உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

399

நஞ்சு பாய்ந்து விடுமோ என்று அஞ்சுகிற நிலைக்கு இன்று வந்திருப்பது அவருக்குப் புரிந்தது. இந்த நிலைக்கு ஒரு முடிவு கண்டு இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டுமெனத் துணிந்துவிட்டார் பெருநிதிச் செல்வர்.

இத்தனை ஆண்டுகளாகத் தம்மிடமிருந்து அவரும், அவரிடமிருந்து தாமும் விலகியோ, பிரிந்தோ செல்ல முடியாமல் இருவரையும் பிணைத்துப் பின்னியிருந்த அந்தரங்கம் உடைந்து வெளிப்பட வேண்டிய காலம் நெருங்கிவிட்டதோ என்ற பயமும், நடுக்கமும் இன்று அவருக்கு ஏற்பட்டன. பெருநிதிச் செல்வர் தமது அந்தரங்க மண்டபத்தில் குறுக்கும் நெடுக்குமாகத் தனிமையில் நடந்து கொண்டே சிந்தித்தார். அவருடைய நெற்றியில் வியர்த்தது. இடையிடையே ஊன்றுகோலைப் பற்றியிருந்த கை பிடியை இறுக்கியது. சிந்தனையில் ஏதோ ஒரு முடிவை ஊன்றிப் பதித்துக் கொள்வதைப் புறத்தே காட்டுவதுபோல் நடந்து கொண்டிருக்கும்போதே சில இடங்களில் வேண்டுமென்றே ஓசையெழும்படி ஊன்று கோலை அழுத்தி ஊன்றினார் அவர். வேகமாகக் கால்கள் நடந்தபோது சிந்தனை மெதுவாகவும், சிந்தனை விரைந்த போது கால்கள் மெதுவாகவும் அவர் நடந்த விதமே சிந்தனையின் சுறுசுறுப்பையும், துவண்ட நிலையையும் மாறிமாறிப் புலப்படுத்தின.

அரைநாழிகைக்குப் பின் நமது அந்தரங்க மண்டபத்துக்குள்ளிருந்து அவர் வெளியேறினபோது உறுதியான திட்டத்துடன் புறப்படுகிறவரைப் போலக் காட்சியளித்தார். அந்த உறுதி புலப்பட ஊன்றுகோலை இறுகப் பற்றி அழுத்தி ஊன்றி நடந்து மாளிகையின் உணவுக் கூடத்தை அடைந்தார். அவர் உணவுக் கூடத்தில் நுழைந்த அதே நேரத்தில் அவருக்குக் கொடுக்க வேண்டிய பால் நிறைந்த பொற்கலத்தோடு பரிசாரகர் எதிர்ப்பட்டார். பச்சைக் கருப்பூரம், ஏலம் முதலியனவும், பருகுவதற்குச் சுவையூட்டும் பிற பொருள்களும் இட்டுக் காய்ச்சப் பெற்ற பால் மணம் பரப்பியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/105&oldid=1149905" இலிருந்து மீள்விக்கப்பட்டது