நா. பார்த்தசாரதி
341
வெளியே சென்றிருக்கும் நகைவேழம்பர் எதிரே திரும்பி வர நேர்ந்து தான் கண்களில் தென்பட்டுத் துன்புறும்படி ஆகிவிடக் கூடாதே என்று அஞ்சியே அவன் வேகமாகச் சென்று கொண்டிருந்தான். ‘நாளங்காடியின் அடர்த்திக்குள் புகுந்துவிட்டால் அப்புறம் கவலை இல்லை. பெரிய தெருக்கள் தவிர குறுகிய வழிகளும், சிறிய முடுக்குகளும் மருவூர்ப்பாக்கத்தில் அதிகமாக இருப்பதனால், நாளங்காடியைக் கடந்து மருவூர்ப் பாக்கத்துக்குள் செல்லும்போது பிறர் கவனத்துக்கு ஆளாகாமல் மறைந்து சென்று விடலாம். மருவூர்ப் பாக்கத்தில் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் அந்த மனிதரைச் சந்தித்து விட்டு இரவோடு இரவாக இந்த நகரத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும்’- என்று திட்டமிட்டிருந்தது அந்த ஏழை ஓவியனின் மனம். தன் தாய் நாட்டையும், தாயையும் ஏக்கத்தோடு நினைத்தான் அவன்.
வைகை வளநாடாகிய பாண்டிய நாட்டில் தமிழ் மதுரைக் கோநகரில் ஆற்றின் வடகரைமேலே திருமருத முன்துறை என்னுமிடத்தில் மருத மரங்களின் நடுவே அமைந்திருந்த தனது சிறிய வீட்டையும் மூப்படைந்த தன் பெற்றோர்களின் நிலையையும் மனக் கண்களால் நினைத்துப் பார்த்துக் கொண்டான் ஓவியன் மணி மார்பன். இரண்டு திங்களுக்குமுன், இந்திர விழாவைக் காண்பதற்காக மதுரையிலிருந்து பூம்புகாருக்குப் புறப்பட்ட் யாத்திரைக் குழுவினருடன் தானும் சேர்ந்து புறப்பட்ட அந்த நாளில், வீட்டு வாயிலில் கிழப் பெற்றோர் தனக்கு விடை கொடுத்த துயரக் காட்சியும் மணிமார்பனுக்கு நினைவு வந்தன. காவிரிப்பூம் பட்டினத்து இந்திரவிழாவில் நிறைய ஓவியங்கள் எழுதி விற்றும் பரிசு பெற்றும், தான் பெரும் பொருளோடு திரும்பி வரப்போவதனைக் கற்பனை செய்தபடி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் தன் பெற்றோரைப் பற்றி நினைத்தபோது மணிமார்பனுக்கு மனம் நெகிழ்ந்தது. கண்கள் கலங்கின. அப்போதே அந்த விநாடியே பறந்து சென்று மதுரையில் வைகைக்