வேங்கடம் முதல் குமரி வரை 4/031-032

விக்கிமூலம் இலிருந்து
31. கன்னிக் குமரி

'தவம் என்பது ஒருவனுடைய மனம் முழுவதும் ஒரே நோக்கத்தில் ஈடுபட்டு வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதற்காகச் செய்யப்படும் முயற்சி. அந்த முயற்சியில் இந்திரிய ஆசைகளை ஒடுக்குவதற்கான பல பயிற்சிகள் அடங்கியுள்ளன. அந்தப் பயிற்சிகள் எல்லாவற்றுக்கும், சகிப்புத்தன்மையும் கலங்காத உள்ளம் உடைமையுமே அடிப்படை. இந்தச் சகிப்புத் தன்மையில் நிலைத்து நின்றால்தான் ஆன்ம சக்திகள் வளர்ந்து தவ வலிமையும் ஞானமும் உண்டாகும். அதன் பின் ஒருவன் நாடுகின்ற மெய்ப்பொருள் கிட்டும்' என்று தவத்தின் பெருமையைப் பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். அன்று இமவான் மகளான உமை கைலையில் உள்ள பரமேச்சுவரனை நோக்கித் தவம் கிடக்கிறாள், அவனையே காதலனாக அடைய. அந்தத் தவ மகிமையால் அவனையே கணவனாகப் பெறுகிறாள். ஆனால் அவளே இந்திய நாட்டின் தெற்குக் கோடியில் குமரிமுனையில் நின்று தவம் செய்கிறாள்.

இந்தத் தவம் மக்களையெல்லாம் உய்விக்க என்று அறிகிறபோது நாம் அன்னையின் கருணையை வியக்கிறோம். அன்னைக்கும் அத்தனுக்கும், தலம் தோறும் திருக் கல்யாணம் நடத்தி, அந்தக் கல்யாணக் கோலத்தை எல்லாம் கண்டு மகிழ்ந்த தமிழன், அன்னையை ஒரு நல்ல தவக் கோலத்திலும் நிறுத்திப் பார்க்க எண்ணுகிறான். கணவன் மனைவி குழந்தை குட்டிகள் என்று ஏற்பட்டு விட்டால், அன்னைக்கு உலக மக்களைப் பற்றி, அவர்தம் குறைகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட நேரம் ஏது? அவள் கன்னிப் பெண்ணாக-எண்ணியதையெல்லாம் பெறும் தவம் செய்யும் தெய்வமாக இருந்தால் வேண்டுவன எல்லாம் கொடுக்க இயலும் அல்லவா? ஆதலால் தான் அன்னை பகவதி என்றும் கன்னியாக, அழகான குமரியாக, நின்று தவம் செய்து அருள் புரிகிறாள். அவள் அப்படி தவம் செய்யும் தலமே கன்னியாகுமரி. அந்தக் குமரிமுனைக்கே செல்கிறோம் நாம் இன்று.

கன்னியாகுமரி செல்வதற்கு, திருநெல்வேலி ஜங்ஷனில் ரயிலை விட்டு இறங்கி, கிட்டதட்ட ஐம்பத்திரண்டு மைல் காரிலோ, பஸ்ஸிலோ போக வேணும். காரிலே போனாலும், பஸ்ஸலேபோனாலும், நேரே குமரிக்குச் செல்ல வழியுண்டு. இல்லாவிட்டால் நாகர்கோவில் போய் அங்கிருந்து செல்லலாம். ஊருக்கு வடபுறம் மேடான பிரதேசத்தில் கார் நின்று விடும்; அதன்பின் சரிவாக இறங்கும் பாதை வழியாகத்தான் கன்னிக்குமரியின் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவம்செய் குமரி எல்லை

என்று பாரதி பாடிய பாட்டு அப்போது ஞாபகத்துக்கு வரும். தமிழ் நாட்டின், ஏன், இந்திய நாட்டின் தெற்கெல்லையே இக்குமரிமுனைதானே? ஆதலால் நேரே அக்குமரி முனைக்கே செல்லலாம். அங்கு அரபிக்கடல், வங்காளக்குடாக் கடல், இந்து மகா சமுத்திரம் மூன்றும் சேர்ந்து அலை வீசிக்கொண்டிருக்கும். சாதாரண நாளானால் அம்முனையில் நின்றே காலையில் சூரியன் கடலில் இருந்த எழுகின்ற காட்சியைக் காணலாம். அது போலவே மாலையில் சூரியன் கடலில் குளிப்பதைக் கண்டு மகிழலாம்.

