வேங்கடம் முதல் குமரி வரை 5/006-019

விக்கிமூலம் இலிருந்து
6. எண்ணாயிரம்

நாம் வசிக்கும் இந்த மண்ணிற்குத்தான், இந்த பூமிக்குத்தான் எத்தனை சக்தி! கரடு முரடாய்ப் பரந்து கிடக்கும். ஓர் இடத்தைக் கொஞ்சம் கீறி அதனுள்ளே சில விதைகளைப் போட்டு விடுகிறோம். அன்று கொஞ்சம் மழையும் பெய்கிறது. இரண்டு மூன்று தினங்களில் அந்த - இடத்திலிருந்து எத்தனை எத்தனை அபூர்வமான சிருஷ்டிகள் தோன்ற ஆரம்பித்து விடுகின்றன! உண்ண உணவளிக்கும் கதிரை நீட்டிக் கொண்டு நெற்பயிர் வந்து விடுகிறது. உடுக்க உடையுதவும் பஞ்சைக் சிதறிக் கொண்டு பருத்திச் செடி வளர்கிறது, 'காய்க்கிறது, வெடிக்கிறது.

இன்னும் வித விதமான வர்ண ஜாலங்களைக் காட்டிக் கொண்டு மலர்களும் புஷ்பிக்க ஆரம்பித்து விடுகின்றன. நறு மணத்தை அள்ளியே வீசுகின்றன. அத்தனை அபூர்வ பொருள்களையும் தன்னுள்ளே தானே அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறது இந்த மண். அதனாலே தான் இந்த மண்ணை, இந்த பூமியைப் பூமா தேவி என்று நம் முன்னோர்கள் போற்றி வந்திருக்கின்றார்கள். வந்தித்து வணங்கியும் இருக்கிறார்கள்.

சீதையின் அவதார தத்துவத்தை விளக்க விரும்பிய கம்பன் கூட இந்த உண்மையை நன்றாக உணர்ந்திருக்கிறான். பூமா தேவி என்னும் தெய்வம் தன்னை உழுது வழிபடுபவர்களுக்கு. அருள் வடிவமாய்த் தரிசனம் கொடுக்கிறாள். அவளது அழகான மேனியிலிருந்து நெற்கதிராகிய பச்சைப் பசுங்கதிர்கள் வெளிவந்து பிரகாசிக்கின்றன.

ஆனால் அவள் சுய உருவை நம்மால் எல்லாம் காணமுடியவா செய்கிறது. பூமிக்குள் மறைத்து வைத்திருந்த சுய ரூபத்தை வெளிப்படுத்தியது போலவே உழுகின்ற கொழு முகத்தில் சீதை உதிக்கின்றாள் என்றெல்லாம் கூறுகின்றான்.

உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற புவிமடந்தை திருவெளிப்பட்டெனப் புணரி
எழுகின்ற தெள்ளமுதோடு எழுந்தவளும் இழிந்துஒதுங்கித் தொழுகின்ற நன்னலலத்துப் பெண்ணரசி தோன்றினாள்.

என்பதுதானே கம்பனது பாட்டு,

சரி, பூமா தேவியின் அருள் உரு இன்னதென அறிந்து கொண்டோம். ஆனால் இந்தப் பூமாதேவியை அழித்து விட, சிதைத்துவிடச் செய்யும் அக்கிரமமும் நாட்டில் நடக்கத்தானே செய்கிறது? ஒரு கதிர் உதிர்கின்ற இடத்திலே இரண்டு கதிரைத் தோன்றச் செய்பவன் உலக வளர்ச்சிக்கே துணைபுரிகிறான் என்பர் பெரியோர், இதைத் தெரிந்தும் நாமே அணுகுண்டாலும் அக்கிரமத் தாலும் அவள் உருவையே சிதைக்க முற்படுகிறோம்.

இன்று நாம் முயல்கிறோம் என்றால் அன்றும் ஓர் அரக்கன் இதே முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான். பூமாதேவியையே சுருட்டி எடுத்துக் கடலுள் மூழ்க அடித்து விட முயன்றிருக்கிறான். அன்றும் வந்தான் பூமகளைக் காக்க ஒருவன், ஓர் உழவன். எல்லா உலகங்களையும் காத்தனிக்கும் அந்தப் பரந்தாமனே பன்றி உருவில் தோன்றிக் கடலுள் பாய்ந்து அரக்கனைக் கொன்று பூமாதேவியை மீட்டுக் கொண்டு வருகிறான். இப்படி வந்தவனையே வராக மூர்த்தி என்கிறோம், அவனை வாழ்த்துகிறோம், வணங்குகிறோம்.

