உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

325

மலரச் செய்து கொண்டு பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். கல்விக்குக் கரை இல்லை. கற்பவருக்கு நாளும் இல்லை. இருக்கிற நாட்களிலும் அவலக் கவலைகளுக்கும் நோய் நொடிகளுக்கும் கழிகிற நாட்கள் பல. சுருள் சுருளாகப் பிடரியில் படரும் கரியமுடியும், பட்டுக்கரையிட்ட ஆடைகளும், பொன்னுருக்கினாற் போன்ற மேனி நிறமும் உடம்புக்குத்தான் அழகு தரமுடியும். மனத்துக்கு அழகும், வலிமையும் தருவது கல்விதான். அதை இன்று தான் நீ அடையத் தொடங்குகிறாய். தளர்ச்சியையும் சோர்வையும் விலக்கிவிட்டு மலர்ந்த மனத்தோடு என் முன்பாக இப்படி உட்கார்ந்து கொள்.”

கைகளில் சுவடியை விரித்து வைத்துக் கொண்டு அடிகளுக்கு முன்னால் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தான் இளங்குமரன். கிரந்தசாலையைச் சுற்றியிருந்த பூம்பொழிலில் மலர்ந்திருந்த பூக்களின் மணமும், தூபப் புகையின் வாசனையும் காலைப் போதின் துய்மையும், கற்பதற்காக நெகிழ்ந்திருந்த மனமும், எதிரே சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்த ஆசிரியரின் தோற்றமும் இளங்குமரனுக்குப் புனிதமான எண்ணங்கள் பிறக்கும் சூழ்நிலையைத் தந்தன.

தமக்கே உரிய கோமளமான குரலில் பாடத்தைத் தொடங்கினார் அடிகள்:—

ஒவ்வொரு மொழிக்கும் ஆதி வடிவம் ஒலி வடிவம் தான். கண்ணுக்குப் புலனாகாத பரம்பொருளைக் காட்டுவதற்காகக் கண்ணுக்குப் புலனாகிற தெய்வ விக்கிரகங்களைப் படைத்துக் கொண்டு வழிபடுவதுபோல் தோற்றம் இல்லாத ஒலிக்குத் தோற்றமளிக்க ஏற்பட்ட வரி வடிவங்களே எழுத்துக்கள். ஓசை வேறு; ஒலி வேறு. பண்படாமலும் வரையறை பெறாமலும் வழங்குவனவெல்லாம் ஓசை. பண்பட்டும் வரையறை பெற்றும் வழங்குவன எல்லாம் ஒலி. ஒலியிலிருந்து எழுத்துக்கள் பிறந்தன. எழுத்துக்களிலிருந்து மொழிக்கு உருவம் பிறந்தது. எழுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/31&oldid=1149321" இலிருந்து மீள்விக்கப்பட்டது