இருட்டு ராஜா/1
அவன் உதடுகளைக் குவித்து விரலை உபயோகித்து வாயினால் எழுப்பிய சீட்டி ஒலி தெற்குத் தெரு மூலையில் எழுந்து, வெகு தூரத்துக்குப் பரவியது.
சின்னச் சின்னத் தெருக்களை உடைய அந்தச் சிற்றுாரில், அந்தச் சீழ்க்கை ஒலி தெருவுக்குத் தெரு விதம் விதமான சலனங்களை உண்டாக்கியது.
—முத்துமாலைக்கு பொழுது விடிஞ்சிட்டுது!
—இனிமே ராத்திரிப் பூரா அவன் ராச்சியம்தானே!
—பாழறுவான் ஏன்தான் இந்தப் போக்குப் போறானோ!
—பூச்சி வெட்டை யார் யாரையோ கடிக்குதுங்கிறாங்க. இந்த ராக்காடு வெட்டியை எதுவும் ஒண்ணும் செய்யாது போலிருக்கு. இப்படியும், இன்னும் பலவாறாகவும், அங்குமிங்கும் ஊர்க்காரர்கள் பேசிக் கொண்டார்கள், வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தவர்கள்தான்.
அப்போது இரவு ஆறரை அல்லது ஏழு மணி தான் இருக்கும். “பகல் பொழுது குறை; ராத்திரிப் பொழுது அதிகம்” என்று மக்கள் சகஜமாகக் சொல்லிக் கொள்ளக் கூடிய பருவகாலம். இருட்டு ‘கரும்கும்’ என்று கவிந்து கிடந்தது.
ஊர் அப்பொழுதே முக்கால்வாசி அடங்கியிருந்தது இன்னும் ஒரு மணி நேரம் சென்றால், உயிருள்ளவர்களை உள்ளடக்கிய சமாதிகள் மாதிரி வீடுகள் அனைத்தும் மாறி நிற்கும். எவனோ மாயாஜாலக்காரனின் மந்திரத்துக்குக் கட்டுண்டு உயிர்ப்பற்று இயக்கமற்றுப்போன இடம்போல அந்த ஊர் மோனநிலையில் காட்சி தரும். ஆந்தைகள் அங்கங்கே அலறும். எங்காவது ஒரு நாய் குரைக்கும். அதற்கு எதிரொலிபோல் இன்னொரு நாய் குரல் கொடுக்கும். அதை எதிரேற்று அடுத்த தெரு நாய் தொடரும். மற்றப்படி அமைதி கனத்துக் கவித்து தொங்கும்.
இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காகவே வந்தவன் போல முத்துமாலை கிளம்புவான் அவனது சீட்டி ஒலி அமைதியைக் கொன்று, இருட்டைக் கிழித்து எவ்வும். தெற்குத் தெருவில் எழும். பிறகு தெருத் தெருவாகத் திரியும். பாட்டு என்ற பேரில் கத்துவது வீட்டுக்குள் ஒடுங்கிக் கிடப்பவர்களுக்கு எரிச்சல் தரும்; பயம் உண்டாகும்; குழப்பம் எழுப்பும்; என்னென்னவோ செய்யும்.
முத்துமாலைக்குப் பிடித்தது ஒரே பாட்டு எப்பவோ ஒரு நாடகத்தில் கேட்டது. எவனோ கள்ளபார்ட் நடிகன் அமர்க்களமாக ஆடிக்குதித்து அட்டகாசமாய் பாடியது—
கோட்டைக் கொத்தளம் மீதிலேறி
கூசாமல் குதிப்பேன்—ஏ பலபா
கூசாமல் குதிப்பேன்
காவலர் பிடிக்க வந்தால்
கத்தியால் குத்துவேன்—ஐஸா
கத்தியால் குத்துவேன்!
கொற்றவர் கண்டுபிடிக்க வந்தால்
குருவி போல் பறப்பேன்—பலபா
குருவி போல் பறப்பேன்!
ஒரு நீச்சலில் கப்பலைப் பிடிப்பேன்
கல்கத்தா துறைமுகம் பார்ப்பேன்!
சொற்களைத் தொண்டையில் போட்டு உருட்டிப் புரட்டி காட்டுத்தனமாகப் பாட்டென்று முத்துமாலை கத்தித் திரிகிறபோது அரைகுறைத் தூக்கத்தில் கண்களை மூடிக்கிடந்தவர்கள் திடுக்கிட்டு விழித்துக் கொள்வார்கள்.
