உள்ளடக்கத்துக்குச் செல்

அனிச்ச மலர்/18

விக்கிமூலம் இலிருந்து

18

தவைத் திறந்தால் வெளியே மேரியும், தயாரிப்பாளர் கன்னையாவும், டான்ஸ் மாஸ்டரும் பதற்றத்தோடு நின்று கொண்டிருந்தார்கள்.

"என்னது? எதுக்குத் கதவை உள்ளே தாழ்ப்பாள் போடணும்?” என்று கன்னையா கேட்டார்.

"சும்மா எங்களுக்குள்ளே ஒரு பிரைவேட் கான்வர்சேஷன். அவ்வளவுதான்” என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்ல முயன்றாள் சுமதி. கன்னையாவின் முகத்தில் பதற்றம் தெரிந்தது.

"உள்ளே அழுகைக் குரல் கேட்டிச்சு, ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிற மாதிரிப் பட்டதாலே சந்தேகப்பட்டுக் கதவை நான்தான் தட்டச் சொன்னேன்” என்றாள் மேரி.

"நீங்க மூணுபேரும் கொஞ்சம் அங்கேயே இருங்க. நானே எங்கம்மாவைச் சமாதானப்படுத்திட்டு அப்புறம் உங்களை எல்லாம் கூப்பிடறேன்” என்றாள் சுமதி. அவள் சொன்னதை அவர்கள் கேட்டார்கள். அதன்படியே விலகிச் சென்றார்கள்.

சுமதி மறுபடி கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே வந்தாள். அம்மா அவளைக் கேட்டாள்.

“யாருடி இவங்கள்ளாம்? யாரோ ஒரு சட்டைக்காரிச்சிதான் உன்னை முழுக்க முழுக்கக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிட்டான்னு வார்டன் அம்மாள் சொன்னாளே. அவ இவதானா? கெட்ட சகவாசம் மனுஷாளை எவ்வளவு கெடுக்கும்னு சொல்லவே முடியாது! உன்னை நான் மெட்ராஸுக்குப் படிக்க அனுப்பினதே தப்பு. என் புத்தியைச் செருப்பாலே அடிச்சிக்கணும்டீ,” என்று அம்மா மறுபடியும் இராமாயணத்தை ஆரம்பித்து விட்டாள். எப்படி அவள் வாயை அடைப்பதென்று சுமதிக்குப் புரியவில்லை.

"ஏன்ம்மா இப்படி ஒரேயடியாகக் கத்தறே கத்தி இரைஞ்சு ஊரைக்கூட்டறதிலே உனக்கென்னம்மா லாபம்? கேட்கிறதை நிதானமாகத்தான் கேளேன்.”

“நின்னு நிதானமா விசாரிக்கிற மாதிரிக் காரியத்தையாடீ நீ பண்ணியிருக்கே?"

“பெரிசா நான் எதையும் பண்ணிடலே. காலேஜை விட்டுட்டேன். சினிமாவிலே சேர்ந்திருக்கேன். இந்த வருஷக் கடைசிக்குள்ளேயே லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கிறேனா இல்லையா பாரேன்.” "பேரை எல்லாம் கெடுத்துண்டதுக்குப் பின்னே என்ன சம்பாதிச்சுத்தான் என்ன பிரயோசனம்டீ?"

"நாய் வித்த காசு குரைக்காது அம்மா! நீ தமிழ்ப் பண்டிட்டா வேலை பார்த்து ஒரு வருஷத்திலே சம்பாதிக்கிறதை நான் ஒரு மணி நேரத்தில் சம்பாதிப்பேன் அம்மா!"

'போறுமே நீ பேசறதும், லட்சணமும், அசடு வழியறது. இப்போ நான் சொல்றதைக் கேட்கப் போறியா இல்லியா!"

