கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/வலிமைக்கோர் பொலிடாமஸ்

விக்கிமூலம் இலிருந்து



23. வலிமைக்கோர் பொலிடாமஸ்

தெசாலி என்னும் பகுதியில், ஸ்காட்டுசா என்னும் நகரில் வாழ்ந்து வந்தான் பொலிடாமஸ். இவன் பங்கராசியம் எனும் குத்துச் சண்டையும், மல்யுத்தமும் கலந்த பயங்கரப் போட்டியில், ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றான். கி.மு. 408 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் பந்தயம் ஒன்றில் கலந்து கொண்டு, ஒரே முறைதான் வெற்றி பெற்றான் என்றாலும், இவன் புகழ் மாவீரன் மிலோவையும் மிஞ்சக் கூடியதாக அமைந்திருந்தது.

இவன் மிகுந்த வலிமையுடையவன் என்பதனால் மட்டும் மற்றவர்கள் பொலிடோமலைப் புகழவில்லை. எல்லா ஒலிம்பிக் வீரர்களையும் விட உயரமானவனாகவும் இருந்தான் என்பதனால்தான் என்று கூறுகிறார் பசானியாஸ் எனும் ஆராய்ச்சி வல்லுநர்.

வலிமையில் மிகுந்தவன் பொலிடாமஸ் என்பதை வற்புறுத்துகின்ற வகையிலே பல கதைகள் உலவி வருகின்றன.

ஒலிம்பியஸ் என்ற மலைக்குப் போனானாம் பொலிடாமஸ். தன்னந் தனியனாகப் போனவன் எதிரே சிங்கம் ஒன்று எதிர்பட்டுத் தாக்கியபோது, அவன் தன் வெறுங் கையாலேயே அடித்துக் கொன்றான் என்பதாக ஒரு கதை. இது அவனுடைய அஞ்சாமையையும் போரிடும் ஆற்றலையும் விளக்குவதாக அமைந்திருப்பதைக் காணலாம்.

ஒருமுறை பொலிடாமஸ், ஒரு காளைமாட்டின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்துக் கொண்டானாம்; தப்பி ஓடுவதற்காகத் திமிறி கொழுத்த காளையினை இவன் விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டானாம். முழு முயற்சியுடன், முண்டியடித்துக் கொண்டு, அவன் கையிலிருந்து காளைதப்பித்து ஓடிவிட்டது என்று பார்த்தால், பொலிடாமசின் கைகளில் காளைமாட்டின் குளம்புகள் இருந்தனவாம். இந்த நிகழ்ச்சியையும் அவன் அரிய வலிமையை விளக்குவதற்காகக் குறித்திருக்கின்றனர்.

பந்தயக்குதிரைகள் போலபாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டி ஒன்று, வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, அதன் பின்புறம் இவன் சென்று, ஒரு கையால் வண்டியைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டான் என்பதாக மற்றொரு நிகழ்ச்சி.

இவன் வலிமை உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பரவியது. பொலிடாமசின் பலத்தைப் பற்றி பலபடக் கேள்விப்பட்ட பாரசீகத்து மன்னன், தன் அரசவைக்கு அவனை வரவழைத்தான். தன் மெய்க்காப்பாளர்கள் மூவரை அவனுக்கு அறிமுகப்படுத்தி, இவர்களை வென்று அவனது வலிமையை நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டான். அதை சவாலாகவே ஏற்று, சக்திமிகந்த அந்த மூன்று வீரர்களையும் வென்று தன் வலிமையை நிரூபித்தான் என்பதாக மற்றொரு நிகழ்ச்சி.

இவ்வாறு சக்தியும் திறமையும் மிக்க பொலிடாமஸ், கி.மு. 404ல் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்திற்கு வந்தான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகின்ற போட்டியில், மீண்டும் தன் வெற்றியை நிலைநாட்டிக் கொள்ளச் சென்றான். ஆனைக்கும் அடிசறுக்கும் என்பார்களே அதுபோல் அவன் நிலையாயிற்று.

அவனும் சாதாரண மனிதன்போல் நாளுக்கு நாள் நலிந்து வருகிறான் என்பது போல நிலை ஆயிற்று, புரோமர்கஸ் எனும் வீரனிடம் பொலிடாமஸ் தோற்றுப்போனான். சிங்கத்தைக் கொன்றவன். பாரசீக வீரர்களை வென்றவன். புரோமாகஸ் எனும் வீரனிடம் தோற்றுப் போனானே என்றாலும், பொலிடாமசின் வீரம் பழுதுபட்டுப் போகவில்லை. பாழாகி விடவில்லை; வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு இரு கண்கள் போன்றவைதானே. பொலிடாமசும் வீரத்துடனே தோல்வியை ஏற்றுக் கொண்டான்.

இத்தகைய ஆற்றல்மிக்க வீரனின் மரணமும் மிலோவின் மரணம் போலவே, வீரமரணமாக அதாவது வலிமை மிக்க மரணமாகவே அமைந்துவிட்டிருந்தது.

ஒருநாள், பொலிடாமஸ் தன் நண்பர்களுடன் நிழலுக்காக ஒரு குகையில் தங்கியிருந்த பொழுது, குகையின் மேற்கூரையானது சரிந்து விழத் தொடங்கியது. பயந்து அலறிய நண்பர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சரிந்த பாறையினை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டான் பொலிடாமஸ்.

அவசர அவசரமாக அவனது நண்பர்கள் குகையை விட்டு வெளியேறினர். ஆனால், கூரையின் பாரம் தாங்க முடியாமல், பொலிடாமஸ் அந்தக் குகைக்குள்ளேயே நசுங்கி செத்துப் போனான்.

வீரர்கள் சாதாரணமாக இறப்பதில்லை. வீரமரணமே எய்துவார்கள் என்ற நெறியை இதுவரை நாம் படித்த எல்லா கதைகளுமே வலியுறுத்திக் கொண்டேதான் வருகின்றன. பொலிடாமஸ் கதையும் அது போலவே அமைந்திருக்கிறது. வியப்பில்லையே!