“சண்டாளப் பய. இவனோட நித்தம் நித்தம் இதே எழவாப் போச்சு” என்று எரிச்சலோடு முணுமுணுப்பார்கள். வீட்டுக்குள்தான். - -
முத்துமாலையின் முகத்துக்கு நேரே எதுவும் சொல்ல அந்த ஊர்க்காரர்களில் எவருக்கும் தைரியம் கிடையாது.
“சரியான பிசாசுப்பய: ஒண்னு கிடக்க ஒண்ணு செய்து போடுவான்” என்ற நினைப்பு எல்லோருக்குமே.
ஊரையும் ஊராரையும்பற்றி அவனுக்கும் உயர்வான அபிப்பிராயம் கிடையாது தான்.
முன் காலத்திலே, விளக்குகள் எல்லாம் சர்வ சாதாரணமா இல்லாத நாட்களிலே ஒரு பழக்கம் இருந்துதாம். அதை ஒரு பழமொழி சொல்லுது, மலைவாயிலே பொழுதும், மக்கள் வாயிலே சோறும்னு. இருட்டுறதுக்கு முன்னாடியே சாப்பாட்டுக் கடையை முடிச்சிட்டு, சனங்க சுருண்டு படுத்திடுவாங்க. அந்த நிலையை இந்த ஊர்காரங்க இன்னும் தாண்டலே. எப்படா இருட்டும், நீட்டி நிமிரலாம்னு காத்திருப்பாங்க. தூங்குப்பூனைக...பூனைகளாவது எலிகிலி அகப்படுமான்னு ராத்திரி வேளைகளிலே அங்கையும் இங்கையும் ஒடும். இவங்க அசையமாட்டாங்க. சரியான கிடைபூதங்க!
இதை அடிக்கடி சொல்வதில் முத்துமாலைக்கு ஒரு ஆனந்தம். சொல்லிவிட்டு கடகட என்று சிரிப்பாணியை உருட்டி விடுவான்,தெருவெல்லாம் புரண்டு ஒலிக்கும்படி,
இரவு நேரங்கள்தான் அவனுடைய பகல் பொழுதுகள் ஆகும். பகல்கள் அவனுக்குத் தூங்கும் நேரம்.
ஒரு சமயம் அவன் சொன்னான்: “எவரோ ஒரு ஞானி ஒருத்தன்கிட்டே உபதேசம் பண்ணினாராம். "ஆடுகளோடு படுத்து விடு; குயில்களோடு எழுந்திரு”ன்னு சீக்கிரம் படுத்து, சீக்கிரமே எழுந்திருக்கிறது புத்திசாலித் தனம்னு அவரு சொன்னாராம். நான் அதிபுத்திசாலி. ராத்திரி படுக்கப்போறதும் கிடையாது; அதிகாலையிலே விழித்தெழுவதும் கிடையாது!எனக்கு ஏற்ற சீடப்பிள்ளைகளும் ரெண்டு மூணு பேர் சேர்ந்திருக்காங்க...”
சகாக்களை அழைப்பதற்காகத்தான் முத்துமாலை முதலில் தெரு மூலைகளில் நின்று சீட்டி அடிப்பான். நேரம் போகப்போக,சும்மா ஜாலியாகவும்,தான் உலாவி வருவதை அறிவிப்பதற்காகவும் ஒலி எழுப்புவான். சீட்டி ஒலியிலேயே பாட்டுக்களை ஊதித்தள்ளுவது உண்டு.
“இந்த ஊர்க்காரங்க எனக்கு நன்றி கூறனும், என்னைப் பாராட்டனும், ராத்திரி பூரா நான் ரோந்து சுத்தறமாதிரி சுத்திக் கிட்டிருக்கேன். அதனாலே திருடர் பயமே இங்கே கிடையாது. முன்னாலே இப்படியா இருந்தது? அந்தத் தெருவிலே திருடன் வந்தான். இந்த வீட்டிலே களவு போயிட்டதுன்னு அடிக்கடி ரிப்போர்ட்டுக் கிளம்புமே. ஐயாவாள் தலையெடுத்த பிறகு அப்படியாப்பட்ட பேச்சுக்கே இடம் இல்லாமல் போச்சே. இதை யோசிக்க வேணாம்?”
இவ்வாறு சொல்லிவிட்டு உரக்கச் சிரிப்பதும் இவனுடைய இயல்பாக வளர்ந்திருந்தது.
அன்றும் முத்துமாலை வழக்கம்போல் தெற்குத் தெருவிலிருந்து கிளம்பி, சீட்டியடித்துக் கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டு தெருத்தெருவாக உலா வந்தான். அநேகமாக எல்லா வீடுகளும் அடைத்தே கிடந்தன.
