கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/மக்களும் விழாக்களும்

விக்கிமூலம் இலிருந்து



4.மக்களும் விழாக்களும்

மக்கள் மதங்களை மனப்பூர்வமாக விரும்பினார்கள். விரும்பியதுடன் நில்லாது. வெறித் தனமாக பின்பற்றினர். அதன் விளைவுதான் வீணான நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டது.

உடைகளைக் கிழித்து, உடலை அழுக்காக்கி, வெறுக்கத்தக்க அளவில் செயல்பாடுகளை வளர்த்து, தங்களது மத அபிமானங்களை மற்றவர்களுக்குக் காட்டிக் கொண்டனர். அபிமானங்களால் ஏற்படுகிற காரியங்களை, அவர்கள் அவமானங்களாக ஏற்றுக் கொள்ள வில்லை.

மதம் மனதோடு இருக்க வேண்டும். செயல்கள் செம்மையாக சீரான வழிகளில் நடக்க வேண்டும். வீணான வெறி வேண்டாம். அன்பே அருமையான வழி என்று அன்று ஏசுபிரான் போதித்தார். யாரும் ஏற்கவில்லை.

வெளிப்புற ஆடம்பரமும், கேவலமான நடத்தைகளும் பக்தியல்ல. இருதயத்தின் இதமான மாற்றமே, உண்மையான பக்தி என்று, மகான்கள் போதித்ததை, மக்கள் கேட்டார்கள். ஆனால், பின்பற்றத்தான் இல்லை.

மதமும் விழாவும்

தனிப்பட்டவர்கள் தன்னந்தனியாக இருந்து கடவுளை வணங்கினால், அதனை ஜெபம் என்றனர். சிலர் தொழுகை என்றனர், வேறு சிலர் வழிபாடு என்றனர்.

அதையே மக்கள் கூட்டங்கூட்டமாகக் கூடி, கடவுளைக் கும்பிடுகிறபோது, விழா என்றனர். மதவிழா என்றனர். விழாவானது பக்தியை வெளிப்படுத்தாமல் போனதால் தான், விழா வேடிக்கை என்ற பெயரையும் பெற்றது. இங்கே நாம் எண்ணிப் பார்ப்பது நல்லது.

மக்களை ஒன்று திரட்ட, மன்னர்களும், மதவாதிகளும் உண்டாக்கிய சந்தர்ப்பங்களே, மதவிழாக்களாக மாறிவந்தன. அதனால்தான் ஏகப்பட்ட விழாக்களும் ஏற்படுத்தப்பட்டன.

ஒவ்வொரு விழாவின் ஆரம்பகாலத்தைக் குறித்துக் காட்ட, குழலூதியும் கொம்பூதியும் (Trumpet) மக்களுக்கு அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு ஏன் என்றால், விழா நாட்களில், மக்கள் அனைவரும் வேலைக்குப் போகாமல், ஓய்வாக இருக்க வேண்டும் அத்துடன், அமைதியான மனதுடன் பிரார்த்தனையும் செய்ய வேண்டும். இந்த அறிவிப்பு, இதற்காகத்தான் முதலிலேயே தரப்பட்டது.

விழாக் காலத்தில், இறைவனைத் தரிசித்து வேண்டிக் கொள்கிறபோது, வெறும் தானிய வகைகளைக் காணிக்கையாகக் கொடுக்கும் பழக்கம் மட்டும் இல்லாமல், இரத்த பலிகொடுக்கின்ற புதுப்பழக்கத்தையும் மக்கள் மேற்கொண்டார்கள்.

இரத்தபலி கொடுக்க, ஆடுகளே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு, பலியாயின. இப்படி கொடுக்கின்ற இரத்த பலியானது, தருகின்ற மக்களின் பாவங்களை இறைவன் மன்னிக்கின்றான் என்கிற குருட்டு நம்பிக்கை, மக்களிடையே பரவிக் கிடந்தது.

சில சமயங்களில், விழாக்களின் போது, இறைவனுக்குப் பழங்களைப் படைத்து மகிழ்கின்ற பழக்கமும் தொடர்ந்து வந்திருக்கிறது.

நம் தமிழ் நாட்டில், பழம் பூக்கள் போன்றவை படையல் பொருட்களாகத் திகழ்வது, நமக்கெல்லாம் நன்கு தெரியும்.

