இளையர் அறிவியல் களஞ்சியம்/துத்தநாகம்

விக்கிமூலம் இலிருந்து

துத்தநாகம் : இது ஆங்கிலத்தில் ஜின்ங்க் (Zine) என அழைக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இதனை ‘யசெடா’ (Yasada) என்று அழைப்பர். இவ்வுலோகம் தனித்த நிலையில் கிடைப்பதில்லை. சேர்ம நிலையில் கிடைக்கிறது. பண்டைக் காலம் தொட்டெ மக்களறிந்து பயன்படுத்தி வரும் உலோகம் துத்தநாகமாகும். நீல வெண்மை நிறமுடைய படிக வடிவிலான துத்தநாகம் ஒரு தனிமம் ஆகும்.

துருப்பிடிக்காத தன்மை கொண்ட துத்தநாகம் வெப்பத்தையும் மின்சாரத்தையும் மிக எளிதாகக் கடத்தும். இவ்வுலோகத்தை 1200 முதல் 1500 வெப்பத்தில் தகடாகவோ கம்பியாகவோ அடித்து நீட்டமுடியும், இதை மிகுந்த வெப்பநிலையில் 10000 வெப்பத்தில் சூடாக்கினால் இது காற்றில் எரிந்து துத்தநாக ஆக்சைடாக மாறும்.

துத்தநாகம் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. காரியக் கனிமமான வலினா கலந்ததாக கந்தகக் கல் வடிவில் கிடைக்கிறது. முற்காலத்தில் எரிந்தும் சுட்டும் இவ்வுலோகத்தைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இக்காலத்தில் மின் பகுப்பு முறையில் எளிதாகத் துத்தநாகத்தைப் பிரித்தெடுக்கிறார்கள். துத்தநாகம் இந்தியாவிலும் பிற உலக நாடுகளிலும் கிடைக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, கனடா நாடுகளில் மிகுதியாகக் கிடைக்கிறது.

இவ்வுலோகத்திற்குத் துருப்பிடிக்கும் தன்மை இல்லாததால் துருப்பிடிக்கக் கூடிய இரும்பு, எஃகு போன்ற உலோகங்களின்மீது மேல் பூச்சாகப் பூசப்படுகிறது. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் இரும்பாலான வாளிகள், தொட்டிகள், இரும்பாலான வீட்டுக் கூரைத் தகடுகள், மண்ணுக்கடியில் புதைக்கக்கூடிய குழாய்கள் இவை அனைத்துமே துத்தநாகப் பூச்சால் ஆனவைகளேயாகும். துத்தநாகப் பூச்சால் இப்பொருட்கள் மேலும் உறுதி பெறுகின்றன.

துத்தநகம் நச்சுத் தன்மைகொண்ட உலோகமாகும். துத்தநாகம் பூசப்பட்ட பாத்திரங்களில் உணவுப் பொருட்களை வைத்து உண்ணக்கூடாது. நாணயத் தயாரிப்பிற்கும் துத்தநாகம் பயன்படுகிறது. பட அச்சுக் கட்டைகள் தயாரிக்கவும் பசை மின்கலக் கூடுகள் தயாரிக்கவும் துத்தநாகம் பயன்படுகிறது.

துத்தநாகமும் செம்பும் சேர்ந்த கலவையைக் கொன்டு உருவாக்கப்படும் கலவையே பித்தளை.