நீங்கள் அதிஷ்டக்காரர்களாக இருந்து, நீங்கள் செல்லும் தினம் பௌர்ணமியாக இருந்து விட்டாலோ, சூரியாஸ்தமனத்தையும் சந்திர உதயத்தையும் ஒரே நேரத்தில் காணும் பேறு பெறலாம். இந்தக் காட்சிகளைக் காண்பதற்கென்றே கன்னியாகுமரிக்கு ஒரு நடை நடக்கலாம். ஆனால் நாமோ நமது க்ஷேத்திராடனத்தில், குமரி முனையில் இருந்து தவம் செய்யும் பகவதியம்மையைக் கண்டு தரிசிக்க வந்தவர்கள் ஆயிற்றே! ஆதலால் கோயிலை நோக்கியே நடக்கலாம். கோயிலுள் செல்லுமுன் இந்த அம்மை இங்கு தவம் செய்வதைப் பற்றி நாட்டில் எழுந்திருக்கும் பல கதைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு கதை; பரத கண்டத்தை ஆண்ட ஆதிப்பரத மன்னனது புதல்வர் எட்டுப்பேர்; ஆனால் குமரி என்று ஒரே புதல்வி. ஏழு அண்ணன்மாருக்கு ஒரு தங்கை வள்ளி என்றால், எட்டு அண்ணன்மாருக்கு ஒரு தங்கையாகக் குமரி பிறக்கிறாள்; வளர்கிறாள், எட்டு ஆண்மக்களுக்கும் ஒரு பெண்மகளுக்கும் நாட்டைப் பங்கிட்டுக் கொடுக்கிறான் பரதன், குமரியிலிருந்து ஆண்ட இடமே இன்றைய குமரிமுனை என்கிறது ஒரு கதை.

அன்னை செய்யும் தவத்தைக் குறித்தும் ஒரு கதை; வசுதேவரையும் தேவகியையும் கம்ஸன் சிறையில் அடைத்து விடுகிறான். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளையெல்லாம் கொன்று தீர்க்கிறான். அப்படிப் பிறக்கும் குழந்தை ஒன்றினால்தான் அவனுக்கு மரணம் என்று சோதிடர்கள் கூறி விடுவதால், ஏழு குழந்தைகளை இப்படிப் பறிகொடுத்த தேவகிக்குக் கண்ணன் பிறக்கிறான் சிறையில். வசுதேவருக்கு இந்தப் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டுமென்று தோன்றுகிறது. இரவோடு இரவாக யமுனையைக் கடந்து, கோகுலத்தில் யசோதையிடம் கண்ணனைச் சேர்த்து விடுகிறார். அங்கு பிறந்திருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் பக்கத்தில் கிடத்தி விடுகிறார். கம்ஸன் வந்து இந்தப் பிள்ளையை எடுத்துச் சென்று அதனைக் கொல்ல விழைகிறான். ஆனால் அந்தத் தெய்வக் குழந்தையோ அவனை இகழ்ந்து உதைத்துத் தள்ளிவிட்டு, அந்தரத்திலே மறைகிறது. இப்படி மறைந்த குழந்தையே திருமாலின் தங்கையான எல்லாம் வல்ல சக்தி. அந்த சக்தியே பகவதி என்னும் திருநாமத்தோடு இந்தக் கடற்கரையில் கையில் இலுப்பைப் பூ மாலை தாங்கிச் சிவபெருமானை நோக்கித் தவம் செய்கிறாள். என்றும் கன்னியாக, குமரியாக நின்று தவம் செய்யும் பகவதியைத்தான் இன்று குமரி என்று வந்தித்து வணங்குகிறோம் நாம்.

இவற்றையெல்லாம் தூக்கியடிக்கும் வேறொரு கதையும் உண்டு. பகன், மூகன் என்று இரண்டு அசுரர்கள் தேவர்களுக்கு இடுக்கண் செய்கிறார்கள். தேவர்கள் முறையிட இறைவன் தன்னுடைய சக்தியை இரு கூறாக்கி இரண்டு பெண் தெய்வங்களாக உருவாக்குகிறார். இந்தச் சக்தியில் ஒன்றே வடகோடியில் கங்கைக்
கன்னிக் குமரி
கரையில் காளியாகவும், மற்றொன்று தென் கோடியில் கடற்கரையில் குமரியாகவும் நின்று நம்மைக் காக்கிறார்கள். பகனுடனும் மூகனுடனும் போர் புரிந்து வெல்கிறார்கள். தேவர்கள் இடுக்கண் தீர்கிறார்கள். புரட்டாசி மாதம் சிவராத்திரி உற்சவத்தில் அம்மை, உச்சைசிரவஸ் என்னும் அமராபதியின் அசுவத்தில் அமர்ந்து போர்க்களம் செல்வதை 'அம்பு சாத்தல்' என்ற பெயரோடு விழா நடத்துகிறார்கள்.

