உள்ளடக்கத்துக்குச் செல்

மணி பல்லவம் 1/029-039

விக்கிமூலம் இலிருந்து

29. நிழல் மரம் சாய்ந்தது!

பொழுது விடிந்ததும் நடந்த இந்த நிகழ்ச்சியால் இளங்குமரனின் உள்ளம் சொல்ல முடியாத வேதனையை அடைந்திருந்தது. உடனே பட்டினப்பாக்கத்துக்கு ஓடிச்சென்று சுரமஞ்சரி, அவளுடைய தோழி, மணிமார்பன் மூவரையும் படைக்கலச் சாலைக்கு அழைத்துக் கொண்டு வந்து நீலநாக மறவருக்கு உண்மையை விளக்கிவிட்டால் நல்லதென்று எண்ணினான் இளங்குமரன். அவர் மனத்தில் பதிந்து ஊன்றிப்போன சந்தேகத்தைக் களைந்தெறிந்துவிட விரும்பினான் அவன். ஆனால் அதற்கும் தடையிருந்தது. படைக்கலச் சாலையின் எல்லையிலிருந்து வெளியேறக் கூடாது என்று அவர் அவனுக்குக் கட்டளையிட்டிருந்தார். இரண்டு காரியங்களுக்காக அப்போது அவன் அங்கிருந்து வெளியே போய் வரவேண்டிய அவசியம் இருந்தது. சுரமஞ்சரி முதலியவர்களை நேரில் அழைத்து வந்து நீலநக மறவரின் சந்தேகத்தைப் போக்குவதற்காக அவன் வெளியேறிச் செல்வதன்றி, வீரசோழிய வளநாடுடையாரிடம் ஒப்படைத்துவிட்டு வந்த அருட்செல்வ முனிவர் எப்படி இருக்கிறாரென்று பார்த்து வருவதற்காகவும் போக வேண்டியிருந்தது. தன்மேல் கோபத்தோடிருக்கும் நீலநாக மறவரிடம் போய் அங்கிருந்து வெளியேறிச் சென்று வருவதற்குத் துணிந்து அனுமதி கேட்பது எப்படி என்று அவன் தயங்கினான்.

இவ்வாறு அவன் தயங்கிக் கொண்டிருந்தபோது அந்தப் படைக்கலச் சாலையில் இருந்தாற் போலிருந்து வழக்கமாகக் கேட்கும் ஒலிகளும் வீரர்களின் ஆரவாரமும் ஓய்ந்து அமைதி நிலவியது. திடீரென்று என்ன ஆகிவிட்டதென்று புரியாமல் இளங்குமரன் மருண்டான். சென்ற விநாடிவரையில் வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் நீலநாக மறவரின் கம்பீரக் கட்டளைக் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது; இந்த விநாடியில் அதுவும் ஒலிக்கவில்லை. வாளோடு வாள் மோதும் ஒலி, போர்க்கருவிகள் செய்யும் உலைக்களத்திலும் பட்டறையிலும் இரும்பு அடிபடும் ஓசை, வீரர்களின் பேச்சுக்குரல் எல்லாம் ஓய்ந்து மயான அமைதி நிலவியது. காற்றுக்கூடப் பலமாக வீசப்படுவது போன்ற அந்த அமைதி ஏன் நேர்ந்ததென்று காண்பதற்காக முற்றத்திலிருந்து படைக்கலச் சாலையின் உட்பகுதிக்கு விரைந்தான் இளங்குமரன்.

அங்கே பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த வீரர்கள் அமைதியாய் மூலைக்கு மூலை ஒதுங்கி தலைகுனிந்தவாறு நின்று கொண்டிருந்தார்கள், நடுவில் நீலநாக மறவரும் வீரசோழிய வளநாடுடையாரும் கண்கலங்கி நின்றார்கள். இருவருடைய தோற்றத்திலும் துக்கத்தினால் தாக்குண்ட சோர்வு தெரிந்தது.