பரந்தாமனது பத்து அவதாரத்தையுமே உலக வளர்ச்சியின் உதாரணம் (Evolution) என்று கொண்டால், வராக அவதாரம் உழவன் செய்யும் திருப்பணியை உருவகப் படுத்துகிறதுதானே. ஆம், பூமிக்குள் இருக்கும் எத்தனை - எத்தனையோ சக்திகளை வெளிப்படுத்தி, மக்களுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் அனுபவிக்க மலர் வகைகளையும் அருளுபவன் அவனே அல்லவா? அடடா, என்ன அழகான கற்பனை, இந்த வராக மூர்த்தியை உருவாக்குவதிலே!

இத்தகைய கற்பனையைச் சித்தரிக்க விரும்புகிறார் ஒரு ஓவியர், கொஞ்சகாலத்திற்கு முன் நம்மிடையே இருந்தவர் தாம் அவர். ஆனால் பாவம், அவர் எதைக் கண்டார்? பூமியைக் கண்டாரா? பூமாதேவியைக் கண்டாரா? இல்லை. அவளது அருள் நிறைந்த சக்தியைத்தான் கண்டாரா? அவருக்குத் தெரிந்ததெல்லாம் ஆங்கில மோஸ்தரில் நடத்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் காணும் பூகோளப் படமும் பூகோள உருண்டையும் தானே!

வராகம் என்றால் என்ன என்று தெரியும், வராக உருவில் பரந்தாமன், பூமியை எடுத்து வந்ததும் தெரியும். உடனே உருவாகிவிட்டது சித்திரம். வராக மூர்த்தியின் மூக்கின் வளைவுக்கேற்ப பூகோளமும் உருண்டிருந்தது பொருத்தமாகப் போயிற்று. பூகோளத்தின் ஒரு பகுதி (Eastern Hemisphere) ரொம்ப ஜோராய் ஜம்மென்று இந்த மூக்கிலே உட்கார்ந்து இருப்பது போலப் படம் உருவாகி விட்டது. பல வண்ணங்களில் படம் அச்சாகியும் விட்டது நாமும் நல்ல படம் என்று சொல்லி வாங்கிக் கண்ணாடிச் சட்டமிட்டு வீட்டில் தொங்கவிட்டுக் கொண்டோம்.

ஆனால் இப்போது படத்தைப் பாருங்கள். வீடு தோறுந்தான் இருக்குமே. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு, என்ன நீங்கள் சொன்னீர்களே அந்தக் கற்பனை ஒன்றும் இந்தப் படத்தைப் பார்த்ததில் என்னுள்ளத்தில் உதயமாகவில்லையே என்றால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

இந்தக் கற்பனையின் அற்புத உருவைக் காண வேண்டுமானால், நேரே பேரணி ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கட் வாங்குங்கள். அங்கிருந்து நேரே மேற்கே பார்த்து நாலு ஐந்து மைல் நடந்து போங்கள். இடையில் வரும் சிற்றூர்களில் வேண்டுமானால், எண்ணாயிரம் என்கிற ஊர் எங்கிருக்கிறது என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். எண்ணாயிரம் என்ற ஊருக்குச் சென்றதும் அங்குள்ள நரசிங்கப் பெருமாள் கோயிலுக்குப் போங்கள். வழியில் யாராவது மறித்து ஊர்க்கதை, ஸ்தலத்தின் பெருமையை எல்லாம் எடுத்துரைக்க முயன்றால், 'அதெல்லாம் அப்புறம்' என்று சொல்லி நிறுத்தி விடுங்கள்.

கையில் ஒரு டார்ச் லைட்டை எடுத்துக் கொள்ளுங்கள். மூலஸ்தானத்திற்கே போங்கள். போகும்போது, கோயில் உள்ளேயே நெருஞ்சிமுள் உங்கள் காலைப் பதம் பார்த்தால் என்னைத் திட்டாதீர்கள். இதற்கெல்லாம் தக்க பலன்தான் கைமேல் கிட்டப் போகிறதே. சுதையில் உருவாகியிருக்கும் மூலவர் நரசிங்கப் பெருமாளையெல்லாங்கூடப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.

