இளையர் அறிவியல் களஞ்சியம்/என்ஸைம்
என்ஸைம் : இதைத் தமிழில் 'நொதி' என்று கூறுவர். இது ஒரு நைட்ரஜனுடைய சிக்கலான அமைப்பை உடைய கரிமமூலக்கூறாகும். உயிர்ப் பொருட்களால் உண்டாக்கப்படுபவை. இவை அனைத்தும் உயிர்வேதி வினைவேக மாற்றியாக இயங்குபவை. தாவரங்கள் உட்பட வாழும் உயிரினங்கள் ஒவ்வொன்றின் உடலுமே ஒரு வேதியியல் தொழிற்சாலை எனலாம். உண்மையில் நம் உடலில் வேதியியல் மாற்றங்கள் இடைவிடாது ஏற்படவில்லை எனில் உயிர் வாழ்க்கை என்பது இயலாத தொன்றாகிவிடும். இதனால் தான் உணவு உட்கொள்கிறோம், சுவாசிக்கிறோம்; மேன்மேலும் வளர்ச்சியடைகிறோம். ஏனெனில், வேதியியல் மாற்றங்கள் உயிரணு திசுச்சுற்றில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன.
இவ்வேதியல் மாற்றம் எவ்வாறு நம் உடலில் உண்டாகிறது என்பதைப் பார்ப்போம். நாம் உணவாக ரொட்டியையோ அல்லது உருளைக்கிழங்கையோ உட்கொள்கிறோம். இவ்வுணவில் உள்ள ஸ்டார்ச், சர்க்கரைச் சத்தாக மாற்றம் பெற்று இரத்தத்தில் கலக்கிறது. இஃது நாம் சுவாசிக்கும் பிராணவாயுவோடு இணைந்து எரிய, நமக்கு வேண்டிய சக்தி கிடைக்கிறது. இத்தகைய வேதியியல் மாற்றங்கள் உயிர்வாழும் ஒருவரது உடலில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு உடல் திசுக்கள் உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான புரோட்டீனும் உதவிசெய்கிறது. இம்மாறுதல்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பவை என்ஸைம்களாகும். என்ஸைம்கள் உயிரணுவின் இயக்கத்தால் தோன்றும் ஊக்கிகளாகும். இவை உயிர்த் திசுக்கள் அனைத்திலும் காணப்படும்.
ஒரு என்ஸைம் ஒரு குறிப்பிட்ட பொருளுடனோ அன்றி அதனுடன் வேதியியல் தொடர்புடைய ஒரு பொருள் தொகுதியுடனோ மட்டுமே இயங்கும். இஃது என்ஸைம்களின் தனிப் பண்பாகும். சான்றாக, நமது உமிழ் நீரில் உள்ள ஆல்பா அமைலேஸ் என்னும் என்ஸைம் சர்க்கரை சத்தினை உடைத்து சிறிய சிறிய துகள்களாக மாற்றுகின்றன. ஆனால் இந்த என்ஸைம் மரம், காகிதம் போன்ற செல்லுலோஸ் போன்ற கார்போ ஹைட்ரேட்டுகளை சிதைக்காது. ஆனால் சிறிய கறையான்களில் காணும் செல்லுலோஸ் என்னும் என்ஸைம் மரம், காகிதம் போன்றவைகளை செரிக்கும் தன்மையினையுடையது. இத்தகைய தனிப்பொருள் என்ஸைமின் அடிப்பொருள் (Substance) எனப்படும். என்ஸைமுக்கும் அதன் அடிப்பொருளுக்கும் உள்ள தொடர்பு பூட்டுக்கும்சாவிக்குமுள்ள தொடர்பு போன்றதாகும் என்பர்.
தாவரங்கள் உட்பட அனைத்து உயிரினங்களிடத்தும் என்ஸைம்களின் மூலம் இத்தகைய வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.