இக்கதைகள் எல்லாம் எப்படியும் இருக்கட்டும். அன்னை பகவதி குமரி முனையில் நின்று தவம் செய்து அதனால் தவ வலிமை பெறுவது மக்களை உய்விக்கவே என்ற எண்ணத்தோடேயே கோயிலுள் நுழையலாம். கோயில் மிகவும் பெரிய கோயிலும் அல்ல; சிறிய கோயிலும் அல்ல. கடல் ஓரமாக உள்ள பெரு வெளியில் நான்கு புறமும் மதில் அமைத்துக் கோயில் கட்டியிருக்கிறார்கள். கோயிலின் பிரதான வாயில் வட பக்கம் இருக்கிறது. முதலில் ஒரு பெரிய பிராகாரம் உண்டு. அதை அடுத்தே துவஜஸ்தம்பம், பலி பீடம் முதலியன இருக்கின்றன. பகவதி அம்மை தினமும் இப்பிராகாரத்தைச் சுற்றி வருவாள். இந்தப் பிராகாரத்தை ஒட்டியே ஊஞ்சல் மண்டபம் இருக்கிறது. இதற்குள்ளே உள்ள அடுத்த பிராகாரம்தான் உள் பிராகாரம்; அங்கே மணிமண்டபமும், சபா மண்டபமும் இருக்கின்றன. மணிமண்டபத்தை ஆறு வட்டத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. மண்டபத்துச் சுவரின் மேல் வரிசையில் புராணச் சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. மண்டபத்தின் மேற்புறத்தில் ஓவியங்கள் காணப்படுகின்றன. இதற்கும் மேலே உள்ள உள் மண்டபத்தில்தான் கன்னிக்குமரி தவக் கோலத்தில் நிற்கிறாள், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில். இவள் கிரீடத்தில் பிறைச்சந்திரன் ஒளி தருகிறான். இவள் அணிந்திருக்கும் அணிகளில் வைர மூக்குத்தி மிகமிகப் பிரகாசமானது. கடலில் பிரயாணம் செய்பவர்க்குக் கலங்கரை விளக்குப் போல் ஒளிதரும் என்று உபசாரமாகக் கூறுவதும் உண்டு. வலக்கையில் மாலை தாங்கி, இடக்கையைத் தொடையில் பொருத்தி நிற்கிற எழில் சொல்லும் திறத்தது அன்று. அம்மையைக் கண் குளிரத் தரிசித்துவிட்டு திரும்பும்போது நம்முடைய உள்ளம் நிறைவுபெறும்; உடல் புளகிக்கும்.

இவளது அழகை அறிந்த அந்தச் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன், இவளை மணம் செய்து கொள்ள விரும்புகிறார். அதற்காக தேவர்களைக் கூட்டி தம் விருப்பத்தை வெளியிடுகிறார். தேவர்கள் எல்லாம் வந்து கூடிய இடமே சுசீந்திரத்தில் கன்னியம்பலம் என்று வழங்குகிறது. தாணுமாலயன் விருப்பம் அறிந்த தேவர்கள் மனம் கலங்குகிறார்கள். கன்னிக்குமரி திருமணம் செய்து கொண்டால் அவள் தவம் பழுதாகிவிடுமே, பின்னர் அசுரர்களை அழிக்க முடியாதே என்று வருந்துகின்றனர். இந்தச் சமயத்தில் நாரதர் வந்து, தேவர்களையெல்லாம் சமாதானம் செய்து. தாமே திருமணத்தை முன்னின்று செய்து வைப்பதாகச் சொல்கிறார். அவர் தாணுமாலயனிடம், கல்யாணத்துக்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறார். ஒன்று, கண்ணில்லாத் தேங்காய், காம்பில்லா மாங்காய், நரம்பில்லா வெற்றிலை, கணு இல்லாக் கரும்பு, இதழ் இல்லா புஷ்பம் இவற்றைச் சீதனப் பொருள்களாகக் கொண்டு வரவேண்டும் என்பது. இரண்டாவது, திருமண முகூர்த்தம் சூரிய உதயத்தில்; அதற்கு ஒரு நாழிகை முன்னமேயே மணமகன் மணவறைக்கு வந்துவிடவேண்டும் என்பது. மணமகனான தாணுமாலயன் இதற்கெல்லாம் அஞ்சாமல் கேட்ட பொருள்களையெல்லாம் வண்டி வண்டியா அனுப்பி வைக்கிறார். இடையில் உள்ள ஐந்து மைல் தூரத்தைக் கடக்க அர்த்த ராத்திரியே புறப்பட்டு விடுகிறார். நாரதர் பார்க்கிறார். உடனே சேவல் உருவெடுத்து சூரிய உதயத்தை அறிவிக்கும் உதயராகத்தைக் 'கொக்கரக்கோ' என்று கூவி அறிவித்து விடுகிறார். முகூர்த்த நேரம் தவறிவிட்டது. தாம் வழுக்கி விட்டோம் என்ற அவமானத்தோடேயே தாணுமாலயன் மேற் செல்லாமல் சுசீந்திரத்துக்குத் திரும்பி விடுகிறார்; இப்படி இவர் திரும்பிய இடமே இன்றும் வழுக்குப் பாறை என வழங்குகிறது.

