இளையர் அறிவியல் களஞ்சியம்/செம்பு
செம்பு : மனித வாழ்வில் மிகவும் பழங்காலம் தொட்டு பழக்கத்தில் உள்ள உலோகம் செம்பாகும். ரோமானியர்களால் குப்ரம் (Cuprum) என்று அழைக்கப்பட்டது. அமெரிக்கா, மெக்சிகோ, ரஷியா, சீனா மற்றும் சிலியிலும் தனி உலோகமாகக் கிடைக்கிறது. இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, பீஹார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கிடைக்கிறது. பெரும்பாலும் அது சல்பைடு கனிமமாகிய காப்பர் கிளான்ஸ் கனிமத்திலிருந்து பெறப்படுகிறது.
நம் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படும் உலோகங்களில் செம்பும் ஒன்றாகும். இதை 'தாமிரம்'என்றும் அழைப்பார்கள். கலப்பற்ற தூய செம்பின் நிறம் செந்நிறமாகும். இது பார்ப்பதற்கு பளபளப்பு மிக்கதாகக் காணப்படும். இரும்பைவிடக் கனமான இது 18560K வெப்பத்தில் மட்டுமே உருகும். இவ்வுலோகம் மிக எளிதாக மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்தும். இவ்வுலோகம் துருப்பிடிப்பதில்லை, எதனாலும் எளிதில் அரிக்கப்படுவதில்லை. ஆனால், ஈரக் காற்றிலிருக்கும்போது இதன்மேல் ஒருவிதக் கரும்பச்சைக் களிம்புபடியும். இக்களிம்பு நச்சுத் தன்மையுடையதாகும். செம்பைத் தகடாகவோ கம்பிகளாக வோ உருமாற்றுதல் எளிது.
அன்றாட வாழ்வில் பல்வேறு பணிகளுக்குச் செம்பைப் பயன்படுத்தி வருகிறோம். மின்சாரத்தை அனுப்பும் மின் கம்பியாக அதிக அளவில் பயன்பட்டு வருகிறது. செப்புத் தகட்டில் செதுக்குருவங்களை உருவாக்குவதோ எழுத்துக்களால் பொறிப்பதோ எளிது. நீண்டகாலம் அவை நிலைபெற்றிருப்பதால் பண்டைக் கால மன்னர்கள் அரசு ஆணைகளையும் முத்திரைக் குறிப்புகளையும் செப்பேட்டிலேயே செதுக்கி வந்தார்கள். செம்போடு துத்தநாக உலோகத்தைக் கலந்து பித்தளை உலோகம் செய்கிறார்கள், செம்போடு வுெள்ளியத்தைக் கலப்பதன் மூலம் வெண்கல உலோகம் கிடைக்கிறது. இதனால் சிலைகளும் கோயில் மணி போன்றவைகளும் உருவாக்கப்படுகின்றன. நாணயம் செய்ய செம்பு பயன்படுத்தப்படுவது போன்றே, உறுதிக்காக வேண்டி தங்கம். வெள்ளியோடு சிறிதளவு செம்பு சேர்த்து நகைகள் செய்யப்படுகின்றன.