இளங்குமரனைப் பார்த்ததும் வீரசோழிய வளநாடுடையார் ‘கோ’வென்று கதறியழுதபடி ஓடிவந்து அவனைத் தழுவிக் கொண்டார். நீலநாக மறவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நின்ற இடத்திலிருந்து அசையாமல் அப்படியே நின்றார்.

“உனக்கு இதுவரை நிழல் தந்து கொண்டிருந்த நெடுமரம் சாய்ந்து விட்டது. தம்பி! தவச்சாலை தீப்பற்றி எரிந்து முனிவர் மாண்டு போய்விட்டார்” என்று துயரம் பொங்கும் குரலில் கூறினார் வளநாடுடையார். இளங்குமரனுக்கு அந்தச் செய்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை. “முனிவர் தவச்சாலைக்கு எப்படிப் போனார்! அவரை உங்கள் வீட்டில் அல்லவா விட்டு வந்தேன்...” என்று பதறிப்போய்க் கேட்டான் இளங்குமரன்.

கண்ணீர் பொங்கத் துயரம் அடைக்கும் குரலில் நடந்தவற்றை அவனுக்குக் கூறினார் வளநாடுடையார். இளங்குமரனுக்குக் கண்கள் இருண்டன. உலகமே சுழல்வது போலிருந்தது. ‘அப்படியும் நடந்திருக்குமா? நடந்திருக்க முடியுமா?’ என்று நினைக்க நினைக்க துக்கம் பெருகியது அவனுக்கு.

பெற்றோரும் உற்றாரும் இல்லாத காலத்தில் தன்னை வளர்த்து ஆளாக்கி தாயாகவும் தந்தையாகவும் இருந்து காத்துவந்த உத்தமர் தீயில் மாண்டு போனார் என்று அறிந்தபோது அவனுக்கு அழுகை குமுறிக் கொண்டு வந்தது. வலிமையும் வீரமும் பொருந்திய அவன், பேச்சு வராத பருவத்துப் பச்சைக் குழந்தைபோல் குமுறி அழுத காட்சி அங்கிருந்த எல்லாரையும் மனமுருகச் செய்தது. இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழுதழுது சோர்ந்துபோய் அவன் தரையில் சாய இருந்த போது அதுவரையில் பேசாமல் நின்று கொண்டிருந்த நீலநாக மறவர் விரைவாக ஓடிவந்து அவனைத் தாங்கிக் கொண்டார்.

“இந்தப் பாவியை மன்னிப்பாயா, தம்பீ? என்னிடம் அடைக்கலமாக இருந்த போதில், அவருக்கு இப்படி நேர்ந்து விட்டதே என்பதை நினைத்தால் என்னால் துக்கத்தைத் தாங்க முடியவில்லையே?” என்று வீரசோழிய வளநாடுடையார் தமது ஆற்றாமையைச் சொல்லி புலம்பி அழுதார்.

அப்போது நீலநாக மறவர் வளநாடுடையாரை நோக்கிக் கையமர்த்தி அவருடைய அழுகையை நிறுத்தச் செய்தார்.