சுசீந்திரத்துக்குக் கிழக்கே ஒரு மைலில் இந்த வழுக்குப் பாறை இருக்கிறது. இதில் சேவற் கோழியின் கால் தடமும், தாணுமாலயனது திருவடித் தடமும் காணப்படுகின்றன என்பர். இப்படி பகவதி தாணுமாலயன் திருமணம் தடைப்பட்டு விடுகிறது. அன்னை பகவதியின் தவம் தொடர்ந்து நடக்கிறது. அவளுக்கு வந்த பரிசுப் பொருள்களான பொன்னும் மணியும், நெல்லும் கரும்புமே இன்று குமரிக் கரையில் பல நிற மணல்களாகவும் பல குன்றுகளாகவும் பரந்து கிடக்கின்றன என்று கூறுவார்கள்.

கன்னிக்குமரியைத் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் பலபடக் கூறும். நெடியோன் குன்றம் தமிழ்நாட்டின் வட எல்லை என்றால் தொடியோள் பௌவம் தமிழ் நாட்டின் தெற்கெல்லை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. பஞ்ச நாரி தீர்த்தங்களில் கன்னியாகுமரி கன்னி தீர்த்தம் என்னும் சிறப்புப் பெற்றது; 'குரங்கு செய் கடல் குமரியம் பெருந்துறை' என்று மணிமேகலை கூறுவதால் ராமர் கட்டிய சேது. இவ்வளவு தூரம் பரவி இருந்ததோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. வட நாட்டிலிருந்து பலர் தென் திசைக் குமரியாட வருவார் என்பதும் இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். ஆதியில் பாண்டியனிடமே இக்குமரித்துறை இருந்திருக்கிறது. குமரித்துறைவன் என்றே அவன் அழைக்கப்பட்டிருக்கிறான். அதன் பின்னரே சோழர் சேரர் ஆதிக்கம் இங்கு பரவியிருக்கிறது. குமரிக்குத் தெற்கே ஒரு பெரிய நிலப் பரப்பு இருந்ததென்றும் அதுவே குமரிக் கண்டம் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். நாம் வந்தது ஆராய்ச்சி செய்ய அல்ல, அன்னை பகவதியைக் கண்டு தரிசிக்க. தரிசிக்கு முன்பே குமரித் துறையாடி, நம் பாவச் சுமைகளைக் களைந்து விட்ட அன்னையின் அருள் பெற்று வீடு திரும்புவோம். அது போதும் நமக்கு.
நன்றி உரை

எனது தல யாத்திரைக் கட்டுரைகள் கிட்டத்தட்ட இருபத்தெட்டு மாதங்கள் தொடர்ந்து 'கல்கி'யில் வெளிவந்தன. இந்த இருபத்தெட்டு மாதங்களில் 120 தலங்களுக்குச் சென்று அங்குள்ள கோயில், கோயிலில் உள்ள மூர்த்தி, சிற்பச் செல்வங்கள் எல்லாவற்றையும் கண்டு வந்திருக்கிறோம். வாசக நேயர்கள் சிரமமில்லாமலேயே இத்தனை தல யாத்திரைகளையும் மானசீகமாகச் செய்து முடித்திருக்கிறார்கள். வாசகர்களை இத்தனை தலங்களுக்கும் அழைத்துச் செல்ல நான் இருபது வருஷ காலமாக இந்த யாத்திரையைச் செய்திருக்கிறேன். அன்பர் பலர், அதிலும் பெண் மக்கள் பலர் இத்தலயாத்திரைக் கட்டுரைகளைக் கூர்ந்து படித்திருக்கிறார்கள். பலர் பாராட்டிக் கடிதங்கள் எழுதி உற்சாகப் படுத்தியிருக்கிறார்கள், இன்னும் வடநாட்டுத் தலங்களுக்கும் இப்படி ஒரு யாத்திரை தொடங்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இறை அருள் கூட்டுவித்தால் அந்த யாத்திரையையுமே தொடங்குவோம், கொஞ்ச நாட்கள் கழித்து. கல்கி ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பணி சிறப்புடன் நிறைவேற உதவிய வேங்கடவனுக்கும் கன்னிக்குமரிக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.