இந்தக் கேள்விக்குச் சுமதி உடனே மறுமொழி சொல்லிவிடவில்லை. அவளும் சரி, அவளுடைய தாயும் சரி உணர்ச்சிக் கொந்தளிப்புக்களும் பதற்றமும் அடங்கிய நிலையில் காணப்பட்டார்கள். அப்போது சுமதிக்குச் சினிமா உலகில் ஜொலிக்கப் போகிற ஆசை உள் மனத்தை உடும்புப் பிடியாகப் பிடித்திருந்தது. அம்மா மட்டுமில்லை, செத்துப்போன அப்பாவே வந்து எதிரே நின்று மிரட்டினால் கூட சினிமாவில் நடித்துப் புகழும் பணமும் சம்பாதிக்கும் ஆசையைச் சுமதி விட்டுவிடத் தயாராயில்லை. அதற்காக எவ்வளவோ பெரியவற்றை எல்லாம் இழந்த பின் இனி அதை அடையாமல் விட்டுவிட்டுப் பாதி வழியில் அம்மாவுக்கு அடங்கிய சாதுப் பெண்ணாகத் திரும்பிப் போய்விட அவள் தயாராயில்லை. அதே சமயம் கன்னையா, மேரி, டான்ஸ் மாஸ்டர் எல்லாரும் காண எல்லார் முன்னிலையிலும் தன்னைத் தேடி வந்திருக்கும் தாயோடு இரசாபாசமாகி விடுகிற எல்லைக்குக் கூப்பாடு உண்டாகும்படி சண்டை போடவும் தயாராயில்லை அவள்.

தன் அறைக்கு வேலைக்காரியாகத் தயாரிப்பாளர் கன்னையா நியமித்திருந்த ஆயாவைக் கூப்பிட்டு, "நல்ல காபியா வாங்கிண்டு வா! அம்மாவுக்குக் குடுக்கலாம்” என்று அவளை ஒட்டலுக்கு அனுப்பிவிட்டு அம்மா பக்கம் திரும்பி, "நீ இந்தத் தடவை எங்கேம்மா தங்கியிருக்கே!” என்று நிதானமாக விசாரித்தாள் சுமதி.  "தங்கறது எங்கேடீ? என்னை நிம்மதியா ஒரு எடத்திலே தங்கவா விட்டே நீ? வந்ததிலிருந்து நாயா அலையறேன். உன்னைப் பெத்ததுக்குக் கை மேலே கண்ட பலன் அதுதான்.”

"பார்த்தியா பார்த்தியா? மறுபடியும் என்னையே திட்டறியே அம்மா? உனக்குப் பெண்ணாப் பிறந்தது இப்படி நான் உங்கிட்டவே திட்டுக் கேட்கிறத்துக்குத் தானா?" என்று கேட்டு மறுபடியும் அழத் தொடங்கினாள் சுமதி. அப்போது ஓரளவு அவன் தன் தாயைச் சரிப்படுத்துவதற்கான திட்டத்துடனும் தந்திரத்துடனும் நடிக்கத் தொடங்கியிருந்தாள். காபி வந்தது. அம்மாவுக்குச் சுமதியே ஆற்றிக் கொடுத்துப் பருக வைத்தாள்.

உணர்ச்சிக் கொந்தளிப்புக்களும் ஸெண்டிமெண்ட்ஸும் உள்ள பழைய தலைமுறைப் பெண்ணைச் சில வேளைகளில் இரண்டு மூன்று சொட்டுக் கண்ணீரைச் சிந்தியே வழிக்குக் கொண்டு வந்துவிடலாம். தாங்கள் அழக்கூடிய சுபாவமுள்ள சில மூத்த பெண்கள் தங்களுக்கு முன் நிற்பவர்கள் அழுதுவிட்டால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது பதறிப் போவார்கள். தன் அம்மாவும் அந்த ரகத்தைச் சேர்ந்தவள்தான் என்பது சுமதிக்குப் புரிந்திருந்தது. சுமதி அப்போதிருந்தே நடிக்கத் தொடங்கிவிட்டாள்.