கர்ப்பக்கிருகத்திற்கு அடுத்த கட்டிலே அந்தராளத்தில் வடக்கே பார்க்க நின்றுகொண்டு உங்கள் டார்ச் லைட்டை அடியுங்கள். அவ்வளவுதான். உங்கள் முன்னால் எட்டடி உயரத்தில் வராகமூர்த்தி ஆஜானுபாகுவாய் காட்சியளிப்பார். சங்கு சக்கரதாரியாக அவர் எழுந்து நிற்கின்ற திருக்கோலமும், அவரது மடியிலே கூப்பிய கையுடன் பூமாதேவி இருக்கின்ற நேர்த்தியும் பார்க்கப் பார்க்கப் பரவசத்தையே தரும். மூர்த்தியின் தூக்கிய திருவடிக் கீழ் அரக்கன் குன்றி நிற்பதையும் பார்க்க மறந்து விடாதீர்கள். அடடே, எவ்வளவு அருமையான சிற்பம்! இந்த இருட்டறைக்குள்ளே ஒளிந்து கிடப்பானேன்?

அதை உலகுக்கு, ஆம், தமிழ் உலகத்துக்குத்தான் எடுத்துக் காட்ட பரந்தாமனது. வராக அவதார மகிமையை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டாமா? நெருஞ்சி முள் காலில் தைத்தாலும் மூர்த்தியைக் கண் குளிரத் தரிசிக்கும் பாக்கியம் உங்களுக்குக் கிட்டி விடுகிற தல்லவா?

“எண்ணாயிரம்' பேரே அழகாக இருக்கிறது. வாய் நிரம்பவும் இருக்கிறது. இந்தப் பெயர் இந்தச் சிற்றூருக்கு வருவானேன்? கிராமத்தாரிடம் கேட்டால் இங்குதான் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள்; அதனால்தான் எண்ணாயிரம் என்ற பேர் நிலைத்தது என்பார்கள்.

ஆனால் கொஞ்சம் துருவி ஆராய்ந்தால் அதில் உண்மையில்லை என்று தெரியும். இந்தச் சிற்றூர் பல்லவர் ஆட்சியில் பருத்திக் கொல்லை என்ற பெயருடன் பிரபல மாயிருந்திருக்கிறது. இங்கே ஒரு பரம பாகவதர். அவருக்கு ஓர் அருமை மனைவி. இருவரும் அதிதிகளையும் சாதுக்களையும் உபசரிப்பதில் சிறந்தவர்கள். இருந்த பொருள் அத்தனையையுமே வாரி வாரி வழங்கி விடுகின்றனர்.

இந்த அதிதி சத்காரத்தில் அவர்கள் செய்த வஸ்திர தானமோ சொல்ல முடியாது. கடைசியில் இருவருக்கும் மிஞ்சியது ஒரே ஒரு வஸ்திரமே. பாகவதர் உஞ்ச விருத்திக்கு வெளியில் சென்றால் அந்த நாச்சியார் வஸ்திரமின்றி வீட்டில் மறைந்திருப்பார், இறைவன் சோதனை பின்னும் கடுமையாயிற்று. உடையவர் ஸ்ரீபெரும் புதூரிலிருந்து திருவஹீந்திரபுரத்திற்குச் செல்லும் வழியில் பருத்திக் கொல்லை பரம பாகவதரின் பிரதாபத்தைக் கேள்விப்பட்டு தம் பரிவாரங்களுடனும் அடியவர்களுடனும் பருத்திக் கொல்லைக்கு எழுந்தருளுகிறார். அவர்கள் வரும் வேளையில் நாச்சியார், வீட்டில் வஸ்திரமின்றி மறைவில் இருக்கிறார்.

கணவரோ உஞ்சவிருத்திக்குச் சென்றிருக்கிறார். தம் வீட்டைத் தேடிவந்த உடையவருக்கும் அடியார்களுக்கும் மறைவிலிருந்தே முகமன் கூறி எல்லோரையும் நீராடி விட்டு உணவருந்த வரும்படி வேண்டிக் கொள்கிறார், நாச்சியார். நெருக்கடியான நிலைமை ஏற்பட்டு விட்டது.

