இளையர் அறிவியல் களஞ்சியம்/சூரியன்
சூரியன் : 'கதிரவன்', 'ஞாயிறு' என்றெல்லாம் அழைக்கப்படும் சூரியன் ஒரு நட்சத்திரம் ஆகும், இது பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரமாகவும் பிற நட்சத்திரங்களைவிடப் பெரியதாகவும் உள்ளது. ஒளி மிகுந்து தோன்றுகிறது. பிற நட்சத்திரங்கள் வெகு தொலைவில் உள்ளதால் அவை அளவில் சிறியதாகக் காணப்படுகின்றன. சூரியன் உட்பட அனைத்து நட்சத்திரங்களும் இயற்கையிலே மிகுந்த ஒளி கொண்டு ஒளிரும் கோளங்களாகும்.
சூரியக்கோளம் பூமியிலிருந்து சுமார் 1½ கோடி கி.மீ. தூரத்தில் உள்ளது. சூரியனின் குறுக்கு விட்டம் சுமார் 14 இலட்சம் கி.மீ. ஆகும். நில உலகைவிடச் சுமார் பத்து இலட்சம் மடங்கு சூரியன் பெரியதாகும்.
சூரியக் கதிர்கள் வெப்பமிக்கவையாகும். காரணம் சூரியன் பலவகையான வெப்ப வாயுக்களால் ஆனதாகும். சூரியனின் மேற்பரப்பில் 12,000 வெப்பநிலை நிலவுவதாகக்
கணக்கிட்டிருக்கிறார்கள். சூரியனின் மத்தியப் பகுதியில் சுமார் நான்கு கோடி டிகிரி வெப்பமிருப்பதாகக் கூறப்படுகிறது. சூரியனைச் சுற்றி மாபெரும் ஒளிவட்டம் காணப்படுகிறது. இஃது சூரியனின் ஒளி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இவ்வொளி மண்டலத்திற்கு அப்பால் வாயு மண்டலம் அமைந்துள்ளது. சூரியனின் வெப்பக் கற்றைகளால் இவ்வாயுக்கள் எரிகின்றன, இதனால் உண்டாகும்
அனல் சுமார் 1,80,000 கி.மீ. தூரம் வரை பரவுகிறது. இதுவே சூரிய சுடர் எழுச்சியென அழைக்கப்படுகிறது.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வது போன்றே சூரியனும் தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 28 நாட்கள எடுத்துக்கொள்கிறது. இவ்வாறு சுற்றிக் கொள்ளும் அதேநேரத்தில் மணிக்கு சுமார் 20 கி.மீ. வேகத்தில் முன்னோக்கிச் சென்று கொண்டுள்ளது, எதை நோக்கி இவ்வாறு சென்று கொண்டிருக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. இவ்வாறு செல்லும் சூரியன் தான் மட்டும் தனியே செல்லாது தன்னோடு வேறுபல நட்சத்திரங்களையும் சந்திரன், பூமி முதலிய கிரகங்களையும் கொண்டு செல்கிறது. இவ்வாறு செல்லும் போது சூரியனும் பூமியும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் அமைய நேரின் கிரகணங்கள் உண்டாகும்.
நிலவுலகில் ஈர்ப்பாற்றல் நிலவுவதுபோல சூரியப் பரப்பும் ஈர்ப்புச் சக்தியோடு அமைந்துள்ளது. பூமியைவிட 28 மடங்கு அதிக ஈர்ப்பாற்றல் சூரியனுக்குண்டு. அதாவது பூமியை விட 28 மடங்கு ஈர்ப்புச்சக்தி கொண்டது சூரியப்பரப்பு.
சூரியப் பரப்பில் சூரியனின் களங்கம் எனப்படும் கரும்புள்ளி அமைந்துள்ளது. இது பெருங் குழியாகத் தோன்றுகிறது. இக்குழி பதினொரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுருங்கி விரிவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.
உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத வெளிச்சத்தையும் வெப்பத்தையும் சூரியனிடமிருந்தே பெறுகிறோம். தாவரங்கள் சூரிய ஒளியின் உதவியோடு தங்களுக்குத் தேவைப்படும் உணவை 'ஒளிச் சேர்க்கை' முறையில் பெற்று வளர்கின்றன. வெப்பத்தின்மூலம் கடல்நீர் ஆவியாக மாறி நிலத்தை நோக்கிச் சென்று மழையாகப் பொழிகிறது. இதன்மூலம் உயிரினங்கள் தண்ணிர் பெற பெருந்துணையாயமைவது கதிரவனேயாகும். இவ்வாறு எல்லா வகையிலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாக அமைந்திருப்பது சூரியனே என்று துணிந்து கூறலாம்.