போர்க்காலத்தில் அன்றைய தமிழ் வீரக்குடிமக்கள், கொற்றவை என்கிற காளி தெய்வத்தின் முன்னே வேண்டிக்கொள்வார்களாம். போரில் வெற்றி பெற்றுத் திரும்பினால், தாய் நாட்டுக்கு வென்ற பெருமை வந்து விட்டால், திரும்பவும் இந்த கோயில் சன்னதிக்கு வந்து, தங்களையே உயிர்ப்பலி தருவதாக வேண்டிக் கொள்வார்களாம்.

அதேபோல், வெற்றிபெற்றுவிட்டால், கொற்றவைக்கு விழா எடுத்து, அவள் சன்னதியின் முன்னே, வீரர்கள் மேளம் கொட்டி, பாட்டிசைத்து, உக்ரவ தாண்டவம் ஆடி, அந்த உச்சக்கட்டத்தில், ஒரு கையில் பிடித்திருக்கும் கத்தியைக் கொண்டு, மற்றொருகையில்தலைக் குடுமியைப் பற்றிய படி, வெட்டிக்கொள்வார்களாம்.

வேகமாக ஆடிக்கொண்டிருக்கும்போது, கழுத்தை வெட்டிக் கொண்டால், தலையில்லாத முண்டமானது அதே வேகத்தில் ஆடிக் கொண்டிருந்தபடியே இருக்கும். அப்படி பல வீரர்கள் தங்களைப் பலி கொடுத்துக் கொண்டதால், ஏற்பட்ட காட்சியானது, பயங்கரமாக இருக்கும் என்றெல்லாம், நம்மவர் வீரம் பற்றிப் பேசிக்களிப்பார்கள்.

பக்தி என்கிறபோதும், படையல் என்கிற போதும், பலி என்கிறபோதும், எந்தநாடாக இருந்தாலும், நடப்பில் ஒன்றாக இருப்பதைக் குறிக்கவே, இந்தக் கருத்தை, இங்கே குறிப்பிட்டோம்.

வெட்டவெளியில் நம் நாட்டவர்கள், சிலையமைத்துக் கும்பிட்டார்கள் என்றால், ஆதிகால இஸ்ரேல் நாட்டு வரலாறானது, அக்கால மக்கள் முகாம் அமைத்து (Tent) திருவிழா கொண்டாடினார்கள் என்று கூறுகிறது.

எதை மக்கள் இறைவனிடமிருந்து எதிர்ப்பார்த்தார்களோ, அந்தப் பொருளையே, இறைவனுக்கு அர்ப்பணிக்கிற பழக்கமும், எல்லா நாட்டு மக்களிடையேயும் இருந்து வந்திருக்கிறது.

தண்ணீர் ஊற்றி, இறைவனுக்குப் படைத்து, விழா கொண்டாடிய பழக்கம், நல்ல மழையை எதிர்ப்பார்த்து செய்கிற விழாவாக இருந்தது என்பதை ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.

கழுதைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கின்ற பழக்கம், தமிழ்நாட்டு கிராம மக்களிடையே இன்னும் இருந்து வருகிறது. இசைக் கச்சேரி செய்வதும், நல்ல மழையை எதிர்ப்பார்த்தே செய்கின்றார்கள்.

ஆக, மதப் பழக்கத்தில், மிகுதியாக இடம் பெற்றிருந்த மரபுகள் மக்களைக் கவர்ந்த விழாக்கள், காணிக்கைகள், படையல்கள், விழாச் சேவைகள், பிரார்த்தனை, உண்ணா நோன்பு என்பவைகளாக விரிவடைந்து கொண்டே வந்திருக்கின்றன.

வீதிக்கு வந்த விஷயங்கள்

குடும்ப வாழ்க்கையும் மத விஷயங்களும், ஒன்றுக் கொன்று இணைந்து, இணைபிரியாமலே, ஆரம்பம் முதல் இருந்து வந்திருக்கின்றன. மத விவகாரங்களும், ஒரு சமுதாய அமைப்பு போலவே, மக்கள் வாழ்வுடன், பின்னிப் பிணைந்தே கிடந்தன.

எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளையும் தாங்கள் சார்ந்துள்ள மதத்தையே பின்பற்றுமாறு அறிவுறுத்தினர். வாழ வைத்தனர். வழிநடத்தினர். அந்த வாழ்வையே கட்டாயமாக்கினர். அதற்காக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, மதசம்பந்தமான கருத்துக்களைக் கூறியதுடன், அதிசயம் விளைவிக்கத் தக்க கதைகளையும் கூறிவந்தனர்.