நாச்சியார் கொஞ்சம் சிந்திக்கிறார். அவருக்குத் தெரியும் அவ்வூரில் உள்ள பணக்காரச் செட்டியார் ஒருவருக்குத் தம்மேல் ரொம்ப நாளாகக் கண் என்று. அவருக்குச் சொல்லியனுப்புகிறார். தம் கற்பையே விற்று அடியவர்களுக்கு உணவூட்டத் துணிந்து விடுகிறார். செட்டியார் வருகிறார். நாச்சியார் எண்ணத்தை அறிகிறார். உடனே வந்து, குவிகின்றன உடுக்க உடையும், உணவு தயாரிப்பதற்கு வேண்டிய சாமான்களும். செட்டியாரை இரவில் வந்து சேரும்படி நாச்சியார் சொல்லியனுப்பி விட்டார். உஞ்சவிருத்திக்குச் சென்ற பாகவதர் வந்தார். விஷயம் அறிந்தார். சந்தோஷம் அடைந்தார். உடையவர் பரிவாரத்திற்கு அருமையான விருந்தொன்று நடந்தது. குறித்த இரவும் வந்தது. செட்டியாரும் கோலாகலமாக வந்தார்.

ஆனால் அவரால் நாச்சியாரின் தெய்வீக ஒளிமுன், கண்திறக்க முடியவில்லை. தனது தவறை உணர்ந்தார். நாச்சியார் அடிகளில் வீழ்ந்து வணங்கினார். மன்னிப்பைப் பெற்று அகன்றார். நாச்சியார், செட்டியார் எல்லோரும் உபசரிக்க ஆரம்பித்த உடனே உடையவரும் இருந்து விட்டார். அங்கேயே கொஞ்சகாலமாக, சமணர்கள் கொதித்தெழுந்தனர். வாதப் பிரதி வாதங்கள் மும்முரமாய் நடந்தன. சமணர்கள் தோற்றனர். தோற்றதோடு மட்டுமல்லாமல் ஒப்பந்தப்படி கழுவேறவும் தயாராகி விட்டனர். பரம தயாநிதியான உடையவர் அத்தனை சமணர்களையும் அந்தணர்களாக ஆக்கினார். எண்ணாயிரம் பேர் அன்று புனர் ஜென்மம் பெற்றனர். பருத்திக் கொல்லையே எண்ணாயிரம் என்று பெயர் பெறலாயிற்று.

அஸ்டஸகஸ்ரம் என்ற பிராமண வகுப்பினர் தோன்றிய கதை இதுதான் என்பர் தெரிந்தவர்கள், இவர்கள் குடியேறிய கிராமங்கள் பிரம்ம தேசம், சதுர் வேதி மங்கலம் என்றெல்லாம் தெரிகிறது.

எண்ணாயிரத்தில் அழகிய நரசிங்கப்பெருமாள் கோயில் உடையவரால் உருவாக்கப்பட்டது என்பது கர்ண பரம்பரைக் கதை, நரசிங்கரின் உக்கிரம் அளவு கடந்ததாய் இருந்திருக்கிறது. மூலவிக்கிரகம் பின்னப்பட்டு வெளி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சுதையில் ஆக்கப்பட்ட நரசிங்கர்தான் இன்றைய மூலவர்.

பெருமாளையும், பெருமாளுக்கு ஒரு கோயிலையும் ஆக்கிக் கொடுத்த உடையவரும் இங்கே கோயில் கொண்டிருக்கிறார். நல்ல கருங்கல்லில் உருவாகியிருக்கிறார். உலோகத்தில் வார்க்கப்பட்டவரோ என்று சொல்லும்படி நல்ல மழமழப்புடன் இருக்கிறார். அவரே காட்சி கொடுக்கிறார் பக்கத்தில். பருத்திக் கொல்லை நாச்சியார் அளித்த விருந்து காரணமாகவோ என்னவோ உடல் தளதள என்றிருக்கிறது.

நானறிந்த மட்டில் வராக மூர்த்தியும் உடையவரும் இவ்வளவு அழகாய் வேறிடங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்விரு சிற்பங்களைக் காண்பதற்காகவே இந்த ஊருக்கு ஒரு பயணம் கட்டலாம். கட்டுங்களேன்!