இளையர் அறிவியல் களஞ்சியம்/அலகு குத்தல்
அலகு குத்தல் : பங்குனி உத்திரத்தின் போதும் ஆடி கிருத்திகையின்போதும் காவடி தூக்கிச் செல்பவர்களில் சிலர் வேண்டுதல் காரணமாக வேல் ஊசியால் நாக்கிலும் முதுகிலும் குத்திக்கொண்டு பக்தியோடு செல்வதைப் பார்த்திருக்கலாம். இதை "அலகு குத்திச் செல்லல்’ என்று கூறுவார்கள்.
இதே அடிப்படையைக் கொண்டே "அக்குப் பங்ச்சர்’ எனும் சீன மருத்துவமுறை அமைந்துள்ளது. இதன் மூலம் உடலில் குறிப்பிட்ட இடங்களில் ஊசி குத்தி உணர்வைத் தூண்டி மருத்துவம் செய்யப்படுகிறது. இதற்கு 'அக்குப் பங்ச்சர் மருத்துவமுறை' என்று பெயர். அக்கு என்பது இலத்தின் மொழிச் சொல். இதற்கு அலகு அல்லது ஊசி என்பது பொருள்.
இத்தகைய ஊசி உணர்வுத்தூண்டல் மருத்துவமுறை பண்டுதொட்டே சீனத்தில் இருந்து வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பு சீனக்குடியானவன் ஒருவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. அவன் எவ்வளவோ மருத்துவம் செய்தும் மருந்து உட்கொண்டும் நோய் தீரவில்லை. ஒரு நாள் வயலில் உழும்போது கூரிய ஊசி போன்ற ஒரு பொருள் அவன் காலைக் குத்தியது. அந்த நிமிடமே அவன் தலைவலியும் மாயமாய் மறைந்தது, இதை அறிந்த சீன மன்னன் வியந்தான். கூரிய கல் ஊசி ஒன்றைச் செய்து தீராத தலை வலி உள்ளவர்களின் காலில் குறிப்பிட்ட இடத்தில் குத்தி தீராத தலைவலி மறைவதைக் கண்டு மகிழ்ந்தான். உடனே தன் அரண்மனை மருத்துவர்களை அழைத்து ஊசி குத்து மருத்துவமுறை குறித்து விரிவாக ஆராய ஆணையிட்டான். இதிலிருந்து தான் ‘அக்குப்பங்ச்சர்' மருத்துவமுறை சீன நாட்டில் காலூன்றி வளர்ந்தது.
காலப்போக்கில் ஏற்பட்ட பல்வேறு ஆய்வுகளின் காரணமாக தலைவலி மட்டுமல்லாது உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களையும் போக்க முடியும் என்று கண்டறிந்தார்கள். நாளடைவில் அனைத்து நோய்களையும் போக்கும் அற்புத மருத்துவமுறையாக வளர்ந்து கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பரவியது. இன்று இது உலகளாவிய மருத்துவ முறையாகப் பரவி வளர்ந்து வருகிறது.
இந்த மருத்துவ முறையில் மருந்துகளுக்கு வேலையில்லை. மருந்து இல்லாததால் அவைகளை உட்கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகள், எதிர்விளைவுகள் ஏதும் ஏற்பட வாய்ப்பே இல்லாமற் போகிறது. இம்மருத்துவத்திற்குச் சில மெல்லிய ஊசிகள் மட்டுமே தேவை. இவ்வூசிகளைக் கொண்டு முன்பே நன்கு கண்டறியப்பட்டுள்ள உணர்வு முனைகளில் குத்தித் திருகி, உணர்வுத் தூண்டலை ஏற்படுத்தி, நோயைக் குணப்படுத்தி விடுகின்றனர். ஊசி குத்தலால் நோயாளிக்கு வலியேதும் ஏற்படுவதில்லை.