"சொல்லும்மா! இங்கே டி.நகர்லே யோகாம்பாள் அத்தை வீட்டிலே தானேம்மா தங்கியிருக்கே?-

"ஆமாண்டீ! எனக்கு வேறே போக்கிடம் ஏது? சொல்லு. ஒரேயடியாச் சுடுகாட்டுக்குத்தான் இனிமேப் போகணும். இருந்து இப்படி அவஸ்தைப் படறதைவிடப் போயிடறது எத்தனையோ மேல்”-

”ஏனம்மா இப்படியெல்லாம் சொல்லி என் மனசைக் கஷ்டப்படுத்தறே? நானே நொந்து போயிருக்கேன். நீயும் எங்கிட்ட இப்படிப் பேசினா என்னால தாங்க முடியாது.” -

அ.ம.-9 "சரிடீ பேசலே! ஆனா நீ இப்ப உடனே நான் சொல்றதைக் கேட்கணும். எனக்கு இந்த இடமே பிடிக்கலை. இங்கே நீயும் நானும் தனியாப் பேசிக்கிறதுக்குக் கூடப் ’பிரைவஸி’ இல்லே. தடித்தடியா ஆம்பிளைங்க வந்து கதவைத் தட்றாங்க. எங்கூட யோகாம்பா அத்தை வீட்டுக்கு வா. அங்கே பேசி முடிவு பண்ணிக்குவம். எனக்கு இன்னிக்கு ஒருநாள்தான் காஷூவல் லீவு மீதமிருக்கு நாளைக்கிக் காலம்பரப் பள்ளிக்கூடம் போகலேன்னா லாஸ்-ஆஃப் பேயிலேதான் லீவு போடணும்.”

"அப்போ நீ இன்னிக்குச் சாயங்காலமே ஊருக்குப் போறியா அம்மா?”

"நான் மட்டும் போறதா உத்தேசம் இல்லேடீ ! உன்னையும் கூட்டிண்டுதான் போகப்போறேன். யோகாம்பாள் அத்தையும் அதைத்தான் சொல்றா. ஜாதகப்படி இப்போ உனக்கு ரொம்ப மோசமான தசை! நீ தனியா இங்கே இருக்கிறது நல்லதில்லே சுமதி-”

"சரி! அதை அப்புறமா யோசிக்கலாம்! இப்ப நீ என்ன சொல்றே அம்மா? நான் உங்கூட உடனே புறப்பட்டு யோகாம்பா அத்தை வீட்டுக்கு வரணும்னுதானே? வரேன். அடுத்து நான் ஹீரோயினா நடிக்கப் போற படத்திலே டான்ஸ் ஆடணும்கிறதுக்காக ஏகப்பட்ட பணச் செலவிலே இங்கே இந்த மாஸ்டரை எனக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கச் சொல்லி நியமிச்சிருக்காங்க. இதோ பேப்பர்லாம் பாரு! என் படத்தோட முழு முழுப்பக்கம் விளம்பரம்கூட பண்ணியாச்சு. இந்த விளம்பரத்தில் எல்லாம் என்ன போட்டிருக்குன்னு நீயே உன் கண்ணாலே பாரும்மா.'புத்தம் புதிய அழகு மலரான ஓர் இளம் கல்லூரி மாணவியையே கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறோம்’னு கொட்டை எழுத்திலே போட்டிருக்காங்களா இல்லியா பாரு? இவ்வளவு விளம்பரத்துக்குமாக் கால் லட்ச ரூபாய்க்கு மேலே செலவாகி இருக்குங்கறாங்க” "ஆனா என்னடி? நீதான் இந்தப் படத்திலே நடிக்கணும்னு எந்த சாஸ்திரத்திலே சொல்லியிருக்கு? வேற யாராவது ஒரு கல்லூரி மாணவியைப் போட்டுப் படத்தை எடுத்துக்கட்டுமே?”