“அழுது ஆகப் போவதென்ன? மனிதர்களின் மரணம் காலத்தின் வெற்றிகளில் ஒன்று. புகழும், செல்வமும் பலரால் மதிக்கப்படுவதாலும் உலக வாழ்க்கையில் பெருமையாக இருப்பதைப் போல் நேற்று இருந்த ஒருவரை இன்றில்லாமல் செய்துவிடுவது காலத்துக்குப் பெருமை. காலத்தின் இந்தப் பெருமையால் நமக்குத் துக்கம். தன்னுடைய ஆற்றலால் காலம் தான் இந்த விதமான துக்கங்களையும் மாற்ற வேண்டும். அழுது புலம்பிக் கொண்டிராமல் இறந்தவருக்குச் செய்ய வேண்டிய நீத்தார் கடன்களைச் செய்யப் புறப்படு” என்று நீலநாக மறவர் ஆறுதல் கூறினார். சற்றுமுன் தன்னைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டவர்தானா இப்போது இப்படி ஆறுதல் கூறுகிறார் என்று வியப்பாயிருந்தது இளங்குமரனுக்கு. பெரிய துக்கத்தில் மனிதர்களுக்கு இடையே உள்ள சிறிய கோபதாபங்கள் கரைந்து விடுகின்றன. கலங்கிய கண்களோடு தன்மேல் சாய்ந்து கொண்டே தன் முகத்தை நிமிர்ந்து பார்த்த இளங்குமரனின் தலையைக் கோதிக்கொண்டே, “அருட்செல்வ முனிவர் எப்படி உனக்கு நிழல்மரமாக இருந்தாரோ, அப்படி இனிமேல் நான் இருப்பேன். நீ தவறாக நடந்து கொள்வதாகத் தெரிகிறபோது நான் கடிந்து கொண்டால் அதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு தந்தைக்குத் தன் மகனைக் கடிந்து கொண்டு நல்வழிப்படுத்த உரிமை உண்டு அல்லவா?” என்று பாசத்தோடு கூறினார் நீலநாக மறவர்.

“உலகத்துக்கெல்லாம் பொழுது விடிந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் எனக்கு மட்டும் இப்படி ஒரே படியாக இருண்டு விட்டதே” என்று நீலநாக மறவரின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு இளங்குமரன் துன்பத்தை ஆற்ற முடியாமல் மேலும் பொங்கிப் பொங்கி அழலானான். கதக்கண்ணன் முதலிய நண்பர்களும் கண்களில் நீர் மல்க அருகில் வந்து நின்றார்கள்.

“நினைத்து நினைத்து வேதனைப்படாதே, தம்பீ! மனத்தை ஆற்றிக்கொள். துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளத் தெரியாதவர்களுக்குத்தான் பகலும் இரவு போல் இருண்டு தோன்றும். நீ வீரன். அப்படி உனக்குத் தோன்ற விடலாகாது” என்று மீண்டும் அவனுக்கு இதமாக எடுத்துச் சொல்லி ஆற்ற முயன்றார் நீலநாக மறவர்.

தான் வெளியே சொல்லிக் கொள்ள முடியாமல் தன் மனதுக்குள்ளேயே அழவேண்டிய பெருங்குறை ஒன்றையும் இளங்குமரனால் அப்போது நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அருட்செல்வ முனிவர் தீயில் சிக்கி மாண்டபோதே அவனுடைய பிறப்பையும், பெற்றோரையும் பற்றிய உண்மையும் எரிந்து அழிந்துபோய் விட்டது. அந்த இரகசியத்தைத் தெரிந்து கொண்டிருந்த ஒரே மனிதரும் மாண்டுபோய் விட்டார் என்று அறிகிறபோது அவனுக்கு உலகமே இருண்டு போனாற்போல் துயரம் ஏற்படத்தான் செய்தது. எதை அறிந்து கொள்ளும் ஆவலினால் அவனுக்கு வாழ்க்கையில் சுவையும், விருப்பமும் நிறைந்திருந்தனவோ அதை இனிமேல் அவன் யாரிடமிருந்து அறிந்து கொள்வான்? அவனுடைய அருமைத் தாயை அவனுக்கு யார் காட்டுவார்கள்? நீலநாக மறவர் கூறியது போல் உலகத்தையே தாயாக எண்ணி மகிழ வேண்டியது தானா? அவ்வளவுதான் அவனுக்குக் கொடுத்து வைத்ததா?

“இப்படி நின்று அழுதுகொண்டே இருந்தால் நேரமும் கண்ணீரும்தான் செலவாகும். வா, இறந்தவருக்குச் செய்ய வேண்டிய நீத்தார் கடன்களைச் செய்யலாம்” என்று நீலநாக மறவர் அவனைக் கைப்பற்றி அழைத்துக்கொண்டு போனார்.