வழியில் யாரும் தென்பட வில்லை எவராவது வெளியே போயிருந்தால் கூட,வீடு திரும்புகிற பாதையில் முத்துமாலை நிற்கும் தெருவைத் தவிர்த்து சுற்றி வளைத்துச் சென்று விடுவார்கள், அவன் ஊராரை ஒன்றும் செய்ய மாட்டான்தான். இருந்தாலும் “வீண் வம்பு எதுக்கு? அவனுக்கு எதிரே வருவானேன்; அவன் எதையாவது கேட்க, நாம் ஒன்றுசொல்ல, அவன் சண்டை வளர்க்க—இதெல்லாம் என்னத்துக்கு? நாம முன்னெச்சரிக்கையா விலகி இருப்பதுதான் நல்லது” என்பது அந்த ஊர்க்காரரின் பாலிசி.
நேரம் ஆக ஆக அவனுடைய கூச்சலும், கும்மாளியும் அதிகரிக்கும். அவனுடைய தோழர்கள் சாராயம், கறி, காரம் மிகக் கலந்த மொச்சைக்கொட்டை முதலியவற்றோடு தயாராக இருப்பார்கள். ஊருக்கு ஒதுக்குப் புறத்திலிருந்த அம்மன் கோயிலில் கூடி எல்லோரும் அவசரம் இல்லாமல் அவற்றைக் காலி பண்ணுவார்கள். பிறகு உரத்துப் பேசியவாறும், சண்டையிட்ட படியும், கண்ட படி ஏச்சுக்களை உதிர்த்துக்கொண்டும் தெருத்தெருவாக அலைவார்கள். திரும்பவும் கோயிலுக்குப் போய் குடிப்பார்கள். கூச்சலிட்டுத் திரிவார்கள். சீட்டாடுவார்கள். தாயக் கட்டம் விளையாடுவார்கள். இப்படி எல்லாம் செய்வதில் அவர்கள் இன்பம் கண்டார்கள். அவர்கள் யாருக்கும் பயப்படுவதில்லை. முத்துமாலையையும் அவனுடைய சகாக்களையும் அடக்கி விட வேண்டும் என்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சிலபேர் முயன்றது உண்டு. அவர்கள் வெற்றி பெறவில்லை. “எடுத்த எடுப்பிலெயே அரிவாளையும் கத்தியையும் துக்குகிறவர்கள் முன்னே எப்படித் துணிந்து நிற்க முடியும்?” என்று அவர்கள் சொன்னார்கள். அப்படியும் துணிந்து கிளம்பிய ஒன்றிரண்டு பேர் சரியான பாடம் கற்றுக்கொண்டு ஒய்ந்து போனார்கள். அப்புறம் எவரும் முத்துமாலையின் வழியில் குறுக்கிட தைரியம் கொள்ளவில்லை. வானத்தில் முழு நிலா அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடி ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் மங்கல் ஒலி ஊரை வெளிச்சப் படுத்திவிட வில்லை. வெளிச்சத்தைப் பற்றியோ இருட்டைப் பற்றியோ கவலை கொள்ளாத முத்துமாலை, அம்மன் கோயிலில் வழக்கம் போல் பொழுதைப் போக்கிவிட்டு, தனது இரண்டாவது சுற்றுலாவை நடத்திக் கொண்டிருந்தான். கோட்டைத் தெரு எனப்பெயர் பெற்றிருந்த ஒரு சிறு தெருவை அடைந்ததும் அவன், “கோட்டைக் கொத்தளம் மீதிலேறி” என்ற பாட்டை அலறி ஆர்ப்பாட்டம் பண்ணலானான். அப்போது மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்கலாம். ஊர் நெடுகிலும் வேறு சத்தம் எதுவும் கிடையாது. சுடுகாட்டு அமைதி. திடீரென்று ஒரு வீட்டின் திண்ணையிலிருந்து ஒரு குரல் வெடித்தது; “போறதானா போறதுதானேடா? ஏன் இங்கே நின்னு தொண்டைத் தண்ணி, வத்தும் படியாக் கத்திக்கிட்டு நிக்கிறே?” என்று.
எதிர்பாராத விதமாக மண்டையில் கல்லைத்துாக்கிப் போட்டது போலிருந்தது முத்துமாலைக்கு. “என்னது? ஆங், என்னதுங்கேன்” என்று கேட்டான். அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் அவனது குரல் கூடமாறியிருந்தது.
