உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

மணிபல்லவம்

நின்றான் அவன். “நான் போய் வருகிறேன், ஐயா!” என்று கூறி அவர்களிடம் விடை பெற்றான்.

அந்த நேரத்தில் கோவிலுக்குச் சென்றிருந்த தேர் திரும்பி வந்து வாயிலிலே நின்றது. சுரமஞ்சரியும், வசந்த மாலையும் தேரிலிருந்து இறங்கிச் சேர்ந்தாற் போல நடந்து வந்து உள்ளே புகுந்தார்கள். உள்ளே அந்தக் கப்பல் தலைவனையும், இளங்குமரனின் ஓவியத்தையும் சேர்த்துப் பார்த்தபோது சுரமஞ்சரி திடுக்கிட்டாள்.

“உங்கள் கப்பலில் வந்தது இந்தப் பெண்தானே?” என்று சுரமஞ்சரியின் பக்கம் கைநீட்டிக் காண்பித்துச் சீன வணிகனைக் கேட்டார் நகைவேழம்பர்.

அவர்கள் தன்னிடம் பண்புக் குறைவாக நடந்து கொண்டதில் சிறிது மனம் குழம்பியிருந்த சீனத்துக் கப்பல் தலைவன் ஒரேவிதமான தோற்றத்தில் தெரிந்த இரண்டு பெண்களையும் கண்டு இப்போது இன்னும் குழப்பமடைந்து தன் கப்பலில் வந்தது யாரென்று சொல்லத் தெரியாமல் மருண்டான். மாறி மாறி இருவரையும் மருண்டு போய்ப் பார்த்தான்.

“இவள் தானே?” என்று சுரமஞ்சரியைச் சுட்டிக் காண்பித்து அவனை இரண்டாம் முறையாகக் கேட்டார் நகைவேழம்பர்.

அவசரத்திலும் குழப்பத்திலும் அங்கிருந்து உடனே வெளியேறிப் போக வேண்டுமென்ற பதற்றத்திலும் அந்தக் கப்பல் தலைவன் திகைத்து, “இவள் இல்லை! அவள்தான் என் கப்பலில் வந்தவள். சந்தேகமே இல்லை. அந்தப் பெண்தான்” என்று வானவல்லியைச் சுட்டிக் காட்டிக் காண்பித்துவிட்டு வேகமாக வெளியேறிச் சென்று விட்டான்.

சீனத்துக் கப்பல் தலைவன் கூறிவிட்டுச் சென்றதைக் கேட்ட நகைவேழம்பர் பெரிதாக வாய்விட்டுச் சிரித்தார். அவர் அதைச் சிறிதும் நம்பவில்லை என்பதை அந்த சிரிப்பு எடுத்துக் காட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/24&oldid=1149314" இலிருந்து மீள்விக்கப்பட்டது