வழியே திரும்பி நடந்து சென்றார்கள்.

அடிகள் தம் பூம்பொழிலை அடைந்ததும், “இங்கே நீ கற்க வேண்டிய சுவடிகளை எல்லாம் காண்பிக்கிறேன் வா! என்னுடைய பூம்பொழிலில் மலர்களுக்கு அடுத்தபடி அதிகமாக இருப்பவை ஏட்டுச் சுவடிகள் தாம். இங்குள்ள மலர்களுக்கு மணம் அதிகம். திருநாங்கூர் மண்ணுக்கே மணம் மிகுதி. இங்குள்ள ஏட்டுச் சுவடிகளிலோ, அறிவின் மணம் கொள்ளக் குன்றாமல் நிறைந்திருக்கிறது” என்று இளங்குமரனைத் தம்முடைய ‘கிரந்த சாலைக்கு’ (சுவடிகள் நிறைந்திருந்த சாலை) அழைத்துச் சென்றார் அவர்.

உடலில் ஈரம் புலராத ஆடையும், நீராடிய பவித்திரமுமாகக் கிரந்த சாலைக்குள் அவரோடு நுழைந்தான் அவன். வரிசை வரிசையாய்ப் பிரித்து அடுக்கியிருந்த ஆயிரக்கணக்கான சுவடிகளைப் பார்த்ததும்,

‘இவற்றையெல்லாம் கற்று ஞானப்பசிக்கு நிறைவுகாண என்னுடைய வாழ்நாள் போதுமா?’ என்ற மலைப்பு அவன் உள்ளத்தில் உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/8&oldid=1148742" இலிருந்து மீள்விக்கப்பட்டது