"அதெப்படிம்மா சாத்தியம்? இத்தனை பெரிசா என்னோட 'ஸ்டில்ஸை'ப் போட்டு அதுக்குக் கீழேதானே 'கல்லூரி மாணவியை அறிமுகப்படுத்தறோம்'னு எழுதியிருக்காங்க...”

சுமதி இதைச் சொல்லுகிறவரை அவள் எடுத்து நீட்டிய தினசரிப் பேப்பர்களைப் பாராமுகமாக இருந்த அவளுடைய தாய் இப்போது அவற்றை ஒவ்வொன்றாகக் கூர்ந்து பார்த்தாள். பெண்ணின் அழகான பெரிய பெரிய புகைப்படங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்தப் படங்கள் எதற்காக என்ன நோக்கத்தோடு எப்படி வெளியிடப்பட்டிருந்தன என்பதைக் கண்டு எரிச்சலாகவும் துயரமாகவும் இருந்தது.

"பெத்த தாயைக் கூடக் கலந்து பேசிக்கணும்னு தோன்றாமே இத்தனை பெரிய காரியத்துக்கு எப்படிடீ தைரியம் வந்தது உனக்கு? இப்போ உன்னை ஏமாத்திக் கடத்திக்கிட்டுப் போயிட்டதாக இந்தப் புரொட்யூஸர் மேலே நான் கேஸ் போட்டா என்னடீ பண்ணுவே?”

"அப்படி ஒரு கேஸ் நீ போடவே முடியாதும்மா! நான் மேஜரான பொண்ணு. இன்னும் உன் முந்தானைக்குள்ளே ஒழிஞ்சிண்டிருக்கிற பழைய சின்னக் குழந்தை 'சுமி' இல்லே, எனக்கு வயசாச்சு...” இதை விளையாட்டாகத் தான் அவள் சொன்னாலும் இந்தச் சொற்கள் அப்போது அவளுடைய தாயை வாயடைக்கச் செய்து விட்டன. தாய் யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்.

சுமதி கன்னையாவிடமும், மேரியிடமும் போய் அன்று மாலைவரை தாயுடன் வெளியே உறவினர்கள் வீட்டுக்குப் போய்வர அனுமதி கேட்டாள். முதலில் அவர்கள் ஏனோ தயங்கினார்கள். மேரியை நோக்கிக் 

கன்னையா ஏதோ ஜாடை பண்ணினார். உடனே மேரி, "சுமதீ! இங்கே வா. ஒரு நிமிஷம் தனியா உங்கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்று சுமதியை அறையின் ஒரு மூலைக்குக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனாள். சுமதி ஒன்றும் புரியாமலும் மனத்தில் மேரி தன்னிடம் என்ன கேட்கப் போகிறாள் என்ற அனுமானம் கூட இல்லாமலும் அவளோடு சென்றாள். அறை மூலைக்குப் போனதும் பேசத் தொடங்கு முன் அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டு குரலை மிகவும் சன்னமாகத் தாழ்த்தி, "காஷ்மீர்லே நடந்ததையெல்லாம் உன் மதர்கிட்டச் சொல்லியிருப்பியோன்னு கன்னையா பயப்படறாரு, நீ கெட்டிக்காரப் பொண்ணு. அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்னு நான் அவருக்கு உறுதி சொல்லியிருக்கேன். நீ சொல்லியிருக்க மாட்டியே?..” என்று கேட்டாள் மேரி.

அதைக் கேட்டுச் சுமதிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவளால் இதற்குப் பதில் சொல்லவே முடியவில்லை. ஞாபகப்படுத்தப்பட்ட விஷயம் எதுவோ அதனால் திக்பிரமை பிடித்துப்போய் அப்படியே நின்று விட்டாள் அவள்.

“என்னடீ? சொல்லிட்டியா?”