“ஒரு நீச்சல் கப்பலைப் பிடிப்பேன்—கல்கத்தா துறை முகம் பார்ப்பேன்னு சவால் விடுறமாதிரிச் சொல்றியே; அப்படியே போய்க் காட்டறதுதானே? இங்கே நின்னு காட்டுக் கூப்பாடு போடுவானேன்னு கேட்டேன்” என்ற பதில் கணிரென்று ஒலித்தது.
“ஹேங், யாருடாது இப்படி இந்த ஊரிலே? புது ஆளு போலிருக்கு” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவனாய் முத்துமாலை அந்த வீட்டின் முன்னே வந்தான்.
“யாரய்யாது சூரப்புலி! இப்படிக்கொஞ்சம் நிலாவிலே வந்து மூஞ்சியைக் காட்டேன். யாருன்னுதான் பார்க்கலாமே” என்றான்.
“இந்த ஊருக்கு முத்துமாலை எவ்வளவு பழையவனோ அவ்வளவு பழையவன்தான் நானும்! நல்லாப் பார்த்துக்கோ” என்று திண்ணையை விட்டு இறங்கிப் படியில் நின்றான் மற்றவன்.
முத்துமாலை அவனை உற்றுப்பார்த்தான். நன்றாக கவனித்தான். அட தங்கராசு! நீ வடக்கே எங்கேயோ இருக்கதாச் சொன்னாங்களே?” என்றான்.
“வடக்கே இருந்தா என்ன, தெக்கே வரப்படாதா?” என்று இடக்காகக் கேட்டான் தங்கராசு. ஏன் வரப்படாது? பேஷா வரலாம். தெக்கே ஒரேயடியாப் போகவும் போகலாம்” தனது பேச்சு சாதுரியத்தை மெச்சுகிறவன் போல் தானே சிரித்து க் கொண்டான் முத்துமாலை.
“அதுக்கு வேளையும் பொழுதும் வரணும். இருக்கட்டும் முத்துமாலை, நீ ஏன் இப்படி யானே?”
“எப்படி ஆனேன்! நான் எப்பவும் போல் தானே இருக்கேன்!”
“இல்லையே, முன்னே இப்படியா இருந்தே, நான் இங்கே இருந்தபோது? இடைக்காலத்திலே ஏன் இப்படி மாறியிருக்கே? ராத்திரி எல்லாம் தூங்காமெ, மத்தவங்களையும் தூங்கவிடாமக் கெடுத்துக் கிட்டு...”
“ஏ நான் தூங்கலேங்கிறது சரி. மத்தவங்களை தூங்க விடாமக் கெடுக்கிறேங்கிறது சரியில்லை. ஆந்தைக அலறுது. கூகை கத்துது. அதுமாதிரி ராப் பறவைகளின் ராசி நானும். ஊர்காரங்க அதுகளுக்குப் பழகிப்போகிற மாதிரி, என் விசயத்திலும் பழகிப் போவாங்க...”
தங்கராசு அவனையே பார்த்தபடி, “நீ ஏன் இப்படி மாறிப் போனேங்கிறதுதான் எனக்கு ஆச்சர்யமாயிருக்கு!” என்றான்.
“சரி. ஆச்சர்யப்பட்டுக்கிட்டே இரு.கொஞ்ச நாளைக்கு இந்த ஊரிலே தங்குவே இல்லே? அப்ப பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு முத்துமாலை நகர்ந்தான்.
அந்தத் தெரு திரும்புகிற வரையில் அவனுக்கு ‘சுரத்’ இல்லை.சந்து திரும்பி அடி வைத்ததும் தன்னை சுதாரித்துக்கொள்ள விரும்பியவனாய், “ஹ்விட்டோ ஹ்வீட்!” என்று சீட்டி அடித்தான். இரண்டு தடவை மூன்று தடவை அடித்தான். பிறகு அபூர்வமாக என்றாவது பாடுகிற ஒரு பாட்டைப் பாடலானான்.
“சாலையிலே ரெண்டு மரம்
சர்க்காரு வச்ச மரம்!
எனக்கேத்த தூக்கு மரம்
தங்கமே தில்லாலே
உனக்கு ஏத்த மரமடியே
பொன்னுமே தில்லாலே!”
அந்தப் பாட்டின் ஒலி குறைந்து, தூரத்தில் தேய்ந்து மங்குகிற வரை திண்ணையிலேயே இருந்த தங்கராசுக்கு ஆச்சரியம் தணிய வழி பிறக்கவில்லை. முத்துமாலை ஏன் இப்படி ஆனான் என்று அவன் மனம் குறுகுறுத்துக் கொண்டுதானிருந்தது.