பெற்றோர்கள் பேசுகின்ற கருத்துக்களும், விவரிக்கின்ற விந்தைமிகு கதைகளும், குழந்தைகளை அதிசயப்பட வைத்தன. அவர்கள் அந்தக் கடவுள்கள் பற்றியும், அவர்களின் வரலாறு பற்றியும் அறிந்து கொள்ள ஆவல் கொண்டனர். இதனால், அடிக்கடி தங்கள் பெற்றோர்களை அதிகமாகக் கேள்விகள் கேட்டும் தொந்தரவு செய்தனர்.

இப்படிப்பட்ட இனிய சந்தர்ப்பங்களை மேல் நாட்டவர்க்கு வழங்கியது சபாத் (Sabbath) என்று அழைக்கப்பட்ட ஓய்வு நாள்தான் அதாவது, வாரத்தின் ஏழாவது நாள் தான் சபாத் என்பதாகும். ஆமாம் அது அனைவருக்கும் ஓய்வு நாளாகும்.

இந்த ஓய்வு நாளின்போது, யாரும் எந்த வேலையையும் செய்யக் கூடாது. அதே சமயத்தில், சும்மா உட்கார்ந்து கொண்டு சோம்பேறியாகவும் இருக்கக் கூடாது. தூங்கிக் கழிக்கவும் கூடாது.

அதற்காக அவர்கள் மேற் கொண்ட வழி முறைதான் கடவுள் ஈடுபாட்டை மிகுதியாக வளர்த்து விட்டது. அதாவது, அந்த நாள் மக்கள், ஓய்வு நாளின் போது, கடவுள் மக்களுக்காக செய்த நன்மைகள் பற்றியும் பேசி, போற்றிக் கொண்டிருக்கும் திருக்காரியங்களையே செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாய நெறிமுறையை, பின்பற்றினார்கள்.

பெற்றோர்களிடம் - குழந்தைகள் கேள்விகள் கேட்பதும், விளக்கம் பெறுவதும், அந்த நினைவுடனேயே கடவுளைப் பிரார்த்தனை செய்வதுமாக அந்த ஓய்வு நாள் கழியும்.

அது போலவே, பெற்றோர்களும் தாங்கள் விளக்கிய கடவுள் மகிமை செய்த இடத்தைத் திருத்தலமாகப் போற்றி, அழைத்துக் கொண்டு போய் காட்டினர். குழந்தைகளும் கதையில் கேட்ட இடத்தை, நேரில் கண்டு ஈடுபாட்டுடன் வணங்கினர். காணிக்கை செலுத்தினர்.

திருத்தலங்களில் அமைந்துள்ள கோயில்களில் பணி செய்திடும் குருமார்களும், மக்களுக்கு பிரசங்கம் செய்து கடவுள் பக்தியை மேலும் வளர்த்தார்கள். அதற்காகவே, கோயில்களில் பிரார்த்தனை மண்டபங்கள் அமைக்கப்பட்டன. மக்கள் பயபக்தியுடன், பிரசங்கங்களைக் கேட்டு பக்தி ரசனையில் திளைத்தார்கள்.

கடவுள் மக்களுக்கு அருள் பாலித்து நன்மை செய்த இடம், அற்புதம் நிகழ்த்திய திருத்தலம் என்பதை எடுத்துக்காட்ட கற்களைப் பதித்த (Stones) இடம், புனிதத்தனம் என்று மக்களால் போற்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

குழந்தைகள் மனதிலே மத உணர்வு வேரூன்ற இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள், பிரசங்கங்கள், பிரார்த்தனைகள், விழாக்கோலங்கள், விருந்து வைபவங்கள் எல்லாமே உதவி வந்தன. உத்வேகம் ஊட்டின.

இப்படியாக மத விஷயங்கள், கோயில்களிலிருந்து வெட்ட வெளியான பிரதேசத்திற்கு வந்தன. மதமே வாழ்க்கை, வாழ்க்கையே மதம் என்ற பற்று, பாசமுடன் பிறந்து வளர்ந்து வேரூன்றி, விலக்க முடியாத வெறியாகிப் போனது தான், விந்தைமிகு செயலாகும்.

இஸ்ரேலிய மக்களின் விழாக்கள், இறைவனுக்குத் துதிபாடவும், நன்றி கூறவும் பயன்பட்டன என்றால், கிரேக்க நாட்டு மக்கள் நடத்திய விழாக்கள் கொஞ்சம் மாறுபட்ட கூர்மையான மதிநுட்பத்துடன் திகழ்ந்தன. அந்த மாறுபட்ட அணுகுமுறையே, விளையாட்டுக்கள் வளர்ச்சிபெற உதவின.