வார்த்தைகளால் பதில் சொல்லும் சக்தியைச் சுமதி இழந்துவிட்டிருந்தாள். ஆனால் மேரி அதே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கவே பதில் சொல்லாவிட்டால் அவள் விடமாட்டாள் என்று படவே, 'சொல்லவில்லை’ என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தாள். உடனே மேரி தயாரிப்பாளர் கன்னையாவை நோக்கி "அவ ஒண்ணும் அதெல்லாம் சொல்லலியாம்! எதுக்கும் நாளைக்குக் காலையிலே காண்ட்ராக்ட் எழுதிக்கலாம்! ரெண்டு தரப்புக்குமே அதுதான் நல்லது” என்று அந்த மூலையிலிருந்தே இரைந்து சொன்னாள்.

அவள் அதுவரை அதைச் சொல்லவில்லை என்பதில் நிம்மதியும் அதற்கு மேலும் எப்போதாவது சொல்லிவிடக் கூடாதே என்பதில் எச்சரிக்கையும் அடைந்தார்கள் அவர்கள். அவள் கேட்டபடியே அன்று மாலைவரை தாயோடு வெளியே போய்வர அவளை அனுமதித்தார்கள். ஆனால் தங்கள் கம்பெனிக் காரிலேயே போய் வருமாறு தனக்கு மிகவும் நம்பிக்கையான டிரைவரைப் போட்டு அனுப்பினார் கன்னையா. "சுமதியை இரயிலேறிப் போகவிடக்கூடாது. அவள் தாயுடன் ஊருக்குப் போகிறாள் என்பதுபோல் தெரிந்தால் உடனே எனக்கு எங்கேயிருந்தாவது ஃபோனிலே சொல்லு" என்று டிரைவரிடம் இரகசியமாகச் சொல்லியியிருந்தார் கன்னையா.

கன்னையாவின் காரில்தான் சுமதியும் அவள் தாயும் யோகாம்பாள் அத்தை வீட்டுக்குப் போனார்கள். யோகாம்பாள் அத்தை வீடு மகாலட்சுமி தெருவில் இருந்தது.

அங்கே போனதுமே அத்தையும் அம்மாவுமாகப் பேசி, "இவ ஜாதகப்படி ஒரு பரிகாரம் பண்ணனும். இங்கே பக்கத்திலே மந்திரிக்கிறது பார்வை பார்க்கிறதுலே கெட்டிக்காரரான வேளார் ஒருத்தர் இருக்கார். அவரை வரச் சொல்லி மந்திரிக்கலாம்” என்று முடிவு செய்து வேளாரை வரவழைத்து விட்டார்கள். சுமதியால் அதைத் தடுக்க முடியவில்லை. வேளார் பச்சைத் தண்ணீரை மண் குடத்தில் நிரப்பிப் பயறு, பழம், வெற்றிலை வைத்து வேப்பிலையைத் தண்ணீரில் தோய்த்துச் சுமதியைத் தலைவிரி கோலமாக உட்கார வைத்து மந்திரிக்கத் தொடங்கினார்.

"குழந்தை தூர தேசத்திலே போயி இருந்தப்பப் பயந்துக்கிட்டிருக்கு; சரியாயிடும்” என்று சொல்லி மடியிலிருந்து திருநீற்றுப் பையை எடுத்துச் சுமதியின் நெற்றியில் வேளார் தானே விபூதி பூசினார்.

'காஷ்மீர் போனாளோ இல்லியோ? அதைத்தான் சொல்றாரு, அங்கே பயந்துண்டிருக்கா” - என்று அம்மா தானாகவே ஆரம்பித்தாள்.

சுமதிக்குக் கண்களில் நீர் மாலைமாலையாக வடிந்தது. "பயப்படாதேம்மா! எல்லாம் ரெண்டு நாளி லேயே சரியாயிடும்” என்றார் வேளார். சுமதிக்கோ மேலும் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/18&oldid=1146934" இலிருந்து மீள்விக்கப்பட்டது