“உயிரோடிகுந்து கொண்டே காரியத்துக்காகச் செத்துப் போனதாகப் பொய்யைப் பரப்பிட ஏற்பாடு செய்தவருக்கு மெய்யாகவே இறந்ததுபோல் நீத்தார் கடனாற்ற விடலாமா?” என்று மனத்துக்குள் தயங்கினார் வீரசோழிய வளநாடுடையார்.

ஆனால் அவர் இளங்குமரனைத் தடுத்து நிறுத்தவில்லை. தடுத்தால் பொய்மை நாடகம் வெளியாகி விடுமோ என்ற அச்சத்தால் மௌனமாயிருந்து விட்டார்.

நீலநாக மறவர் இளங்குமரனைச் சக்கரவாளக் கோட்டத்துக்கு அழைத்துப்போய் நீத்தார் கடன்களைச் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் வீரசோழிய வளநாடுடையார் ஆலமுற்றத்துக்குக் கோயிலில் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

“இறைவா! இந்த இரகசியத்தை உரிய காலம் வரை காப்பாற்றும் மனத்திடத்தை எனக்குக் கொடு! எவ்லாம் நலமாக முடிந்தபின் இறுதியில் என் அருமைப் பெண் முல்லை அந்தப் பிள்ளையாண்டானுக்கு மாலை சூட்டி அவனுக்கு வாழ்க்கைத் துணையாகும் பாக்கியத்தையும் கொடு” என்று வேண்டிக் கொண்டிருந்தார். இப்படி இறைவனை வேண்டிக் கொண்டே கண்களை மூடியவாறே தியானத்தில் ஆழ்ந்தபோது இளங்குமரன் புன்னகை தவழும் முகத்தோடு தன் பெண் முல்லையின் கழுத்தில் மாலை சூட்டுவதுபோல் ஒரு தோற்றம் அவருக்கு மானசீகமாகத் தெரிந்தது. அந்தத் தோற்றத்தை மெய்யாகவே தம் கண்கள் காணும் நாள் விரைவில் வரவேண்டுமென்ற ஆவலோடு ஆலமுற்றத்திலிருந்து திரும்பினார் வளநாடுடையார்.

அவர் வீட்டுக்கு வந்ததும் முல்லை அருட்செல்வ முனிவரின் மரணத்தைப் பற்றி அவரைக் கேட்டாள்.

“என்னப்பா அருட்செல்வரின் தவச்சாலையில் தீப்பற்றி எரிந்து அவர் இறந்து போனாராமே?, புறவீதியெல்லாம் எங்கும் இதே பேச்சாக இருக்கிறது. நேற்றிரவு நீங்கள் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே?” என்று பரபரப்புடன் பதறிக் கேட்ட மகளுக்குச் சுருக்கமாய்ப் பதற்றமின்றிப் பதில் சொன்னார் வளநாடுடையார்.

“நேற்றிரவே எனக்குத் தெரியும் முல்லை; ஆனால் நடு இரவில் உன்னிடம் அதைச் சொல்லி உன் மனத்தை வருத்த விரும்பவில்லை. இப்போதுதான் இளங்குமரனுக்கே அந்தச் செய்தியை சொல்லிவிட்டு வருகிறேன்” என்று நிதானமாகக் கூறினார் வளநாடுடையார்.

“நெருங்கிய தொடர்புள்ள ஒருவரின் மரணத்தைப் பற்றி அதிகத் துக்கமில்லாமல் இப்படி இயல்பான விதத்தில் அறிவிக்கிறாரே” என்று தந்தை அருட்செல்வரின் மரணத்தைக் கவலையின்றி அறிவித்த விதத்தை எண்ணித் திகைப்படைந்தாள் முல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_1/029-039&oldid=1149513" இலிருந்து மீள்விக்கப்பட்டது